நம்மை நிறைக்கட்டும் அந்த ஒளி - பவித்ரா

.

இருளிலும் இருளாக இருக்கும் ஐப்பசி அமாவாசை நாளில் இந்த உலகை ஒளியால் நிரப்பும் நாளாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீப ஒளியின் பண்டிகையாக இருக்கும் தீபாவளியை இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களும் நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். வண்ண வண்ண ஒளிகளால் ஒவ்வொரு இதயமும் நிறையும் நாள் இது.
நரகாசுரனை கிருஷ்ணனும் சத்தியபாமாவும் சேர்ந்து கொன்ற தினமாக இந்துக்களால் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மகாவீரர் மோட்சத்தை அடைந்த தினமாக சமணர்களால் தீபாவளி அனுசரிக்கப்படுகிறது. அவரது கடைசி சம்வாதம் நடந்த அந்த நாள்தான் உத்தரதியாயன் சூத்திரம், விபாக் சூத்திரத்தை இந்த உலகுக்கு அளித்தார். அசோகர் பவுத்த சமயத்துக்கு மாறிய நாளை தீபாவளியாக பவுத்தர்கள் கொண்டாடுகின்றனர்.
பன்டிச்சோர் திவாஸ் என்ற பெயரில் சீக்கியர்கள் தங்களது ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளைத் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். அவருடன் சேர்ந்து 52 இந்து மன்னர்களையும் முகலாயப் பேரரசர் ஜஹாங்கிர் விடுவித்த நாள் அது. வீடுகள், குருத்வாராக்களில் தீபங்கள் ஏற்றி பட்டாசு, விருந்து, பரிசுகளுடன் குடும்பமாக சீக்கியர்கள் இந்நாளைக் கொண்டாடுகின்றனர்.


ஆத்மாவைத் தேடி

இந்தியாவில் புராதனமாகக் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையைப் பற்றிய குறிப்புகள் பத்ம புராணம், ஸ்கந்த புராணம் போன்ற பழைய நூல்களில் காணப்படுகின்றன. ஏழாம் நூற்றாண்டில் மன்னர் ஹர்ஷர் எழுதிய சம்ஸ்கிருத நாடகமான நாகானந்தாவில் தீபாவளி, தீபப்ரதிபதுத்சவா என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாகவும் திருமணத்துக்கு நிச்சயமான மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் பரஸ்பரம் அந்நாளில் பரிசுகள் வழங்கும் நாளென்றும் கூறப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காவிய மீமாம்சையில் தீபாவளி, தீபமாளிகா என்று குறிப்பிடப்படுகிறது. அந்நாளில் வீடுகள் வெள்ளையடிக்கப்பட்டு, தெருக்களிலும் சந்தைகளிலும் எண்ணெய் தீபங்கள் ஏற்றப்பட்டிருக்கின்றன. பாரசீக யாத்திரிகர் அல்புரூணியின் பதிவுகளிலும் தீபாவளியைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அகத்திலும் புறத்திலும் அறிவின் ஒளியைக் கொண்டுவருவதற்கான அடையாளம் தீபாவளி. வெளியில் ஏற்றப்படும் விளக்குகள் அனைத்தும் எண்ணெயும் திரியும் தீர்ந்தவுடன் ஒளியை இழந்துவிடும். நமது இளமையும் நாம் சேர்க்கும் செல்வமும் நிரந்தரமற்றவை என்பதையும் தீபாவளி உணர்த்துகிறது. தியானத்தின் வழியாகவும் ஞானத்தின் வழியாகவும் உள்ளே ஏற்றப்படும் ஒளி எப்போதும் சுடர் விடும். நம் அனைவரையும் மறைத்துக்கொண்டிருக்கும் அறியாமை, மயக்கங்களிலிருந்து நித்தியமான ஆத்மாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்லட்டும் தீபாவளி.
எல்லா உயிர்களிலும் எல்லாப் படைப்புகளிலும் நம்மைக் காணும் விழிப்புணர்வையும் நேசத்தையும் வளர்ப்போம்.

nantri 

tamil.thehindu.com

No comments: