ஆடைதனைக் குறைத்தார்
ஆணவத்தைக் களைந்தெறிந்தார்
நாடிநின்றார் நம்ரமணர்
நல்வழியைக் காண்பதற்கு
ஓடிவந்தார் அண்ணாமலை
ஒடுக்கிநின்றார் மனமதனை
வாடிவிடா அவரிருந்தார்
வழங்கிநின்றார் அருளையெலாம் !
தன்னையே அறிவதற்குத்
தவமிருந்தார் ரமணரிஷி
தனிமைதனை இனிமையாய்
தவமுனிவர் ஏற்றுநின்றார்
பொய்மையாம் உடலுக்குள்
மெய்மையைத் தேடிநின்றார்
மெய்மையை உணர்ந்தவவர்
மேதினியில் ரிஷியானார் !
அத்வைத தத்துவத்தை
அனைவருக்கும் காட்டிநின்றார்
ஆடம்பரம் அனைத்தும்
அவர்க்கு வெறுப்பாச்சு
ஆசைதனைக் குறைத்த
ஆன்மீகப் பொக்கிஷமாய்
அகிலமே போற்றும்வண்ணம்
ஆகிவிட்டார் ரமணரிஷி !
சொத்துக்கள் சேர்க்கவில்லை
சுகதுக்கம் நோக்கவில்லை
சத்தான உணவேதும்
தானவரும் உண்ணவில்லை
மாடிமனை ஆடம்பரம்
மனமதிலும் இருக்கவில்லை
மாசில்லா வழிதேடி
மாமுனிவர் தவமிருந்தார் !
No comments:
Post a Comment