பைலா இசையை இந்தியத் திரைத்துறைக்கு எடுத்துச் சென்ற ஏ.ஈ.மனோகரன் - கானா பிரபா


வீரகேசரி வார சங்கமம் (27.01.18) இல் பதிவான பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் குறித்த என் அஞ்சலிப் பகிர்வு (வீரகேசரியின் பகிர்வையும் படமாக இத்தால் இணைத்திருக்கிறேன்)


""சுராங்கனி" என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில் இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் அவர்கள்.

ஈழத்துக் கலைஞர்களில், ஏ.ஈ.மனோகரன் போன்று ஈழத்தமிழ் ரசிக எல்லையைக் கடந்து சிங்கள ரசிகர்கள், அவர்களைத் தாண்டி இந்திய ரசிகர்கள் என்று லட்சோப லட்சம் ரசிக உள்ளங்களைச் சம்பாதித்தவர் வேறு யாருமிலர். இன்னமும் சிங்கப்பூர், மலேசியா கடந்து அங்குள்ள பூர்வீகத் தமிழர்களிலிருந்து புலம் பெயர் தமிழர் வரை ஆட்கொண்டார்.

“சின்னமாமியே” புகழ் பொப்பிசைப் பிதா நித்தி கனகரட்ணம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்
என்று ஈழத்துத் துள்ளிசை வரலாறு எழுபதுகளிலே வெகு செழிப்போடு விளங்கியது. அந்தக் கால கட்டத்தில் அமுதன் அண்ணாமலை, எம்.பி.பரமேஷ் (உனக்குத் தெரியுமா நான் உன்னை அழைத்தது) என்று இன்னும் ஏராளம் தனித்துவம் மிக்க ஈழத்துப் பாடகர்கள்
தென்னிந்தியத் திரைசை மரபை மீறி அவற்றைப் பிரதிபண்ணாத தனித்துவம் மிக்க ஈழத்துப் பாடல்களை ரசிகர்கள் அடையாளம் கொண்டு அரவணைத்தது எங்கள் ஜனரஞ்சக இசை மரபின் பொற்காலம் எனலாம். தான் உலக இசை மேடைகளில் பவனி வந்த போதெல்லாம் துடிப்போடு பாடி, ஆடி ரசிகர்களையும் ஆட வைத்து அவர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்கவைக்கும் கலையைக் கற்றவர் ஏ.ஈ.மனோகரன் அவர்கள். தன்னுடைய வாழ்க்கை இதற்கே எழுதப்பட்டது என்று முழு அர்ப்பணிப்புடன் பாட்டு, நடிப்பு இவற்றில் தீவிரமாக இயங்கியவர்.

“சுராங்கனி மனோகரன்” என்ற அடைமொழியோடு தமிழகமெங்கும் இவர் பெயர் பிரபலமாயிற்று.
“சுராங்கனி” பாட்டு கல்லூரிக் காளையருக்குக் கொண்டாட்டப் பாட்டு என்றால் இதுதான். ஒரே பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் களியாட்டம் போடும் மரபில் இதுவும் சேர்ந்து கொண்டது.
இந்தப் பாடல் கொடுத்த புகழ் காய்ச்சலை அப்போதைய திரையுலகம் பயன்படுத்தியது.
தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் “அவர் எனக்கே சொந்தம்” படத்தில் “சுராங்கனி” பாடல் மீளவும் 
மலேசியா வாசுதேவன், ரேணுகா குழுவினரால் 
பாடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதிலிருந்து இந்தப் பாடலின் புகழ் வெளிச்சம் தெரியும். இலங்கையின் இசையை வெளியில் இருந்து பார்க்கும் யாருமே “சுராங்கனி”யைக் கடந்து போவதில்லை.
நாற்பது வருடம்க்களுக்குப் பின்னர் விவெல் சோப் என்ற பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் கூட இடம்பிடித்த மங்காப் புகழ் கொண்டது. இன்னமும் வெவ்வேறு இந்திய மொழிகளில் பிரதி பண்ணப்பட்டும் வந்தது. பந்தயம் என்ற படத்தில் சுரேஷ் ஆண்டனியால் மீள் கலவை இசையோடு மீண்டும் வந்தது. சுராங்கனி பற்றி இவ்வளவும் சொல்லக் காரணமே இது ஒன்றே போதும் அவர் புகழ் கூற. ஆனால் ஏ.ஈ.மனோகரன் என்ற அற்புதமான பாடகரைத் தமிழ்த் திரையுலகம் அதிகம் பயன்படுத்தத் தவறியது. 

Maruwa Samage Wase என்ற சிங்களப் படத்தில் “சுராங்கனி” பாடலோடே நடித்தார்.

இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பான “பைலட் பிரேம்நாத்” இல் எ.ஆர்.ஈஸ்வரியுடன் “கோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்” பாட்டு திரையிசையிசையிலும் இவரது முத்திரையைக் காட்டும்.

தமிழ், சிங்களத்தைக் கலந்து கட்டிப் பாடிய இவரது பாடல்களால் இரு மொழிக்காரர்களையும் ஒரு சேரக் கவர்ந்தவர். குறிப்பாக “ஹாய் கூய் மீனாட்சி எலிகள் பட்டாளம்” பாடலில் இந்த மொழிக் கலப்பை வெகு இயல்பாகப் பயன்படுத்தி ரசிக்க வைத்தார். அது போல் “சிக்கன் இல்லாது சோறு சாப்பிட (ரஸ்புடீன்)” இல் ஆங்கில மொழிக் கலவை இருந்தாலும் அதைக் கவர்ச்சிகரமாக உச்சரித்து இவர் பாடும் அழகே தனி.

“இலங்கை என்பது நம் தாய்த்திரு நாடு” இன்னொரு புகழ் பூத்த பாட்டு. நல்லூர்க் கந்தனுக்காகப் பொப்பிசைப் பாட்டு “மால் மருகா எழில் வேல் முருகா”, மரியன்னைக்காக “மாதாவே சரணம்” போன்ற பக்தி கீதங்களிலும் இனித்தார்.

“கள்ளுக்கடைப் பக்கம் போகாதே” என்று நித்தி கனகரட்ணம் கிராமத்தானைக் கெஞ்ச, மனோகரனோ “பிரண்டி பியர் விஸ்கி போடாதே” என்று நகரத்தானுக்குப் புத்தி சொன்னார் பாட்டில்.

“அன்பு மச்சாளே எந்தன் ஆசை மச்சாளே”, “சில சில பாவையர்”, “பறந்து வந்து பாடுகிறேன்” ஆகிய பாடல்களும் மறக்க முடியாதவை.

நித்தி கனகரட்ணம் பாடிய “சின்ன மாமியே” மெட்டைத் தழுவி “பட்டு மாமியே” பாடலைப் பிற்காலத்தில் பாடியிருக்கிறார்.

புகழ் பூத்த சிங்களப் பாடகர் எம்.எஸ்.பெர்னாண்டோ
பாடிய “கிக்கிரி பலன” பாடலை மீளவும் ஏ.ஈ.மனோகரனும் பாடியிருக்கிறார். பின்னாளில் ஏ.ஈ.மனோகரனுடன் இசைப் பணியில் இணைந்த விஜய காண்டீபன் இந்தப் பாடலைக் “காவலுக்குக் கண்ணில்லை” என்ற ஆனந்த்பாபு நடித்த தென்னிந்தியத் திரைப்படத்துக்குப் பயன்படுத்தினார்.

“பொன் வண்டு” என்று லண்டனில் வெளியிட்ட இசைத்தட்டில் இவர் பாடிய “வா வா பொண்ணோ நான் வெள்ளி ரூபா தாறேன்” பாடலே  மூலாதாரம் ஆனது தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் வில்லு படத்தில் இடம்பெற்ற “வாடா மாப்பிள்ளை வாழைப் பழத் தோப்பில” பாட்டு.

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களிலும்
 தென்னிந்தியத் திரைப்படங்களிலும், சின்னத்திரை நாடகங்களிலும் இவரின் கலைப்பயணம் விரிந்தது. ஜனாதிபதி விருது பெற்ற ஈழத்தின் மிக முக்கியமான திரைப்படம் “வாடைக்காற்று” படத்தில் செமியோன் என்ற முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கிறார். 
பாச நிலா இவரது முதல் திரைப் படைப்பாகும். 
சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவராக இருந்த போது 
இவர் நாயகனாக நடித்து அப்படம் 
1963 இல் வெளி வந்தது.

அது போல இந்தியத் திரைப்படங்களில் “சிலோன் மனோகர்” ஆகத் தெலுங்கில் “டூஃபான் மெயில்” தொடங்கி மாங்குடி மைனர், தீ, பைலட் பிரேம்நாத், 
மனிதரில் இத்தனை நிறங்களா,
ஜே ஜே உட்பட்ட தமிழ்த் திரைப்படங்களோடு ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் வில்லன், அடியாள் போன்ற சிறு சிறு பாத்திரங்களே கிட்டியது அவரின் திறமைக்குச் சோளப் பொரி தானும் இல்லை எனலாம். 

சின்னத்திரைத் தொடர்களில் அஞ்சலி, சாவித்திரி ஆகியவற்றில் ஈழத் தமிழ் பேசி நடித்தார். அத்திப் பூக்கள், திருமதி செல்வம் என்று தொடர்ந்த சின்னத் திரை வாழ்க்க்கையே பின்னாளில் அதிகம் இவரை ஆட்கொண்டது.

ஈழத்துப் பாடகர், நடிகர் அதே அடையாளத்தோடே
இந்தியாவிலும் புகழ் பெற்றுத் துலங்க முடியும் என்ற வகையில் ஏ.ஈ.மனோகரன் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். ஆனால் அவரின் திறமையோடு ஒப்பிடும் போது அவருக்கான வாசல் அகலத் திறந்து விடப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் அவர் பிரிவில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தென்னிந்தியத் திரையிசையின் துள்ளிசைப் பாடல்  குத்துப் பாடல் என்றால் ஆபாசம் கலக்காது காண்பதரிது. ஆனால் முகம் சுழிக்காது கொண்டாடக் கூடிய பாடல்களை வழங்கிய ஈழத்துப் பொப்பிசைப் பாடல் மரபில் ஏ.மனோகரன் பங்கு அளப்பரியது, தனித்துவமானது. அவரை விலத்தி ஈழத்து ஜனரஞ்சக இசை வரலாற்றை எழுத முடியாது. ஆன்மிகம், தத்துவம், போதனை, காதல், தாய் நிலம் என்று எல்லாமுமாக அந்தப் பாடல்களில் காட்டிச் சென்றார்.
ஏ.ஈ.மனோகரன் இழப்பு ஈழத்து மெல்லிசை உலகுக்குப் பேரிழப்பே. 


- கானா பிரபா -No comments: