ஒரு மக்களின் போராட்டத்தை எதிர்ப்போர் முதலில் அதன் துவக்கத்தை அல்லது காரணத்தை சரிவர அலசிப் பார்த்ததுண்டா?
நல்லது கெட்டது இரண்டிலும் நசுக்கப்படுவது நாட்டு மக்களே எனில் அம்மக்களை ஆளும் அரசோ அவ்விடத்து அரசுசார் அதிகாரிகளோ தலைவர்களோ நெறியற்று இருப்பதை, எங்கோ தனது கடமையை மீறியுள்ளதை, நேர்வழி பிசகியிருப்பதை அறமறிந்தோர் ஏற்பர்.
உரிமைகள் பலருக்கு மறுக்கப்படுகையிலோ, ஒரு பொதுவான சமூகநீதியை மேலோர் அவமதிக்கையிலோ அல்லது தட்டிக் கழிக்கையிலோ மட்டுமே ஒரு மண்ணில் போராட்டம் எழுகிறது. அல்லாது ஏதும் வாய்ச்சண்டையாகவே முடிகிறது.
தற்போது நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெரிய காரணமெல்லாம் கேட்டு முழுதாக ஆராயவெல்லாம் அவசியம் கூட இல்லை, ஏனெனில் அது வாழ்தலின் நிலைத்தலின் சுவாசித்தலின் மூலஅடிப்படையைக் கொண்டு அம்மண்ணின் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று. அதை மறுக்கவோ அவமதிக்கவோ எவருக்குமிங்கே உரிமையில்லை.
என் அப்பன் ஆத்தா வாழ்ந்த வீடு, பாட்டன் முப்பாட்டங் கணக்கா என் சனங்க வாழ்ந்த ஊரையும் தெருக்களையும் அழிச்சிட்டுத்தான் நீ கோபுரம் கட்றன்னு சொன்னா, அது கோவிலென்றாலும் மறுக்கும் சுய உரிமை எனக்குண்டு.
ஒரு வீட்டில் வாழ்ந்தவங்களோட நினைவும் அவர்களின் உயிர்சுமந்தக் காற்றும் அந்த வீட்டின் கல்லுமண்ணெல்லாம் கலந்திருக்கும்; ஆமாவா இல்லையா? எத்தனைப்பேருக்கு யார்வீட்டிலோ போய் படுத்தால் தூக்கம் வரும்? வராது? ஒரு வீடு தெரு ஊரென்பது வாழ்க்கையோடு முதன்மையாகச் சேர்ந்த சிலவாகும். அத்தகு வாழ்க்கையை பிடுங்கினா, வாழுமிடத்தை சிதைத்தால், உங்களுக்கு கோபம் வராதா?
யோசித்துப் பாருங்க; அடுத்தவர் வீட்டை இடித்து ஆலைகள் வந்தால் அது முன்னேற்றமாகத்தான் தெரியும், அதே தனது நிலத்தில் ஒன்றென்றால் அதை எத்தனைப் பேராலங்க தாங்கிட முடியும்? வள்ளல்குணத்தோடு ஒருசிலர் முன் வரலாம் ‘நான் என் உயிரையே என் நாட்டிற்காக தருவேன்னு சொல்லலாம், உண்மை என்னன்னா உயிரைக் கூட தரலாம் வீட்டை தரமுடியாதுங்க.
வீடென்பது நமக்கு சுவரும் சுன்னாம்பும் மட்டுமல்ல அது என் அம்மா வாழ்ந்த இடம், என் அப்பா எனை வளர்த்தெடுத்த நிலம். என் பிள்ளைகளும் தங்கைகளும் தம்பியும் அண்ணனும் சுவாசித்த காற்றுள்ள கூடுங்க வீடு, நல்லா மகிழ்வா அன்பா அறத்தோட வாழறவங்களுக்கு வீடும் கோயில் போல புனிதம் மிக்கது தான்.
அதையும் சிலர் யாரோ ஒருசிலர் தனது தேசபக்தியின் நோக்கில் விட்டுத் தரலாம் ஆனா அது சாமான்ய மக்களால முடியாதுங்க. எல்லோராலும் ஒருபோல சிந்திக்கவோ ஏற்கவோ மறுக்கவோ முடியாத பலர் வாழும் மண்ணுங்க ஊரு அதை எடுக்கவோ மாற்றவோ பிடுங்கவோ அழிக்கவோச் செய்யும்முன் அம்மண்ணின் மக்களைப்பற்றி கருதவேண்டியவர்கள் முதலில் அரசாளும் தலைவர்களும் முதலீடு ஈட்டும் முதலாளிகளும் அதற்கு சம்மதிக்கும் அதிகாரிகளாவும் இருக்க வேண்டும். வெறும் சம்பாதிப்பவர்களாக இருப்போரை ஒட்டுமொத்த ஊரும் எப்படி சரியென ஏற்குமென்று எதிர்ப்பார்க்கலாம் நாம்?
தன் வீட்டில் நெருப்பெரிந்தால் தான் தனக்கு வலிக்குமா? என்னதான் ஆயிரம் முன்னேற்றம் வளர்ச்சி நாடு எதுவானாலும் அதற்கு நீ ஒருவருடைய வாழ்வாதாரத்தை பிடுங்குவன்னு சொன்னா அதை ஏற்கும் மறுக்கும் உரிமை அந்த மண்ணுக்குரியவனுக்கு முழுமையாய் உண்டு.
அதை மறுத்து அதிகாரத்தை செலுத்தி பிடுங்க நினைத்தால் அது அறமற்ற அரசின் இயல், ஏற்க தோதற்றது.
இப்படியெல்லாம் பேசினா ஒரு மாற்றமும் முன்னேற்றமும் நம்ம மண்ணுல வராதுன்னு சொல்ற எண்ணற்ற பேர் படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்று தான்; இது வெடிக்குமென்று தெரிந்தும் எரிவாயு உருளையை (எல்.பி.ஜி. சிலின்டர்) நம் வீட்டுப் பெண்கள் குழந்தைக்கருகில் வைத்தே பயன்படுத்த வில்லையா ? படித்திடாத ஏழைகளேனும் அதைப் பற்றி பயந்ததுண்டா ? ஒரு செயலின் பயன் என்பது மட்டுமல்ல நம் தேவை, அதனோடு பாதுகாப்பும் சேர்ந்தால் தானே அது முன்னேற்றமும் வளர்ச்சியுமாகும் ? அல்லாது போனால் அது ஒரு முன்னெடுப்பு அவ்வளவுதான். பிறகதில் நன்மை தீமைக்கான முரன் எழுந்து முரன் புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலுமிருக்க அதோடு சிலரின் சுயநலமும் பலரின் பொதுநலமும் சேர சிலரால் அது தவறாக திரிக்கப்பட்டு பேசப்பட்டு பேராபத்தாக உருவெடுத்துவிடுகையில் போராட்டம் பொதுவில் எழாமலா இருக்கும்..?
நிறுவனங்கள் வரவேண்டும்தான், அது முதலில் அதற்குரிய பாதுகாப்பான சூழலோடு இருப்பதும் அவசியம். முதன் முதலில் ஒரு தொழிற்சாலை துவங்கப்படுகையில் அதையென்னி மகிழ்ந்தவர்கள் தானே நாமும்; ஆனால் அது எப்போது அபாயகரமானதாக வெளிப்பட்டதோ, உயிருக்கும் விளைச்சலுக்கும் மண்ணிற்கும் தண்ணீருக்கும் கேடு விளைவிப்பதாக மாறுகிறதோ அப்போதே பயமும் போராட்டகுணமும் தானே உடனெழுகிறது.
இன்றைய நிறைய தொழிற்சாலைகள் வெறும் முதலீட்டாளர்களின் லாபத்திற்காக கட்டப்படுகிறதே யொழிய வேறெந்த மக்கள் நலனை முன்வைத்தோ அல்லது அதற்கீடான அந்நிலத்துக் குடிமக்களின் நன்மைகளை பாதுகாப்புதனை கருத்தில் கொண்டோ ஒருக்காலும் எண்ணற்றவை இல்லை. பிறகெப்படி நாம் வளர்ச்சியை முன்னேற்றத்தை இப்படிப்பட்ட பணக்கார முதலைகளிடம் எதிர்ப்பார்த்திட முடியும்? அவர்களை நம்பி சம்மதித்திட முடியும்?
உனது சட்டையை நீ கழற்றி மாற்றிக் கொள்வதோ உன் இடத்தில் நீ உச்சத்தை அடைவதோ அது உன் உரிமை. அதே நீ என் சட்டையைப் பிடித்து இழுப்பாயெனில், என் வீட்டு கிணற்றை நஞ்சாக்கி என் தலைமுறையின் பிறப்பை முடமாக்கி எங்களைக் கொல்வாயெனில் அதையெதிர்க்கும் உரிமையும் எனக்கும் என் போன்றோருக்கும் உண்டு நண்பா.
ஒவ்வொரு போராட்டமும், அது மக்கள் போராட்டமெனில் அதற்குள் ஒரு நீதியோ அல்லது சர்வாதிகாரத்தின் மோசடியோ அல்லது தனக்கான உரிமைக் கோரலோ இல்லாமலில்லை.
அது புரியாமல் போராட்டத்தை வெறுமனே எதிர்ப்பதோ, வீக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையேயான புரிதலை ஏற்க மறுப்பதோ சரியா தோழர்களே?
இந்த சமகாலத்தில் நாம் எதுவாக வாழ்கிறோமோ அதுவாகவே நாளை நம் பிள்ளைகளும் வாழும். வளரும். இந்த எம் மண்ணில் நாம் எதை இன்று விதைக்கிறோமோ அதுவே நாளை எம் தலைமுறைக்காகவும் விளையும். எனவே விதைப்போரே இனி கவனமாயிருங்கள். இது என் கருத்து இதையும் முழுதாக ஏற்கவேண்டுமென்று இல்லை, சற்று உயிர்நேசத்தோடு சிந்திக்க மட்டுமே என் வேண்டுகோள்தனை தோழமையுடன் இங்கு முன்வைக்கிறேன்.
மற்றபடி, எல்லோரும் நலம் பெற்றிருக்கட்டும், அதன்வழி என் நாடும் இம்மண்ணும் வளம் பெறட்டும்! வாழிய மக்கள் அறத்தோடு!!
No comments:
Post a Comment