நெஞ்சுக்குள் நிறைத்தாளே ! - ( எம். ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


image1.JPG       வெள்ளைநிறம் வாய்த்ததனால் விட்டெறிந்து பேசிவந்தாள்  
          கொள்ளை யழகென்று கொட்டமிட்டு அவளிருந்தாள்
      நல்லநல்ல மாப்பிளைகள் பெண்பார்க்க வந்தார்கள்
           எல்லோரும் கறுப்பென்று இறுமாந்து மறுத்துவிட்டாள் !

      அவளப்பா கறுப்புநிறம் அவளண்ணா அப்படியே
          அக்காவும் தங்கையும் அவள்போல நிறமில்லை
      அம்மாவின் நிறமாக அவள்நிறமும் ஆனதிலே
           அம்மாவின் மேல்பிரியம் அவளுக்கு இருந்ததுவே ! 

       தான்சேரும் தோழியரும் தன்நிறத்தில் இருப்பதையே
           தன்னுடைய எண்ணமாய் தானவளும் கொண்டிருந்தாள்
      கறுப்புநிறம் கொண்டவர்கள் கூடவந்து இணைந்துவிட்டால்
           வெறுப்புடனே ஒதுக்கியவள் விலகியே நடந்திடுவாள் !

        எல்லோர்க்கும்  திருமணம்  நடந்துவிட்ட  போதிலுமே
            இவளுக்கு திருமணம் நடக்கவில்லை எனுமேக்கம்
       அப்பாவின் மனதையே அறுத்துக்கொண்டு இருந்தாலும் 
            அவளெண்ணம் நிறைவேற அலையாக அலைந்தாரே ! 


         கறுப்பான ஆண்கள்பலர் கட்டழகாய் இருந்தாலும்
              வெறுப்பான பார்வையினை வீசியவள் நின்றதனால்
         பொறுப்பான வயதினிலே திருமணமும் ஆகாமல்
               பொழுதெல்லாம் அவளுக்கு வீணாகிப் போனதுவே !

          வீட்டிலே தங்கையின் வளைகாப்பு நடந்ததுவே 
              வெளியிடத்தார் பலபேரும் வீட்டுக்கு வந்திருந்தார்
          பட்சணங்கள் செய்வதிலே பலபேரும் ஈடுபட்டார்
                வெள்ளைநிற வடிவழகி விருப்பமின்றி உதவிநின்றாள் ! 

         சமயலறை தனிலிருந்து சலசலப்புக் கேட்டவுடன்
             சகலருமே  அவசரமாய் ஓடியங்கே போனார்கள்
         வெள்ளநிற வடிவழகி முகமதிலே கொதியெண்ணெய் 
             விழுந்துவிட்ட காரணத்தால் வேதனையால் அவள்துடித்தாள் !

           கறுப்புநிறம் கொண்டஅப்பா கண்ணீரில் மூழ்கிநின்றார் 
               வெறுத்துநின்ற கறுப்பண்ணா விரைந்தோடி வந்துநின்றான் 
           வெள்ளைநிற பெண்ணவளை கொண்டுசென்றார் மருந்துசெய்ய 
                 கொள்ளைநிற அழகங்கே கொட்டிண்டு போனதுவே !

          கொதியெண்ணெய் பட்டதனால் கொப்புளங்கள் வந்தங்கே 
              பொலிவான வெள்ளைநிறம் பொசுங்கிக் கறுப்பாகியதே 
          தலைமயிரில் தாக்கியதால் முன்மயிரும் கருகியதே
                 தளதளத்து அழகுமுகம் தான்கறுப்பாய் ஆகியதே !

         ஓரளவு சுகமாகி வீடுவந்த பின்னாலே 
              கண்ணாடி முன்னின்று தன்முகத்தைப் பார்த்தாளே 
        ஓவென்று ஓலமிட்டு உன்மத்தம் பிடித்தவளாய்
               ஒருவரையும் பாராமல் உட்கார்ந்தாள் தனிமையிலே  !

         அப்பாவும் அண்ணாவும் ஆறுதல்கள் கூறிநின்றார்
             அப்போது  தானவளும் அவர்கள்முகம் பார்த்தனளே 
         அப்பாவும் அண்ணாவும் அழகெனவே அவள்நினைத்தாள்
               அழுதபடி ஓடிவந்து அணைத்தபடி அவள்நின்றாளே !

         கறுப்புநிறம் அப்போது கட்டழகாய் தெரிந்தது 
            வெறுத்துநின்ற வெள்ளழகி வெளிவந்தாள் திரைவிலகி
         நிறமென்னும் பேய்பிடித்து நின்றாடி நின்றஅவள் 
               நிறமெல்லாம் அழகெனவே நெஞ்சுக்குள் நிறைத்தாளே ! 
    
        



       














No comments: