இலங்கையில் பாரதி -- அங்கம் 39 முருகபூபதி


-->
இலங்



பாரதியின்  கவிதைகளில்  எளிமையும் ஓசைநயமும் சொற்சிக்கனமும்   இருந்தமையால் இசைப்பாடல்களாகவும் அவை மாறிவிட்டன.
தமிழகத்திலும் இலங்கையிலும் மட்டுமன்றி புலம்பெயர்ந்தவர்கள் வாழும் நாடுகளிலும் பாரதியின் பாடல்கள் பலரால் இசையோடு பாடப்படுகிறது. கச்சேரிகளில், அரங்கேற்றங்களில், திரைப்படங்கள், நாடகங்கள், கூத்துக்களிலெல்லாம் பாரதியின் கவிதைகள் பண்ணோடு ஒலிக்கின்றன.
பாரதியும்  தான் இயற்றிய  கவிதைகளை இராகத்துடன் பாடும் இயல்பைக்கொண்டிருந்தவர். பாரதியின் பக்தரான பாரதி தாசன் "பாரதிதான் சிந்துக்குத்தந்தை " என்று எழுதியிருக்கிறார்.
ஆனால், அதனை மறுக்கிறார் ஈழத்து அறிஞர் (அமரர்) தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை. எனினும் சிந்து எனப்படும் தொன்மையான  இசைப்பாடலுக்கு உயிரூட்டி வளர்த்தவர் பாரதிதான் எனவும் ஒப்புக்கொள்கிறார்.
மு. கணபதிப்பிள்ளை, தாம் பிறந்த ஊரின்பெயரையும் தமது பெயருடன் இணைத்துக்கொண்டு எழுத்துலகில் வாழ்ந்தவர். இலங்கை அரசமொழித்திணைக்களத்தில் பணியாற்றியவர். இலங்கை வானொலியிலும் இலக்கிய மேடைகளிலும் உரையாற்றியவர். இவருடைய மகள்தான்(அமரர்)  திருமதி கமலினி செல்வராசன் . இவரும்  இலங்கை வானொலியில் புகழ்பெற்ற கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிந்துவகைப்பட்ட இசைப்பாடல்கள்  பாரதிக்கு முன்பே மரபுவழியாக புனையப்பட்டிருக்கிறது   என்று சொல்லும்  கணபதிப்பிள்ளையவர்கள்,  பாரதியின் எங்கள் தாய் என்ற கவிதை காவடிச்சிந்திலே  எழுதப்பட்டிருக்கும் தகவலையும்   பதிவுசெய்கிறார்.
" தொன்று  நிகழ்ந்த தனைத்தும்  உணர்ந்திடு  சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்" எனச்சொல்வதன் மூலம் அதன் தொன்மையை பாரதி குறிப்பிடுகிறார்.
தொன்று நிகழ்ந்திடும் யாவற்றையும் உணர்ந்துகொள்ளத்தக்கவர்கள், முக்காலங்களும் உணரும் முனிவர் வகையினைச்சார்ந்தவர்கள். அவர்களே, தமிழ்த்தாய் எப்போது  பிறந்தவள் என்று அறிந்து கூறமுடியாத இயல்பினையுடையவள் அவள் என்று கூறுகிறார்.
                                  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்தொடங்கியே கன்னித்தன்மை குலையாமல் வளர்ந்து வரும் இயல்பினை உடையவளாய் இருப்பதனாலேயே அவளை இன்றும் " கன்னிதமிழ்" என்று போற்றிவருகின்றோம். இன்று சிந்துவெளிமொழியினை ஆராய்ந்துகொண்டிருக்கும் உலகப்பேரறிஞர்கள் கூட அவள் என்று பிறந்தவள் எனக்கூறமுடியாது கையை விரிக்கிறார்கள்.


அடியும் முடியும் காண முடியாது திகைக்கிறார்கள். தமிழ்தான் சிந்துவெளிமொழியென உறுதியாகக்கூறுகிறார்கள்.
இலக்கியப்பாடல்களிலே பெரும்பாலானவை, முதலிலே எழுதா இலக்கியமாகவே இருந்து பின்னதாக ஏட்டில் இடம்பெற்றவையாகும். மிகப்பழைய இலக்கியங்களிலே பயின்றுவரும் அகவல், வஞ்சி, கலி ஆகியவை கூட ஏட்டிலே ஏறுமுன், எழுதா நிலையினவாகவே இருந்தன. இந்த வகையாகவே சிந்து மரபும் வளர்ந்து வந்தது எனத்தெளிவாகத்தெரிகின்றது" என்று பதிவுசெய்துள்ளார் தென்புலோலியூர் கணபதிப்பிள்ளை. ( ஆதாரம்: பாரதியாருக்கு முன்பே சிந்து பாடியவர் பலர் - கட்டுரை - சிந்தாமணி 29-04-1984)
நாட்டார் பாடல்கள், கிராமியப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள் யாவும் ஏட்டிலே எழுதப்படுமுன்னர் மரபார்ந்து வாய்மொழிக்கூற்றாகத்தான் முதலில் வெளிவந்தன. இவை குறித்து பிற்காலத்தில் பல்கலைக்கழக மட்டத்திலும் ஆராயப்படுகிறது.
பாரதியால் வளர்த்தெடுக்கப்பட்ட  சிந்துவகை அடிச்சுவட்டினை சுந்தரமூர்த்தி நாயனார், அப்பர், திருஞானசம்பந்தர் பாடல்களிலும் காணமுடிகிறது என்றும் சொல்கிறார் கணபதிப்பிள்ளை.
                         " நீள நினைந்தடியேன் - உனை நித்தலும் கைதொழுவேன்" ( சுந்தரர்)
"தலையே நீ வணங்காய் - தலை மாலைதலைக்கணிந்து" ( அப்பர்)
" தோடுடைய செவியன் விடையேறியோர்" (ஞானசம்பந்தர்) முதலான திருப்பதிகங்களும் சிந்து வகைப்பட்டதே என்பது கணபதிப்பிள்ளை அவர்களின் கூற்று. அதனால் பாரதிக்கு முன்பே பலரும் சிந்து பாடியிருப்பதனால், பாரதிதாசன் சொல்வதுபோன்று பாரதியை சிந்துக்தந்தை எனச்சொல்ல முடியாது என்பதுதான் இலங்கை தமிழ் அறிஞரின் வாதம். இவ்வாறு சொன்னதனால் பாரதியின் மகிமை குறைந்துவிடப்போவதில்லை.
சிந்துக்கு மேலும் உயிரூட்டி   நவீன தமிழ் இலக்கியத்திற்கு மேலும் வளம்சேர்த்தவர் பாரதி.
இது இவ்விதமிருக்க, பாரதியின் கவிதை வரிகளும்  இலங்கையில் வாதப்பிரதிவாதங்களுக்குட்பட்டிருக்கிறது.
                               தமிழ் தொன்மையான மொழி எனச்சொல்லப்படுகிறது. தமிழ் பேசும் தமிழர்கள் பற்றி பாரதி, கனியன் பூங்குன்றனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, பாரதிதாசன் ஈழத்துக்கவிஞர் புதுவை இரத்தினதுரை, பேராசிரியர்  சி. சிவசேகரம்  ஆகியோரின் கருத்துக்களை ஒப்புநோக்கி எழுதியவர் தற்பொழுது இங்கிலாந்தில் வசிக்கும் எழுத்தாளர் அ. இரவி. இவர் இலங்கையில் பாரதி நூற்றாண்டு காலகட்டத்தில் புதுசு என்ற இலக்கிய விமர்சன இதழும் நடத்தியிருப்பவர்.
       மகாகவி பாரதியார் கவிதைகள் தொகுப்பில்  தமிழச்சாதி என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதை  இடம்பெறுகிறது.  அவர் அதற்கு கொடுத்திருக்கும் தலைப்பு: " இருதலைக்கொள்ளியினிடையே"  ஆனால், பாரதி தமது கைப்பட எழுதி சிதைவுற்ற பிரதியே தொகுப்பாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.
அதன் தொடக்மும் முடிவும் தெரியாமல் தமிழச்சாதி என்று தமிழ் இனத்தை பாரதி வர்ணித்திருப்பதனால் இந்தத்தலைப்புடன் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.
அக்காலகட்டத்தில்  தமிழ் இனம் குறித்து  பாரதிக்கு  இருந்த பார்வையினால்  ஆவேசமுற்று  இருதலைக்கொள்ளியினிடையே  என்ற தலைப்பிலேயே அதனை எழுதியிருப்பதாகவே  புரிந்துகொள்கின்றோம்.
விதியே விதியே தமிழச்சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ...? என்ற வரிகள் இடம்பெறும் இக்கவிதையில் திருக்குறளும், சிலப்பதிகாரமும், கம்பராமாயணமும் கண்ட தமிழச்சாதியை " அமரத்தன்மை வாய்ந்தது" எனப்பேருவகை கொண்டு பாடிவிட்டு, அதே தமிழச்சாதி, ஆப்பிரிக்கத்து காப்பிரி நாட்டிலும் தென்முனையடுத்த தீவுகள் பலவினும்.....தமிழச்சாதி தடியுதை யுண்டும் காலுதையுண்டும்.... என்று வெகுண்டு தொடர்கிறார் பாரதி.
" மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களின் செய்கையும் நடையும் தீனியும் உடையும் கொள்கையும் மதமும் குறிகளும்,  நம்முடையாவற்றினுஞ் சிறந்தன, ஆதலின் அவற்றை முழுதுமே தழுவி மூழ்கிடினல்லால், தமிழச்சாதி தணிமீதிராது, பொய்தழிவெய்தல் முடி' யெனப்புகலும் நன்றடா நன்று ! நாமினி மேற்றிசை வாழ்குவம் எனிலோ " ஏ... ஏ... அஃதுமக்கிசையா" தென்பர்..... என்று தொடர்ந்து,
" சீமை மருத்துகள் கற்ற மருத்துவர் தமிழச்சாதியின் நோய்க்குத்தலையசைத்தேகினர் என்பதேயாகும்  இஃதொரு சார்பாம்..." என்று மேலும் தொடருகிறார்.
பாரதி தமிழர்களின் இரண்டக வாழ்வையும் அவர்தம் சிந்தனையையும் பற்றி இவ்வாறு விவரிக்கும் பொழுது அவர் இருதலைக்கொள்ளியினிடையேதான் இதனை எழுதியிருப்பது புரிகிறது.
அதனால் தமிழ்ச்சாதியை அவர் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை அ. இரவி வீரகேசரி வார வெளியிட்டில் (03-04-2005) ஆராய்கிறார்.
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையவர்கள் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றவர். காந்தியடிகளின் உப்புச்சத்தியாக்கிரக போராட்டத்தில் மக்கள் ஊர்வலமாக சென்றவேளையில் அவர்கள் பாடுவதற்காக  "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது " பாடலை இயற்றிக்கொடுத்தவர்.
அத்துடன் " தமிழன் என்றோர் இனமுண்டு  தனியே அதற்கோர் குணமுண்டு"  என்ற பாடலையும்  " தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே, தரணிக்கே ஓரணி செய்வோமே அமிழிதம் தமிழ் மொழி என்றாரே  அப்பெயர் குறைவது நன்றாமோ" என்ற பாடலையும் தமிழ்த்தாய் வாழ்த்தாக வழங்கியிருப்பவர்.
              பாரதிதாசன் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, " தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" எனப்பாடினார்.
பாரதியோ " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" எனவும் " வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" என்றும் பாடினார். இந்தப்பாடல்தான் இன்றும் தமிழ்மேடைகளில் நிகழ்ச்சி தொடங்கும் முன்னர் ஒலிக்கிறது.
 இவ்வாறு சொன்ன பாரதியே தமது வசனகவிதை ஒன்றிலே,  தமிழரை எருமைக்கும் ஒப்பிட்டிருப்பதையும் அ. இரவி தமது கட்டுரையில் சுட்டிக்காண்பிக்கின்றார்.
" மழை பெய்கிறது, ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது. தமிழ்மக்கள் எருமைகளைப்போல் எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்கும் கூட அகப்படமாட்டான்"
இந்த வசன கவிதையிலே ஏன் மீசை துடிதுடிக்க கண்களிலே கோபம் கொப்புளிக்க பாரதியார் இந்தத்திட்டு திட்டுகிறாராரே.... ஏன்...? என்று கேட்கிறார் அ. இரவி.
கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே கவிதையில் வரும்  பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே   என்னும்  வரிகளை புதுவை இரத்தினதுரையின் " நமக்கு மேலும் ஒருவரிலர், நமக்குக்கீழும் எவருமிலர்" என்ற வரிகளுடன் ஆராய்கிறார். அத்துடன், சிவசேகரம் எழுதியிருக்கும் " நமக்கு நாமே பகை என ஆனோம், ஆதலினால் எம்மூர் தவிர்ந்த யாதும் ஊரே எம்மவர் தவிர்ந்த யாவரும் கேளீர்" கவிதை வரிகளை பாரதியின் கோபத்துடன் ஒப்பிடுகிறார்.
இவ்வாறு பாரதிக்கு முன்பும் பாரதிக்குப்பின்பும் தமிழ்மொழியும் தமிழர்களும் இலங்கையில் பல ஆய்வாளர்களினால் அவரவர் கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டிருக்கிறது.
அவர்களின் அக்கறை யாவும் தமிழ்மொழியிடத்தும் தமிழச்சாதியிடத்திலும் நீடித்திருந்தாலும், இந்த நூற்றாண்டில், அதாவது பாரதி நூற்றாண்டு முடிந்து அதற்குபின்னர் வரும் நூற்றாண்டில் தமிழ்மொழி , தமிழ் இனம் பற்றி வேறுவகையான ஆராய்ச்சிகளும் தரவுகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அதற்கு முன்னர் ஒரு சிறிய கதையை சொல்வோம்.
சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் மரியா ஸ்மித் ஜோன்ஸ் என்ற பெண்மணி இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அவருக்கு வயது 89. பழங்குடி இனத்தைச்சேர்ந்த அவர் அம்மக்களின் மொழிகளில் ஒன்றான " ஏயக்" என்ற மொழியை பேசியவர். அவர்தான் அந்த மொழியை இறுதியாகப்பேசியவர். அவருக்குப்பின்னர் அந்த மொழியை எவரும் பேசமாட்டார்கள் என்பது தெரிந்தே, ஏயக் மொழிக்கான அகராதியையும் தயாரித்தார். இனிமேல் யாராவது அந்த அகராதியின் துணையோடு படித்தால்தான் அம்மொழி வாழும்.
இரண்டு வாரத்திற்கு ஒரு மொழிவீதம் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அல்லது காணமால்போகிறது. அழிந்துபோவதும் காணாமலாவதும் ஒன்றுதான்.
மறைந்த மரியா ஸ்மித் ஜோன்ஸ்  வாழ்ந்த அலாஸ்காவில் எஞ்சியிருக்கின்ற மேலும் சில மொழிகளும் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு அழியும் மொழிகளுடன் அவற்றின் வரலாறும் அழிந்துவிடலாம். ஒரு மொழி தொடர்ந்து வாழவேண்டுமாயின் குறைந்தது ஒரு இலட்சம்பேராவது அந்த மொழியை பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து.
அந்த வகையில் தமிழ்மொழி அழிந்துவிடாது என்று இந்த நூற்றாண்டில் நாம் ஆறுதல்கொண்டாலும், தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், இலங்கை, தமிழ்நாடு,  மற்றும் மலேசியா, சிங்கப்பூரிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும்  தமிழ் சினிமாக்களிலும் தமிழின் தேவை குறைந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. வெளிநாடுகளில் தமிழர்களின் அரங்கேற்றங்கள் பதச்சோறு.
தமிழ்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
இலங்கையில் பெருகிவரும் சர்வதேசக்கல்லூரிகள் ( International Colleges) மற்றும் ஒரு உதாரணம்.
அமெரிக்காவில் வாழும் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி மீராவுக்கு தமிழ்பேசமுடியவில்லை  என்றால், அதற்காக பாரதி மீண்டும் உயிர்பெற்றுவந்து அவரை கோபித்துக்கொள்ளத்தான் முடியுமா...?
யாழ்ப்பாணத்திற்கு சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் வருகைதந்திருந்த இஸ்ரேல் விஞ்ஞானிகள் " இந்த மண்ணின் தண்ணீர் உவர் நீராக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது"  என்று எச்சரித்துவிட்டுச்சென்றார்களாம்.
ஆனால், அதனை அரசியல் தலைவர்களோ மக்களோ கவனத்தில் கொள்ளவில்லை. 60 ஆண்டுகள் கடப்பதற்கு முன்பே யாழ்குடாநாட்டின் தண்ணீரின் சுவை எவ்வாறு மாறியிருக்கிறது.....? ஒவ்வொருவரும் இந்த மாற்றத்தை எமது தாய்மொழிக்கு எதிர்காலத்தில் நேர்ந்துவிடவிருக்கும் மாற்றத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தல் வேண்டும் என்பதும் இத்தொடரின் முக்கிய செய்தியாகும்.
எந்தவொரு மொழியும் வழக்கிலிருக்கும்வரையில் வாழும் என்ற ஆறுதலுடன், தேமதுரத்தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் என்ற பாரதியின்  கனவுடன் நாம் எமது பணிகளைத்தொடருவோம்.
கனவு மெய்ப்படல் வேண்டும்.
(தொடரும்)






No comments: