கறவை மாடு - யோகன் கன்பரா

.
                           

தியாகுவின் கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் எதிர்பார்த்தது  போல சாந்தியின் தம்பி நடேசுதான். வெத்திலை சப்பிக்கொண்டே அவன் பேசுவது தெரிந்தது. இருமி செருமிக் கொண்டே பேசினான்.

" வேலுப்பிள்ளையரைக் கண்டனான். ஒன்றேகால் ரூபா வருமாம்." லட்சத்தை ரூபா என்பது அவ்விடத்து வழக்கம்.  

" உதிலை அவர் கொமிஷனும் அடிப்பார்" கேட்டுகொண்டே  கையில் அமர்ந்த நுளம்பை ஓங்கி அடித்தான் தியாகு.

"எல்லாம் ஜெர்ஸி குரொஸ் - கலப்பு. ஆனால் நல்ல கறவை மாடு. உன்னை போய் பார்க்கச் சொன்னார்."
" பத்து லீற்றர் கறக்குமோ?"
"அப்பிடித்தான் சொன்னார். "
"நம்பிக்கையான இடமோ?"
" புரட்டாசிக்கு முதல் முடிச்சால் நல்லது எண்டார். பிறகு விதைப்புக்காலம் வர விலை கூடினாலும் கூடுமாம்.


ஒரு மாபெரும் இருமல். தியாகுவுக்கு காது 'குர்' என்று அதிர்ந்ததுபோனை வாய்க்குக் கிட்ட  வைத்துக்கொண்டு இருமுகிறான் விசரன்நடேசு போனை வைத்து விட்டான்

கல்வீட்டு வேலுப்பிள்ளையர் மாடுகள் வாங்கி விற்கும் புரோக்கர்அவர் வியாபார விஷயங்கள் போனில் பேசமாட்டார். அதனால்தான் நடேசுவைக் கேட்டு வரச் சொன்னான். தியாகுவால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது. வலக்கால் முழக்காலுக்குக் கீழ் துண்டிக்கப் பட்டு விட்டது. யுத்தத்தின் நிரந்தர ஞாபகச் சின்னம்.

ஒன்றேகால் லட்சம் தியாகுவுக்கு எட்டாப்பழம். ஏற்கனவே எடுத்த கடன் கட்டி முடியவில்லை. சாந்தி அரைக்கும் ஆலையொன்றில் மா தூள் பைகளில் அடைத்து விற்கும் சிறு தொழில் நிறுவனமொன்றில் சேர்ந்து ஏழு மாதங்களாகின்றன. பிள்ளைக மூவரும் பள்ளிக்குப் போகிறார்கள். கடைசிக்கு  ஐந்து வயது.




அவனிடம் இருப்பது ஏழு  வயதாகும் அம்மணியும்  அதன் கண்டு தேவன், மற்றும் நாலு கோழிகளும் ஒரு சேவலும்தான். அம்மணியின் பால் வற்றிக் கொண்டு வருகிறது. இனி சினைப்படுத்திப் பயனில்லை. அது கலப்பின மாடு. நாட்டு மாட்டினை ஜெர்ஸி இனத்துடன் ஊசி மூலம் சினைப்படுத்தி கன்று போடவைப்பது. அந்த வகை இனங்கள் கறவைக்காலம் ஆறு அல்லது ஏழு  வருடங்கள்தான். அதிலும் அம்மணி மூன்று முறை சினைப்பட்டது. எல்லாம் நாம்பன் கண்டுகள். முதல் இரண்டும் ஐந்து மாதம்  வர முதலே விற்று விடடான் அப்போது நல்ல பால் கறந்தது.

அந்த  ஒரு நம்பிக்கையில் மேலும் இரண்டு லட்சம் சாந்தியின் பெயரில் பைனான்சில் கடன் வாங்கினான். யுத்தம் முடிந்த கையோடு கண்டி வீதி போக்குவரத்துச் சீரடைய தெற்கிலிருந்து படையெடுத்து வந்த பைனாஸ் கொம்பனிகள் நகரெங்கும் கடை விரித்திருந்தனர்.
ஒரு பழைய மோட்டர் சைக்கிலும் வாங்கி மரப்பெட்டி அடித்து கரியரில் பால் கானை நிரப்பிக் கொண்டு சாந்தி அதிகாலையிலே ஐந்து மணிக்கு நெஸ்லெ பால் சேகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு போனாள்மீட்டர் வைத்து பாலின் தரம் பார்த்து விலை போடுவார்கள். லீட்டர் எழுபது அல்லது எண்பதுக்கு விற்றால் கையில் காசு மிஞ்சும்அந்தக் காலம் அம்மணி எட்டு ஒன்பது லீட்டர் வரை கறந்தது.

அம்மணி தியாகுவை மட்டுந்தான் கறக்க விட்டது. வேறு யாராவது போனால். பின்னங்காலால் எட்டி உதைத்தது. தியாகு பால் கறப்பதற்கு வசதியாக கொஞ்ச உயரத்தில் மரக்குத்திகளைப் போட்டு நடேசு ஒரு மேடை அமைத்துக் கொடுத்திருந்தான். மாட்டுக் கொட்டில்க் கூரையின் பொத்தல் விழுந்த கிடுகுக்குள்ளால்  மழை ஒழுகி நிலமெங்கும் சொதப்பியிருந்தது. பால் பானையை கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு ஒரு கையால் பால் கறக்கையில் மறு கை நுளம்படித்துக்கொண்டிருக்கும். தை பிறக்க கொட்டில் மேய்ச்சலுக்கு கிடுகு வாங்க வேணும் என்று நினைத்துக் கொள்வதுதான். ஒன்றும் நடப்பதில்லை.
பத்தாம் வகுப்பை  எட்டும் மூத்தவன் கரன் டியூஷனுக்கு காசு கேட்டான்.
எங்கு போவது?

ஒரு பத்து பதினைந்து பேர் ஈட்டிகளுடன் வளையம் சுற்றி நிற்கிறார்கள். ஈட்டிகளின் கூர் முனைகள் தியாகுவின் வயிற்றை நோக்கி நெருங்குகின்றன.
திடுக்கிட்டு எழுந்து   கொண்டான். கனவு.
பைனாசின் பயம் மூளையின் உறைந்திருந்தது. போன மாத தவணைக்கு கட்ட முடியவில்லை. வீட்டுக்கு வந்து அறிவித்து விட்டு போனார் பிரதேச மனேஜர். சாந்திக்கு பயம் பிடித்ததுபைனான்ஸிடன் தப்புவதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களில்  சிலர்  அவ்ளுக்குத் தெரிந்த பெண்கள்.

வெளியே கூவ முன் செட்டைகளை  அடிக்கும் சேவலின்  ஆயத்தம். ஆனால் இன்னும் கூவத்தொங்காத  விடி காலை இருட்டு . எழும்பாமல் படுத்திருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மணி எழுந்து விடும்.

காலையில் சொன்ன நேரத்துக்கு நடேசு வந்திருந்தான். காலை வெயில் தேவனின் தோலில் பட்டு மினுங்கிக் கொண்டிருந்தது. மெதுவாக அம்மணியின் கட்டை அவிழ்த்தான். தேவன் பார்த்துவிட்டு மூச்செறிந்தது.
நடேசு சைக்கிளை தென்னை மரத்துடன் சாத்தி விட்டு வந்து கயிற்றை வாங்கிக் கொண்டான்.
படலைக்குப் போகமுன்னமே தேவன் கத்தத் தொடங்கியது. அதுக்கு அம்மணி திரும்பி வர மாட்டாள் எனத் தெரிந்து விட்டது போலும்
அம்மணியுடன் அதிக காலம் நின்றது தேவன் தான்

சாந்தி வேலைக்குப் போய் விட்டாள். கரன் தேவன் கத்துவதை கேட்டு ஓடி வந்தான்.

"இஞ்சை என்ன வாறாய் போய்ப் பள்ளிக்கு வெளிக்கிடு." கத்திக் கொண்டே  நடேசுவின் சைக்கிளில் பாரில் இருந்தபடி ஒரு கையால் காண்டிலையும் கைத்தடியையும் பிடித்தபடி  மறுகையால் அம்மணியை இழுத்துக் கொண்டு போனான். அம்மணிக்கு நல்ல விலை போட்டாரென்றால் சாந்தியின் ஒரு சோடி தோட்டையும் விற்று கறவை மாடு வாங்கி விடலாம்.

சைக்கில் சந்தியைக் கடந்தபோது கடைக்கு வெளியெ புளிய மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர். புது முகங்கள். இடபெயர்வின் விளைவு. அவர்களுக்கும் இவர்களைத் தெரியவில்லை. ஒரு காலத்தில் இவர்களைத் தெரியாதவர்கள் அவ்வூரில் இருந்திருக்க முடியாது.

தியாகு இயக்கத்தில் பிரதேச துணைப் பொறுப்பாளனாகவிருந்தான். நடேசு முதலில் தியாகுவின் கீழ் வேலை செய்ததால் பழக்கம். பிறகு அரசியல் துறையில் மன்னார்  பகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டான். அப்போது தியாகு ஹொண்டா 250 வைத்திருந்தான். புளிய மரத்தை கடந்து போகும் போதெல்லாம் பக்கத்தில் ஒரு நார்க் கடகமும் வெத்திலை சப்பியபடியும் குந்தியிருந்து சத்தமாகக் கதைத்துக் கண்டிருக்கும் பெண்களைக் காண்பான். அந்த மரத்தடியில் வயல் வேலைக்குப் போகும் பெண்களை ஏற்றிக்கொண்டு போகும் ட்ரைக்ட்டர் வரும். இரண்டு போகம் விளையும் வயல் விதைப்பு ஆதலால் புல்லுப் பிடுங்க நாத்து நட என்று கூலி வேலைக்கு ஆள்  தேவைப்படட காலம்.
இப்போதெல்லாம் வயல் வேலைகள் என்று ஆட்கள் போவதே குறைந்து விட்ட்துபுதிய தொழில்கள். சுருக்காக பணம் சேர்க்கும் வழிகள்.

நடேசுவின் தங்கை சாந்தியைத் திருமணம் செய்தது ஒரு விபத்துப் போல.  
அது புளியமரத்தின் அருகே  செல்லும்   ஒற்றையடிப் பாதையின் முடிவிலுள்ள புத்தடிப் பிள்ளையார்  கோயிலில் நடந்தது.
சாந்தியின் முன்னர் ஏற்பாடாகியிருந்த கலியாணம் திருமணத்துக்கு  முதல் நாள்  குழம்பியது. மாப்பிள்ளை மரக்கறி மொத்தமாக வாங்கி விற்கும்  வியாபாரி. காரும் வைத்திருந்தான். சந்தையில்  பொம்பர் அடித்ததில் அவ்விடத்திலேயே இறந்தான். கலியாணத்தன்று அவன் இறுதிக்கு கிரியை நடந்தது. நடேசு அப்போ மன்னாரிலிருந்து வரமுடியவில்லை.
கொஞ்ச நாட்களின் பின் தியாகு சாந்தியை பதிவுத் திருமணம் செய்து புத்தடி பிள்ளையார் முன் தாலி கட்டினான்.


வேலுப்பிள்ளையர் வீடடை அடைந்தபோது நடேசு சைக்கிளை தண்ணீர் வாய்க்கால் கடவைக்கு  முன்னரே ஸ்டாண்டில் நிறுத்திப் பூட்டைப் போட்டான். தியாகு கடவையின் மரக் குற்றிகளில் கவனமாக கைத்தடியை ஊன்றினான். கீழே குளத்துத் தண்ணீர் சோர்வுடன் வழிந்து  கொண்டிருந்தது.
வீட்டின் முன்னால் ஏற்கனவே ஆட்கள் சிலர் நின்றனர்.

நடேசு அம்மணியை மாமரத்தில் கட்டினான். பேசிக்கொண்டிருந்த இருவரில் வேட்டி அணிந்திருந்தவரிடம் தியாகு போனான்.
"அண்ணை மாடு வாங்கவோ ?

" ஊர் மாடு ஒண்டு பாக்கிறம். வேலுப்பிள்ளையர் வெளியே போனவர் இன்னும் வரேல்லை. உங்கடை மாடு விக்கவோ" அம்மணியைப் பார்த்தபடி கேட்டார்.

'"கறவை மாடு ஒண்டு பாக்கிறன். இதை வித்தால் தான் ஏலும்."
நடேசு வெத்திலையைத்துப்பி விட்டு வந்து போனில் ஆருடனொ பேசினான்.

வேட்டிக்காரர் தியாகுவை நெருங்கி " உதெல்லாம் பதுருதீனுக்குதான் போகும்"

"விளங்கேல்லை"

"இறைச்சிக் கடைக்காரன். நத்தார் வருஷம் வருகுதெல்லொ?

"என்னட்டை  இன்னொரு நாம்பனும் நிக்குது." என்று இழுத்தான் தியாகு.

உழவுக்கும் வண்டிலுக்கும் எண்டு நாம்பன் வைச்சிருந்த காலமெல்லாம் போட்டுது. "

வேட்டிக்காரர் சட்டைப் பையிலிருந்து பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். தியாகு குனிந்து காலைப் பார்த்தான். அதிகம் நடந்ததால் கால் வீங்கியிருந்தது.

திடீரென்று "அப்பா அப்பா" என்ற அலறல் கேட்டுத் திரும்பினான்.

வாய்க்கால் கடவையைத் தாண்டி "ம்மா ம்மா " என்று கத்தி கொண்டு தேவன் ஓடி வருவதையும் பின்னால்  கரனையும் கண்டவுடன் தியாகுவுக்கு எல்லாம் விளங்கி விட்டது.

'அப்பா தேவன் கயித்தை அறுத்து ரோட்டுக்கு ஓடிவிட்டுது. பின்னாலை கலைச்சுக்கொண்டு இஞ்சை கொண்டு வந்திட்டன்"

தேவன் நேரே அம்மணியிடம் ஓடிப் போய் அதன் வயிற்றில் முகத்தை தேய்த்தது. அம்மணி குனிந்து தேவனின் கன்னத்தையும் உச்சியையம் நக்கியது.
கைத்தடியை ஊன்றி கெந்திக் கெந்தி மாமரத்துக்குப் போனான்.
இந்த அமளியில் போன் கதையை முடித்து விட்டு வந்தான் நடேசு.

"நடேசு தேவனையும் மாமரத்தில் கட்டு" என்றான் தியாகு.

அம்மணி குனிந்து கடிப்பதற்காக தேடியது.

பிறகு ஒரு வைக்கல் துண்டொண்ரைக் கண்டு எடுத்து ஆறுதலாக சப்பத் தொடங்கியது . தேவன் அம்மணியின் வயிற்றுக்கு கீழே படுத்தது. ஓடி வந்த களைப்பு அதுக்கு.

No comments: