



" எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம்,
பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து
தருவோன் நமது தாய்மொழிக்குப்புதிய உயிர் தருவோன் ஆகிறான். " என்று மகாகவி பாரதி
தாம் எழுதிய பாஞ்சாலி சபதம் காவியத்தின் முன்னுரையில் பதிவுசெய்துள்ளார்.


இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் 1970-1980காலப்பகுதியில்
புதுக்கவிதை
எழுச்சிமிக்க இலக்கியமாக பேசப்பட்டது.
தமிழ்நாட்டில் வானம்பாடி
கவிஞர்களாக வீச்சுடன் எழுதவந்த
வைரமுத்து, மேத்தா, அப்துல்ரஹ்மான், அக்கினிபுத்திரன், மீரா,
சிற்பி, தமிழ்நாடன், தமிழவன், தமிழன்பன், கோவை ஞானி, வைதீஸ்வரன்,
பரிணாமன்,
புவியரசு, இன்குலாப், கங்கைகொண்டான், உட்பட
பலரின் புதுக்கவிதைகளின் தாக்கம் இலங்கையிலும் நீடித்தது.
அதேவேளை
சிதம்பர ரகுநாதன், கலைமகள் கி.வா. ஜகந்நாதன் முதலானோர் புதுக்கவிதையை ஏற்காமல்
எதிர்வினையாற்றினார்கள். வானம்பாடிகள்
இதழ் சில வருடங்கள் அழகான
வடிவமைப்புடன் வெளிவந்தது. இலங்கையில் 1970
இற்குப்பின்னர் ஏராளமான இளம்தலைமுறை
படைப்பாளிகள் முதலில் புதுக்கவிதை
கவிஞர்களாகவே அறிமுகமானார்கள்.

ஜெயலலிதா, கமல்ஹாஸன், இயக்குநர் பாலச்சந்தர்
முதலானோரும் வானம்பாடிகளின் புதுக்கவிதைகளை
விரும்பி வாசித்தார்கள்.
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசின்
கண்காணிப்புகளுக்கும் வானம்பாடி
கவிஞர்கள் இலக்கான
தகவல் உண்டு.
மார்க்சீய கண்ணோட்டத்துடன்
தீவிரமான
சிந்தனைகளுடன் அக்காலப்பகுதி கவிதைகள்
வெளிவந்தமையும் அதற்குக்காரணம். சில கவிஞர்கள்
நக்சலைட் தீவிரவாதிகளுடனும்
நெருங்கியிருந்ததாக தி.மு.க. அரசு
சந்தேகித்தது. சிலர் தலைமறைவு வாழ்க்கையையும்
தொடர்ந்தனர். தமிழ்நாடன்
ஒரு
வானம்பாடியின் இலக்கிய
வனம் என்ற நூலையும்
கோவை ஞானி வானம்பாடிகளின் கவிதை இயக்கம்:
வரலாறும் படிப்பினைகளும்
பற்றிய நூலையும் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு
காலத்தில்
புதுக்கவிதை
வீச்சில் வெளியான
இந்த இலக்கிய வடிவம்
காலப்போக்கில் கவிதை
என்ற பெயரையே தக்கவைத்துக்கொண்டது.
கவிஞர் மு.மேத்தா
தமது கண்ணீர்பூக்கள் கவிதைத்தொகுப்பின் முன்னுரையின்
இறுதியில்
இப்படி எழுதியிருப்பார்:
கண்ணகி கால்
சிலம்பைக்
கழற்றினாள் நாம்
சிலப்பதிகாரம் படித்தோம், என் மனைவி
கைவளையல்களை கழற்றினாள் நீங்கள்
கண்ணீர்ப்பூக்கள் படிக்கிறீர்கள்.
கண்ணீர்ப்பூக்கள்
வெளியாகி சில
வருடங்களில் மேத்தா
ஆனந்தவிகடன்
பொன்விழா சரித்திர
நாவல் போட்டியில் தமது சோழநிலா நாவலுக்கு
முதல் பரிசாக
இருபதினாயிரம் ரூபா
பெற்றார். உடனே இலங்கையில் ஒரு கவிஞர்
-"சோழா நிலா
தந்தீர்கள் மனைவியின் கைவளையல்களை மீட்டீர்களா
? "
- என்று ஒரு புதுக்கவிதை எழுதினார்.
இவ்வாறெல்லாம் புதுக்கவிதை
உலகில் பல
சுவாரஸ்யங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
மேத்தாவின்
மற்றுமொரு கவிதை வரி:
நான் வெட்டவெட்டத்தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை
1970களில் எனக்கும்
மேத்தாவின் கவிதைகளில்
ஈர்ப்பிருந்தது. நா. பார்த்தசாரதியின் தீபம்
இதழில் மேத்தாவின்
ஒரு தேசபிதாவுக்கு தெருப்பாடகனின் அஞ்சலி என்ற கவிதை
அக்காலப்பகுதியில் இலக்கிய வட்டாரத்தில் பெரிதும்
பேசப்பட்டது.
இலங்கையிலும்
1970 களில் புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் புற்றீசலாக வெளிப்பட்டனர். அவ்வேளையில்
தமிழில் ஹைக்கூ கவிதைகளும் அறிமுகமாகத்தொடங்கின. மரபைத்தெரிந்துகொண்டு எழுதுங்கள்
என்று கவிதை இலக்கிய விமர்சகர்கள் ஒரு
புறத்தில் கண்டனம் தெரிவித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில், இலங்கையில் கவிஞர்கள்
நுஃமானுக்கும் மு. பொன்னம்பலத்திற்கும் இடையில் கவிதை நாடகம் ஏற்புடையதா? இல்லையா
? என்ற சர்ச்சையும் தோன்றியது.
இலங்கை
திருகோணமலையிலிருந்து தமிழகம் சென்ற கவிஞர் தருமு சிவராம் தமிழ்க்கவிதை உலகில்
மிகுந்த கவனத்தை பெற்றவர். இவர் இலங்கை திரும்பாமலேயே வேலூரில் அடக்கமான அமர
கவிஞர்.
" சிறகிலிருந்து பிரிந்த/ இறகு ஒன்று / காற்றின்/ தீராத பக்கங்களில் / ஒரு பறவையின்/ வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது" என்ற அவரது இலக்கிய
உலகில் மிகவும் பிரபலமான இக்கவிதை வரிகளும் நினைவுக்கு வருகின்றன.
மஹாகவி
உருத்திரமூர்த்தி புதியதொருவீடு, கோடை முதலான கவிதை நாடகங்களை எழுதியிருப்பவர்.
தற்போது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் கவிஞர் அம்பியும், வேதாளம் சொன்ன கதை, யாழ்ப்பாடி,
அன்னம் விடு தூது முதலான கவிதை நாடகங்களை வரவாக்கியிருப்பவர். கவிஞர்கள் கவியரங்குகளிலும் பங்குபற்றுவதனால்,
கவியரங்கப்பாடல்கள் தொகுதிகளும் வாசகர் பார்வைக்கு கிட்டியிருக்கின்றன. இலங்கையில்
சில்லையூர் செல்வராசன் ஊரடங்குப்பாடல்கள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தப்பின்னணிகளுக்கு
மத்தியில் இலங்கையில் நுஃமான், சோ. பத்மநாதன், கே.கணேஷ் உட்பட மேலும் சிலர்
பிறமொழிக்கவிதைகளை தமிழுக்குத்தந்தனர். மேலைத்தேய மற்றும் பாலஸ்தீன, வியட்நாமிய,
சோவியத் உக்ரேய்ன், அஸர்பைஜான் கவிதைகளையும்
இவர்களால் நாம் தமிழில் படிக்க முடிந்தது. அதேசமயம் கனடாவில் வாழ்ந்து
மறைந்திருந்திருக்கும் செல்வா கனகநாயகம் பல ஈழத்துக்கவிதைகளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டில்
பல கவிஞர்களை தமிழ் சினிமா ஆகர்சித்தமையால் திரைப்படங்களுக்கு பாடல் எழுதத்தொடங்கினர்.
எனினும் கவிஞர் அப்துல்ரஹ்மான் மாத்திரம் " அம்மி கொத்துவதற்கு சிற்பி
தேவையில்லை" என்று திரையுலகை புறக்கணித்தார். தமிழகத்தில்
வானம்பாடிகளுக்குப்பின்னர் ஏராளமான கவிஞர்கள் அறிமுகமாகியிருக்கின்றனர். அவர்களின்
பட்டியல் நீளமானது.
உடல்மொழி
சம்பந்தமாக எழுதும் பெண்கவிஞர்கள் குறித்தும் எதிர்வினைகள் தொடருகின்றன. அவற்றை இங்கு விரிவஞ்சி
தவிர்க்கின்றேன்.
இலங்கையில்
இனமுரண்பாடு தோன்றி அதுவே இனவிடுதலைப் போராட்டமாகியதும் போர்க்கால இலக்கியம்
அறிமுகமானது. அக்காலப்பகுதியில் அங்கு வெளியான பெரும்பாலான கவிதைகள், மக்களின்
போர்க்கால துயரங்களையே பேசியது. மரணத்துள்
வாழ்வோம், மற்றும் சித்திரலேகா மெளனகுரு தொகுத்திருக்கும் ஈழத்து பெண்கவிஞர்களின்
சொல்லாத சேதிகள் தமிழ்நாட்டில் அ.மங்கை தொகுத்திருக்கும் பெயல் மணக்கும் பொழுது என்பன
கவனத்திற்குள்ளான தொகுப்புகள்.
சமீபத்தில்
உலகெங்கும் வாழும் ஈழத்து கவிஞர்கள் ஆயிரம்பேரின் கவிதைகளை தொகுத்து சிறிய தலையணை
பருமனிலும் ஒரு நூல் வெளிவந்துள்ளது! அதன் உள்ளடக்கம் குறித்து இதுவரையில் விரிவான
விமர்சனங்கள் வெளியாகவில்லை. எனினும் சுமார் ஆயிரம்பேரிடமாவது அந்த நூல்
சென்றிருக்கவேண்டும்!!
சண்முகம்
சிவலிங்கம், சோ. பத்மநாதன், சிவசேகரம், சு.வில்வரத்தினம், சேரன், வ. ஐ. ச. ஜெயபாலன், புதுவை இரத்தினதுரை,
அ.யேசுராசா, கருணாகரன், நிலாந்தன், தீபச்செல்வன்,
வெற்றிச்செல்வி உட்பட பலரது கவிதைகள் இனமுரண்பாடுகளையும் போரின் வலிகளையும் காலத்தின் துயரத்தையும்
பேசியிருக்கின்றன.
அத்துடன்
தென்னிலங்கையிலும் கிழக்கிலுமிருந்து ஏராளமான முஸ்லிம் கவிஞர்கள்
தோன்றியிருக்கிறார்கள். இவர்கள் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில்
வாழ்ந்தமையால் சிங்களக் கவிதைகளையும் தமிழுக்குத் தந்துள்ளனர்.
தமிழில்
கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி
ஆராயப்புகுதல் ஆழ்கடலை ஆராயும் வேலையிலும் மிகப்பெரிது. காலத்துக்கு காலம்
கவிதைத்துறை ஆழமும் அகற்சியும்கொண்டு புதிய புதிய பரிமாணங்களை பெற்றுவருகிறது.
இலங்கையிலும் தமிழகத்திலும் மலேசியா, சிங்கப்பூரிலும் தமிழ்க்கவிதை இயக்கங்களும்
நடந்திருக்கின்றன. கவிதைகளுக்கான
சிற்றேடுகளும் வெளியாகியுள்ளன.
சமகாலத்தில்
முகநூலில் துணுக்குகளும் கவிதை வடிவில் வரத்தொடங்கிவிட்டன. அத்தகைய முகநூல்
குறிப்புகளிலும் எமது முன்னோர்களின் கவிதை வரிகளை ஆதாரமாகக்கொள்ளும் இயல்புகளும்
பெருகியிருக்கின்றன.
சில
வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நூடில்ஸ் பாவனைக்கு தடை வந்தபோது ஒரு முகநூல்
குறிப்பு இவ்வாறு வெளிவந்தது:
" நூடில்ஸின் வாழ்வுதனை சூது கவ்வும், இடியப்பம் ஓர் நாள்
வெல்லும்"
" தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் ஓர் நாள் வெல்லும்"
என்ற மகாகவி பாரதியின் கூற்றிற்கு
இக்காலக்கவிஞர் நூடில்ஸிலிருந்து விளக்கம் தந்திருக்கிறார்.
இத்தகைய
பின்னணிகளுடன் அவுஸ்திரேலியாவில்
தமிழ்க்கவிஞர்களின் முயற்சிகளையும் அவர்களின் படைப்பூக்கத்தையும் நாம்
அவதானிக்கலாம். கடல் சூழ்ந்த இக்கண்டத்திலும் கவிதை முயற்சிகளை ஆராய்வது கடலில்
மூழ்கி ஆராய்வதுபோன்ற செயலே!. எமது முன்னோர்கள் ஐவகைத்திணைகளை எமக்கு
அறிமுகப்படுத்தினர்.
குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த நிலமும் / முல்லை - காடும்
காடுசார்ந்த நிலமும் / மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும் / நெய்தல் - கடலும் கடல்
சார்ந்த நிலமும் / பாலை - மணலும் மணல் சார்ந்த பகுதிகளும்
தமிழர்களின்
அந்நிய நாடுகளை நோக்கிய புலப்பெயர்வையடுத்து அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும்
இலக்கியங்கள் அறிமுகமானதும் அந்தப்பிரதேசங்களின் நிலங்களும் பருவகாலங்களும் ஆறாவது
திணையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பனியும் பனிசார்ந்த நிலங்களுமே அந்த ஆறாம்
திணையாகியிருக்கிறது.
அவுஸ்திரேலியா
கண்டம் நால்வகை பருவகாலங்களை கொண்டது. இளவேணிற்காலம், கோடை காலம், இலையுதிர் காலம்,
குளிர்காலம். இங்கு பனியும் கொடுமை, கோடையும் கொடுமை என்பர் அனுபவித்தோர்.
தமிழர்கள் புலம்பெயர் தேசங்களில் ஒன்றான அவுஸ்திரேலியாவிலிருந்து குறிப்பிட்ட இந்த
புதிய ஆறாம் திணையை சித்திரித்தும் கவிதைகள் வெளிவந்துள்ளனவா என்பது தெரியவில்லை.
தெரிந்தவர்கள் சொல்லக்கூடும்.
இங்கும் கவிதைத்துறையில் ஆர்வம் காண்பிக்கும் பலர்
கவியரங்கு கவிஞர்களாகவும் வெளிப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இலங்கையிலும்
இந்தத்துறையில் ஈடுபாடு மிக்க பலர், இங்கு வந்தபின்னரும் புகலிடத்தின்
பகைப்புலத்தில் கவிதைகளை படைத்துவருகின்றனர்.
சிட்னியிலிருந்து அம்பி, செ. பாஸ்கரன், சவுந்தரி
கணேசன், நட்சத்திரன் செவ்விந்தியன், நந்திவர்மன், இளமுருகனார் பாரதி, மனோ
ஜெகேந்திரன், பாமதி பிரதீப், விழிமைந்தன் பிரவீணன் மகேந்திரராஜா, மு.
கோவிந்தராஜன், உஷா ஜவஹார், சந்திரகாசன்,
(அமரர்) வேந்தனார் இளங்கோ, பூலோகராஜா விஷ்ணுதாசன், கன்பராவிலிருந்து ஆழியாள்
மதுபாஷினி, யோகானந்தன், குவின்ஸ்லாந்திலிருந்து (அமரர்) சண்முகநாதன் வாசுதேவன், வாசுகி
சித்திரசேனன், சோழன் இராமலிங்கம் ஆகியோரும், மெல்பனிலிருந்து 'பாடும்மீன்' சு.
ஶ்ரீகந்தராசா, நல்லைக்குமரன் குமாரசாமி, கல்லோடைக்கரன், மாவை நித்தியானந்தன்,
ஆவூரான் சந்திரன், ஜெயராம சர்மா, மெல்பன் மணி, ராணி தங்கராஜா, சாந்தினி
புவநேந்திரராஜா, சுபாஷினி சிகதரன், ரேணுகா தனஸ்கந்தா, கே. எஸ். சுதாகரன், நித்தி
கனகரத்தினம், நவரத்தினம் இளங்கோ, சங்கர சுப்பிரமணியன், பொன்னரசு, அறவேந்தன்,
தெய்வீகன், ஜே.கே., கேதா, வெள்ளையன் தங்கையன், சுகுமாறன், வெங்கடாசலபதி, குகன்
கந்தசாமி, ஶ்ரீகௌரிசங்கர், லக்ஷிகா கண்ணன், அருணமதி குமாரநாதன் முதலான பலரும் கவிதைத்துறையில்
ஈடுபாடுள்ளவர்கள்.
இவர்களில் சிலரது கவிதைகள் நூல்களாகவும்
தொகுக்கப்பட்டு வரவாகியுள்ளன. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் 2007 ஆம்
ஆண்டு நடத்திய ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்ட வானவில்
கவிதைத்தொகுப்பிலும் இந்த நாட்டில் வதியும் பல கவிஞர்களின் கவிதைகள்
இடம்பெற்றுள்ளன. இச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்கள் இதுவரையில் மெல்பன், சிட்னி,
கன்பரா, கோல்ட்கோஸ்ட் நகரங்களில் நடைபெற்றவேளைகளில் கவியரங்குகளும்
இணைக்கப்பட்டிருந்தன. அவற்றிலும் பல கவிஞர்கள் பங்குபற்றி தத்தமது ஆற்றல்களை
வெளிப்படுத்தினர். அத்துடன் மெல்பனில் கவிதை வாசிப்பு அமர்வுகளையும் இச்சங்கம்
கடந்த காலங்களில் நடத்தியிருப்பதுடன் கவிதை நூல்களையும்
அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கன்பராவில் வதியும் ஆழியாள் மதுபாஷினியும்,
சிட்னியில் வதியும் பாமதி பிரதீப்பும் இந்தத்தேசத்தின் பூர்வகுடிமக்களின் வாழ்வை
சித்திரித்தும் கவிதைகள் எழுதியுள்ளனர்.
---0---
No comments:
Post a Comment