வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - ச. சுந்தரதாஸ் - பகுதி 4


படத்திற்கு அச்சாணியாகத் திகழ்பவர் இயக்குனர். அவரே படத்திலிருந்து ஒதுங்கிவிட்டால் என்னதான் செய்வது? தயாரிப்பாளர் தாஸ் முஹம்மத்தின் நிலை நெருக்கலுக்குள்ளானது. படத்திற்கு உடனடியாக இயக்குனர் தேவை என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் ஒளிப்பதிவோடு சேர்த்து படத்தையும் டைரக்ட் செய்யுங்கள் என்று தாஸ்முஹம்மத் வாமதேவனிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு அங்கும் அதிர்ச்சி காத்திருந்தது. வாமதேவன் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.

என்னுடைய கவனம் முழுவதையும் ஒளிப்பதிவிலேயே செலுத்திவருகிறேன். அதில் வெற்றி காணவே விரும்புகிறேன். டைரக்ட் செய்ய எனக்கு விரும்பமில்லை என்று வாமதேவன் நட்புன் மறுத்து விட்டார்.

ஆனால் அப்படி மறுத்தவர் பிரச்னைக்கு தீர்வையும் சொன்னார். என்னுடைய நண்பன் லெனின் கமெராவிலும் டைரக்ஷனிலும் திறமையோடு செயலாற்றி வருகிறார். ஏற்கனவே சுதுதுவ படத்தை ஒளிப்பதிவு செய்து டைரக்டும் செய்துள்ளார். படமும் வெற்றிபெற்றுள்ளது. அவருக்கே இந்த வாய்ப்பைக் கொடுங்கள் வெற்றி நிச்சயம் என்று வாமதேவன் தாஸ்முஹமத்திடம் சொன்னார். இந்த சம்பவம் நடந்து ஐம்பது ஆண்டுகளாகி விட்டன. இதை நினைவுக்கு கொண்டு வந்த வாமதேவன் மேலும் சொன்னார்.


தயாரிப்பாளர் தாஸ்முஹம்மத் என்னுடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கதாநாயகனாக நடித்த காமினிக்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்தது. ஆனால் அவருடைய தயக்கத்தையும் போக்கினேன். அதனைத் தொடர்ந்து லெனின் மொறயஸ் படத்திற்கு டைரக்டரானார்.

லேனின் மொறயஸ் படத்தின் டைரக்ஷனுடன் திரைக்கதையையும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு எஸ். ஏ. அழகேசன் துணையாக இயங்கினார். சிங்களத்தில் படம் உருவான போது திரைக் கதையில் சில் மாற்றங்கள் செய்யப்பட்டன. திரைக்கதை டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட லெனின் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற விரும்பவில்லை. தனது முழுக்கவனத்தையும் டைரக்ஷனில் செலுத்தி படத்தை வெற்றிப் படமாக்க ஆர்வம் காட்டினார். எனவே வாமதேவனே படத்தின் ஒளிப்பதிவாளராகத் தொடர்ந்தார். படத்திற்கு சூரயங்கெத் சூரயா (வல்லவனுக்கு வல்லவன்) என்று அழகேசன் பெயர் சூட்டினார்.

தான் தனித்து இயக்கும் படம் என்பதால் லெனின் படத்தில் திவிர அக்கறை காட்டினார். படத்திற்கு ரொக்சாமி இசையமைக்க அன்டன் கிறகரியும், சேனாதிரருபசிங்கவும் உதவி டைரக்டர்களாக பணியாற்றினார்கள். கதாநாயகன் காமினிக்கு சமமான பாத்திரத்தில் இளம் நடிகரான சேனாதிரருபசிங்க நடித்தார். இவருடன் அந்தனி சி பெரேரா, அலெக்ஸாண்டர் பெர்ணாண்டோ, எம்.டி. குலதுங்க சோனியாதிசா ஆகியோரும் நடித்தனர்.

காமினி பொன்சேகர் ஏறகனவே ரன்முத்துதுவ, சண்டியா போன்ற படங்களில் நடித்திருந்த போதிலும் இந்தப் படத்தில் அவரை ஒரு ஸ்டைல் நடிகராக லெனின் காட்சிப் படுத்தினார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இளைய ரசிகர்கள் படத்தை பலமுறை பார்த்து ரசித்து சூரயங்கெத் சூரயாவை வெற்றிப் படமாக்கினார்கள்.  

சூரயங்கெத் சூரயா படத்தின் மாபெரும் வெற்றியோடு லெனின் நட்சத்திர டைரக்டராக உருவானார். குhமினியை ஜனரஞ்சகரீதியாக ரிசிகர்களிடையே கொண்டு போகும் திறமை அவரிடம் உள்ளது என்பதை சிங்களத் திரையுலகம் ஏற்றுக் கொண்டது.

சூரயங்கெத் சூரயா படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிங்களவர்கள். ஆனால் படத்தில் பங்கபற்றிய ஏனைய கலைஞர்கள் பெரும்பாலும் தமிழர்கள். படத்தை தயாரித்த தாஸ்முஹம்மத் தமிழ் பேசும் இஸ்லாமியர். குமரா வாமதேவன், இசையமைப்பாளர் ரொக்சாமி, கதாசிரியர் உதவி இயக்குனர் எஸ். ஏ. அழகேசன் அன்டன் கிறகறி, ஸ்டன்ட் மாஸ்டர் அலெக்சாண்டர் பெர்ணாண்டோ எல்லோரும் தமிழர்கள். ஆக மூவின மக்களும் நான்கு மதத்தவர்களும் ஒன்று சேர்ந்து படத்தை உருவாக்கி அதனை வெற்றிப்படமாக்கினார்கள். இவர்களுக்கெல்லாம் அச்சாணியாக தமிழரான லெனின் மொறயஸ் திகழ்தார்.

ஆரம்பத்தில் புது டைரக்டரின் படத்தில் நடிப்பதா என்று சஞ்சலப்பட்ட காமினி பொன்சேகா இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லெனினின் திறமையை அடையாளம் கண்டு கொண்டார். இதுவே அவர்களின் கூட்டணியில் மேலும் பல படங்கள் உருவாக காரணமானது!

ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் தயாரிப்பாளர் அடுத்த படத்தை தயாரிப்பார் என்பது வழக்கம். ஆனால் தாஸ்முஹம்மத் மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கவே இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் படத்தயாரிப்பில் இருந்து முற்றாக ஒதுங்கிவிட்டார்.

ஆனாலும் லெனினின் திறமையை வேறு சில தயாரிப்பாளர்கள் அவதானித்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் சரத்ரூபசிங்க, நீல்ரூபசிங்க சகோதரர்கள். இவர்கள் இதே கால கட்டத்தில் தெங்மதகத (இப்போது ஞாபகமா) என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனந்த ஜயரத்ன, மாலினி பொன்சேகா நடிப்பால் இப்படம் தயாரானது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை லெனின் கையாண்டார். இப்படத்தில் லெனினின் ஒளிப்பதிவு திறமையை கண்ட ரூபசிங்க சகோதரர்களுடனான லெனினின் உறவு பலப்பட்டது. இதன் காரணமாக இவர்களது படங்களுக்கான ஆஸ்தான டைரக்டராக லெனின் இடம் பிடித்தார்.

தெங் மத கத படம் உருவானபோது அதன் ஒளிப்பதிவாளராக  லெனின் ஒப்பந்தம் செய்யப்பட்டார் . ஆனால் தன்னிடம் உள்ள பலவித திறமைகளை அந்தப் படத்தில் அவர் பிரயோகித்தார் . ஒளிப்பதிவுடன் நின்றுவிடாது மேக்கப், நடனம் , நெறியாள்கை என்று பலவிதத்திலும் தனது பங்களிப்பை அந்தப் படத்திற்கு வழங்கினார் லெனின்.


இந்தப் படத்தில் வில்லனாக நடித்த டொமி ஜெயரட்னாவின் காதலியாக நடித்தவர் ஹெலன்குமாரி . அவரிடம் கேட்டபோது சொன்னார் , லெனின் ஒரு பல்முக கலைஞர் , பல துறைகள் அவருக்கு அத்துபடி, தெங் மத கத படத்தில் அவருடன் இணைந்து முதன் முதலில் பணியாற்றினேன் படத்தின் ஒளிப்பதிவாளர் அவர்தான் என்றபோதும் எனக்கு மேக்கப் போட்டதும் அவர்தான். காட்சி படமாகும் தினத்தன்று  ஏன் முகத்திற்கு மேக்கப் போட்டவர் இடையில் நிறுத்திவிட்டு வேறு வேலையக் கவனிக்கச் சென்றுவிட்டார் .


பொறுத்திருந்து பார்த்த நான் அவர் வர மாட்டார் என்று நினைத்து என் முகத்தை கழுவி விட்டேன். சில நேரம் கழித்து வந்த லெனின் நான் முகத்தை கழுவி விட்டதை பார்த்து என்னை கடிந்து கொண்டார். மேக்கப் பற்றி உனக்கு என்ன தெரியும் நான் வருவதற்குள் ஏன் முகத்தை கழுவி மேக்கப்பை கெடுத்தாய் என்று ஏசினார். அப்போது தான் மேக்கப் கலையில் அவருக்கு இருந்த ஞானம் எனக்கு வெளிப்பட்டது. அந்த படத்திற்கு பிறகு அவருடைய எல்லாப் படங்களுக்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

தெங் மதகத படத்தை தொடர்ந்து உருவான படம் ஹத்தறதெனம்மா சூரையோ (நான்கு பேரும் வல்லவர்கள்).

பிரபல கதாநாயக நடிகர்கள் ஒரே படத்தில் நடிப்பதை தமிழில் பார்த்திருக்கிறோம். சிவாஜி, ஜெமினி, எஸ் எஸ் ஆர் என்று ஒரே படத்தில் இணைந்திருக்கிறார்கள். சிங்களத்திலும் அவ்வாறு சில படங்கள் வெளிவந்துள்ளன..

அப்போதுதான் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமடைந்து கொண்டிருந்த விஜயகுமாரணதுங்காவை முதன் முதலாக காமினியுடன் நடிக்க வைத்தார் லெனின். இந்தப் படத்தில் மாலினி பொன்சேகா காமினிக்கு ஜோடியாக நடிக்காமல் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

இப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக லெனின் ஒப்பந்தமானார். ஆனாலும் டைரக்ஷனில் அவரது பங்களிப்பு தலை மறை காயாக தென்பட்டது.

இந்தப் படத்தில் ஒரு சண்டைக்காட்சி வில்லன் சேனாதீர ஒரு காரை ஓட்டிச் செல்ல காரின் முன் கதவில் தொற்றிக் கொண்டு கதாநாயகன் காமினி சண்டை போடும் காட்ச்சியை விறு விறுப்பாக தனது ஒளிப்பதிவு  திறமை மூலம் படமாக்கினார் லெனின்.

இந்தப் படத்தில் எச் ஆர் ஜோதிபாலா, எம் எஸ் பெர்னாண்டோ ஆகியோர் பாடிய பாடல்களும் ரசிகர்களின் வாயை முணு முணுக்க வைத்தது.

ஹத்தறதெனம்மா சூரையோ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் அன்டனி சி பெரேரா. இவர் லெனினின் எல்லாப் படங்களிலும் அனேகமாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஐந்து வேடங்களில் அன்டனி சி பெரேரா தோன்றுவது போன்ற காட்சியை படமாக்கியிருந்தார் லெனின். ஒரு மேற்கத்தேய இசைக்குழுவில் டிரம் வாசித்தவராக கிட்டார் வாசிப்பவராக ஐந்து தோற்றங்களில் அன்டனி தோன்றியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. டிஜிட்டல் கேமரா கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் தன் ஒளிப்பதிவுத் திறமையால் இதனை சாதித்திருந்தார் லெனின்.


தனது ஒளிப்பதிவு ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பாதாள பைரவி போன்ற பிரமாண்டமான தந்திரக் காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே லெனினின் நீண்ட கால ஆசையாக இருந்து வந்ததாக அழகேசன் குறிப்பிடுகிறார்.

தொடரும் 

No comments: