"கீரை
இல்லா ஊரும், கிழவன் இல்லா ஊரும் ஒன்றுதான்" என்று எமது
முன்னோர்கள் சொல்வார்கள். கீரை ஆரோக்கியமான வாழ்வுக்கு உகந்தது. கிழவன் அனுபவங்களின்
உறைவிடம்.
கீரைக்குப்பேசத்தெரியாது. ஆனால், உடலுக்கு ஆரோக்கியத்தையும்
புத்துணர்ச்சியையும் நீண்ட ஆயுளையும், நல்ல நினைவாற்றலையும் தரும்! வயது முதிர்ந்த
கிழவர், வாழ்க்கைப்பாதையில் தான் கற்றதையும்
பெற்றதையும் படிப்பினையாக சொல்லி நல்வழி காட்டுவார்.
கிழவர்களை தாத்தா எனவும் கிழவிகளை பாட்டி என்றும்
அழைப்பதுடன் எமது தமிழ் சமூகத்தில் மாத்திரமன்றி இலங்கையில் சிங்கள, இஸ்லாமிய சமூகத்தவர்கள்
மத்தியில் மதிப்பிற்குரிய பெரியவர்கள் எனவும் கருதப்படுபவர்கள்.
அக்காலத்தில் பாட்டி வைத்தியம் மிகவும் புகழ்பெற்றிருந்தது.
முக்கியமாக பாட்டிமார் இயற்கை மருத்துவத்தை எமக்கு அறிமுகப்படுத்தியவர்கள். மூலிகைகளின்
மூலம் பல நோய்களை குணப்படுத்தியவர்கள்.
எனது அம்மாவின் அம்மாவாகிய எனது பாட்டி தையலம்மா,
பாடசாலைக்கே செல்லாதவர். கையொப்பமும் இடத்தெரியாதவர். கைநாட்டில்தான் காலம் கடத்தியவர்.
ஆஸ்பத்திரி பக்கம் செல்லாதவர். அவ்வாறு சென்றிருந்தாலும் தனக்கு தெரிந்த நோயாளரை பார்த்து
சுகம் விசாரிக்கத்தான் சென்றிருப்பார். பாட்டிவைத்தியத்திலும் கைதேர்ந்தவர். 95 வயது
வரையிலும் வாழ்ந்தவர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எங்கள்
பாட்டி, மருத்துவம் செய்திருப்பதை அருகிலிருந்து பார்த்து வளர்ந்திருக்கின்றேன். வீட்டில்
பாட்டி பல கீரைவகைகளை வளர்த்தார். கீரைகளின் பலன் பற்றி நீண்ட விரிவுரையாற்றக்கூடிய
அறிவும் பெற்றிருந்தார்.
குப்பை மேட்டில் வளரும் தாவரமான குப்பைமேனி கீரையின்
மகிமை, மருத்துவ குணம் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
இலங்கை தலைநகரைப்பொறுத்தவரையில் களனி கங்கைக்கரைகளில்தான்
கீரைவகைகள் பெருமளவில் பயிரிடப்பட்டன. களனி கங்கையின் தண்ணீரை நம்பியே பல ஏழைக்குடும்பங்கள்
கீரை உற்பத்தியில் ஈடுபட்டு தமது வாழ்விற்கு ஆதாரம் தேடிவருகின்றன.
களனி கங்கை தீரத்தில் ஏராளமான கீரைத்தோட்டங்களை
இன்றும் நீங்கள் காணமுடியும்.
தலைநகரின் பிரதேச சந்தைகளுக்கு மாத்திரமின்றி
ஏனைய ஊர்களுக்கும் இங்கிருந்துதான் கீரை வகைகள் வருகின்றன.
அங்கு வந்து சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நோயாளர்களின்
மதிய உணவில் வல்லாரைச்சம்பல் அல்லது வல்லாரை கடையல் நிச்சயம் இடம்பெறும். வல்லாரை நினைவாற்றலுக்கு
மாத்திரமின்றி, ஆர்த்ரைட்டீஸ் போன்ற எலும்பு - நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களினதும் நிவாரணி
என்பதனால்தான் அந்த மருத்துவனையில் வல்லாரைக்கீரைக்கு தனி மரியாதை தரப்படுகிறது. சிங்களத்தில்
இதனை "கொடுகொல" என்பர்.
பரிசுத்த வேதாகமம் பைபிளில் ஒரு வாசகம் இவ்வாறு
வருகிறது:
"நல்ல நிலத்தை பண்படுத்தி அதில் ஒரு நல்ல பயிரின் விதையை விதைத்தால், அந்த விதை முப்பதாகவும், அறுபதாகவும், நூறாகவும் பெருகிப் பலன் கொடுக்கும். அதேபோன்று நல்ல எண்ணங்களை மனதில் விதைத்தால், அது பலருக்கும் பலனளிப்பதோடு இறைவனுடைய நல்லாசிகளும் கிடைக்கும்.
"
எமது
முன்னோர்கள் விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கு முற்பட்ட காலத்திலேயே நிலத்தில் நெல் முதல்
பல்வேறுவகைப்பட்ட தானியங்களையும் கீரை வகைகளையும் பயிரிட்டு தத்தம் நாட்டு மக்களுக்கும்
பொருளாதாரத்திற்கும் வளம் சேர்த்தார்கள். ஆரோக்கியத்தை பேணிவந்தார்கள்.
சமகாலத்தில்
மக்கள் விரைவு உணவு (Fast Food Culture)
கலாசாரத்திற்கு அடிமையாகி ஆரோக்கியத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நோயுற்று
ஆயுளையும் குறைத்துக்கொள்கிறார்கள்.
இலங்கையில்
களனி கங்கை ஓடிக்கொண்டிருக்கும் களனி பிரதேசத்தை சுற்றியிருக்கும் கொகிலவத்தை, மீதொட்டமுல்லை,
கொலன்னாவ, ஊறுகொடவத்தை, பேலியாகொடை முதலான இடங்களில் ஏராளமான கீரைத்தோட்டங்களை பார்த்திருப்பீர்கள்.
இந்தப் பயிர்களை நம்பியும் அவற்றுக்குத் தேவைப்படும் களனி கங்கையின் நீரை நம்பியும் பல ஏழைக்குடும்பங்கள் வாழ்கின்றன.
அந்தக்கீரைத்தோட்டங்களுக்கு
பாலூற்றும் தாயாகவும் விளங்குபவள் இந்த கல்யாணி என்ற களனி! இந்தத்தாய்க்கும் கோபம்
வந்தால், வெள்ளமும் வரும். தான் பாலூற்றி வளர்த்த கீரைகளையும் சேதப்படுத்திவிடுவாள்!
கொகில வத்தை என்ற பெயரின் ரிஷிமூலமே கொகில என்ற
பயிர்தான். கொகில கீரை, கொகில கிழங்கு முதலானவற்றுக்கும் சில மருத்துவ சிகிச்சைக்குரிய
குணங்கள் இருக்கின்றன. கொகிலவத்தை பிரதேசத்திலிருந்து ஒரு சிங்களப் பத்திரிகையும் 1978
-1983 காலப்பகுதியில் வெளியானது.
அங்கு
களனி கங்கை கரையோரத்தில்தான் மக்கள் விடுதலை முன்னணியின் பத்திரிகை அலுவலகம் இயங்கியது.
அங்கிருந்து, நியமுவா, செஞ்சக்தி, ரது பலய, Red
Power முதலான பத்திரிகைகளை மக்கள் விடுதலை முன்னணி, 1983 இல் அன்றைய ஜே.ஆரின் அரசினால் தடைசெய்யப்படும்
வரையில் வெளியிட்டது.
அங்கிருந்த
சில தோழர்களும் கொல்லப்பட்டு, இதே களனி கங்கையில்தான் வீசப்பட்டனர். எனவே களனி கங்கை
வளமும் தந்துள்ளது, துயரத்தையும் பகிர்ந்துள்ளது.
இந்தப்பதிவை
சமகாலத்தில் இலங்கையில் பல பகுதிகள் வெள்ள அநர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும்
பின்னணியில் எழுதுகின்றோம். கடும் மழையின் காரணத்தால் நாட்டில் 19 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும்
மண்சரிவுகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் பேர்வரையில்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பலர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மனிதர்களுக்கு
கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியும்! இயற்கைக்கு கோபம் வந்தால் அது விளைவிக்கும்
பேரனர்த்தங்கள்தான் சொல்லும்.
நதிகள் எப்போதும் போன்று மலைகளிலிருந்து ஊற்றெடுத்துக்கொண்டுதானிருக்கும்.
காலநிலை மாறும்போது, வர்ணபகவான் அள்ளிக்கொடுப்பது மழையைத்தான். அந்த மழை நிலத்திலும்
நதிகளிலும் தழுவும்போது வெள்ளப்பெருக்கு தோன்றும். நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து ஊருக்குள்
வந்து ஊர்மக்களை துரத்தியடிக்கும். எமது தேசத்தில் இந்த அனர்த்தங்கள் காலத்துக்கு காலம்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
வெள்ளம்
பெருகினால், மக்களுக்கு மட்டுமல்ல, நதிக்கரையை அண்டியிருக்கும் வயல்கள், தோட்ட நிலங்கள்,
கீரைத்தோட்டங்கள் யாவும் நீரில் மூழ்கிவிடும்.
இந்தப்பதிவை
எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் களனி கங்கையில் நீர்மட்டம் குறைந்துகொண்டு வருகிறது
என்ற செய்தி கிடைத்துள்ளது. எனினும் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண
உதவிகள் விடயத்திலும் குழறுபடிகளுக்கும் குறைவில்லை.
முள்ளங்கி,
பொன்னாங்கன்னி, வல்லாரை, சிறுகுறிஞ்சா, அகத்தி, தூதுவளை, பசளி, முளைக்கீரை, கொத்தமல்லி
கீரை, புதினா, சிறுகீரை, முருங்கைக்கீரை, முடக்கத்தான் கீரை,
கற்பூரவல்லி, வெந்தயக்கீரை, மனைத்தக்காளிக்கீரை, வல்லாரை இவ்வாறு கீரைவகைகளில் ஏராளமுண்டு.
ஒவ்வொரு கீரைக்கும் வெவ்வேறு விதமான நோய் நிவாரணக்குணங்கள்
இருக்கின்றன. இந்த பூவலகில் வாழும் மாந்தர்களுக்கு எத்தனையோ இயல்புகள் இருப்பதுபோன்று,
கீரைவகைகளுக்கும் எத்தனையோ இயல்புகள் இருக்கின்றன.
எந்தக்கீரை எதற்கு நல்லது, எதற்குத்தீயது என்ற
உண்மையையும் எமது முன்னோர்கள்தான் ஆய்வுசெய்து சொல்லியிருக்கிறார்கள்.
மழைக்காலங்களில் நதிகள் அகன்று விரிந்து ஓடுவதற்கேற்ற பிரதேசங்கள் மட்டுப்படுத்தப்படல், சட்டவிரோத கட்டிடங்கள் அமைத்தல், குப்பைகளையும்
கழிவுப்பொருட்களையும் நதிகளில் வீசுதல், வடிகாலமைப்பின் சீர்கேடுகள் என்பனவே வெள்ளப்பெருக்கிற்கு
காரணம். அத்துடன் தாழ்நிலப்பிரதேசங்களில்
கட்டிடங்கள் வீடுகள் அமைத்தல் முதலான காரணிகளினால் நதிநீர்செல்லவேண்டிய இடங்களில் வெள்ளம்தான்
பெருகும். அதனால் அந்தக்கட்டிடங்களும் வீடுகளும் மூழ்கும்.
எனவே ஓடும் கங்கைகளுக்கு சினமூட்டுபவர்கள் மக்கள்தான்.
கங்கைகளை போற்றுவோம். எங்கள் முன்னோர்களை கொண்டாடுவோம்.
(தொடரும்)
(
நன்றி: அரங்கம் -- இலங்கை)
No comments:
Post a Comment