தமிழ் சினிமா - தானா சேர்ந்த கூட்டம்

.

தானா சேர்ந்த கூட்டம்

Thaana Serndha Kootam poster.jpgசூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம்.

கதைக்களம்

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே இந்த தானா சேர்ந்த கூட்டம்.
சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா CBIக்கும், கலையரசன் போலிஸ் வேலைக்கும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல் மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது.
அதை தொடர்ந்து கலையரசன் தற்கொலை செய்துக்கொள்ள, சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசாங்கத்தில் இருக்கும் குள்ளநரிகளை எப்படி ஓட ஓட விரட்டுகின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

முதல் வார்த்தையே விண்டேஜ் சூர்யா இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துக்கொண்டு மௌனம் பேசியதே, அயன், சிங்கம் என கலக்கி வந்த சூர்யா சில நாட்களாக தடுமாறி வர, அவரை மீட்டுக்கொண்டு வந்து விட்டார் விக்னேஷ் சிவன். லோக்கலாகவும் சரி, தன் மைனஸ் என்று சொல்லப்படும் உயரத்தை கூட வெளிப்படையாக பேசி கடைசியில் அதற்காகவே ஒரு பன்ச் வைக்கும் இடத்திலும் சரி சூர்யாவின் அவுட் ஆப் கிரவுண்ட் சிக்ஸர் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம்.
சூர்யா தனக்கென ஒரு போலி CBI கும்பலை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களையும், அரசாங்க வேலைகளில் இருந்து வேலை செய்யாமல் லஞ்சம் வாங்குபவர்களையும் ஓட விடுகின்றார். அதற்கு உறுதுணையாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் என ஒரு கூட்டம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் காமெடியிலும் கலக்கியுள்ளார். அதைவிட சீனியர் சீனியர் தான் என செந்திலும் கடைசி வரை தன் கெத்தை விடாமல் நம்மை சிரிக்க வைத்துள்ளார். அதிலும் கிளைமேக்ஸில் போலிஸிடம் நெஞ்சை நிமிர்த்தி நான் ஜோக்கர் இல்லை என்று ஆங்கிலத்தில் பேசும் காட்சி கைத்தட்டல் பறக்கின்றது.
படத்தின் முதல் பாதி நண்பனின் இழப்பு அதற்காக சூர்யா எடுக்கும் முயற்சி, கீர்த்தியுடன் காதல் என கலகலப்பாகவே செல்கின்றது. அதிலும் இடைவேளையில் நவரச நாயகன் கார்த்தியிடம் சவால் விட்டு போனை வைக்க, இரண்டாம் பாதி பட்டையை கிளப்ப போகின்றது என தோன்ற வைக்கின்றது.
இந்த மாதிரி வேலைகளை தற்போது செய்தால் இரண்டு செகண்டில் கண்டுப்பிடித்துவிடுவார்கள், அதற்காக கதையை 80களில் நடப்பது போல் காட்டியுள்ளது புத்திசாலித்தனம். அதிலும் ஒவ்வொரு காட்சிக்கு ஏற்றார் போல் தில்லு முல்லு, சபதம், நாயகன் பட போஸ்டர்கள் இருப்பது சூப்பர்.
இத்தனை ப்ளஸ் விஷயங்கள் படத்தில் இருந்தாலும் கிளைமேக்ஸ் ஏதோ படத்தோடு ஒன்றவே இல்லை. இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே முடித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது, படம் முடிந்துவிட்டதா? என கேட்கும் நிலையில் உள்ளது.

க்ளாப்ஸ்

சூர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் என அனைவரின் நடிப்பும் கவர்கின்றது. சில நிமிடம் வரும் ஆனந்த்ராஜில் இருந்து ஆபிஸராக வரும் கார்த்தி, சுரேஷ் மேனன் வரை அசத்தியுள்ளனர்.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை, அனிருத்தின் துள்ளலான இசை, தினேஷின் கலர்புல்லான ஒளிப்பதிவு.
படத்தின் வசனம்.

பல்ப்ஸ்

ஜாலியாகவே சென்றாலும் இரண்டாம் பாதி குறிப்பாக கிளைமேக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மொத்தத்தில் சூர்யாவின் ‘அன்பான’ தானா சேர்ந்த கூட்டத்திற்கு(ரசிகர்களுக்கு) விருந்து.
 நன்றி  CineUlagam







No comments: