இயல் விருது விழா- செய்தி

.

இம்முறை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஞாயிற்றுக்கிழமை 10 யூன் 2018 அன்று ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெற்றது.
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்  மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கிவரும் திரு கல்யாணசுந்தரம் சிவசங்கரன் (வண்ணதாசன்) அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான இயல் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  ’வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவலுக்கான புனைவுப் பரிசு தமிழ்மகனுக்கு வழங்கப்பட்டது. அபுனைவுப் பரிசு ’கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வளமும்’ என்ற நூலுக்காக பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களுக்கும், கவிதைப் பரிசு ’அம்மை’ கவிதை தொகுப்புக்காக பா. அகிலன் அவர்களுக்கும், மொழிபெயர்ப்பு பரிசு ’பாலசரஸ்வதி ; அவர் கலையும் வாழ்வும்’ நூலுக்காக டி.ஐ. அரவிந்தனுக்கும், ஆங்கில இலக்கியப் பரிசு The Story of a Brief Marriage நாவலுக்காக அனுக் அருட்பிரகாசத்துக்கும் வழங்கப்பட்டன.


DSC_0195 (1)

சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருது சசிகரன் பத்மநாதனுக்கும், மாணவர் கட்டுரைப் போட்டி பரிசு செல்வி சங்கரி விஜேந்திராவுக்கும் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கிய சிறப்பு பரிசுகள் தி. ஞானசேகரனுக்கும், கலாநிதி நிக்கோலப்பிள்ளை அவர்களுக்கும், வழங்கப்பட்டன. கவிஞர் செழியன் நினைவு பரிசை திருமதி துளசி சிவகுமாரன் பெற்றுக்கொண்டு நெகிழ்ச்சியான உரையாற்றினார்.  விழாவின் முதன்மை விருந்தினர்களாக சிறப்பித்தவர்கள்  தண்ணீர் திரைப்படப் புகழ் தீபா மேத்தா மற்றும் நியூ யோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிய முனைவர் பாலா சுவாமிநாதன்.
DSC_0193
வண்ணதாசனின் ஏற்புரை சுருக்கமாகவும், அடர்த்தியானதாகவும் அமைந்தது. ‘சின்னச் சின்ன விசயங்கள் என்னை ஈர்க்கின்றன. பிரம்மாண்டமான நயாகரா அருவியில் நான் கண்டது உயரமாகப் பறந்த சிறிய பறவையைத்தான். நான் சின்னச் சின்ன விசயங்களால் ஆன மனிதன்’ என்று சபையோரின் பலத்த கைதட்டல்களுக்கிடையே வண்ணதாசன் உரை ஆற்றினார். விழாவில் வண்ணதாசனின் ‘அந்தரப்பூ’ கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. பேராசிரியர் சொர்ணவேல் வெளியிட அதை அ.முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார்.
கல்வியாளர்களும், எழுத்தாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அனுசரணையாளர்களும் விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்தனர்.
nantri www.jeyamohan.in

No comments: