இலங்கைச் செய்திகள்


வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்

“சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்”

சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார் ; உடன்படிக்கையிலும் கைச்சாத்து

பெண் அதிபர் முழந்தாளிட்ட விவகாரம் : எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு



வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்

23/01/2018 வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது.
வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு
இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர்.

 
தமது போராட்டத்திற்கு இலங்கை அரசானது தீர்வினைப் பெற்றுத்தராது என்றும் தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும்  சர்வதேசத்திடம் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்து காணாமற்போன உறவுகள் போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இன்று காலை 11.30 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் போராட்ட களத்திற்குச் சென்ற உறவுகள் அங்கிருந்து தமது கவனயீர்ப்பினை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் பெருமளவான உறவுகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி  










“சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்”

23/01/2018 சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை முன்னோக்கி கொண்டுசென்று அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுன் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமரையும் அவரது பாரியாரையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஜயந்தி சிறிசேன அம்மையாரும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், மரியாதை வேட்டுக்கள் சகிதம் இராணுவ அணிவகுப்புடன் மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அரச தலைவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இரு நாடுகளுக்கிடையிலும் பொருளாதார, வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேம்படுத்தல் தொடர்பாக அரச தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளை துரிதமாக முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும் அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. 
இலங்கை சார்பில் அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரமவும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் இரு நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த புதிய உடன்படிக்கையினூடாக வர்த்தக முதலீட்டுத்துறைகளில் இரு நாடுகளுக்கும் அனுகூலங்களை பெறக்கூடிய புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தொழிற்பயிற்சி, புதிய தொழில் வாய்ப்புக்கள், உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி போன்ற துறைகளில் சிங்கப்பூரினால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்தார்.

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக முயற்சிகளுக்கான முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதுடன், இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் முதலீட்டாளர்களை மேலும் ஊக்கப்படுத்துமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு சிங்கப்பூர் பிரதமர் எதிர்வரும் வர்த்தக சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படுமென பதிலளித்தார்.
ஒரேவிதமான உபாய மார்க்கங்கள் பலவற்றைக் கொண்டுள்ள நாடுகள் என்றவகையில் அத்தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் சிங்கப்பூர் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுகாதாரம், சுற்றுலா, இணையத்தினூடான வியாபார நடவடிக்கைகள், மின்சக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பினை விருத்தி செய்தல் தொடர்பாகவும் அரச தலைவர்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடினர்.
இலங்கையில் சுற்றுலாத்துறையில் காணப்படும் புதிய வாய்ப்புகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியினால் சிங்கப்பூர் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் அனுகூலமான பதில் கிடைத்தது.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தினை செயற்படுத்த சிங்கப்பூர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பினை பாராட்டிய ஜனாதிபதி, அவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பினையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரச சேவையாளர்களுக்கு பயிற்சிகளை வழங்க சிங்கப்பூர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளை ஜனாதிபதி பாராட்டியதுடன், அரச சேவையாளர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் இலங்கையிலுள்ள கற்கை நிலையங்களின் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்ததுடன், அது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.
தொழிற்பயிற்சி துறையில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், கல்வி மறுசீரமைப்பு மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி செய்யப்பட்ட கோரிக்கைக்கு சிங்கப்பூர் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.
அதிகளவிலான இலங்கையர்கள் தற்போது சிங்கப்பூரில் பல்வேறு துறைகளில் சேவையாற்றுவதுடன் மிக மகிழ்ச்சியோடும் அவர்கள் வாழ்ந்துவருவதாக தெரிவித்த ஜனாதிபதி, சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு மேலும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியுமாறும் சிங்கப்பூர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
தீவு நாடு என்றவகையில் போதைப்பொருள் கடத்தலை இல்லாதொழிக்க ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டியமைக் குறித்தும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அமைப்புக்களில் மிக நெருக்கமாக செயற்பட்டுவரும் சிங்கப்பூரும் இலங்கையும், ஏசியன் (ASEAN ) அமைப்புடன் சிறந்த தொடர்புகளை பேணுவதாக தெரிவித்த ஜனாதிபதி, ஏசியன் அமைப்புடன் மேலும் நெருக்கமாக செயற்பட இலங்கை எதிர்பார்ப்பதுடன், அதன்பொருட்டு இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் கோரிக்கையையும் முன்வைத்தார்.
2015 ஆம் ஆண்டில் தான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நல்லாட்சியின் குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பாக சிங்கப்பூர் பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் அத்தொடர்புகளை பல்வேறு துறைகளிலும் விரிவுபடுத்துவதற்கும் இந்த விஜயம் வாய்ப்பாக அமையுமென தெரிவித்தார்.
மேலும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுனின்  தந்தையாரான முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்ததையும் பல சந்தர்ப்பங்களில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தமையையும் நினைவுகூர்ந்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, தலதா அத்துகோரல, சாகல ரத்னாயக்க, மஹிந்த அமரவீர, சந்திம வீரக்கொடி, மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்துமபண்டார, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர்  எஸ். ஈஸ்வரன் மற்றும் இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் எஸ். சந்திரதாஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் சிங்கப்பூர் பிரதமருக்கும் அவரது பாரியாருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன அம்மையார் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்துபசாரமும் கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.  நன்றி வீரகேசரி









சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார் ; உடன்படிக்கையிலும் கைச்சாத்து

23/01/2018 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லுங்க்கிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சிங்கப்பூர் பிரதமரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இரு தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சிங்கப்பூர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூர் பிரதமர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி









பெண் அதிபர் முழந்தாளிட்ட விவகாரம் : எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு

22/01/2018 பதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டமொன்று பதுளையில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டமானது பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக பதுளை நகரை சென்றடைந்துள்ளது.
குறித்த ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பதுளை மகளிர் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்படபெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவையும் சில அதிகாரிகளையும் பதவி விலக்கி அவர்களை கைதுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளோர்  ஆளுநருக்கு மகஜரொன்றையும் கையளித்துள்ளனர். 
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஊவா மாகாண சபைக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி







No comments: