இலங்கைச் செய்திகள்

சிறுபான்மை மதத்தினர் மீது தொடரும் தாக்குதல்கள் - அமெரிக்கா

 "பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கு 750 ஏக்கர் காணி போதுமானது"

யாழில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது வாள்வெட்டு

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராய யாழில் பிரதமர்

யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - நெதர்லாந்து தூதுவர்
சிறுபான்மை மதத்தினர் மீது தொடரும் தாக்குதல்கள் - அமெரிக்கா

30/05/2018 இலங்கையில் சிறுபான்மை மதப்பிரிவினர் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2017 இல் உலகநாடுகளில் காணப்பட்ட மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மீது வருடாந்த அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தேசிய கிறிஸ்தவ எவாஞ்செலிகள்  என்ற அமைப்பு கடந்த வருடம் 97 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
கிறிஸ்தவ மதகுருமார் மீதான தாக்குதல்களும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றதாகவும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்ட அமைப்பை மேற்கோள்காட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் கடந்த வருடம் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் மற்றும் தொழுகை அறைகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது எனவும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக ரமழான் மாதத்தில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுபலசேனா போன்ற பௌத்த அமைப்புகள் தொடர்ந்தும் பௌத்த சிங்களவர்களின் மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றன, என தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த அமைப்புகள் ஏனைய சிறுபான்மை மத இனப்பிரிவினரை சிறுமைப்படுத்த  முயல்கின்றன இதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றன எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொதுபலசேனவும் ஏனைய தேசிய குழுக்களும் சிறுபான்மை மத குழுக்களிற்கு எதிராக வன்முறைகளை தூண்டும் விதத்திலான கருத்துக்களை பரப்பி வருவது குறித்து சிவில் சமூக அமைப்புகள்  கவலை வெளியிட்டுள்ளன எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 

 "பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கு 750 ஏக்கர் காணி போதுமானது"

29/05/2018 பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கு சுமார் 750 ஏக்கர் காணிகள் போதும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர், முப்படையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். 
இந்த கலந்துரையாடலின் போதே அவரிடம் குறித்த  யோசனை முன்வைக்கப்பட்டது.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய நிலையமாக்குவதற்கு இதுவரை காலமும் சுமார் ஆயிரம் ஏக்கர் காணி தேவை என கூறிவந்துள்ள நிலையில் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 750 ஏக்கரே போதுமானது என விமானப் படையினர் தெரிவித்துள்னர்.
அவ்வாறு 750 ஏக்கர் காணி போதுமானதாக இருந்தால் விரைவாக பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.  நன்றி வீரகேசரி 


யாழில் பத்திரிகை விநியோகஸ்தர் மீது வாள்வெட்டு

28/05/2018 யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றின் பிரதேச செய்தியாளர் மற்றும் பத்திரிகை விநியோகஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா இராஜேந்திரன் (வயது -55) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஐந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பத்திரிகை விநியோகத்துக்கு சென்று திரும்புகையில் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த தாக்குதலை மேற்கொண்ட 10 பேரும் முகத்தை துணியால் மறைத்திருந்ததுடன் அவர்களிடம் கைக்கோடாரி, வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


வடக்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராய யாழில் பிரதமர்

28/05/2018 பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கடும் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று நண்பகல் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 
இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடிய பிரதமர், நண்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாட உள்ளார். 
யாழ்.மாவட்டத்தின் இருவேறு பிரிவுகளாக முக்கிய கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ். மாவட்டத்தைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணாச சபை உறுப்பினர்களுடனும் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் அபிவிருத்தி மற்றும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடலும் பாதுகாப்புப் படையினருடன் குறிப்பாக இராணுவம், பொலிஸ் கடற்படை, விமானப்படையினருடன் மற்றொரு கூட்டமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முப்படையினருடனான இக்கூட்டத்தில் வடக்கில் விடவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி 


யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - நெதர்லாந்து தூதுவர்

01/06/2018 யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளதாக வட மாகாண ஆளுநர்  ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.
வடமாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர், எச்.இ.ஜோவான் டோர்னிவார்ட் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இச் சந்திப்பின் போதே நெதர்லாந்து தூதுவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
குறித்த சந்திப்பு வடமாகாணஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
 சந்திப்பு தொடர்பாக வட மாகாண ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளார்.
யாழின் புராதன கட்டடங்கள் மற்றும் புராதன சின்னங்களையும் பாதுகாப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது.
இதற்கு தேவையான பூரண ஆதரவை வழங்குவதாக நெதர்லாந்து தூதுவர் உறுதியளித்துள்ளார்.
யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்திய தூதுவர், கடல் நீரை குடிநீராக்கல், நிலக்கீழ் நீர் மாசை தடுத்தல், மழை நீர் சேமிப்பு ஆகியவற்றில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக சந்திப்பின்போது ஆராய்துள்ளார்.
மல்வத்து ஓயா மற்றும் இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை கொண்டுவருதல் உள்ளிட்ட விடயங்களும் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டதாகவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 


No comments: