நாம்படிப்போம் வள்ளுவத்தை ! - ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )

                படைக்கின்ற இலக்கியங்கள் பயனளிக்கும் பாங்கினிலே 
                கிடைக்கின்ற போதுதான் படைப்பினுக்கு உயர்வாகும் 
image1.JPG                படைக்கின்றார் மனப்பாங்கும் படைப்பூடே வந்துநிற்கும் 
                படைப்பவர்கள் சமூகத்தை மனத்திருத்தல் அவசியமே  !

               நெறிபிறளும் வகையினிலே படைக்கின்ற இலக்கியங்கள்
               நீண்டகாலம் கொண்டதாய் நின்றுவிடல் அரிதாகும் 
               குறிக்கோளை மனமிருத்தி வருகின்ற இலக்கியங்கள்
               குவலயத்தால் என்னாளும் கொண்டாடி போற்றப்படும் ! 

               தனிப்பட்ட கருத்துக்களை தானுரமாய் கொண்டபடி 
               தரமற்ற படைப்புகளும் தரணிக்கு வருகிறது  
               நுனுப்புல்லை மேய்ந்தவராய் படைக்கின்றார் இருந்துவிடின் 
               வருகின்ற படைப்புகளும் வளமற்றே வந்துநிற்கும் ! 

               வாழுகின்ற வழிகூறும் வகையினிலே இலக்கியங்கியங்கள் 
               வருகின்ற போதிலேதான் வரட்சிநிலை அகன்றுநிற்கும் 
               மோதுகின்ற குணமதனை முன்னிறுத்தி இலக்கியங்கள் 
               சேதிசொல்லும் போதிலேதான் திசைகூடக் கெட்டுவிடும்  ! 

               வள்ளுவரின் படைப்பதனை வையகத்தார் வாழ்த்துகிறார் 
               இனங்கடந்து மொழிகடந்து எல்லோரும் விரும்புகிறார்
               சொல்லவரும் அத்தனையும் நல்லபடி சொல்லுகிறார்
               வெல்லுகின்ற இலக்கியமாய் வள்ளுவமும் இருக்கிறது ! 

                சாதிபற்றிச் சொல்லவில்லை சமயம்பற்றிச் சொல்லவில்லை
                நீதிபற்றி சொல்லுவதில் நியாமும் நிறைந்துளது 
                கடவுள்பற்றிச் சொல்லவில்லை கட்சிபற்றிச் சொல்லவில்லை
                கட்டாயம் செய்வதனை கண்ணியமாய் சொல்கிறது ! 

                இலக்கியத்தைப் படைப்பார்கள் இங்கிதமாய் படைப்பதற்கு
                ஏற்றபல பாடங்களை வள்ளுவத்தில் படித்திடலாம் 
                நலந்திகழ மனம்நிறைய நாலுபேர்க் கேற்றபடி 
                நற்படைப்பைப் படைப்பதற்கு நாம்படிப்போம் வள்ளுவத்தை ! 

               
               



No comments: