சென்னையில் சில காலம் தங்கி ஒளிப்பதிவுத் துறையிலும் ஒப்பனையாளராகவும் பயிற்சி பெற்றிருந்த லெனின் இலங்கைத் திரும்பியதும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மேடை நாடகங்களுக்கு மேக்கப் மேனாக பணியாற்றத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் லெனின் கொட்டாஞ்சேனையில் வசித்து வந்தார். பல நாடகக் கலைஞர்கள் அந்த பிரதேசத்திலேயே வசித்து வந்தார்கள். அவர்களின் அறிமுகத்தை அடுத்து மாந்தருள் மாணிக்கம் என்ற நாடகத்தை இயற்றி மேடை ஏற்றினார் லெனின். இந்த நாடகம் வெற்றி பெற்றது.
லெனின் ஒப்பனையாளராக பணியாற்றிய ஒரு நாடகம் கொழும்பு லயனல் வென்ற் அரங்கில் மேடையேறியது. இந்த நாடகத்தை பார்ப்பதற்காக நாடகத்தில் நடித்த நடிகர் ஏகாம்பரம் தன் நண்பர் ஒருவரை அழைத்திருந்தார். அவ்வாறு வந்தவர்தான் பின் நாட்களில் பிரபல ஒளிப்பதிவாளராகத் திகழ்ந்த வி வாமதேவன் ஆவர். கொம்பரத்தின் மூலம் லெனினுக்கு வாமதேவனின் அறிமுகம் அன்று கிட்டியது. லெனினின் ஆர்வத்தைக் கண்ட வாமதேவன் அவரை சிலோன் ஸ்டுடியோவிற்கு வரும்படி அழைத்தார்.
அப்போது சிலோன் ஸ்டுடியோவில் நிர்வாகியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் பிறேம்நாத் மொறயஸ் அவரின் நேரடி அறிமுகம் வாமதேவன் மூலம் லெனினுக்கு கிட்டியது. அதன் பலன் நாடகங்களுக்கு மேக்கப் மேனாக பணியாற்றிக் கொண்டிருந்த லெனினுக்கு திரைப்படமொன்றிற்கு மேக்கப் மேனாக பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
பிறேம்நாத் மொறயஸ் டைரக்ட் செய்த ஸ்ரீ296 என்ற படத்திற்கு மேக்கப் மேனாக அமர்த்தப்பட்டார் லெனின். ஆக லெனின் மொறயஸ் திரையுலகில் வாய்ப்பு பெற இன்னுமொரு மொறயஸான பிரேம்நாத் மொறயஸ் காரணமானார். சிலோன் ஸ்டுடியோவில் பல தமிழ்க் கலைஞர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் சிங்களப் படம் ஒன்று உருவாகும் போது இந்தியாவில் இருந்தே டைரக்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோரும் இலங்கைக்கு வருவது வாடிக்கை. இந்த சூழ்நிலை 1957ம் ஆண்டிற்கு பிறகு ஒரளவிற்கு மாறத் தொடங்கியது எனலாம்.
நாடகத் துறையிலும் திரைத் துறையிலும் ஏதோ விதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆர்வத்திலேயே லெனின் நடிகர்களுக்கு அரிதாரம் பூசினார். நாடகங்களை இயக்கினார்.
மார்க்கண்டு செல்வானந்தன் இவர் யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் பிறந்தவர். சிலோன் ஸ்டுடியோவில் ஒளிப்பதிவுத் துறைக்கு பொறுப்பாக சிலகாலம் இருந்தவர். லெனினுக்கு முழுமையாக கிடைக்காத வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சென்னை நெப்டியூன் ஸ்டுடியோவிற்கு சென்று மூன்று வருடங்கள் ஒளிப்பதிவு துறையில் பயிற்சி பெற்றார் இவர்.
இலங்கை திரும்பிய பின்னர் இவர் சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பை பெற்றார். அவரது பெயரும் காலத்திற்கு ஏற்றாற்போல் எம். எஸ். ஆனந்தன் ஆயிற்று. அவருடன் பணியாற்றும் வாய்ப்பு லெனினுக்கு கிட்டியது. ஆனால் எடுத்த எடுப்பிலே ஒளிப்பதிவாளாராக பணியாற்ற கிட்டவில்லை. முதலில் கிடைத்ததென்னவோ டிராலி தள்ளும,; அதாவது கமெராவை நகர்த்தும் வேலைதான் கிடைத்தது.
ஏற்கனவே சென்னையில் பி. என். சுந்தரத்திடம் ஒளிப்பதிவு கலையை கற்றிருந்த லெனின் ஆர்வம் காரணமாகவும் சுய முயற்சி காரணமாகவும் எம். எஸ். ஆனந்தனிமிடமும் ஒளிப்பதிவு நுணுக்கங்களை அறிந்து கொண்டார். ஓளிப்பதிவு செய்வதற்கான தகுந்த சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் சினிமாஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளர் கே. குணரத்தினம் ஹெந்தளையில் தனது விஜயா ஸ்டுடியோவை நிறுவி சிங்களப் படங்களை தயாரிக்கத் தொடங்கியிருந்தார். அதுவரை காலமும் சிலோன் ஸ்டுடியோவில் இருந்த வாமதேவன் தனது எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு விஜயா ஸ்டுடியோவில் இணைந்து கொண்டார்.
எம். எஸ். ஆனந்தன், வாசகம், கே. செல்வரத்தினம் போன்றோர் சிலோன் ஸ்டுடியோவில் உருவாகும் படங்களில் பங்குபற்றிக் கொண்டிருந்தார்கள். இதே காலகட்டத்தில் வட இந்தியரான ஒருவர் சிங்களப் படத்தயாரிப்பில் தீவிர அக்கறை காட்டிக்கொண்டிருந்தார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
இலங்கையில் பிரபல வர்தகராக விளங்கிய ராஜாபாலி வட இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர். தனது வழமையான வர்த்தக நடவடிக்கைகளுடன் திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டினார். இவருடைய நிர்வாகத்தின் கீழ் ஒரு பட யுனிட்டே இயங்கிக் கொண்டிருந்தது. இந்த யுனிட்டில் ஒளிப்பதிவாளர் எம். எஸ். ஆனந்தன் லெனின் மொறயஸ், கதாநாயகியாக நடித்த புகழ்பெற்ற புளுரிடா ஜயலத், கதாசிரியர் எஸ். ஏ. அழகேசன் என்று பலர் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
தனது ஆர் ஆர். பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப் போகும் புதிய படத்திற்கு எம். எஸ். ஆனந்தனை டைரக்டராக நியமிப்பது என்று ராஜாபாலி தீர்மானித்தார். படத்திற்கு சித்தக மஹிம என்று பெயிரிடப்பட்டது.
இயக்குனர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆனந்தன் தான் ஒர் ஒளிப்பதிவாளாராக இருந்த போதும் இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்ய விரும்பவில்லை. புதிய பொறுப்பான டைரக்ஷனிலேயே கவனம் செலுத்த விரும்பினார். இது லெனினுக்கு வாய்ப்பாயிற்று. ஆம் ஆனந்தன் இயக்குனரானவுடன் அந்தப் படத்திற்கு லெனின் ஒளிப்பதிவாளராக தெரிவானார். ஒளிப்பதிவாளராக லெனின் வாழ்வில் ஒளிபிறந்தது.
அன்றைய பிரபல கதாநாயகர் பிரேம் ஜெயந்த் நாயகி சந்தியாகுமாரி ஜோடியில் இவர்கள் உருவாக்கிய சித்தக மாஹிம படம் 1964ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்து வெற்றி பெற்றது . இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லெனின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஒளிப்பதிவாளராகி விட்டார்.
பொதுவாக எல்லா இயக்குனர்களும் தங்கள் படத்திற்கு தம்மோடு இணைந்து, தமது எண்ணக் கருவைப் புரிந்து காமராவை இயக்கக் கூடிய ஒளிப்பதிவாளரையே தெரிவு செய்வர் காரணம் தான் மனதில் நினைப்பதை திரையில் கொண்டுவர வேண்டியவர் ஒளிப்பதிவாளரரே என்ற எதிர்பார்ப்புத்தான்.
இவ்வாறு லெனின் கமரா கைவண்ணத்தில் நம்பிக்கை வைத்து அவரைத் தங்களின் இரு கண்களாகப் பார்த்தவர்கள் எம் எஸ் ஆனந்தன், கே ஏ டபிள்யூ பெரேரா , நீல்றுபசிங்க போன்ற பிரபல சிங்கள திரைப்பட நெறியாளர்கள் ஆவர்.
1960ம் ஆண்டுகளில் சிங்கள திரைப்படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவராக விளங்கியவர் கே ஏ டபிள்யூ பெரேரா . இவர் இயக்கிய பைசிக்கிள் ஹோரா (சைக்கிள் திருடன்) லொக்கு மகிநாவ ( பெரிய சிரிப்பு) ஆகிய படங்களுக்கு லெனினையே ஒளிப்பதிவாளராக ஆக்கிக் கொண்டார்.
அன்றைய காலகட்டத்தில் சிங்கள திரைப்படங்களுக்கான வர்த்தக ரீதியான சந்தைவாய்ப்பு மிகவும் மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களவர்கள்
விளங்கிய போதிலும் இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதிகளில் தான் சிங்களப் படங்கள் திரையிடப்பட்டன. அவ்வாறு திரையிடப்படும் படங்களும் நூறுநாட்கள் ஓடுவதென்பது அரிது.
எனவே குறைந்த செலவில் தயாரிப்பாளரின் கைகளை கடிக்காத வகையில் உருவாக்கவேண்டிய கடப்பாடு படத்தின் நெறி யாளருக்கும் அவருடன் இணைந்து பயணிக்கும் ஒளிப்பதிவாளருக்கும் அவசியமான ஒன்றாகவே கருதப் பட்டது . அதனை லெனின் மொறயஸ் மிக நேர்த்தியாக நிறைவேற்றினார் .
ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் படமாக்கி படச் சுருள்களை வீனாக்குவது அரை குறையாக கமராவை அங்கும் இங்கும் நகர்த்துவது போன்ற சங்கதிகள் லெனின் உருவாக்கும் படங்களிள் இருக்காது. இதனால் ஒருபடத்தில் லினினைப் பயன் படுத்திய தயாரிப்பாளர் மீண்டும் தங்களது அடுத்த படத்திற்கும் பணியாற்ற அழைப்பது வியப்புக் ககுரியதல்ல.
இந்த வகையில் சித்தக மாஹிமபடத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படமான ஸ்வீப் டிக்கட் என்ற படத்தைத தயாரிக்கத் தொடங்கினார் ராஜா பாலி . படத்திற்கு படம் புதிய இயக்குனரை அறிமுகம் செய்வது என்ற கொள்கை யைக் கொண்டிருந்த ராஜாபாலி இந்தப் படத்திற்கு ராஜாஜோச்வா என்பவருடன் லெனினையும் இணை இயக்குனராக நியமித்தார்.
சிங்கள திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிப் பின்னர் குணசித்திர நடிகரான ஜோஅபேவிக்ரம இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்தப் படத்திந வெற்றியைத்தொடர்ந்து தனது அடுத்த படத்தினை இயக்கம் வாய்ப்பை லெனினுக்கே கொடுப்பதாக ராஜாபாலி உறுதி அளித்திருந்தார் , எனவே அடுத்து எந்தக் கதையை தயாரிப்பது என்பதில் லெனின் தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தலானார் .
தொடரும்
No comments:
Post a Comment