உலகச் செய்திகள்


வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்

கார் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவிலாளர் படுகொலை!

பாலியல் புகாரால் பறிபோகிறது ஆஸ்கார் விருது

தாக்குதலுக்குத் தயாராகுங்கள்: யுத்தக் கப்பலுக்கு அமெரிக்கா உத்தரவு









வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்

18/10/2017 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள தனது ‘ஓவல்’ அலுவலகத்தில் இன்று (18) தீபாவளி கொண்டாடினார். அவருடன், நிக்கி ஹாலே, சீமா வர்மா போன்ற அமெரிக்க-இந்தியப் பிரமுகர்கள் மற்றும் அரசாங்கப் பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்த ட்ரம்ப், அமெரிக்காவின் வளர்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களின் பங்களிப்பைப் புகழ்ந்து பேசினார்.
“அமெரிக்காவின் கலைத்துறை, விஞ்ஞான, மருத்துவ மற்றும் பாதுகாப்புத் துறைகளிலும் பெரும்பங்களிப்புச் செய்திருக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்களை நான் இத்தருணத்தில் பாராட்டுகிறேன். இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புகளை இந்நேரத்தில் நினைவுகூருகிறேன். அதுபோல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது உறுதியான நட்பையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
அவருடன், அவரது மகள் இவங்க்கா ட்ரம்ப்பும் நிகழ்வில் கலந்துகொண்டார். கடந்த தீபாவளி தினத்தன்று இவங்க்கா ட்ரம்ப், வேர்ஜீனியா மற்றும் ஃப்ளோரிடாவிலுள்ள இந்துக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ். எனினும், அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற எந்தவொரு தீபாவளி கொண்டாட்டத்திலும் அவர் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை.   நன்றி வீரகேசரி














கார் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவிலாளர் படுகொலை!
17/10/2017 உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் குலைநடுங்கச் செய்த ‘பனாமா பேப்பர்’ விவகாரத்தில் முன்னின்று உழைத்த புலனாய்வு ஊடகவியலாளரான டெப்னி கொரோனா காலிஸியா நேற்று (16) படுகொலை செய்யப்பட்டார்.

மால்ட்டாவின் கிராமங்களில் ஒன்றான மால்பினிஜா என்ற இடத்தில், இவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கார் வெடித்துச் சிதறியதில் இவர் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், இது கார் குண்டுத் தாக்குதல் என்பதை உறுதிசெய்துள்ளனர்.
டெப்னியின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மால்ட்டா பிரதமர் ஜோசப் மஸ்கட், இது ஊடக சுதந்திரத்தின் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
டெப்னியின் மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளவர்களில் பிரதமர் ஜோசப்பும் ஒருவர்.
மால்ட்டா தீவின் அரசியல்வாதிகள் பலரின் மோசடிகளை தனது ‘ப்ளொக்’ மூலம் அண்மைக்காலமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் டெப்னி. ஐம்பத்து மூன்று வயதாகும் இவர், மூன்று பிள்ளைகளுக்குத் தாயாவார்.
பனாமா பத்திர விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த இருபத்தெட்டு ஊடகவியலாளர்களுள் டெப்னி பிரதானமானவர்.   நன்றி வீரகேசரி










பாலியல் புகாரால் பறிபோகிறது ஆஸ்கார் விருது

16/10/2017  கடந்த 35 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் படவிநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கடந்த வாரம்  பிரபல நாளிதழ் ஒன்று ஆதாரங்களுடன் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது.

1998 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரே 65 வயது நிரம்பிய ஹார்வி வெய்ன்ஸ்டீன்.
இச் செய்தி தந்த உந்துதலை அடுத்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தாமாகவே முன்வந்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை கூறி வருகிறார்கள்.
ஹாலிவுட்டில் மிக அதிக சம்பளம் பெரும் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி மற்றும் கைனத் பால்ட்ரோ, காரா டெலவிங் உட்பட பல முன்னணி நடிகைகளும் துணை நடிகைகளும் புகார் கூறி வருகின்றனர்.
இச் செய்தி கசிவின் பின்னர்  ஹார்வி வெய்ன்ஸ்டீனின் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பரப்புரைக்காக ஹார்வி வெய்ன்ஸ்டீனிடமிருந்து பெற்ற நன்கொடையை திரும்பி அளிக்கப்போவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக் குழு ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு வழங்கிய ஆஸ்கர் விருதை திரும்ப ஒப்படைக்கக் கோரும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் பிரிட்டீஷ் திரைப்பட அகாடமியான ‘பாப்டா’ உறுப்பினர் பதவியிலிருந்து ஹார்வி வெய்ன்ஸ்டீனை நீக்கி இருக்கிறது.
நிலைமை கைமீறிச் சென்றதை அடுத்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் தனது கடந்த கால அழுக்கான வாழ்க்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணைக் குழுவொன்றை  நியமித்துள்ளது.
ஹார்வி மீது வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  நன்றி வீரகேசரி











தாக்குதலுக்குத் தயாராகுங்கள்: யுத்தக் கப்பலுக்கு அமெரிக்கா உத்தரவு

20/10/2017 வடகொரியா மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்குமாறு அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கடற்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு கப்பல் ஒன்றுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
‘தோமாஹோக்’ ரக ஏவுகணையை வடகொரியா மீது ஏவத் தயார் நிலையில் இருக்குமாறு பெயர் குறிப்பிடப்படாத அக்கப்பலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அணுவாயுதப் போர் விளிம்பு நிலையில் இருக்கும் நிலையில், இந்த உத்தரவால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமான போர் எந்தக் கணத்திலும் ஆரம்பமாகும் சூழல் தோன்றியுள்ளது.  நன்றி வீரகேசரி





No comments: