உலகச் செய்திகள்


பிரித்தானியாவை உலுக்கிய நிலநடுக்கம் : பதற்றத்தில் மக்கள்

தென்னாபிரிக்காவிலும் அரசியல் நெருக்கடி: பதவி விலகினார் ஸுமா!

தென்னாபிரிக்காவின்  ஜனாதிபதியானார் சிரில் ரமபோஷா 

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம் ; 17 பேர் பலி, பலர் பணயக் கைதிகள் : துப்பாக்கிதாரி கைது

அபுதாபியில் முதல் இந்து கோவிலிற்கு அடிக்கல் நாட்டினார் மோடி!!!




பிரித்தானியாவை உலுக்கிய நிலநடுக்கம் : பதற்றத்தில் மக்கள்


17/02/2018 பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதி மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் முக்கிய பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.9 என பதிவாகியுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு  வெளியேறியுள்ளனர்.
பிரித்தானியாவில் கடந்த 2008 ஆண்டு 5.2 ரிச்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்திற்கு பின் 10 ஆண்டுகளில் பிரித்தானியாவை தாக்கும் பாரிய நிலநடுக்கம் இது என தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தை நியூபோர்ட், கார்டிப், மற்றும் ஸ்வான்சீ பகுதி மக்கள்  உணர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி 











தென்னாபிரிக்காவிலும் அரசியல் நெருக்கடி: பதவி விலகினார் ஸுமா!

15/02/2018 ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெக்கோப் ஸுமா பதவி விலகினார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பேரில், அவரது கட்சியும் ஆளும் கட்சியுமான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அங்கத்தவர்கள் ஸுமாவுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டதையடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் குறித்து நேற்று (14) தேசிய தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய ஸுமா, தனது பெயரால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது என்றும் தன்னால் தான் சார்ந்த கட்சி பிளவுபடுவதைத் தாம் விரும்பவில்லை என்றும் இந்தக் காரணங்களை முன்னிட்டு தாம் உடனடியாகப் பதவி விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஸுமாவை பதவி விலகுமாறு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளிப்படையாகக் கேட்டிருந்தது. அத்துடன், அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பாராளுமன்றில் கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
எழுபத்தைந்து வயதாகும் ஸுமா கடந்த எட்டு வருடங்களாக ஜனாதிபதி பதவியில் இருந்திருக்கிறார். அவரைப் பதவி நீக்குவதற்காக எதிர்க்கட்சிகள் பலமுறை முயற்சித்தபோதும் அவற்றை எதிர்கொண்டு வெற்றிபெற்றவர் ஸுமா என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 







தென்னாபிரிக்காவின்  ஜனாதிபதியானார் சிரில் ரமபோஷா 

15/02/2018 தென்னாபிரிக்க ஜனாதிபதியாக ஜேக்கப் ஷூமா பதவியிலிருந்து விலகியதையடுத்து புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோஷா பதவியேற்றுள்ளார்.
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக ஜேக்கப் ஷூமா (75) கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வந்தநிலையில், அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன. தென்னாபிரிக்கா உச்ச நீதிமன்றில் அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம்  அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. இவ்வாறு பல  ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் ஷூமாவுக்கு ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி எம்.பி.க்களும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். இதையடுத்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஆளும் கட்சியினர் குரலெழுப்பினர்.
ஆனால், அதற்கு முன்னதாக ஜனாதிபதி பதவியிலிருந்து ஷூமா ராஜினாமா செய்ய வேண்டுமென கட்சித்தலைமை வலியுறுத்தியது. இந்நிலையில் பதவியிலிருந்து முதலில் விலக மறுத்த ஷூமா பின்னர் வேறு வழியின்றி ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற கூட்டம் இன்று கூடியது.
உப ஜனாதிபதியாக செயற்பட்ட சிரில் ராமபோஷா ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் அவர் தென்னாபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம் ; 17 பேர் பலி, பலர் பணயக் கைதிகள் : துப்பாக்கிதாரி கைது

15/02/2018 அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றபோது கல்லூரியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். 
துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்டதும் பல மாணவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர்.
உடனடியாக பொலிஸாரும் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








அபுதாபியில் முதல் இந்து கோவிலிற்கு அடிக்கல் நாட்டினார் மோடி!!!

12/02/2018 ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபியில் முதல் முறையாக இந்து கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி  நேற்று அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய பிரதமர் மோடி, ஜோர்டான், பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஐக்கிய அமீரகத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.
அங்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சயீத் அல் நய்ஹானை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதையடுத்து ரயில்வே எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இளவரசருடன் 5 ஒப்பந்தங்களை செய்துகொண்டார்.
அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோயில் முதல் இந்துக்கோவிலான ஸ்ரீ அக்‌ஷார் புருசோத்தம் ஸ்வாமிநாராயன் சன்ஸ்தா ஆலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





No comments: