கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் வரிசையில் -- கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் புதிய கலை, இலக்கிய, ஊடகத்துறை மாணவர் பரம்பரையை உருவாக்க வேண்டியவர்! - முருகபூபதி


பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டங்கள் பெற்று, பின்னர் பல்கலைக்கழகங்களிலேயே தொழில் வாய்ப்பு பெற்று மாணவர்களுக்கு விரிவுரையாற்றிவரும் எழுத்தாளர்கள் பலரை நன்கறிவேன்.
அவர்களில் பலர் கலை, இலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் திகழ்கின்றனர். அவ்வாறு நான் அறிந்த ஒருவர்தான் (கலாநிதி) அம்மன்கிளி  முருகதாஸ்.
1983 தொடக்கத்தில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு விழாக்களை நாடுதழுவிய ரீதியில் கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் எம்மிடம் அம்மன்கிளி பற்றி குறிப்பிட்டார்.
ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளை ஆய்வு செய்திருக்கும் அம்மன்கிளி முருகதாஸ் அவர்களை முதல் முதலில் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில்தான் சந்தித்தேன்.
அச்சமயம் அவர் அங்கு தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியிலிருந்தார். யாழ்ப்பாணம்  பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப்பாடமாகப்பயின்று தனது இளங்கலை, முதுகலை கலாநிதிப்பட்டங்களை பெற்றவர். இவரது பல்கலைக்கழக ஆசான்கள் இவரை இலக்கிய திறனாய்வாளராக்கி பெருமை பெற்றவர்கள்.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் மாணவியான இவர், தனது ஆசான் எழுதிய Drama in Ancient Tamil Society என்னும் ஆய்வு நூலை தமிழாக்கம் செய்தவர். இந்நூலுக்கு, தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையினால்  பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வரிசையில்  பரிசு கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை இன்றைய தலைமுறை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றோம்.
சமகாலத்தில் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் பயிலும் மாணவர்களுக்கு சமகால இலக்கியம் குறித்தோ, தற்பொழுது வெளியாகும் இலக்கிய இதழ்கள் பற்றியோ எதுவுமே தெரியாத ஒருவகை சூனியம் தென்படுவதாக பரவலாகப்பேசப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் பேராதனை  பல்கலைக்கழகத்திற்கு சென்று தமிழ்த்துறையைச்சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடியபோதும் குறிப்பிட்ட தேக்கநிலை சூனியமாகவே எனக்கு  தென்பட்டது.
அங்கிருந்த ஒரு பேராசிரியர் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் தெரிவித்த செய்தியால் சற்று அதிர்ச்சியடைந்தேன்.
அங்குள்ள நூலகத்தில், ரவீந்திரநாத் தாகூர் பற்றிய தகவல்களை மேலதிகமாகத்தெரிந்துகொள்வதற்குச் சென்று, அவர் பற்றிய ஒரு நூலை எடுத்துப்பார்த்தாராம்.

குறிப்பிட்ட நூலை சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் யாரோ ஒரு மாணவர் எடுத்துச்சென்று மீண்டும் ஒப்படைத்திருக்கும் திகதிகள் பதிவாகியிருந்ததாம்....!!!  அதாவது சுமார் 25 வருடகாலமாக அந்த நூல் அங்கிருந்து நகரவேயில்லை என்பதுதான் இதிலிருக்கும் அதிர்ச்சியான செய்தி.
ஒரு காலகட்டத்தில் பல தமிழ் மாணவர்கள், இலங்கை பல்கலைக்கழகங்களிலிருந்து எழுத்தாளர்களாக, விமர்சகர்களாக, கலைஞர்களாக, ஊடகவியலாளர்களாக  வெளியேறி குறிப்பிட்ட துறைகளில் பிரகாசித்து தமிழுக்கும் சமூகத்திற்கும் வளம் சேர்த்திருக்கிறார்கள்.
அவ்வாறு வளம்சேர்த்தவர்களில்  குறிப்பிடத்தகுந்த ஒருவர்தான் அம்மன்கிளி முருகதாஸ்.
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பயின்ற சில மாணவர்களின் குடும்பத்தினர் 2004  ஆம் ஆண்டு இறுதியில் கிழக்கை பெரிதும் பாதித்த சுநாமி கடல் கோள் அநர்த்தத்தின் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட மாணவர்களை சந்திப்பதற்காக அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர்கல்வி நிதியத்தின் சார்பில் சென்றிருந்தேன்.
அச்சமயம் அங்கு விரிவுரையாற்றிக்கொண்டிருந்த அம்மன்கிளி முருகதாஸ் அவர்கள், என்னை அழைத்து, புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்னும் தலைப்பில் உரையாற்றச்சொன்னார்.
மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாம் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்திய காலப்பகுதியில், மட்டக்களப்பிற்கும் பயணமாகியிருந்தோம். அவ்வேளையிலும் குறிப்பிட்ட மாநாட்டின் நோக்கம் பற்றிய உரையை தமது மாணவர்களுக்காக நிகழ்த்துமாறும் அழைத்திருந்தார்.
அவர்,  தான் யாழ். பல்கலைக்கழகத்தில் தனது விரிவுரையாளர்களினாலும் பேராசிரியர்களினாலும் எவ்வாறு வழிநடத்தப்பட்டாரோ அவ்வாறே சமகாலத்தில் தன்னிடம் பயிலும் மாணவர்களும் வழிநடத்தப்படவேண்டும் என்ற சிந்தனைவயப்பட்டவராக எமக்குத் தென்பட்டார். சில மாணவர்கள் கொழும்புக்கு வருகை தந்து எமது மாநாட்டின் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்.
அம்மன்கிளி அவர்கள், ஈழத்து தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம், சங்கக்கவிதையாக்கம் - மரபும் மாற்றமும், பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடகம் முதலான நூல்களையும் வரவாக்கியிருப்பவர். தாலாட்டுப்பாடல்கள் பற்றியும் ஆய்வுகளை எழுதியவர்.
பெண்களும் வர்க்கமும் தொடர்பாக   சங்க இலக்கியங்களை மையமாகக்கொண்ட  ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் அம்மன்கிளி முருகதாஸ்   யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும்  ஜீவநதி இதழில் மகாகவி பாரதியையும் விரிவாக ஆய்வுசெய்துள்ளார்.   ஜீவநதியில் இவர் எழுதியிருக்கும்  1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்தது.  பாரதியை ஆராயப்புகுமிடத்து,   நவீன  கவிதை பற்றிய  இவரது அறிமுகம் இவ்வாறு தொடங்குகிறது:
   " எமக்குக்கிடைத்துள்ள தமிழிலக்கியம் ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு வருடப்பழைமை வாய்ந்தது.  இந்த நீண்ட காலப்பிரிவில் தோன்றிய இலக்கியங்களுள்  தொண்ணூறு வீதமானவை கவிதைகளே. இக்கவிதைகளிற் பெரும்பாலானவை அரசரையும் பிரபுக்களையும் கடவுளரையும் பொருளாகக் கொண்டு அரசவைகளிலும் கோயில்களிலும் பாடப்பட்டவையாகும்.
தமிழ்நாட்டில்  பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக அரசியற்பின்னடைவு அதைச் சந்தர்ப்பமாகக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய மேனாட்டதிகாரம் போன்றன தமிழ்நாட்டு வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தின.
இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்வதை அடியோடு வெறுத்தவர். தன்னாட்டுச் செல்வங்களை வெள்ளையர் கொண்டு செல்வதைப் பார்த்து உள்ளம் கொதித்தவர். அன்றைய இந்திய விடுதலைப் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். கப்பலோட்டிய தமிழன் எனப் பேசப்பட்ட வ.உ.சி - சுப்பிரமணிய சிவா போன்றோர் அவரது நெருங்கிய நண்பர்களாவர். பாரதியின் கவிதைகள் தன்கால  சமூகத்தின் மீதுள்ள கோபம் ஆத்திரம் அன்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. எந்த நேரத்திலும் தன் நாட்டின் கீர்த்தி பற்றியே அவர் சிந்தித்தார். காளிதேவியிடம் வரம் வேண்டும் போது கூட நாட்டைப் பற்றியே சிந்தித்தார். அதற்காகத் தான் உழைக்க வேண்டும் எனக் கருதினார்.
  அவர் சொன்னபடியே தன் கவிதைகளை இயற்றத் தொடங்கினார். அதனால் அவர் நவீன கவிதையின் முன்னோடியானார்.   தன்னால் இயற்றப்பட்ட கவிதைகளால் தமிழுக்குப் புதிய வளம் சேர்ந்ததென கூறியுள்ளார்.   இவ்வாறு பாரதியைபோன்று  ஈழத்திலும் கவிஞர்கள் தன்னம்பிக்கையுடன் எழுதவேண்டும் என்பதே அம்மன்கிளி முருகதாஸின் எண்ணம் என்பதையும் ஜீவநதியில் வெளியான குறிப்பிட்ட  ஆக்கம் கூறிநிற்கிறது.
அம்மன் கிளி அவர்களிடம் ஒரு பாரிய பொறுப்பு இருப்பதாகவே கருதுகின்றோம். தம்மிடம் கற்கும் மாணவர்களிடம் கலை, இலக்கியப்பிரக்ஞையையும்  வாசிப்பு பழக்கத்தையும் அவர் ஏற்படுத்துவதற்கு மேலும் தீவிரமாக இயங்கவேண்டும்.
எதிர்கால ஈழத்து தமிழ் கலை, இலக்கிய, ஊடகத்துறைக்கு அம்மன்கிளி போன்று பலர் அறிமுகமாகவேண்டும். அம்மன்கிளி முருகதாஸ் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
---0---










No comments: