மஹிந்தவிற்கு துணை போன பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த சன்மானம்!!!
சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
கர்நாடக சங்கீத இசையில் சாதனை படைத்தவரை சந்தித்தார் ஜனாதிபதி
போர்க்கப்பலை இலங்கைக்கு பரிசளித்த சீனா
யாழ்ப்பாணக்கல்லூரி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் - பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாண மாநகர சபை கூட்டணியின் புதிய உறுப்பினர் தெரிவு
அச்சுவேலி தேர்த்திருவிழா; வடம் பிடித்த இராணுவ வீரர்கள்
இந்தியாவிலிருந்து தாயை காண வந்த இலங்கை தமிழர் கைது
மஹிந்தவிற்கு துணை போன பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த சன்மானம்!!!
25/07/2018 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டிற்கு உள்ளான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி பாராளுமன்ற அமர்வுகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த பேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டாமென முன்னாள் பிரதமர் டேவிட் கமரனுக்கு இயன் பெய்ஸ்லி கடிதம் அனுப்பியிருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இவ்விடயம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் 30 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற நிலையியற்குழு பரிந்துரைத்திருந்தது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றதில் பெய்ஸ்லிக்கான தடை உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் படி செப்டெம்பர் மாதத்தில் வரும் முதல் 30 நாட்களுக்கு பெய்ஸ்லிக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெய்ஸ்லி பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு அண்ரீமி பகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
25/07/2018 வட்டுக்கோட்டை பகுதியில் தனியார் வகுப்புக்கு சென்ற பதின்ம வயது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு உள்ள ஆசிரியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்போது ஆசிரியர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி ஆசிரியரை பிணையில் விடுவிக்க வேண்டும் என பிணை விண்ணப்பம் செய்தார்.
அதனையடுத்து மாணவிகளின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அர்ஜூனா "ஆசிரியருக்கு பிணை வழங்கினால் வழக்கினை திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம், வழக்கில் தொய்வு நிலை ஏற்படும் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது மக்கள் விரக்தியில் உள்ளதால், அவரை பிணையில் விடுவிக்க கூடாது என விண்ணப்பம் செய்தார்.
இரு சட்டத்தரணிகளின் விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் மூத்த சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்து , ஆசிரியரை எதிர்வரும் ஆகஸ்டம் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். நன்றி வீரகேசரி
கர்நாடக சங்கீத இசையில் சாதனை படைத்தவரை சந்தித்தார் ஜனாதிபதி
24/07/2018 கர்நாடக சங்கீத இசையில் உலக சாதனை படைத்த திரு. ஆரூரன் அருனந்தி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்
40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்த திரு ஆரூரன் அருனந்தி அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
நன்றி வீரகேசரி
போர்க்கப்பலை இலங்கைக்கு பரிசளித்த சீனா
24/07/2018 இரு தரப்பு நீண்டகால இராணுவ உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு சீனா ஆர்வமாக உள்ளதுடன் இதனை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் போர்க்கப்பல் ஒன்றை இலங்கைக்கு பரிசளிக்க உள்ளதாக சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சுஜியான்வெய் தெரிவித்தார்.
சீன இராணுவத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சீன தூதரகம் விஷேட நிகழ்வொன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரட்ண பிரதம விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்குப்பற்றினர்.
இலங்கையின் முப்படைகளுக்கு சீனா தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கும். இலங்கையுடனான பரஸ்பரம் மூலோபாய நம்பிக்கையை வலுப்படுத்த சீனா அரப்பணிப்புடன் செயற்படும். மேலும் இரு நாட்டு படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக புதிய பட்டுப்பாதை திட்டத்தின் அபிவிருத்தியைப் பலப்படுத்து சீனா விருப்பமாகவூம் நோக்கமாகவும் கொண்டுள்ளது என கேணல் சுஜியான்வெய் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
யாழ்ப்பாணக்கல்லூரி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் - பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
24/07/2018 வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவித்து பழைய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்று கல்லூரி முன்றலில் முன்னெடுத்திருந்தனர்.
கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அமைதிவழியில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் நிறைவில் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் டேவிட் சதானந்தன் சொலமனிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பில் பழைய மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது ,
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி இலங்கை அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றால் ஒப்புதல் வழங்கப்பட்ட தென்னிந்திய திருச்சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரியின் ஆளுநர் சபைக்கு தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பதவி வழியாகத் தலைவராக உள்ளார். அத்துடன், பாடசாலை அதிபர், பழைய மாணவர்களின் பிரதிநிதி, கல்வியாளர்கள் உள்ளிட்டோர் ஆளுநர் சபையின் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஆளுநர் சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய யாழ்ப்பாணக் கல்லூரியின் நிர்வாக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆளுநர் சபையின் கீழான நிர்வாகத்துக்கு அமெரிக்காவிலுள்ள கல்லூரியின் தர்மகர்தா சபை நிதியுதவியை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜா, ஆளுநர் சபையில் ஜனநாயகத்தை பேணாமல் செயற்படுகிறார் என கல்லூரியின் பழைய மாணவர்களாலும் நலன்விரும்பிகளாலும் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், அமெரிக்காவிலுள்ள தர்மகர்த்தா சபைக்கு பல மனுக்கள் அனுப்பிவைக்கபட்டன.
அவற்றை ஆராய்ந்த தர்மகர்த்தா சபை, யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையிலும் கல்லூரியின் நிருவாகத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் நோக்கில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜாவும். சபையின் உப தலைவரான சட்டத்தரணி செல்வி விஜுலா அருளானந்தமும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை இடம்பெறும்வரை கல்லூரிக்கு வழங்கப்படும் நிதியை இடைநிறுத்தவும் தர்மகர்த்தா சபை முடிவு செய்துள்ளது.
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாண கல்லூரியின் அதிபரின் சுயாதீனத்துக்கும் பதவி நிலைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் கீழ் நிலை பதவிகளில் உள்ள சிலர் அண்மைக்காலமாக செயற்படுகின்றனர்.
தென்னிந்திய திருச்சபைக்கும் அதில் உள்ளவர்களின் தேவைகளுக்கும் அமைய, கல்லூரி அதிபரின் ஒப்புதலின்றி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதுடன், அவர்களுக்கு பொருத்தமற்ற பாடநெறிகளும் ஆளுநர் சபையின் தலைவரால் வழங்கப்படுகிறது.
சிலர் பொறுப்புமிக்க பதவிநிலைகளில் உள்ளபோதும் தமது வியாபாரத்தையும் கல்லூரிக்குள் முன்னெடுக்கின்றனர். ஆசிரியர்கள் சிலர் படப்பிடிப்பாளராகவும் கல்லூரி மாணவர்களை அழைத்து தனியார் கல்வி நிலையத்தையும் நடத்துகின்றனர்.
இந்தச் செயற்பாடுகளை முற்றிலுமாக நிராகரிக்கும் பாடசாலையின் மீது அக்கறை கொண்ட சமூகம், கல்வி விளையாட்டு, இணைப் பாடவிதனாச் செயற்பாடுகளில் மாணவர்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வந்தனர்.
எனினும் கல்லூரிச் சமூகத்தின் ஆலோசனைகள் பரிந்துரைகள் ஆளுநர் சபையாலோ நிர்வாகத்தாலோ ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக அதிகார துஷ்பிரயோகங்களே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாண கல்லூரியின் 150 ஆண்டுகால பாரம்பரியத்தையும் விழுமியங்களையும் பாதுகாப்போம் என பழைய மாணவர்களும் பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் என தெரிவித்தார். நன்றி வீரகேசரி
யாழ்ப்பாண மாநகர சபை கூட்டணியின் புதிய உறுப்பினர் தெரிவு
23/07/2018 யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தர்சிங் விஜயகாந்தின் பதவி தானாக செயலிழந்த நிலையில் அந்த இடத்துக்கு அவரது மனைவி நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அரச அச்சகத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் சுந்தர்சிங் விஜயகாந்த் போட்டியிட்டார். அவரது வட்டாரத்தில் வெற்றிபெற்ற அவர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
எனினும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினராக விஜயகாந்த் பதவி ஏற்க முன்னரே ஒரு குற்றத்தில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைக் கைதியானார்.
மாநகர சபை அமர்வில் பங்கேற்க அனுமதியளிக்குமாறு விஜயகாந்த் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் கோரியிருந்தார். எனினும் அதற்கான அனுமதியை அமைச்சு வழங்கவில்லை.
தனக்கு எதிரான குற்றத்தீர்ப்பை ஆட்சேபித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விஜயகாந்த் மேன்முறையீடு செய்த போதும் அவருக்கு நீதிவான் நீதிமன்றால் பிணை வழங்கப்படவில்லை.
இதனால் யாழ்ப்பாண மாநகர சபையின் 3 அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்க தவறிய சுந்தர்சிங் விஜயகாந்த்தின் உறுப்புரிமை தானாகவே செயலிழந்த்து.
இதேவேளை விஜயகாந்தின் கட்சியான முற்போக்கு தமிழ்தேசியக் கட்சி அண்மையில் ஒன்று கூடி விஜயகாந்தின் உறுப்பினர் இடத்திற்கு அவரது துணைவியான நர்மதா ஜெகதீஸ்வரனை நியமிக்க கட்சி முடிவெடுத்திருந்தது.
இதற்கமைவாக தமிழர் விடுதலைக் கூட்டணியூடாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய உறுப்பினராக நர்மதா ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
அச்சுவேலி தேர்த்திருவிழா; வடம் பிடித்த இராணுவ வீரர்கள்
27/07/2018 அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அதன் போது ஆலயத்திற்கு இராணுவ சீருடையில் வந்த இராணுவத்தினர் தமது மேலங்கியை கழட்டி தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இராணுவத்தினரின் திடீர் செயற்பாட்டை கண்ணுற்ற பக்தர்கள் செய்வதாரியாது இருந்தனர் நன்றி வீரகேசரி
இந்தியாவிலிருந்து தாயை காண வந்த இலங்கை தமிழர் கைது
29/07/2018 இலங்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தனது தாயாரை பார்க்க வந்த இலங்கை தமிழர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வனத்துறையினர் தீவுப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது .இராமேஸ்வரம் சிங்கிலி தீவு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட நாட்டுப்படகினை சோதனை செய்த போது குறித்த படகில் யாரும் இல்லாததால் தீவு பகுதி முழுவதும் வனத்துறையினர் சோதனை செய்தனர்.
இதன் போது குறித்த தீவில் மறைந்திருந்த இருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இலங்கைக்கு அகதிகளை அழைத்துச் செல்வதற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அதிகாரிகள் விசாரணை செய்த போது இரண்டு அகதிகள் தீவு பகுதியில் மறைந்து இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தீவு பகுதி முழுவதும் சோதனை நடத்தினர்.அப்போது தீவுபகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் சுற்றி திரிவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்து மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரனையில் விழுப்புரம் வெளி பகுதிவில் வசித்த சாயிசன் மற்றும் திருச்சி உறையூர் முகாமை சேர்ந்த ஜெயக்குமார் என்பதும் தெரியவந்தது.
இலங்கை யாழ்பாணத்தில் உள் சாயிசனின் தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவரைக் காண்பதற்காக சாயிசனும் அவரது நண்பர் ஜெயக்குமாரும் இலங்கை செல்ல முயன்ற போது இலங்கையில் இருந்து தனுஸ்கோடி பகுதிக்கு வரவேண்டிய படகு வராததால் படகிற்காக சிங்களத் தீவில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வனத்துறையால் கைது செய்யப்பட்ட சிவகுமார், பாஸ்கர் ஆகிய இருவரையும் விசாரனை செய்த போது தமிழகத்தில் உள்ள அகதிகளை சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், படகில் ஏற்றி செல்ல நபர் ஒருவருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment