உலகச் செய்திகள்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

102 போதைவஸ்து கடத்தற்காரர்கள் சுட்டுக்கொலை

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை ; 6 பேர் கைது

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வெளியேற்றப்பட்டார் ஸ்பெயின் பிரதமர்!!!

12ஆம் திகதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும் : ட்ரம்ப்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு

28/05/2018 தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை இன்று மாலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயற்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். இந்த ஆலை எதிர்ப்பாளர்கள், கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதியன்று நடத்திய போராட்டத்தின் போது, பொலீஸார்  துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதன் போது 13 பேர் பலியாகினர். இதில் காயமடைந்தவர்களை நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியாக கூறினார்கள். அதே போல் இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதனைத் தொடர்ந்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.அதில் ‘பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக’ தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி  










102 போதைவஸ்து கடத்தற்காரர்கள் சுட்டுக்கொலை

30/05/2018 பங்களாதேஷில் போதவைஸ்து கடத்தலுக்கு எதிராக இருவாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 102 க்கும் மேற்பட்ட போதைவஸ்து கடத்தற்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் கடந்த15 ஆம் திகதி போதைவஸ்து கடத்தற்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பமானது முதல் இதுவரை அந்தக் கடத்தலுடன் தொடர்பு கொண்டிருந்த 15,000 பேரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் 102 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 
அந்த வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 10 க்கும் மேற்பட்ட போதைவஸ்து கடத்தற்காரர்கள்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுட்டுக் கொல்ப்பட்டவர்களுள் ஒரு பகுதியினர் பொலிஸாரின் துப்பக்கிப் பிரயோகத்தில் பலியானதுடன் ஏனையவர்கள் போதைவஸ்து கடத்தற்கார குழுக்களிடையே இடம்பெற்ற துப்பாக்கி சமரில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.
பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கை அக் கடத்தலை முழுமையாக கட்டுப்பாடுக்குள் கொண்டு வரும் வரை தொடரும் என அந் நாட்டு உள்துறை அமைச்சர் அஸாதுஸ்ஸமான் கான் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 









பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி

29/05/2018 பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெல்ஜியத்தின் கிழக்கு பகுதி நகரான லீச்சினில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளனர். 
துப்பாக்கிதாரி பாடசாலையொன்றில் பெண்ணொருவரை பணயக்கைதியாக பிடித்தார் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
பெல்ஜியத்தின் லீச்சின் நகரப்பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட நபர் பொலிஸாரை கத்தியுடன் பின்தொடர்ந்தார் பின்னர் துப்பாக்கியை எடுத்து தாக்குதலை மேற்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பின்னர் பாடசாலையை நோக்கி சென்ற நபர் கார் ஓன்றினுள் இருந்த 22 வயது நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் ஆயுதமேந்திய பொலிஸார் அவ்விடத்திற்கு வந்தவேளை அந்த நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பியோட முயன்றுள்ளார்.அதனை தொடர்ந்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
குறிப்பிட்ட சம்பவம் காரணமாக மக்கள் தப்பியோடும் படங்கள் சமூகஊடகங்களில் வெளியாகியுள்ளன.  நன்றி வீரகேசரி 








காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை ; 6 பேர் கைது

29/05/2018 இந்தியாவின் கேரள மாநிலத்தில் காதல் கலப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 
கேரள மாநிலத்தின்  சூரியகவளா பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரான கெவின் எனபவரும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய நினு என்னும் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் குறித்த பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து இருவரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்துகொண்ட இருவரும் அனிஷ் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று குறித்த  வீட்டிற்கு சென்ற நினுவின் சகோதரர் உட்பட 12 பேர் கெவின், அனிஷ் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 
பின் அவர்களை ஒரு வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளனர். இதில் அனிஷ் மட்டும் படுகாயத்துடன் திரும்பிய நிலையில் அவர் அயலவர்களின் உதவியுடன்  கோட்டயம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து நினு  தனது கணவரை என் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் கடத்திச்சென்றுள்ளதாகவும் . அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டுத் தரும்படியும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குறித்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் கெவின் சடலமாக மிதப்பதாக புனலூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கெவின் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக நினுவின் சகோதரர் சானுசாக்கோ, உட்பட அவரது நண்பர்களான ரியாஷ், நியாஷ் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நினு கருத்து தெரிவிக்கும் போது,
எனது கணவர் கடத்தப்பட்டது குறித்து காந்திநகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோது ரூபா 10 ஆயிரம் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.
பொலிஸாரின் செயலை கண்டித்து காந்திநகர் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பல கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
பொலிஸாரின் மெத்தனப்போக்கை கண்டித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில மனித உரிமை ஆணையம் பொலிஸ் உயரதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸ் உயரதிகாரி லோக்நாத் பெகரா, குறித்த பொலிஸ் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த கொலையை கண்டித்து இன்று கோட்டயம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கேரளாவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வெளியேற்றப்பட்டார் ஸ்பெயின் பிரதமர்!!!

01/06/2018 ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பிரதமர் மரியானா ரஜாய் மீது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதை அடுத்து இன்று நடந்த வாக்கெடுப்பு மூலம் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஸ்பெயின் நாட்டின் பிரதமராக மரியானா ரஜாய் பதவி வகிக்கிறார். சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவரது கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருக்கு சுமார் 33 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் ஊழலை தடுக்க முடியவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதுதொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், ரஜாய் பதவி விலக வேண்டும் எனவும், ரஜாய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சான்செஸ் கூறினார்.
இதனை அடுத்து ரஜாய் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ரஜோய்க்கு 176 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், அவருக்கு வெறும் 169 வாக்குகள் மாத்திரமே கிடைத்த நிலையில் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 180 பேர் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் புதிய  பிரதமராக சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் பெட்ரோ சான்ஷேஸ் பதவியேற்றுள்ளார்.
நன்றி வீரகேசரி









12ஆம் திகதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும் : ட்ரம்ப்

02/06/2018 வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடனான சந்திப்பு திட்டமிட்டபடி எதிர் வரும் 12ஆம் திகதி  சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நிரந்தர பகை நாடுகளாக உள்ள அமெரிக்காவும், வட கொரியாவும்  அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கம்.  அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.
இதன் படி எதிர் வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடு ஏற்பட,  இச் சந்திப்பு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.
இந்நிலையில் இச் சந்திப்பு சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம் யாங் சோல் நேற்று அமெரிக்கா சென்று, ட்ரம்பை சந்தித்து, கிம் ஜாங் உன் சார்பில் ஒரு பெரிய கடிதத்தையும் அவரிடம் கொடுத்தார்.
இதையடுத்து திட்டமிட்டபடி வருகிற 12ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப், 
"நாங்கள் ஜூன் 12ஆம் திகதி அந்நாட்டு தலைவரை சந்திக்க உள்ளோம். இது ஒரு வெற்றிகரமான செயற்பாடாக இருக்கும். நான் ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூர் பயணம் செய்கிறேன். இது ஒரு ஆரம்பமாக இருக்கும்.
ஒரு கூட்டத்தில் நல்லது நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இந்த ஒரு கூட்டத்தில் மிகவும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நினைக்கிறேன்.
இன்று நடந்த சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இது ஒரு பெரிய தொடக்கமாகும் என நினைக்கிறேன். நாங்கள் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். ஜூன் 12ஆம் திகதி சிங்கப்பூரில் பெரிய விஷயம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி 






No comments: