இலங்கைச் செய்திகள்


15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாடு

எமது அலுவலக நோக்கம்  குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப்படும்-கணபதிபிள்ளை வேந்தன்

வைத்திய சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல்

900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்மையால் பாதிப்பு

ரட்ணப்பிரியவை மீண்டும் அதே பதவிக்கு நியமியுங்கள்- விமல்

மீன்வள ஆய்வுக்காக வருகிறது நோர்வே கப்பல்

ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறை 

வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம் 

பதவி விலகினார் மஸ்தான்


15 ஆவது ஆசிய பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாடு

11/06/2018  15 ஆவது பசுபிக் தொலைத்தொடர்புகள் மற்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.
இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடானது இன்று முதல் நாளை மறுதினம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பாடலினை விருத்தியடைய செய்து மக்கள் மத்தியில் முறையாக நெறிப்படுத்துவதும், எதிர்காலங்களில் தொடர்பாடல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இம் மாநாட்டின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. நன்றி வீரகேசரி









எமது அலுவலக நோக்கம்  குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப்படும்-கணபதிபிள்ளை வேந்தன்

11/06/2018 காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடுக்க அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே காணப்படுகின்றது.  என காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் கணபதிபிள்ளை வேந்தன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்.
வடக்கில் காணாமல் போனவர்களை மாத்திரம் கண்டுப்பிடிப்பது காணாமல் போனோர் அலுவலகத்தின் நோக்கமல்ல.  தெற்கில் காணாமல் போனவர்களையும் கண்டுப்பிடிப்பதும் உறவுகளுக்கு   வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அலுவலகத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. 
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் வடக்கில் மாத்திரம் எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை.தெற்கிலும் தொடர்ச்சியாக  எதிர்ப்புக்கள் வந்த வண்ணமே காணப்படுகின்றன. அலுவலகம் அமைக்கப்பட்டு இதுவரை  காலமும்  காணாமல் போயுள்ளோர் தொடர்பில் உறுதியான தவகல்கள் வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. இதற்கு  பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. அதாவது கடந்த காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட அமைப்புக்கள் மாறுப்பட்ட தகவல்களை வழங்கியுள்ளன. இத்தகவல்களையும் , மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அலுவலகத்தின் நோக்கம் வரையறுக்கப்பட்டதாக காணப்படாது. வடக்கு மற்றும் தெற்கு மக்கள் அலுவலகத்தின்  பெறுபேறுகளை தொடர்ந்து  எதிர்பார்ப்பவர்களாகவே காணப்படுகின்றனர்.  அடுத்து வரும் அரசாங்கமும் இவ்விடயத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 










வைத்திய சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல்

12/06/2018 கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் தற்போது இரண்டு தாதியர்கள் மாத்திரம் பணியில் ஈடுபட்டுள்ளதால் வைத்திய சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல் தோன்றியுள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் இருவரும் கணவன், மனைவி என்பதனால் அவர்களும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்  குமாரவேல் குறிப்பிடுகையில்,
தர்மபுரம் வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அடுத்தாக அதிகளவு நோயாளர்கள் சிகிச்சை பெற்று செல்கின்ற வைத்தியசாலையாகும்.
இந் நிலையில் குறித்த வைத்தியசாலையில் நான்கு தாதியர்கள்  கடமையில்  இருக்க வேண்டும்  ஆனால் தற்போது இரு தாதியர்கள் மாத்திரம் சேவையில் உள்ளனர். இதனால் முழுமையான சேவையினை வழங்க முடியாதுள்ளது.
அத்துடன் ஏற்கனவே ஓய்வுபெற்ற  தாதியயொருவரை சேவையில் இணைத்துக் கொண்டபோதும் அவருக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்காத காரணத்தினால் அவரும் பணியிலிருந்து நின்று விட்டார். 
எனவே தர்மபுரம் வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணிப்பற்றாக்குறையை தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  நன்றி வீரகேசரி 










900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்மையால் பாதிப்பு

13/06/2018 மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடங்கும் மங்களகம, கெவுளியாமடு, புளுகுணாவ, கோமகஸ்தலாவ ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 900 குடும்பங்கள் சுத்தமான குடிநீரின்றி பல்வேறு உடல் உபாதைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தமது கிராமங்கள் பல்வேறு வகையில் பின்னடைவுகளை எதிர்கொண்டு வருவதாகவும் அதுபற்றி கரிசனை கொள்ளுமாறும் குறிப்பாக தமக்கு அத்தியாவசியத் தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறும் கிராம மக்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமதைக் கேட்டுள்ளனர்.
ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஆர்.பி.சுனில் பண்டார தலைமையிலான சிவில் சமூகப் பிரதிநிதிகள் நேற்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்திற்கு வருகை தந்து தமது கிராமத்தின் குறைபாடுகளை எடுத்துக் கூறினர்.
குடிநீர்ப் பிரச்சினை மிகவும் அத்தியவசியத் தேவையாக உள்ளது.
சுத்தமான குடிநீர் வசதி இல்லாததால் பல குடும்பங்கள் சிறுநீரகப் பாதிப்பிற்கும், ஏனைய உடல் நலக் கோளாறுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
மங்களகம பகுதி ஒதுக்குப்புறக் கிராம மக்களுக்கு அதியாவசியத் தேவையான குடிநீரைப் பெற்றுத் தருமாறும் அதன் பின்னர் குடியிருப்பு வசதிகள், வாழ்வாதார உதவிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம். என்று வேண்டுகோள் விடுத்த அவர்கள்,  காட்டு யானைகளின் தொல்லைகளுக்கும் கிராமவாசிகள் முகங்கொடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.   நன்றி வீரகேசரி 








ரட்ணப்பிரியவை மீண்டும் அதே பதவிக்கு நியமியுங்கள்- விமல்

13/06/2018 முல்லைத்தீவு  சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றிய நிலையில் அங்கிருந்து இடமாற்றப்பட்டுள்ள ரட்ணப்பிரியவை பந்துவை மீண்டும் அதே பதவிக்கு நியமிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விமல் வீரவன்ச இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்
முல்லைத்தீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதை கருத்தில் கொண்டு ரட்ணப்பிரிய பந்துவை மீண்டும் முன்னைய பதவிக்கே நியமிக்கவேண்டும் என விமல் வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் குறிப்பிட்ட அதிகாரிக்கு நிகழ்வின் போது  முல்லைத்தீவு மக்கள் உணர்வுபூர்வமான பிரியாவிடை அளித்ததை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







மீன்வள ஆய்வுக்காக வருகிறது நோர்வே கப்பல்

13/06/2018 இலங்கையின் கடல்வள முகாமைத்துவம் மற்றும் மீன்வளம் தொடர்பான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்கு நோர்வேயின் ஆய்வுக் கப்பலொன்று இலங்கை வரவுள்ளதாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
 
இலங்கை கடல்வள ஆய்வுக்கான நோர்வே ஆய்வு படகு குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்வளம் தொடர்பாக விரிவான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காகவே நோர்வேயின் சிறப்பு ஆய்வாளரான பிரிட்ஜொப் நன்சன் தலைமையில் குறித்த இப் கப்பலானது எதிரவரும் 21 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. 
நோர்வே ஆய்வுக் கப்பலின் வருகையானது மீன்பிடித்துறை சார்ந்த அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்றும் கடல்சார் நீலப்பொருளாதார இயலமை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் என்பன தொடர்பான கலந்துரையாடலுக்கும் கப்பலின் வருகை அடிப்படையாக அமையும் என்றார். நன்றி வீரகேசரி 








ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறை 

14/06/2018 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞனாசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.
இந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை இன்று அறிவிக்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். இதன்படியே இவருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குற்றச்சாட்டுக்கு தலா 1500 ரூபா வீதம் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் மொத்தமாக 3000 ரூபா அபராதத்தை தலா ஆறு மாத காலம் வழங்க தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும் எக்னெலிகொடவின் மனைவிக்கு 50000 ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நன்றி வீரகேசரி 











வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம் 

14/06/2018 நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசெளகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கடனைக் கொடுத்து குடும்பத்தைக் குலைக்காதே, வட்டியால் மக்களின் வயிற்றில் அடிக்காதே, பெண்களை சீரழிக்கும் நுண்கடன் நிறுவனங்களை இழுத்து மூடு, கடனில் பெண்களை இலக்கு வைக்காதே, உயிரைக் குடிக்கும் வார்த்தைகளை உமிழாதே.
 இழப்பதற்கு இனி எம்மிடம் உயிர் மட்டுமே உள்ளது, ஏழைகளின் உணர்வை புரிந்துகொள், வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வாழ்விழந்து நிற்கின்றோம், தற்கொலை அதிகரிப்பதற்கு கடனே நீயே காரணம், குடும்ப வன்முறைக்கும் கடன் நீயே காரணம், நுண் நிதி கடனே குடும்ப வன்முறைக்கு அத்திவாரம் இடாதே, கடனே இளம் சந்ததியை நரகத்தில் தள்ளாதே  போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய பஸ் நிலையத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டமானது  பஜார் வீதி வழியாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.
10நிமிடங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜரை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி அவர்கள் பெற்றுக்கொண்டார்.   நன்றி வீரகேசரி 










பதவி விலகினார் மஸ்தான்

14/06/2018 இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடன் இன்று சந்தித்து பிரதி அமைச்சர் பதவியை பெற்ற பின் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். நான் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சினை ஏற்றுக் கொண்ட நிலையில் இந்து விவகார பிரதி அமைச்சராக நான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் நோக்கம் கருதி திட்டமிட்டு எனக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. 
எனினும் மதங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும், பொது அமைப்புக்கள் சில கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் நானாக முன்வந்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் ஏனைய அமைச்சின் பிரதி அமைச்சராக செயற்படுவேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த செவ்வாய் கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களுக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 
இந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் உட்பட பலரும் எதிர்ப்பு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






No comments: