ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கை விட அதிக ஊதியம் பெறும் இந்தியர்



.

தொழில்நுட்ப உலகில் மிக அதிக ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்தியர் நிகேஷ் அரோரா. சாஃப்ட் பேங்க், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர் அரோரா.


படத்தின் காப்புரிமைREUTERS

தற்போது பாலோ ஆல்டோ நெட்வொர்க் என்ற நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள நிகேஷ் அரோராவின் ஆண்டு ஊதியம் 12.8 கோடி அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் 857 கோடி ரூபாய். இணைய குற்றங்களை கண்காணிக்கும் நிறுவனம் பாலோ ஆல்டோ சைபர் செக்யூரிட்டியில் தலைமை பொறுப்பேற்றுள்ள நிக்கேஷ் அரோரா, தொழில்நுட்ப துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர்.


படத்தின் காப்புரிமை@NIKESHARORA

2011 ஆண்டு முதல் பாலோ ஆல்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மார்க் மைக்கல்கோலினுக்கு பதிலாக நிகிஷ் அரோரா இந்த பதவிக்கு வந்துள்ளார். நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவராக பதவியில் தொடர்வார் மார்க். அதே நேரத்தில் நிகேஷ் அரோரா இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகிப்பார்.



நிகேஷ் அரோரா
இந்த முடிவு பலருக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. அரோராவுக்கு இணைய பாதுகாப்பு தொடர்பான அனுபவம் இல்லை என்று பைனான்சியல் டைம்ஸிடம் பேசிய கிரெடிட் ஸ்விஸ் ஆய்வாளர் பிரைட் ஜெல்னிக் தெரிவித்தார்.
டிம் குக்கை விட அதிகமான ஊதியம்
நிகேஷ் அரோராவிடம் க்ளவுட் மற்றும் டேட்டா லிங்க் துறையில் ஆழ்ந்த அனுபவம் இருப்பதாகவும், சைபர் பாதுகாப்பு தரவு பகுப்பாய்வுத் துறையில் அனுபவம் இல்லாதவர் என்று கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 119 மில்லியன் டாலர் ஊதியம் பெறும் ஆப்பிள் நிறுவனத்தில் டிம் குக்தான் இதுவரை தொழில்நுட்பத் துறையில் அதிகமான ஊதியம் பெறுபவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
2014ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து நிகேஷ் விலகியபோது அவர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். அதன்பிறகு சாஃப்ட் பேங்கில் பதவியேற்ற அவர், அங்கு 483 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கினார். 2016ஆம் ஆண்டுவரை நிகேஷ் அங்கு பணிபுரிந்தார்.
தொடக்க காலத்தில் அவருக்கு வேலை கொடுக்க பல நிறுவனங்கள் மறுத்ததாக பிசினெஸ் ஸ்டேண்டர்ட் என்ற பத்திரிகைக்கு கொடுத்த நேர்காணலில் நிகேஷ் அரோரா தெரிவித்திருந்தார். அமெரிக்கா சென்றபோது, வீட்டில் இருந்து கொண்டு சென்ற கொஞ்ச பணத்தில் தான் வாழ்க்கை நடத்தியதாகவும் அரோரா குறிப்பிட்டார்.
சாதாரணமான வேலையில் இருந்த நிகேஷுக்கு 2004ஆம் ஆண்டு கூகுளில் வேலை கிடைத்தது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. 2007ஆம் ஆண்டுவரை கூகுள் நிறுவனத்தின் ஐரோப்பாவுக்கான நிர்வாக தலைவராக பணிபுரிந்தார் அரோரா.
2011இல் கூகுள் நிறுவன வர்த்தக தலைவராக பொறுப்பேற்றபோது, கூகுளின் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களின் வரிசையில் இடம் பெற்றார்.
2014இல் சாஃப்ட் பேங்கில் பணிக்கு சேர்ந்த நிகேஷ், அங்கு உலக அளவிலான இணைய வழியிலான முதலீட்டு பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார். சாஃப்ட் பேங்கின் இயக்குநர் குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார் என்பது திறமைக்கு கிடைத்த மரியாதையாக அனைவராலும் பார்க்கப்பட்டது.

யார் இந்த நிகேஷ் அரோரா?

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாதில் 1968ஆம் ஆண்டு பிறந்தவர் நிகேஷ் அரோரா. டெல்லி ஏர்ஃபோர்ஸ் பள்ளியில் கல்வி பயின்ற அவர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் இளங்கலை பட்டப்படிப்பை 1989ஆம் ஆண்டில் முடித்தார். விப்ரோ நிறுவனத்தில் உடனே வேலை கிடைத்தாலும், சிறிது நாட்களிலேயே அதிலிருந்து விலகிவிட்டார்.
மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற நிகேஷ், அங்கு எம்.பி.ஏ படித்தார்.
1992இல் ஃபெடிலிடி இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்தில் பகுப்பாய்வாளராக பணிக்கு சேர்ந்த அவர், பகலில் பணிபுரிவார்; கல்லூரியில் மாலைநேரத்தில் நிதியியல் படிப்பையும் படித்தார்.
கடின உழைப்பின் பலனாக படிப்பில் முதலாவது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டார். அதோடு 1995இல், பட்டய நிதியியல் பகுப்பாளர் (Chartered Financial Analyst) கல்வியையும் கற்றுத் தேர்ந்தார்.
ஃபெடிலிடி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்த அவர், பிறகு பட்னம் இன்வெஸ்மெண்ட் நிறுவனத்தில் இணைந்தார். அதன்பிறகு, டாய்சே டெலிகாம் நிறுவனத்திற்கு சென்றார். சாஃப்ட் பேங்கில் பணிபுரிந்தபோது, இந்தியாவில் இணைய வர்த்தகத் துறையில் பெருமளவு முதலீடு செய்யும் பொறுப்பு நிகேஷ் அரோராவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் தடம் பதித்த இந்தியர்களில் ஒருவர் என்ற முறையில் 2015இல் இ.டி பெருநிறுவன விருது பெற்றார் நிகேஷ். முதல் மனைவி கிரணுடனான திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிய, 2014ஆம் ஆண்டு ஆயிஷா தாப்பர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். முதல் மனைவி மூலம் நிகேஷ் அரோராவுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

Nantri BBC.com

No comments: