விதிப்பயன் ( உருவகக்கதை) - முருகபூபதி


அந்த வீட்டில் எலியின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. முதலில் எங்கிருந்தோ வந்தது அந்த எலி. ஒருநாள் வீட்டின் பின்வளவிலிருந்த  புதரிலிருந்து வெளிப்பட்ட எலியை பார்த்தது தரையில் மேய்ந்துகொண்டிருந்த கோழி.
கோழி அந்த வீட்டின் வளர்ப்புப்பிராணி. அது இடும் முட்டைகள் அந்த வீட்டின் தேவைக்குத்தான் பயன்பட்டன. அதனால் ஒரு முட்டையைத்தானும்  பாதுகாத்து அடைகாத்து குஞ்சுபொரித்து தனது இனத்தை விருத்தியாக்கமுடியவில்லை.
சில நாட்களில் எலியின் பொந்திலிருந்து மேலும் சில எலிக்குஞ்சுகள் வெளிப்பட்டன. அவை அண்ணன் தம்பிகளாக பெருகி, அந்த வீட்டிலிருந்து நிறைய தானியங்களை சூறையாடிக்கொண்டிருந்தன. அதனால்  கோழிக்கு கிடைக்கும் தானியங்கள் குறைந்தன.
அயல்வீட்டில் செல்லப்பிராணியாக வளரும் பூனையுடன் கோழி சிநேகம் பூண்டது. அடிக்கடி பூனையுடன் பேசும்போது தான் வசிக்கும் வீட்டின் எலிகளின் அட்டகாசம் பற்றி புலம்பியது.
" பூனையாரே... அந்த வீட்டில் நானும் எனது கணவர் சேவலும்தான் வாழ்ந்தோம். வீட்டின் எஜமானியம்மா எம்மிருவருக்கும் போதியளவு தானியமும் உணவும் தந்து பராமரித்தார்கள். அதனால் அவர்களுக்கு தினமும் முட்டைகள் கொடுத்தேன். எங்கிருந்தோ வந்த எலி தானியங்களையும் திருடிக்கொழுத்து, தனது சந்ததியையும் பெருக்கிக்கொண்டது."
" எலியை அந்த வீட்டுக்காரர்கள் வளர்க்கவில்லை. வளர்க்கவேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் எலியை வளர்த்தால் எலிப்புழுக்கைதான் கிடைக்கும் உன்னை வளர்த்தால் முட்டை கிடைக்கும். இப்போது உன்னை வளர்க்கிறார்கள். ஒருநாளைக்கு நீயும் தேவைப்பட்டால் அடித்து இறைச்சியாக்கி உண்டுவிடுவார்கள். மனிதர்கள் எதனையும் தங்கள் தேவையின் பொருட்டுத்தான் வளர்ப்பார்கள்." என்றது பூனை.
" நீங்கள் வளரும் வீட்டிலும் அப்படித்தானா...? பூனையாரே...?" எனக்கேட்டது கோழி.
" நான் வளரும் வீட்டிலும் அவர்களின் தேவைக்குத்தான் வளர்க்கப்படுகின்றேன். ஆனால், அவர்கள் ஒருநாளும் என்னை அடித்து கறிசமைக்கமாட்டார்கள், எனக்கு தினமும் பாலும் உணவும் தருகிறார்கள். நான் இருந்தால் அங்கு எலிகள் வராது என்பது நிச்சயம். அதனால் வளர்க்கிறார்கள் "  என்றது பூனை.
இவ்வாறு கோழியும் பூனையும் முற்றத்திலிருந்து உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு எலி, கோழி வளர்க்கப்படும் வீட்டுக்குள் பிரவேசித்தது. அதன் தம்பியான மற்றும் ஒரு எலி பூனை வளர்க்கப்படும் வீட்டுக்குள் சென்றது.
இதனைக்கண்டுவிட்ட கோழி உரத்து கொக்கரக்கோ என சத்தமிட்டு தனது கோபத்தை உணர்த்தியது.  "பூனையாரே... அங்கே பாரும் அண்ணன் தம்பிகளான அந்த எலிகளில் ஒன்று எங்கள் வீட்டுக்குள்ளும் மற்றும் ஒன்று உங்கள் வீட்டுக்குள்ளும் பிரவேசிக்கின்றன. நான் உரத்து சத்தமிடுகின்றேன். நீங்கள் ஏன் மெளனமாக இருக்கிறீர்கள்?" என்றது கோழி.
" ஏய்.... நான் கவனிக்காமலா இருக்கின்றேன். உன்னைப்போல் நான் அவசரக்காரன் அல்ல. நீ ஒரு முட்டை போட்டுவிட்டு உரத்து கொக்கரிப்பாய். எலிகள் அப்படி அல்ல. எத்தனை எலிக்குஞ்சுகளை ஈன்றாலும் சத்தமிடாது இருக்கும். நான் பதுங்கியிருந்து பாய்ந்து பிடித்து உண்பேன்."
" உங்கள் வீட்டுக்குள்ளும் ஒரு எலிபோய்விட்டது. இனி அங்கும் இனவிருத்தி செய்து தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும். பிறகு உங்களுக்கும் எனக்கும் இந்த இடம் சொந்தமில்லாமல் போய்விடும்" என்று கவலைப்பட்டது கோழி.
" பொறுத்திரு இன்னும் சில நாட்களில் இங்கிருக்கும் அனைத்து எலிகளையும் பிடித்து சாகடித்துவிடுகின்றேன்." என்றது பூனை.
" எத்தனை நாட்களில்...?"
" சில நாட்களில்."
" பூனையாரே உறுதியாகச்சொல்லுங்கள். இன்னும் எத்தனை நாட்களில்...?"


" பத்துநாட்களில். அதற்கு முன்னர் எமக்குள் நல்லிணக்கம் வரவேண்டும். நாம் இருவரும் இணைந்து நல்லதொரு வழிகாணவேண்டும்." என்ற பூனை, " அது சரி.. உனது கணவன் சேவலை கணநாட்களாகக்க காணவில்லையே எங்கே போய்விட்டது" என்றும் கேட்டது.
" அவர், அடிக்கடி இப்படித்தான் வெளியே போய்விடுவார்."  என்றது கோழி.
நாட்கள் நகர்ந்தன. பத்துநாட்கள் நூறு நாட்களாயின. எலிகளை இதோ பிடிக்கின்றேன், அதோ பிடிக்கின்றேன் எனச்சொல்லிக்கொண்டிருந்த பூனையால் எதுவும் செய்யமுடியவில்லை. எலிகள் அண்ணன் தம்பிகளாக மச்சான் மருமக்களாக பெரியதம்பி சின்னத்தம்பிகளாக பெருகிக்கொண்டிருந்தன. இனவிருத்தி செய்தன.
கோழிக்கும் பூனைக்கும் தங்கள் இனத்தை விருத்திசெய்யமுடியவில்லை. கோழி வளர்ந்த வீட்டுக்காரர்களும் எலிகளின் தொல்லை தாங்கமுடியாமல் ஒரு பூனையைக்கொண்டுவந்து வளர்த்தனர்.  அதனால் கோழிக்கு சற்று ஆறுதல் வந்தது.
அயல்வீட்டுப் பூனையை கைவிட்டுவிட்டு, தான் வசிக்கும் வீட்டுக்கு வந்த பூனையுடன் நட்புறவாடியது கோழி.
முன்னர் அயல்வீட்டுப்பூனையிடம் முன்வைத்த முறைபாடுகளையே மீண்டும் தன் வீட்டுக்கு வந்த பூனையிடமும் சொல்லத்தொடங்கியது கோழி.
" கவலைப்படாதே கோழியாரே... நான் வந்துவிட்டேன் என்று அந்தப்பூனையிடம் சொல்லு. அந்த எலிகளை நான் ஒருகை பார்த்துவிடுவேன். இனிமேல் என்னுடன் மாத்திரம்தான் உனக்கு பேச்சுவார்த்தை இருக்கவேண்டும். நாம் இருவரும் ஒரு வீட்டில் வசிப்பவர்கள். எமக்குள் நல்லிணக்கம் வரவேண்டும்."
" சரி நண்பரே... இந்த எலிகளை எத்தனைநாட்களில் நீங்கள் பிடித்து முடிப்பீர்கள், சொல்லுங்கள்...?" எனக்கேட்டது கோழி.
" நூறு நாட்களில்."
" என்ன நூறு நாட்களிலா... அயல்வீட்டுப்பூனை பத்துநாட்கள் என்று சொன்னது. அப்படியும் பிடிக்கவில்லை. முடிக்கவில்லை. நீங்கள் நூறு நாட்கள் வேண்டும் என்கிறீர்களே!" கோழி எரிச்சலடைந்தது.
" சும்மாவா... முதலில் திட்டம் வகுக்கவேண்டும். எவ்வாறு இந்த எலிகளை முற்றுகையிடுவது? எவ்வாறு முறியடிப்பது? எவ்வாறு அழித்தொழிப்பது? " என்று "எவ்வாறுகளை" அடுக்கியது இந்தப்பூனை.
கோழிக்கு நம்பிக்கை குறைந்துகொண்டேயிருந்தது. இந்தப்பூனைகள் உண்டு கொழுப்பதற்குத்தான் வந்திருக்கின்றன. எந்தப்பிரயோசனமும் இல்லை. இவை எலிகளைப் பிடித்து  அழிக்கப்போவதில்லை.
எலிகள் தொடர்ந்தும் பெருகிக்கொண்டிருந்தன. அவற்றால் கோழிக்கு எந்தத் தொந்தரவும் இருக்கவில்லை என்ற உண்மை காலம் கடந்துதான் புரிந்தது. எலிகள் தாமும் உண்டு தன் இனத்திற்கும் உண்ணக்கொடுக்கின்றன. நான் என்ன செய்கிறேன். எனது முட்டைகளை நான் பயன்படுத்தி எனது இனத்தை பெருக்கமுடியாமல் வீட்டுக்கார்களுக்கு தினமும் கொடுத்துவருகின்றேன். அந்த அயல் வீட்டுப்பூனை ஒருநாள் சொன்னதுபோன்று, என்னையும் இந்த வீட்டுக்காரர் அடித்து இறைச்சியாக்கி உண்டுவிடத்தான்போகிறார்கள்.
அதுவரையில் விதியே என்று கிடக்கவேண்டியதுதான். எலிகளை என்னசெய்யவேண்டும் என்பதை இனி வீட்டுக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.  என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டது கோழி.
அந்தவீட்டின் புதிய விருந்தாளியான பூனைக்கு வீட்டின் எஜமானி ஒரு பாத்திரத்தில் பால் வைத்தாள். கோழிக்கு தானியங்களை முற்றத்தில் விசிறிவிட்டாள். கோழி ஒடிச்சென்று தானியங்களை உண்டது. பூனைக்கு அப்படி, எனக்கு இப்படி. எலிகளுக்கு ஏதும் இல்லை. அவையே தேடிப்பொறுக்கி எடுத்து உண்டு இனத்தை பெருக்குகின்றன.
எலிகளும் புழுக்கைதான் தருகின்றன. பூனையும் புழுக்கைதான் தருகின்றது. நான் மாத்திரம் முட்டை தருகின்றேன். இதுதான் எனது வாழ்வின் விதிப்பயனா..?
கோழி தலையைக்குனிந்து தானியங்களை உண்டது.
---0---
-->No comments: