“என்ன சுகந்தி பேசாமல் இருக்கிறீர்?”
“இல்லை அத்தான் உங்களைச் சந்திச்சு எவ்வளவு காலம் இருக்கும்... எதையுமே கதைக்கப் பிடிக்கேல்லை உங்களுக்குப் பக்கத்தில் இருக்கிறதே போதும் எனக்கு அது போதும்”
“நீர் அத்தான் எண்டு கூப்பிடேக்கை சிரிப்பாக இருக்கும் ஆனால் என்னவள் என்ற உரிமையை எனக்கு இன்னும் அழுத்தமாக உள்ளுக்குள்ள சொல்லிக் கொள்ளும் அது”
“ஊர் உலகத்துத் தான் நீங்கள் கண்ணன், ஆனால் உங்களை நான் காதலிக்கத் தொடங்கின நாளில் இருந்து அத்தான் தான், வெளியில் உங்களை நான் பேர் சொல்லி அழைக்கும் போது மனசுக்குள்ள அத்தான் என்று சொல்லித் தான் முடிப்பன்”
“உமக்கு ஞாபகம் இருக்குதா பள்ளிக்கூடம் முடிஞ்ச கையோட அதே யூனிபோர்மோட இப்பிடித் தானே உங்கட வீட்டு நாவல் மரத்தில நான் ஒரு பக்கம் நீர் ஒரு பக்கம் இருந்து கொண்டு நாவல் பழங்களைப் பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டு கதை பேசினதை?”
“எப்படியத்தான் அதையெல்லாம் மறக்கேலும் அப்பாவின்ர ஷேவிங் ப்ளேட் எடுத்து மரத்தில ‘சுகந்தி’ என்று நீங்கள் எழுத நான் பதிலுக்கு ‘கண்ணன்’ என்று எழுத, யார் வடிவாக எழுதினது என்றெல்லாம் எங்களுக்குள் போட்டி வைத்தோமே ஹாஹா”
“தேவராசா மாமா, அதான் உங்கட அப்பா வந்து என்ன திருக்கேதீஸ்வரப் பக்கம் இருக்கிற குரங்குகள் மாதிரி மரத்தில குந்திக் கொண்டிருக்கிறியள் இறங்குங்கோ கெதியா எண்டு சொல்லும் வரைக்கும் அதில தானே இருப்பம் என்ன, ஹும் அந்த நாவல் மரமும் பட்டுப் போயிருக்கும் என்ன...”
“எனக்கு அதையெல்லாம் நினைச்சால் அழுகை அழுகையா வரும் நான் சாமத்தியப்பட்ட கையோட உங்கட அம்மா தானே தடுத்தவ இனிமேல் இரண்டு பேரும் இப்பிடித் தனியா எல்லாம் மரம் வழிய ஏறக் கூடக் கூடாதெண்டு அப்ப தானே ஒரு நாள் நீங்கள் வந்து என்னைக் காதலிக்கிறதாச் சொன்னீங்கள்?”
“ஓம் சுந்தரி பக்கத்துப் பக்கத்து வீடென்றாலும் உம்மோட நான் பழகினதுக்கு வேறை அர்த்தமெல்லாம்
என்னால கற்பிக்க முடியேல்லை ஆனால் நீர் பெரிய பிள்ளை ஆனதோட வீட்டுக்காறர் மறிச்ச பிறகு தான் என் வாழ்நாளில் உம்மை விட்டு வாழேலாது என்று உணர்ந்தது, சொல்லப் போனால் பள்ளிக்கூடக் காதல் படலை வரைக்கும் என்பினம் ஆனால் என்ர மனசுக்கு அப்பவே தெரியும் வாழ்ந்தால் உம்மோட தான் எண்டு, அந்தக் கடிதத்தை என்ன செய்தனீர் பிறகு?”
“என் பிரியமுள்ள சுந்தரிக்கு!
நான் உம்மை விரும்புகிறேன்
உமக்கும் என்னிலை விருப்பமிருக்கும் தானே?
அன்புடன்
கண்ணன்
இப்பிடித் தானே ஒற்றை றூல் பேப்பரில் எழுதி மடிச்சுப் போட்டு என்ர சாமத்தியச் சடங்குக் கொண்டாட்ட மேடையில் தந்தனீங்கள் நானும் ஏதோ என்வலப்பில காசு அன்பளிப்புத் தாறார் என்று நினைச்சன் ஹாஹா”
“உண்மையா அப்பிடியே நினைச்சனீர்?”
“இல்லையத்தான் நான் சும்மா சொன்னனான், எனக்கும் உங்களில அப்ப விருப்பமிருந்தது அதனால் தான் அந்த என்வலப்பைக் கையுக்குள்ளையே வச்சிருந்து இரவு வாசிச்சனான் இடம் பெயர்ந்து போகேக்கையும் அது என்னோட தான் இருந்தது இப்பவும் எங்காவது இருக்கும், நான் அதைத் திரும்பத் திரும்ப வாசிச்சுப் பாடமாக்கிப் போட்டன்.
சொல்லப் போனால் நீங்களோ நானோ எங்களுடைய உடல் இச்சைகளுக்காக விரும்பவில்லை, இல்லாவிட்டால் எத்தனை சந்தர்ப்பமெல்லாம் வாய்த்தது அப்போது,
நான் ஓ எல் எக்சாம் எடுக்கிற நேரமெல்லாம் உங்களைத் துணையாக விட்டுட்டு எங்கட
வீட்டுக்காரர் திருவிழா நேரமெல்லாம் கோயில் குளமெண்டு வெளிக்கிட்டுடுவினம் நீங்கள் வெளி விறாந்தையில் குந்தியிருந்து வோக்மனைப் போட்டுட்டு இளையராஜாவோட ஐக்கியமாகி விடுவியள் என்ன”
“சிரிக்காதையும் சுகந்தி, உமக்கு நான் வோக்மன் கேக்கிறது தான் அப்போது தெரிஞ்சிருக்கும் ஆனால் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ என்று ஜேசுதாஸ் பாட்டேக்கை உம்மட முகத்தைக் கற்பனை பண்ணிக் கொண்டு தான் இருப்பன். அதுவும் நீர் சுமங்கலி பூசைக்குக் கண்ணுக்கு ஐப்றோ போட்டு, தொங்கட்டாம் தோடு மாத்தி, நீட்டுத் தலைமயிரைப் பின்னிக் கட்டி கனகாம்பரப் பூமாலையைச் செருகிக் கொண்டு, ஹாவ் சாறியோட
வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு போகேக்கை எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்னவள் எவ்வளவு இலட்சணமானவள் என்று.
‘அம்மன் கோயில் தேரழகு ஆயிரத்தில் ஓரழகு நாணமுள்ள பெண்ணழகு நான் விரும்பும் பெண்ணழகு’”
“அது சரி பாட ஆரம்பிச்சிட்டார் எங்கட பாட்டுக்காரன் போங்கோ எனக்கு வெக்கமா இருக்கு”
“இல்லை சுகந்தி உண்மையாத் தான் சொல்லுறன் பிள்ளையார் கதை முடிஞ்ச அன்று சூரன் போருக்கு மாவிளக்குப் போட்டுட்டு இரவு வீட்ட வந்து தரேக்கை அப்ப தானே ஐ லவ் யூ சொன்னனீர்”
மூன்று வருஷமாக நீர் எனக்குப் பதிலொண்டும் சொல்லாமல் இருக்கேக்கை எவ்வளவு தவிப்பா இருந்தது எனக்கு அந்த மாவிளக்கின் வாசம் இன்னும் என் நாசியில் இருக்குது”
“அத்தான் அப்ப எனக்கு எப்பிடிச் சொல்றதெண்டு தெரியேல்லை.
ஆனால் சண்டை மூண்ட பிறகு எல்லாரும் வெளிநாடு கிளிநாடு என்று ஓடேக்கை உங்கட அப்பா சபாரத்தினம் மாமாவும் ஒருக்கால் சொன்னவர் தானே உவனை எப்பிடியாவது கனடா கினடா எங்காவது அனுப்பிப் போடுவம் எண்டு அதுக்குப் பிறகு தான் எனக்குப் பயம் தொட்டுட்டுது”
“நீர் ஓம் சொல்லடியும் நான் விட்டிருக்க மாட்டன் நான்”
“போங்கோ பெரிய பயில்வான் தான் ஹிஹி
உங்கட வீட்டு மாமரத்தில எங்கட வீட்டுப் பக்கம் பார்க்கிற மாதிரி ஸ்பீக்கரைப் போட்டு சின்னத்தம்பி படப் பாட்டெல்லாம் போட்ட ஆளெல்லோ நீங்கள் விட்டா ஒரு றெக்கோர்டிங் பார் தொடங்கியிருப்பியள், அதுவும் அந்த ‘உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது’ பாட்டை கசற் தேயத் தேயப் போட்டிருப்பீங்கள் அப்ப”
“பக்கத்து வீட்டுக்காரரா இருந்தும் காயிதம் கொடுத்துக் காதலிச்சது நாங்களாத் தான் இருப்பம் என்ன சுகந்தி”
“ஓம் கோயிலடியில் வச்சு என்ர லுமாலாச் சைக்கிள் பின் கரியர்ல நீங்கள் காயிதத்தை வச்சதைக் கண்டி வேலாயுதம் மாமாவின்ர மூத்த பெடியன் சுந்தர் பெரிய பிரச்சனையைக் கிளப்பினவன்,
அவன் எத்தனை பொம்பிளைப் பிள்ளையளைக் காதலிச்சு ஏமாத்தினவன், சொந்த மாமா மகன் எண்ட உரிமை மட்டும் இருந்தால் போதுமே? அவன் என்னை ஏற இறங்கப் பாக்கும் விதமே அருவெருப்பா இருக்கும்”
“கோயிலடிப் பெடியளோட நான் இருக்கேக்கை வந்து உம்மோட ஒரு கதை இருக்கு வாரும் எண்டு அவன் கதைச்ச விதம் பெடியளுக்குப் பிடிக்கேல்லை அவனைச் சைக்கிளால தள்ளி விழுத்திப் போட்டுக் கலைச்சுப் போட்டான்கள் நான் பின்னாலை போய் மன்னிப்பெல்லாம் கேட்டுப் பார்த்தன் ‘நீர் எங்கட வீட்டுப் பெண்ணில கண் வச்சிருக்கிறீரோ அதையும் ஒருக்கால் பார்ப்பம்’ எண்டுட்டுப் போய் விட்டான்”
“தனியா இருக்கேக்கை என்னட்டையும் வந்து சொன்னவன்
‘கண்ணனை நம்பாதை அவனுக்கு வேம்படிப் பிள்ளையோட தொடர்பிருக்கு’ என்று, எனக்குத் தெரியும் தானே உங்களைப் பற்றிக் கண்ணனத்தான்”
.”சுகந்தி....சுகந்தி? இப்ப ஏன் அழுகை?”
“அத்தான்...: அந்த நாளை இன்னும் என்னால மறக்கேலாது. உங்களுக்குப் பிடிச்ச பாசிப்பயறு அவிச்சுத் தேங்காய்த் துவையல், சீனி போட்டுச் செய்ததை நான் எடுத்துக் கொண்டு வந்தனானன் உங்கட வீட்டுக்கு”
“நீர் எங்கட அம்மாட்டைக் குடுக்க, அம்மாவும் அதைப் போட்டுத் தந்தவ. ஒரு விள்ளலை நான் வாயில் போடேக்கை தானே ஆமிக்காறர் வீட்டுக்குள்ளை வந்தவங்கள்...”
“சாரத்தோட நின்ற உங்களை விசாரிக்க வேணும் எண்டு கொண்டு போனவங்கள் உங்கட அம்மா அவங்கட காலில விழுந்து கொஞ்சிக் கேட்டவ ஒருத்தன் பூட்ஸ் காலால் உதைஞ்சவன் அதைக் கண்ட உடனை நான் பின் கதவால் ஓடி எங்கட அப்பாவைக் கூட்டி வருவம் என்று ஓடினேன் ஆனால் அதுக்குள்ள அவங்கள் உங்களைக் கொண்டு போயிட்டாங்கள்
அன்றைக்கு நான் கதவைப் பூட்டீட்டு அழுத அழுகை இருக்கே இன்றைக்கு நான் இப்ப அழுவது போலத்தான் அத்தான்”
“ஹும்”
“உங்கட அம்மா இன்னமும் நீங்கள் வருவியள் என்று போகாத கோயில் இல்லை போடாத மனு இல்லை. ஊர்ச் சாத்திரிமாரில் இருந்து ஒருத்தர் விடேல்லை எல்லாரும் நீங்கள் ஏதோ மறைவான இடத்தில இருக்கிறதாச் சொல்லிக் கொண்டிருக்கினம் அந்த நம்பிக்கையில 22 வருஷத்தைக் கடத்தி விட்டுட்டா, தன்ர ஒரே மகனை ஆமி கொண்டு போயிட்டுது என்று ஏங்கி ஏங்கி வருத்தம் வந்தே மாமா செத்துப் போனார்”
“ம்..ஹ்ம்”
“உங்களை நான் காதலிக்கிற விஷயம் எங்கட அம்மாவுக்குச் சாடை மாடையா முன்னமே தெரிஞ்சிருக்க வேணும் ஆனால் காட்டிக் கொள்ளாமல் இருந்தவ, நீங்கள் மூண்டு வருஷம் கழிச்சும் வராமல் போன பிறகு தான் கல்யாணப் பேச்சைத் தொடங்கினவ
‘பிள்ளை! கண்ணன் இனியும் வருவான் எண்டு நம்புறியோ? எனக்கந்த நம்பிக்கை இல்லை பேசமல் வேலாயுதம் மாமன்ர மகன் சுந்தரைக் கல்யாணம் கட்டன் அவனும் இப்ப கனடாவில செற்றில் ஆயிட்டான்’ என்று சொல்லிப் பார்த்தவ”
“நீர் அவனைக் கட்டியிருக்கலாம் தானே”
“அத்தான் இது தானா என்னிலை நீங்கள் வச்ச நம்பிக்கை? ஆனால் நான் அப்பிடில்லை.
இயக்கத்தில சேர்ந்து போராளியாகினாப் பிறகும் உங்கட நினைவில தான் இருந்தனான்.
என்ர காதல் கைகூடவில்லை என்று நான் இயக்கத்துக்குப் போகேல்லை அது நான் என்ர நாட்டுக்குச் செய்ய வேண்டியிருந்தது.
என்றைக்காவது உங்களை நான் சந்திப்பன் அப்ப இரண்டு பேரும் கலியாணம் கட்டுவம் என்று....அந்த நம்பிக்கை இரண்டாயிரத்து ஒன்பது இறுதிக் கட்டப் போர் வரை இருந்தது.....
ஏன் நான் சாகும் வரை இருந்தது கண்ணத்தான்”
“சுகந்தி....சுகந்தி...நினைச்சு ப் பாரும்,
எனக்கும் உமக்கும் கல்யாணம் நடந்திருந்தால் ஒரு சின்னக் கண்ணனும், ஒரு சின்ன சுகந்தியும் எங்கட வாரிசுகளாக நாவல் மரமேறிப் பேசி விளையாடிக் கொண்டிருப்பினம் என்ன....?
“அத்தான் அழாதேங்கோ கண்ணத்தான் அழாதேங்கோ எனக்கும் அழுகை வருகுது”
அந்த மயானத்தில் எழுந்த அருவமான ஓலத்தை மீறி யாழ்ப்பாணத்துச் சோளகக் காற்றின் வேகம் எழுந்து மரங்களை அசைத்து அதே போன்றொரு ஓலத்தை இன்னும் வலுவாக மேலெழுப்பியது. காற்றழுத்தத்தால் மரக் கொப்புகள் எழுப்பிய அசைவில் சுடலைக் குருவிகள் எழுந்து பறந்தோடுகின்றன. அந்த மயானத்தில் எழும் அழுகுரல்களை இனங்கண்டு பேச யாருமில்லை.
எங்கோ திரிந்து பறந்து வந்த சுடர் ஒளி பத்திரிகையின் கிழிந்த துண்டொன்றில்
“செம்மணிப் படுகொலைகள் 22 வருட நினைவு கொண்டாடப்பட்டது
இலங்கை அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் 1996 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்கவேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்புக் கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள், யுவதிகள் காணாமல்போகச் செய்யப்பட்டனர்.
செம்மணியில் 300இலிருந்து 400 வரை இளைஞர்கள் புதைக்கப்பட்டுள்ளார்கள்.
‘என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்டமுடியும்’'' என்று 1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி கிருஷாந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ஷ கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.”
அந்தப் பத்திரிகைத் துண்டு மயான வெளியைக் கடந்து காற்றில் திசை வழியே அலைக்கழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தன் மகன் கண்ணனை தேடிக் கொண்டிருக்கும் தாயைத் தேடுகிறதோ அது...
No comments:
Post a Comment