சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 07 சொடக்கு மேலே சொடக்குப்போடும் தாத்தாமாரின் கதை ஊடகங்களும் ராசிபலன் - ஆயுள் பலன் சொல்லும் சோதிடர்களும் - முருகபூபதி - அவுஸ்திரேலியா


எனது பால்யகாலத்தில் எனக்கு பல தாத்தாமார் இருந்தனர். அப்பாவின் வழியில் எவரும் இலங்கையில் இல்லை. அவர்கள் அனைவரும் தமிழகத்தில்.
அம்மாவின் வழியில் பலர் இருந்தனர். அம்மாவின் அப்பா பொலிஸ் தாத்தா 1956 இல் மறைந்த பின்னர் குருநாகலிலிருந்து குப்பமுத்து செட்டியார் என்ற பெயரில் ஒரு தாத்தா வந்து எங்களுடன் தங்கியிருந்தார்.
எமது தாய்மாமனாரின் மனைவியான அத்தையின் வழியில் அவரது அப்பா வேலு செட்டியார் என்ற தாத்தாவும்  மாத்தளையிலிருந்து வந்து அத்தையுடன் இருந்தார்.
இரண்டு செட்டிமாரும் அடிக்கடி சந்தித்து சுகநலம் விசாரித்துக்கொள்வார்கள்.  அப்போது அவர்கள் தத்தம் விரல்களை மடக்கி சொடக்கு போட்டுக்கொண்டே பேசுவார்கள்.  வேலு செட்டியார் மாத்தளையிலிருந்து வந்திருந்தமையால் அவரை மாத்தளை தாத்தா என்றும் குப்பமுத்து செட்டியார் குருநாகலிலிருந்து வந்திருந்தமையால் அவரை குருநாகல் தாத்தா என்றும் அழைப்போம்.

இருவரும் சந்திக்கும்போது முதலாம் , இரண்டாம் உலகமகா யுத்தங்கள் பற்றி பேசிக்கொள்வார்கள். அவர்களின் உரையாடல் கதை சொல்லும் பாங்கிலிருந்தமையால் நானும் அருகிலிருந்து கேட்பேன். அடிக்கடி அவர்கள் சொடக்குபோடும் ஒலியும் கேட்கும்.  குருநாகல் தாத்தா அடிக்கடி போஜர் யுத்தம் பற்றி பேசியதனால் அவருக்கு போஜர் தாத்தா என்றும் ஒரு பட்டப்பெயர் வைத்தோம்.
ஒருநாள் போஜர் தாத்தா திடீரென சுகவீனமுற்றார். அம்மா, அப்பா, மாமா, அத்தை அனைவரும் காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் சிவன்கோயில் திருவிழாவுக்கு ஒரு வாடகைக்காரில் போயிருந்தார்கள்.
எங்கள் வீட்டில் நானும் அக்காவும் தம்பிமார் தங்கையும்மாத்திரமே. தன்னையும் அழைத்துக்கொண்டு செல்லவில்லை என்ற கோபத்தில் பாட்டி ( அம்மாவின் அம்மா) கதிர்காமம் போய்விட்டார்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை.  எங்கள் வீட்டிலிருந்த காய்ச்சலுடன் போராடிய குருநாகல் தாத்தாவை  காலைவேளையில் நான்தான் ஒரு மாட்டுவண்டிலில் அழைத்துக்கொண்டு எங்கள் ஊர் ஆஸ்பத்திரிக்குச் சென்று காண்பித்து மருந்து எடுத்துக்கொண்டு வந்தேன். இதனைக்கேள்விப்பட்ட  மாத்தளைத்தாத்தா,  அன்று  மதிய வேளையில் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், தனது குடையையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்.
நோயுற்றிருந்த எங்கள் வீட்டுத்தாத்தவுக்கு  மாத்தளைத்தாத்தா தேறுதல் சொன்னார். மருத்துவ ஆலோசனைகளும் கூறினார். கையில் எடுத்துவந்திருந்த இரண்டு தோடம்பழங்களை அக்காவிடம் கொடுத்து அதனை பிழிந்து கொடுக்கச்செய்தார்.
" சில நாட்களுக்கு சோறு கொடுக்கவேண்டாம். கஞ்சி காய்ச்சி கொடுக்குமாறும், ரோஸ்பாண் வாங்கிக்கொடுக்குமாறும்" அக்காவிடம் சொன்னார் மாத்தளைத் தாத்தா.
மிகுந்த பரிவோடு அவர் எங்கள் வீட்டுத்தாத்தாவுடன் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு குடையையும் மறக்காமல் விரித்து எடுத்துக்கொண்டு விடைபெற்றுப் போனார் மாத்தளைத்தாத்தா.
அன்று இரவு எட்டுமணியிருக்கும் , அத்தை வீட்டிலிருந்து எனது வயதுடைய மச்சான் முருகானந்தன் தலைதெறிக்க ஓடிவந்தான்.
அவன் சொன்னசெய்தி அதிர்ச்சியானது!!!
" மாத்தளைத் தாத்தா  சற்று நேரத்துக்கு முன்னர் மரணமானார்"
நானும் அக்காவும்  தம்பிமாரையும் தங்கையையும் எங்கள் வீட்டுத்தாத்தாவை பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு,  ஓடினோம். குடும்ப டாக்டர் பாலசுப்பிரமணியம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மாமா - அத்தை வீட்டுப்பிள்ளைகள் கதறிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த எங்கள் மாமி ஒருவர் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
மாத்தளைத்தாத்தா பகலில் எங்கள் வீட்டுத்தாத்தாவின் சுகம் விசாரிக்கப்போன கதையைத்தான் அழுகுரல் கேட்டு ஓடிவந்த அயலவர்களிடம் அந்த மாமி சொல்லிக்கொண்டிருந்தார்.
மாத்தளைத் தாத்தாவுக்கு வந்தது மாரடைப்பு என்பதே குடும்ப டாக்டரின் முடிவு.
" நெஞ்சு வலிக்கிறது என்றார், சுடுதண்ணீர் கேட்டார். எடுத்துவருவதற்குள் சரிந்துவிட்டார்" என்று கண்ணீருடன் சொன்னாள் மாமா - அத்தையின் மூத்த மகள்.
யாழ்ப்பாணம் சென்றிருந்தவர்கள் அன்று நடு இரவு திரும்பினர். அனைவருக்கும் மாத்தளை தாத்தாவின் தீடீர் மரணம் பெரிய அதிர்ச்சி. அவருடைய  பூத உடலுடன் மறுநாள் நாங்கள் அனைவரும் அவரது சொந்த ஊருக்குப்புறப்பட்டோம்.
குருநாகல் தாத்தா, எங்கள் வீட்டில் அயலவர்கள் துணையுடன் இருந்தார். அவர் அதற்குப்பிறகு பல வருடங்கள் கழித்தே இறந்தார்.
மரணம் எப்படியும் எந்தவேளையிலும் வரலாம் என்பதை அன்றுதான் முதல் முதலில் தெரிந்துகொண்டேன். அப்பொழுது எனது  வயது 14.
இதுபோன்றதொரு சிறுகதையை தி. ஜானகிராமனின் அக்பர்சாஸ்திரி கதைத்தொகுப்பிலும் படித்திருக்கின்றேன். ஒரு ரயில் பயணத்தில் இரண்டு வயோதிபர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல்,  அன்று எங்கள் குடும்பத்து தாத்தாமாருக்கிடையில் நடந்தது  போலிருக்கும்.
நோயாளியானவருக்கு அந்தப்பயணம் முழுவதும் ஆரோக்கியமான முதியவர் மருத்துவ ஆலோசனைகள் சொல்லிக்கொண்டு வருவார். ஒரு கட்டத்தில் நெஞ்சைப்பிடித்துக்கொள்வார். ஆவி பிரிந்துவிடும்.
இந்தச்  சொல்லத்தவறிய கதைகள் ஏன் இப்பொழுது வருகிறதென்றால், நானும் தற்பொழுது ஒரு தாத்தாதான். எனக்கும் 67 வயதாகிறது.   நானும் விரல்களை மடக்கி சொடக்கு போடுகின்றேன்.
                                     எனது மகள்மார் வழியில் மூன்று பேரக்குழந்தைகள்   அவுஸ்திரேலியாவிலிருந்தாலும்,  மேலும் பல பேரக்குழந்தைகள் இங்கும்,  இலங்கை, தமிழகம், மற்றும் ஐரோப்பிய  நாடுகளிலும் " தாத்தா" என அன்பொழுக அழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் நடந்த எனது புதிய நூல் வெளியீட்டுவிழாவை ஒரு பேத்திதான் வரவேற்புரையுடன் தொடக்கிவைத்தாள். மற்றும் ஒரு பேத்தி நூலை வெளியிட்டுவைத்தாள்.
இந்தக்காட்சிகளைக் காணுவதற்கு எனது பெற்றோரும் இல்லை நான் நேசித்த அந்தத்  தாத்தாமாரும் இல்லை.
தாத்தாவாகியிருக்கும் எனது கதைக்கு  இனி வருகின்றேன். தற்பொழுது ஓய்வூதியத்துடனும் மருந்து மாத்திரைகளுடனும் காலத்தை ஓட்டுவதனால், என்னையும் நான் வசிக்கும் தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு எனது குடும்ப நண்பர் ஒருவர், என்னைவிட வயதால் மூத்தவர் அழைத்தார்.
அவர் ஒரு பட்டயக்கணக்காளர். வாரத்தில் ஒருநாள்  நான் வசிக்கும் ஊரிலிருக்கும் தனது அலுவலகத்திற்கு வந்து திரும்புபவர். அதனால் வாராந்தம் அவரை சந்திப்பேன். அவரே மூத்த பிரஜைகள் சங்கத்தின் கணக்காய்வாளர் ( Auditor).
அவர்,  தமது மூத்த பிரஜைகள் அமைப்பின் உறுப்புரிமை விண்ணப்ப படிவமும் -  உறுப்பினர் மறைந்தால் குறிப்பிட்ட அமைப்பினால் பெறக்கூடிய மரணச்சடங்கிற்கான சகாய உதவி வழங்கும் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப்படிவமும்  (Death Donation Fund Enrolment Form )  எடுத்துவந்து தந்தார்.
இரண்டையும் பூரணப்படுத்தினேன். கடவுச்சீட்டினதும் குடியுரிமைச்சான்றிதழினதும் பிரதிகளும் இணைத்து,  எனது மருத்துவரினால்  ( G.P) தரப்படும் எனது சிகிச்சைகள்   தொடர்பான குறிப்புகள்,  நான் பாவிக்கும் மருந்துகள், எனக்கு நடந்துள்ள சத்திர சிகிச்சைகள் பற்றிய விபரங்களையெல்லாம் அந்தப்படிவத்தில் எந்த ஒளிவு மறைவுமின்றி  பதிவுசெய்து,  அனைத்தையும் குறிப்பிட்ட குடும்ப நண்பர் கணக்காய்வாளர் ஊடாகவே மூத்த பிரஜைகள் சங்கத்தின் தலைமைப்பீடத்திற்கு அனுப்பியிருந்தேன்.
அவற்றை பார்வையிட்ட தலைமைப்பீடம் எனக்கு தொலைபேசி மூலம் நான் இணைந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியையும் தெரிவித்து, அனுப்பிய  உறுப்புரிமைப்பணத்திற்கான பற்றுச்சீட்டும் தங்கள் அமைப்பில் நான் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதை அத்தாட்சிப்படுத்தும் கடிதமும் தபாலில் அனுப்பியிருந்ததுடன், தங்கள் அமைப்பின் அமைப்புவிதிகளையும் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழையும் வழங்கியிருந்தார்கள்.
இந்த நாட்டின் மூத்த பிரஜை என்ற அங்கீகாரமும் அடையாளமும் கிடைத்திருக்கிறது என்று எனது மனைவியிடம் சொல்லிச்சிரித்துக்கொண்டிருந்தேன்.
அடுத்த வாரம் அந்தச்சிரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாப்போன்று ஒரு கடிதம் வந்தது. எனது Death Donation Fund Enrolment Form ஐ தங்களது அமைப்பின் செயற்குழு ஆராய்ந்து, அதனை நிராகரிப்பதாகவும் அதற்காக நான் செலுத்தியிருந்த முற்பணத்தை திருப்பி அனுப்புவதாகவும் அந்தக்கடிதம் செய்தி சொன்னது.
ஆனால், அந்த விண்ணப்பத்தை மாத்திரம் அவர்கள் நிராகரித்தமைக்கான காரணத்தை அதில் எழுதியிருக்கவில்லை. எனக்கு காரணம் ஓரளவு புரிந்தது.
எனினும் அடுத்தவாரம் குறிப்பிட்ட குடும்ப நண்பரான  கணக்காய்வாளர் எங்கள் ஊருக்கு அவரது அலுவலகம் வந்ததும் அந்தப்பதிலை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன்.
அவருக்கும் அந்தப்பதில் அதிசயமாக இருந்தது. உடனே என் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் தொலைபேசியில் கேட்டார்.
எனக்கிருக்கும் உடல் உபாதைகள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் பற்றி மருத்துவரின் குறிப்புகள் இருப்பதனால், இந்த நிலையில் அந்த Death Donation Fund சகாய நிதித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளமுடியாதிருப்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக மறுமுனையிலிருந்து வந்த பதிலை கணக்காய்வாளர் சொன்னார்.
" சரி அய்யா! ஏன் அந்தக்காரணத்தை அந்தப்பதிலிலில் அவர்கள் சொல்லவில்லை"  செய்தியாளன்  புத்தியோடு கேட்டேன்.
 அவர் மந்தகாசமான புன்னகையுடன், " அதற்கும் அவர்கள் பதில்சொன்னார்கள். ஆனால், எப்படிச்சொல்வது?" என்றபோது, எனக்கு முழுவதும் புரிந்தது.
வீட்டுக்குத்திரும்பி வந்து, மனைவியிடம், " நான் சிலவேளை கெதியாய்ப்போய்விடக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். பிறகு அவர்கள்தானே வீணாக நான் செலுத்தாத பணத்தையும் அநாவசியமாக மீளச்செலுத்துவதற்கு நேரிடும் " என்று மந்தகாசப்புன்னகையுடன் அல்ல,  அட்டகாசமாகச்சிரித்துக்கொண்டே சொன்னேன்.
கடந்த வருடம் ( 2017 இல்) இலங்கைப்பயணம் சென்றிருந்தபோது திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமத்தில்  ஒரு புறநகரில்  தனித்துவாழும் குறி சொல்லும் குரவர் சமூகம் வாழும் இடத்திற்குச்சென்றிருந்தேன்.
அந்த சமூகத்தில்  மாறிவரும் பண்பாட்டுக்கோலங்கள் பற்றியும் அந்தப்பயணம் பற்றி நான் எழுதிய ( பயணியின் பார்வையில் ) தொடரில் குறிப்பிட்டுள்ளேன்.
அன்று எனது உள்ளங்கைகள் இரண்டையும் மாறி மாறிப் பார்த்த அந்த குறிசொல்லும் பெண், என்னை பல தடவை "மகராசா" என்று விளித்திருந்தார். " அய்யா மகராசா, உங்களுக்கு நோய் நொடி, கஷ்டம் துக்கம், போராட்டம்  எல்லாம் வரும் மகராசா, ஆனா, நீங்க நெடுங்காலம் வாழ்வீங்கள் அய்யா" என்றார்.
" சரியம்மா!? எவ்வளவு காலம் வாழ்வேன்? சொல்ல முடியுமா?" எனக்கேட்டேன்.
" நீங்க மகராசா தொன்னூத்தி ஐஞ்சு வயசு வரைக்கும் வாழுவீங்கள் அய்யா? தினமும் முருகனை வணங்குங்க அய்யா?"
" என்ற பெயரிலும் முருகன் இருக்கிறார்" என்று சொன்ன நான், அந்த முருகன் வாழ்வில் நடந்ததும் எனக்கும் நடந்திருக்கு என்று மாத்திரம்  சொல்லவில்லை.!!!
இந்தச்சம்பவத்தை மனைவியிடம் சொல்லி, " குறிப்பிட்ட குறிசொல்லும் பெண்ணிடமிருந்து எனது ஆயுள் பற்றிய ஒரு சான்றிதழ் பெற்று இந்த மூத்த பிரஜைகள் அமைப்பிடம் கொடுக்கவா?" எனக்கேட்டேன்.
" உங்களுக்கு என்ன விசரா?" எனக்கேட்டாள் மனைவி.
" அந்தப்பெண் நான் நெடுங்காலம் வாழப்போகும் மகராசன் என்று சொல்லியிருக்கிறாள், நீர் இப்படிச்சொல்கிறீரே?"
" அது, நீங்கள் அந்த சாத்திரகாரிக்கு கொடுத்த பணம் சொன்ன வார்த்தைகள்"
" இங்கும் என்னை பரிசோதித்து பராமரிக்கும் மருத்துவருக்கு  அரசாங்கம் Medicare மூலமாக பணம் கொடுக்கிறதுதானே?" என்றேன்.
" இவர்கள் உண்மை சொல்லும் மருத்துவர்கள். அவர்கள் பொய்சொல்லும் சாத்திரக்காரர்கள்" என்றாள் மனைவி.
" இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் பல உலக நாடுகளிலும் தினப்பலன், வார பலன், குருப்பெயரச்சி பலன், தனிநபர் ராசி - நட்சத்திரப்பலன் , வருடப்பலன் எல்லாம் ஊடகங்களிலும் இணையங்களிலும் பலரும் சொல்லி வருகிறார்களே? அதில் மக்களுக்கு நம்பிக்கை இருப்பதனால்தானே அவுஸ்திரேலியா ஆங்கில தினசரிகளிலும் தினமும் ராசி பலன் பதிவுசெய்துவருகிறார்கள். மருத்துவரின் அத்தாட்சிக்கடிதத்தை ஏற்கும் அமைப்புகள்,  இந்த சோதிடர்கள் தரும்  "ஆயுள் கூறும்"  அத்தாட்சி கடிதத்தை ஏற்கமாட்டார்களா? இது என்ன நியாயம்?" என்று எனது வாதத்தை  மனைவியிடம் முன்வைத்தேன்.
" உங்களுக்கு விசர் அல்ல! டபிள் விசர்" என்றாள்.
 அவளுக்கு எங்கள் குருநாகல் தாத்தாவினதும் மாத்தளைத் தாத்தவினதும் கதையைச்சொல்லிவிட்டு, தி. ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி கதையையும் சொன்னேன்.
இப்போது வாசகர்களாகிய உங்களுக்கு தாத்தாமாரின் கதையையும் என் கதையையும் சொல்கின்றேன்.
"அனைவரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே!"
இதனை கணினியில் பதிவுசெய்துவிட்டு,  சொடக்கு மேலே சொடக்குப்போட்டுக்கொண்டேன்.
-->
---0--





No comments: