சஞ்சுதா, ஷிவாந்தி பகீரதனின் அரங்கேற்றம். நாட்டிய கலாநிதி - கார்த்திகா கணேசர்

.


11ஆம் திகதி மாசி மாதம் 2018 இல் சஞ்சுதா, சிவந்தி பகீரதனின் அரங்கேற்றம் NIDA மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. வாசலிலே கோலங்கள் அழகூட்ட அலங்கரிக்கப்பட்ட விநாயகர் எழுந்தருளி இருக்க, சஞ்சுதா, ஷிவாந்தியின் அழகிய ஆடற் கோலங்கள் எம்மை வரவேற்றது. வெகு அழகாக அச்சிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் மேலும் கவர்ச்சியூட்ட மண்டபத்தில் போய் அமர்ந்தோம்.
சகோதரிகள் ஆடல் பயிற்சியை மீனா பீடில் இன் வழி நடத்தலில் 2000 ஆண்டு ஆரம்பமானது. தொடர்ந்து மீனாவின் மகள் ஜனனி ஆடல் மேல் கொண்ட ஆர்வத்தால் இந்தியன் டான்சிங் ஸ்கூல் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர் பரதத்துடன் ஹிப் ஹாப் போன்ற மேற்கத்திய நடனங்களையும் கற்றவர். மேலும் பாலிவுட் நடனத்தில் ஆர்வம் உடையவர், அதனால் தான் நடத்தும் நிறுவனத்தில் இவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்தார். மீனா ஜனனியின் வழிநடத்தலில் இவற்றை எல்லாம் கற்ற சஞ்சுதா, ஷிவாந்தி சகோதரிகள் இவற்றை எல்லாம் அரங்கங்களில் ஆடி வந்தவர்களே. பல வருடங்கள் இவர்கள் பயிற்சி இவர்களை ஆடலில் பரந்து விரிந்த அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் என்ன சந்தேகம். இது தவிர இவர்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பாலர் பருவத்திலிருந்தே பங்கு கொண்டு  வளர்ந்தவர்கள். ஆசிரியர்களுடன் இணைந்து தமிழாக்க கோயில்களான திருவையாறு, பந்தணை நல்லூர், மயிலாடுதுறை, கங்கை கொண்ட சோழபுரம், கும்பகோணம், சிதம்பரம் என பல கோயில்களிலும் ஆடியுள்ளனர்.
அவை தவிர பல மேலை நாடுகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.



அன்றைய அரங்கேற்றத்தில் ஒத்திசை கலைஞர்கள் ஆக  தாயும் மகளுமாக மீனாவும் ஜனனியும் நட்டுவாங்கம் செய்ய நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சி ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்த புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பமானது. தொடர்ந்து சாவேரி ஜதீஸ்வரம் என நிகழ்ச்சி விறுவிறுப்பாக தொடர்ந்தது. மூன்றாவதாக அமைந்த சிவ தாண்டவத்தில் மீனா விளக்க சகோதரிகள்  மேடையில் தோன்றினர். மதுரை முரளீதரனின் ஆக்கத்திலான சிவ தாண்டவம். ஆனந்த தாண்டவனின் அற்புத ஆடல் நிலைகளை மிக மிக கடினமானவற்றையும், சகோதரிகள் மிக இலகுவாக ஆடியமை பாராட்டுக்குரியது.


உடை மாற்றத்திற்கான இடைவேளையில் ஒத்திசை கலைஞர்களின் அறிமுகம். அகிலன் தற்போது பரவலாக பல பரத அரங்கேற்றங்களில் பாடி வருபவர்.  அவரது குரல் வளம் அவருக்கே உரிய வசீகரமும் கம்பீரமும் இணைந்தது. தனித்து பாடும் பொழுதும் ஆடலுடன் இணையும் பொழுதும் அவர் அருமையாக இசைத்தார். பாலஸ்ரீ ராசையா ஆஸ்திரேலியாவில் வாழும் மிருதங்க கலைஞர்களிலே குறிப்பிடும் படியான நளினமான வாசிப்பு அவர் திறமை. இசைக்கும் ஆடலுக்கும் மெருகூட்டி மேலும் மிளிர வைத்தார். வயலின் கோபதிதாஸ் அனுபவப்பட்ட சிறந்த வித்தகர். தன் இசையால் நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தார். வேணுவை வாசித்த  சுரேஷ், வேணு கானத்தால் உலகையே வசீகரித்த குடும்பத்தின் வாரிசு.
அடுத்து வந்த வர்ணம் கச்சேரியின் மையமாக அமைவது நர்தகிகளின் திறமை. அத்தனையும் ஒன்று சேர எடுத்து காட்டுவது வர்ணம். ராக மாளிகையில் அமைந்த கிருஷ்ணனை போற்றும் உருப்படி. ஜனனி சிறந்த நர்தகிகளில் குருவாக நட்டுவாங்கம் செய்தார்.


இந்தக் கலையை தனது தாயாரிடமும் சிறிய தாயாரிடமும் கற்றுத்தேர்ந்த ஆசிரியையாக தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார். வர்ணத்தின் சஞ்சாரி பாவத்தில் விஷ்ணுவின் வாம அவதாரம் போன்றவை எடுத்து கையாளப்பட்டது. தொடர்ந்து தனித்து ஒவொருவராக 'உலகம் புகழும் பரதக்கலை' என சஞ்சுதாவும், பாபநாசம் சிவன் அம்மனை நோக்கி 'நான் ஒரு விளையாட்டுப்  பிள்ளையா  உந்தனுக்கு' என பக்தி பெருக்கால் பாட, அந்த பாடல் டி. கே பட்டம்மாள் மனமுருகி பாடி பிரபலம் அடைந்தது. தொடர்ந்து பெரியசாமி தூரனின் 'அழகு தெய்வமாக வந்து' முருகன் மேல் ஆன காவடிச் சிந்துவில் அமைந்த பாடல் சிட்னி முருகனை வழிபடும் பக்தரை கொண்ட அரங்கத்தில் 'சிட்னி முருகனுக்கு அரோகரா' என பாடல் ஆரம்பமானது. சகோதரிகள் ரசித்து ஆடினார்கள். இறுதியாக பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவனி தில்லானாவுடன் மங்களமாக நிகழ்ச்சி நிறைவேறியது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் இந்து இசைத்துறையில் தலைமை பீடம் வகித்த டாக்டர் ஞான குலேந்திரன். அனுபவத்தாலும் அறிவாலும் தேர்ந்தவர். இவர் வாழ்த்துரை வழங்கினார். அப்பொழுது சகோதரிகளின் தாள ஞானத்தை புகழ்ந்துரைத்து அதற்கு பாராட்டாக சபையை கர  ஒலி எழுப்பி பாராட்டும் படி கேட்டுக் கொண்டார். அவர் சகோதரிகளை புகழ்ந்து அவர்கள் உலக அரங்கின் பரதக் கலைகர்களுடன் இணைந்து விட்டனர் எனக் கூறி ஆசி வழங்கினார். அவருடன் இணைந்து நாமும் இந்த இளம் கலைஞர்களான சஞ்சுதாவையும், ஷிவாந்தியையும் வாழ்த்துவோம். இவர்கள் கலைவாழ்வு மென்மேலும் செழிப்புற்று வளர சுவாமி அருள் புரிவாராக.















No comments: