மெல்பனில்: மூத்த - இளம் தலைமுறையினர் சங்கமித்த கவிஞர் ஒன்றுகூடல் மறைந்த கவிஞர்களையும் நினைவுகூர்ந்த கவிதா மண்டலம் - ரஸஞானி



மெல்பனில் நேற்றைய தினம் ஞாயிறன்று நடைபெற்ற கவிதா மண்டலம் நிகழ்ச்சியில் மறைந்த ஈழத்து, தமிழக கவிஞர்களையும் நினைவு கூர்ந்து கவிதைகள் வாசிக்கப்பட்டன.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வு சங்கத்தின் தலைவர் கவிஞர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் மெல்பனில் கிளேய்ட்டன நூல் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
மெல்பனில் வதியும் மூத்த - இளம் தலைமுறையினர் தமக்குப்பிடித்தமான பிற கவிஞர்களின் கவிதைகளையும் தமது கவிதைகளையும் வாசித்து சமர்ப்பித்தனர்.

மறைந்த மற்றும் பிற கவிஞர்களை சமர்ப்பிக்கும்போது அவர்கள் பற்றிய அறிமுகத்தையும் வழங்கினர்.  ஈழத்தின் மூத்த கவிஞர்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, சு. வில்வரத்தினம் ஆகியோரின் கவிதைளை திருமதி கலா பாலசண்முகனும், மு. தளையசிங்கத்தின் கவிதையை திரு. நவரத்தினம் இளங்கோவும், கனடாவில் அண்மையில் மறைந்த செழியனின் கவிதையை திரு. தெய்வீகனும், அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் சில வருடங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்த கவிஞர் சண்முகநாதன் வாசுதேவனின் கவிதையை திரு. லெ. முருகபூபதியும், தமிழ்நாட்டில் மறைந்த கவிஞர் வடிவேல் ஹோசிமின்னின் கவிதையை திரு. கருப்பையா ராஜாவும் சமர்ப்பித்தனர்.

வல்லினம் இதழ் ஆசிரியர் திரு. அறவேந்தன், மெல்பன் வள்ளுவர் அறக்கட்டளை மற்றும் தமிழ்ப்பாடசாலைகளின் ஒருங்கிணைப்பாளர் திரு. சுகுமாறன், மெல்பன் டீக்கின் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர், திருமதி விஜி இராமச்சந்திரன், திரு. செல்வபாண்டியன், செல்வி லக்‌ஷிஹா கண்ணன், கவிஞர்கள் திரு. கல்லோடைக்கரன்,  மணியன் சங்கரன் ஆகியோரும் கவிதைகளை சமர்ப்பித்து கலந்துரையாடினர்.
இவர்களில் செல்வி லக்‌ஷிஹா கண்ணன், மெல்பனில் 11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவி என்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த ஆண்டில் நடைபெற்ற பரீட்சையில் தமிழ்ப்பாடத்திலும் தோற்றியிருப்பவர்.
அவர் தனது முதலாவது கவிதையை மறைந்த ஜெயகாந்தன் நினைவாக சமர்ப்பித்ததுடன் மேலும் சில கவிதைகளையும் எழுதிவந்து வாசித்தார்.
  ஜெயகாந்தன் 

மந்தையர்க்கெல்லாம் மனிதாபிமானத்தைக் கற்றுத்தந்தாய் 

மானிடர்களாய் மன ஒழுங்குடன் வாழ வழிபடுத்தினாய் 

கம்பீரமும் கவர்ச்சியும் உனது தனித்துவம் 

காத்திரமும் கலையும் உனது கைவசம் 

சமுதாயத்தை சீர்படுத்த படைப்பாளியானாய்

சமரசம் செய்யாத பன்முக கலைஞன் நீ!

தமிழ் இலக்கியத்தின் பதாகை நீ

உன் பெயர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையாகுமா

தோல்வி 

வெற்றிக்கு முதற்படி 
வாழ்வில் ஒரு பகுதி
அனைவரும் சந்திப்பது 
போராடக் கற்றுத்தருவது!

தோல்வியின்றி சாதனையில்லை 
கடின உழைப்பின்றி பயனில்லை 
இலக்கை நோக்கி நகர்ந்திட 
தோல்வி ஒன்று தேவையே !

ஆலோசனையை விடச் சிறந்தது அனுபவம் ஒன்றே
அதைக் கற்றுத் தருவது தோல்வி ஒன்றே 
வாழ்க்கையே ஒரு பந்தயப் போராட்டம்ந்தான் 
அதில் வெற்றியடைய தோல்வி அவசியமே !

இறப்பும் பிறப்பும் வாழ்க்கை,
அது இன்பம் துன்பம் கலந்தது,
இகழ்ச்சி புகழ்ச்சி உடையது,
அதிலே வெற்றி தோல்வி நிச்சயம்

தோற்பது அவமானமல்ல
தோல்வியை வெற்றியாக்கி 
தோல்வியைக் கண்டு துவளாது 
தோல்வியை வெற்றியின் அடையாளமாக்குவதே சிறப்பு!
-----------

 நட்பு 

ஆறிலும் வருவது அறுபதிலும் வருவது 
இன,மத,பால் வேறுபாடின்றி வருவது 
புன்னகையில் ஆரம்பித்து உதிரத்துடன் சேர்வது
எமது துன்பத்தை பாதியாக்கி, இன்பத்தை இரட்டிப்பது நட்பு!

வாழ்க்கை எனும் போராட்டத்தில்
கரைசேர எம்முடன் பயணிப்பது 
கரை சேர்ந்த பின்பும் எம்முடனே நிலைத்திருப்பது 
சண்டை சச்சரவின் பின்பும் சமாதானமாகும் உறவு நட்பு!

எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் எம்முடனே பயணிப்பது
இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பது 
வெற்றி தோல்வியின் போது தோள் கொடுப்பது
இரவு பகல் பாராது ஆபத்தில் கரம் நீட்டுவதே நட்பு

உலகிலே எத்தனை உறவிருந்தாலும் 
நமக்குப் பிடித்த எமது உள்ளம் கவர்ந்த உறவு 
உயிருடன் கலந்த ஒரே உறவு நட்பே
நட்பின்றி நாமில்லை, நண்பர்களின்றி வாழ்வில்லை

நிகழ்ச்சியின் இறுதியில்  கலந்துரையாடலும்  இடம்பெற்றது.

இனிவரும் மாதங்களில் சிறுகதை, நாவல் இலக்கிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுமென சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தெரிவித்தார்.
------0----







-->




No comments: