நடந்தாய் வாழி களனி கங்கையே - அங்கம் -03 களனி தொகுதி பிரதிநிதி மற்றும் ஒரு "நாயகன்" " நீங்கள் நல்லவரா..? கெட்டவரா...? - ரஸஞானி



" ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடிவளர்த்து, ஜோராக குடியிருப்போம்" என்ற திரைப்படப் பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அரைநூற்றாண்டுக்கு முன்னர் ( 1964 இல்) வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் வாயசைக்கும் இந்தப்பாடலை கவியரசு கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
இக்காலத்தில் இத்தகைய பாடல்கள் வெளியாவது அபூர்வம். இயற்கையையும் அதனோடு இணைந்த வாழ்க்கையையும் அழகியலோடு சித்திரித்தன அக்காலத் திரைப்படப்பாடல்கள்.
இன்று பெண்ணின் உடலை ஆணும்,  ஆணின் உடலை பெண்ணும் வர்ணிக்கும் காதல் களியாட்ட பாடல்களும் குத்தாட்டப் பாடல்களும்தான் திரைப்படம் முதல் சுப்பர் சிங்கர் வரையில் நீட்சி பெற்றுள்ளன.
ஆற்று மணல்தான் வீடு கட்டுவதற்கும் இதர கட்டுமான வேலைகளுக்கும்  உகந்தது. கடற்கரையோர மணல் பொன்னிறமாகத்தான் இருக்கும். ஆனால், அது உகந்தது அல்ல! சிறுவயதில் எங்கள் வீட்டருகிலிருந்த கடற்கரையிலிருந்து மணல் அள்ளிவந்து எங்கள் வீட்டு முற்றத்தில் தூவிவிடுவோம். சில நாட்களில் அந்த மணல் கறுத்துப்போகும். காரணம் அதன் உவர்ப்புத்தன்மைதான்.
அதேசமயம் வீட்டருகிலிருந்த புத்தளம் வெட்டு வாய்க்காலின் ( மகா ஓயா நதியின் கிளை) அருகிலிருந்து களிமண் எடுத்துவந்து எங்கள் வீட்டு சமையல் கூடத்தில் எங்கள் பாட்டி, அழகான அடுப்படி அமைப்பார்கள். விறாந்தாவுடன் சேர்த்து அழகான திண்ணையும் உருவாக்குவார்கள்.
களனி கங்கையிலிருந்து மணல் அள்ளி,  பெரிய படகுகளில் ஏற்றி கரைக்கு எடுத்துவந்து விற்பனை செய்யும் காட்சிகளை பார்த்திருப்பீர்கள்.
இந்தத்தொழில் இலங்கையில் மாத்திரமின்றி அயல் நாடுகளிலும் நடைபெறுகிறது. தமிழக எழுத்தாளர் ஆ. மாதவன் மணலும் புனலும் என்ற நாவலில்  நதிகளில் மணல் எடுக்கும் தொழிலாளர்களின் வாழ்வை சித்திரித்துள்ளார்.
சுரங்கத்தொழிலாளர்களின் வாழ்வில் வரும் சோதனைகள் வேதனைகள் ஆற்று மணல் அள்ளும் தொழிலாளர்களுக்கும்  இருக்கின்றன. களனி கங்கையில் மூங்கில்களை பிணைத்துக்கட்டி எடுத்துச்செல்வதையும் அவதானித்திருப்பீர்கள்.
மூங்கில்களும் கட்டுமானப்பணிகளுக்கும் குடிசை வீடுகளுக்கும் உதவும். மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே என்றும் ஒரு பாடல் இருக்கிறது. கங்கைக்கரைகளில் செழித்து வளரும் தாவரம்தான் மூங்கில். புல்லாங்குழல் இசைக்கருவியின் தாயும் இந்த கங்கைகரைகளில் வளரும் மூங்கில்தான். குடிசைக்கைத்தொழிலுக்கு பெரிதும் உதவும் மூங்கிலை நம்பி வாழும் ஏழைக்குடும்பங்களை பார்த்திருப்பீர்கள். கங்கைக்கரைகளில் வளரும் மூங்கில்கள் பற்றியே விரிவாக எழுதுவதற்கு ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.
இவ்வாறு எங்கள் களனி கங்கை எமது தேசத்திற்கும் மக்களுக்கும் பலவழிகளில் உதவி வந்தாலும், களனி என்ற பெயரில் இந்த கங்கையின் அருகிலிருக்கும் பிரதேசம் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தொகுதிக்கு ஒரு முக்கியமான இலட்சணமும் உண்டு. அங்கிருந்து  நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகும் வேட்பாளர்கள் ஏதோ ஒருவகையில் விவகாரத்திற்குரியவர்கள்தான்.

கடந்த அங்கத்தில் இந்தத் தொகுதியிலிருந்து தெரிவான விமலா விஜயவர்தனா, ஜே.ஆர். ஜெயவர்தனா, சிறில் மத்தியூ பற்றி சொல்லியிருந்தோம்.
அவர்கள் மூவரும் மேல் உலகம் சென்றுவிட்டனர். தற்போது இவ்வுலகில் இருக்கும் மேர்வின் சில்வா பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
இவரும் களனி தொகுதியிலிருந்துதான் தெரிவானவர். சிங்களத் தலைவர்களினால், ஏற்கவும் முடியாத இழக்கவும் முடியாத ஒரு வேட்பாளர்தான் இந்த மேர்வின் சில்வா!
கமல் நடித்து மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தில், அண்மையில் சென்னையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதியிருக்கிறார்.
                              அதில், ஒரு குழந்தை தனது தாத்தாவான வேலுநாயக்கரிடம் ( கமலிடம்) " நீங்கள் நல்லவரா...? கெட்டவரா...? " என்று கேள்வி கேட்கும். ஏனென்றால் அந்த வேலுநாயக்கர் நல்லதும் செய்வார். கெட்டதும் செய்வார்.
களனி மேர்வின் சில்வா, வாயைத்திறந்தால் என்ன பேசுவார் என்ன பேசமாட்டார் என்பதும் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரியாது. ஒரு தடவை தேர்தல் காலத்தில் கிளிநொச்சிக்கு சென்ற மேர்வின் சில்வா, அங்கு தமிழர்களைப்பார்த்ததும், " வாங்க மச்சான் வாங்க..." என்று தமிழிலேயே பாடத்தொடங்கிவிட்டார்.
நல்லவேளை அதனைக்கேட்ட எவரும், அந்தப்பாடலின் அடுத்த வரியான "...  வந்த வழியப்பார்த்துப் போங்க..." எனப்பாடவில்லை.
ஐ.நா. சபையின் பிரதிநிதி நவநீதம்பிள்ளை இலங்கை வந்தசமயத்தில், அவரை திருமணம் செய்யவும் விரும்புவதாக ஒரு பெரிய குண்டையும் தூக்கிப்போட்டு, இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு சிக்கலை ஏற்படுத்தியவர்தான்  இந்த மேர்வின் சில்வா.
மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரதேசத்திற்கு இவர் அமைச்சராகச்சென்றபோது, ஒரு அதிகாரி அவ்விடத்திற்கு உரிய நேரத்திற்கு வராமல் தாமதித்தமைக்காக ஒரு மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்தியுமிருக்கிறார்.
இவ்வாறு பல விவகாரமான பக்கங்கள் இவருக்கிருந்தாலும் இயல்பில் சில முன்னுதாரண குணங்களுக்கும் சொந்தக்காரர்தான் இந்த களனி தொகுதி பிரதிநிதி.
முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடந்துவந்த வேள்வித்திருவிழாவில் ஆடுகள் பலியிடப்பட்டுவந்ததை நாம் அனைவரும் அறிவோம். அதற்கு எதிராக குரல் கொடுத்து ஆலயமுன்றலில் ஆர்ப்பாட்டம் செய்தவரும் மேர்வின்சில்வாதான்.
யாழ்ப்பாணத்தில் நீதிபதியாக பணியாற்றிய  திரு. இளஞ்செழியன், ஆலயங்களில் இனிமேல் மிருக பலி நடக்க அனுமதிக்கலாகாது என்று தீர்ப்பளித்தபோது, அதனை வரவேற்று, நீதிபதி இளஞ்செழியனுக்கு புகழாரம் சூட்டியவரும் மேர்வின் சில்வாதான்.
ஒரு அரச பொது நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும்போது இவரது வாகனம் வருவதற்கு  தாமதமானதும், உடனடியாக ஒரு பஸ்ஸில் ஏறி பயணத்தை தொடர்ந்தவரும் இவர்தான்.
மக்களுடன் எளிமையாக பழகும் இவர், சில சமயங்களில் எல்லைமீறியும் தன்னை தாழ்த்திக்கொள்வதுண்டு. ஒரு சமயம் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்‌ஷவின் காலடியிலும் அமர்ந்து பேசியிருக்கிறார்.
அவருடன் முரண்பட்ட பின்னர், அவரது பதவிக்காலத்தில்  இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக சாட்சியமளிக்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும் ஆஜரானார் இந்த முன்னாள் அமைச்சர்.
ஓராண்டுக்கு முன்னர் தாம் ஒரு புதிய கட்சியை தொடங்கவிருப்பதாகவும், அநீதிக்கு ஆளாகியிருக்கும் தன்னைப்போன்ற எவரும் தனது புதிய கட்சியில் இணையலாம் எனவும், தனது கட்சியின் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் எவரும் தீர்வையற்ற வாகனங்களை பெறமுடியாது என்றும்,  அவர்களை V.I.P (Very Important Person)  என அழைக்க அனுமதிக்கமாட்டேன் என்றும் அவர்கள் மந்திரிகள் அல்ல மக்கள் சேவகர் என்ற பெயரே அவர்களுக்கு  சூட்டப்படும் எனவும் தெரிவித்தவர்தான் இந்த மேர்வின் சில்வா.
"அநுராதபுரத்திலிருக்கும் வரலாற்றுச்சிறப்புமிக்க விஜிதபுர கோட்டையை எவரும் அழிக்க முனைந்தால்,  அதற்கு எதிராக சாகும்வரையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன்"  எனவும் சூழுரைத்துள்ளார்.
"சிங்கள பௌத்த மதத்தை பாதுகாப்போம்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகக் கூறினால்,  அந்தக் கட்சியில் எந்தவித பதவியையும் எதிர்பாராமல் இணைந்துகொள்ளவும் தயார் என்றும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அடிக்கடி அதிரடியாக கருத்து தெரிவிக்கும் இவர் முன்னைய மகிந்தரின் ஆட்சியில் மக்கள் தொடர்பாளர் அமைச்சராகவும் இருந்தவர்.
இவரது பேச்சுக்களும் செயற்பாடுகளும் எமக்கு சில சந்தர்ப்பங்களில் இந்திய அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமியை நினைவுபடுத்தும்.
இனிச்சொல்லுங்கள், "இவர் நல்லவரா..? கெட்டவரா..?"
(தொடரும்)
(நன்றி: இலங்கை "அரங்கம்" வார இதழ்)





-->

No comments: