மாத்தளையிலிருந்து புறப்பட்டு கண்டிவந்து, அங்கிருந்து நீர்கொழும்பு வந்து இறங்கியதும், நண்பர் நுஃமானுடன் தொடர்புகொண்டு சுகமாக வந்து சேர்ந்துவிட்டதாகச்
சொன்னேன்.
அவர்தான் முதல்நாள் என்னை பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து
கண்டி பஸ்நிலையத்திற்கு அழைத்துவந்தவர். துரைமனோகரனும் உடன் வந்து மாத்தளை செல்லும்
பஸ்ஸில் ஏற்றிவிட்டார்.
மாத்தளையில் உறவினர்களை பார்க்கச்சென்று, மறுநாள் அதிகாலை புறப்பட்டு, ஊர் திரும்பியதும் வழியனுப்பியவருக்கு
சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நுஃமானைத்தொடர்புகொண்டதும், அவர் " எங்கள் நாடு
முன்னேறவில்லை என்று யார் சொன்னது...? நேற்றுக்காலை கொழும்பில் மதியம் பேராதனையில்,
மாலையில்
கண்டியில், இரவு மாத்தளையில், மறுநாள் காலை நீர்கொழும்பில், ஆகா.... இலங்கையில்
பொதுப்போக்குவரத்தின் வேகம் அசத்துகிறது" என்றார்.
அவர் சொல்வதும் உண்மைதான். அகலப்பாதைகளுடன் போதியளவு போக்குவரத்து வசதிகளும் இருப்பதனால் நாம் போகவேண்டிய ஊர்களுக்கு துரிதமாகச்செல்ல
முடிகிறது.
" ஊரெல்லாம் சுத்துகிறீர்கள். யார் யாரையெல்லாமோ சென்று
பார்க்கிறீர்கள். எங்கள் ஊரில் குடியிருக்கும் தெய்வங்களையும் ஒரு எட்டில் வந்து பாருங்களேன்."
என்றாள் தங்கை.
" அவர்களுக்கு என்ன குறை....? எந்தக்குறைவுமின்றித்தானே
திருவிழாக்கள் செய்கிறீர்கள். மேலும் மேலும் அவர்களுக்கு இருப்பிடங்கள் கட்டுகிறீர்கள்."
என்றேன்.
" இன்று எங்கள்
பிள்ளையார் கோயிலில் வைகாசி விசாகம் பூசைக்கு சொல்லியிருக்கிறோம். அங்கிருக்கும் அண்ணனையும்
தம்பியையும் பார்த்துவிட்டுப்போங்கள்"
ஒரு மாம்பழத்திற்காக சண்டை பிடித்த சகோதரர்களையும் தங்கையின்
வேண்டுகோளினால் தரிசிக்கச்சென்றேன். அன்று இரவே திருகோணமலைக்கு புறப்படுவதற்காக கொழும்புக்குச்சென்றேன்.
திருகோணமலைக்கு முன்னரும் சில தடவைகள் சென்றிருந்தாலும், தம்பலகாமம் செல்லவேண்டும் என்ற
எனது நெடுநாள் ஆசையை இந்தத்தடவை பயணத்தில் பூர்த்தி செய்வதற்கு விரும்பியிருந்தேன்.
எமது கல்வி நிதியத்தின் ஊடாக உதவிபெற்று கிழக்கு பல்கலைக்கழகத்தில்
தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, தற்பொழுது
கொழும்பு பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராக பணியாற்றும் செல்வி நாகராணி மனோகரலிங்கம்
தம்பலகாமத்தைச்சேர்ந்தவர்.
இந்தப்பயணத்தில்
என்னை வந்து பார்த்தவர். வெள்ளப்பெருக்கு அநர்த்தத்தில் இவரது குடும்பமும் பெரிதும்
பாதிப்புற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரவீந்திரநாத் துணைவேந்தராக இருந்த
காலப்பகுதியில் அவரால் தெரிவுசெய்யப்பட்ட பல மாணவர்களில் இவரும் ஒருவர். இம்மாணவர்களுக்கு எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம்
உதவியது. அவர்கள் அனைவரும் பட்டதாரிகளாகிவிட்டதுடன், தொழில் வாய்ப்புகளும் பெற்றனர்.
நான், இந்தத்தடவை திருகோணமலை, சம்பூர், தம்பலகாமம் முதலான
பகுதிகளுக்கு செல்லவிருந்தமையால், செல்வி நாகராணியே தொடர்புகொண்டு கொழும்பிலிருந்து
செல்லும் பஸ்ஸில் எனக்கு ஆசனம் பதிவுசெய்து தந்தார்.
வார விடுமுறையில் அவருக்கு ஓய்வு இருந்தமையால், என்னுடன்
பயணித்தார். அவர் வெள்ளப்பெருக்கினால் மாத்திரம் பாதிப்புற்றவர் அல்ல. அவரது மூன்று சகோதரர்களும் நோய்வாய்ப்பட்டு குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர். அவ்வாறு அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்த அவரது
பெற்றோர்கள் தாம் நம்பியிருந்த கடவுளுக்கு
நேர்த்தி வைத்து பிறந்தமையால் தனக்கு நாகராணி என்றபெயரை சூட்டியதாக அவர் சொன்னபொழுது
நெகிழ்ந்துவிட்டேன்.
" அய்யா... எங்கள் ஊர் தம்பலகாமம்தான். அங்கு வாழும்
பழங்குடி இனத்தவர்களான குறிசொல்லும் மக்களை சந்திக்கவேண்டும் என்ற உங்களது நெடுநாள்
விருப்பம் இம்முறை நிச்சயம் நிறைவேறும். எனது தம்பி ரஞ்சன் ஓட்டோ வைத்திருக்கிறான்.
நாங்களே உங்களை அந்தக்கிராமத்திற்கு அழைத்துச்செல்வோம்." என்றார் நாகராணி.
அதிகாலை திருகோணமலையில் இறங்கியபோது அவரது தம்பி ரஞ்சன் எமக்காக
தமது ஓட்டோவில் காத்திருந்து அழைத்துச்சென்றார். அவர்களின் கிராமத்தின் பெயர் முள்ளியடி.
தம்பலகாமத்திலிருக்கிறது. சுநாமியின் அடையாளம் அவர்களின் வீட்டில் தெரிந்தது.
மதியம், " அய்யா, நுங்கு சாப்பிடுகிறீர்களா...?
" எனக்கேட்டார் நாகராணியின் தம்பி ரஞ்சன். ஓட்டோவும் செலுத்துகிறார். அத்துடன், திருகோணமலையில் அமைந்திருக்கும் கிழக்கு மாகாண சபையின் நிருவாகத்திலிருக்கும் சபை
உறுப்பினர்கள் வந்து தங்கிச்செல்லும் விடுமுறைகால விடுதியின் பராமரிப்பாளரும் அவர்தான்.
" அய்யா நுங்கு சாப்பிடுகிறீர்களா...?" எனக்கேட்டதும்
" இங்கும் பனைமரம் இருக்கிறதா...?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
" இங்கும் பனைமரம் இருக்கிறதா...?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
கர்பகத்தரு எனச்சொல்லப்படும் பனைமரத்தை நான் எனது 12 வயதில்தான்
முதல் முதலில் பார்த்திருக்கின்றேன். வடமாகணத்தினதும் ஈழத்தமிழர்களினதும் அடையாளமாகவும்
குறியீடாகவும் பனை மரத்தை இலக்கியத்திலும் அரசியல் பதிவுகளிலும் சொல்கிறார்கள்.
இவை சார்ந்த நூல்களின் முகப்பிலும் பனைமரம் தவிர்க்கமுடியாதது.
கார்மேகம் எழுதிய ஈழத்தமிழர் எழுச்சி, ஜெயமோகனின் ஈழ இலக்கியம்,
செ. யோகநாதன் தொகுத்த வெள்ளிப்பாதசரம் நூல், ரஜனி திராணகம எழுதிய முறிந்த பனைமரம் முதலானவற்றிலெல்லாம்
பனைமரம்தான் முகப்பில் இடம்பெற்றது.
" பனைமரம் இங்கும் இருக்கிறது அய்யா." எனச்சொல்லிக்கொண்டு தனது ஓட்டோவில்
அவர் புறப்பட்டுச்சென்று இரண்டு பெரிய குலைகளுடன் வந்தார்.
அதற்குச் சில தினங்களுக்கு முன்னர்தான், வடமராட்சி பாராளுமன்ற
பிரதிநிதி சுமந்திரன், யாழ் வருகை தந்திருந்த
பிரதமர் ரணிலை தமது வீட்டுக்கு வரவழைத்து நுங்கும் இளநீரும் தந்து உபசரித்த
செய்தியையும் ஊடகங்கள் அரசியலாக்கியிருந்தன.
"காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்காக நாம் போராடுகின்றோம். எங்கள் குறைகேட்க
பிரதமருக்கு நேரம் இல்லை. சுமந்திரன் வீட்டில் நுங்கு சாப்பிடுவதற்கு மாத்திரம் நேரம் இருந்ததா...? " என்ற செய்தியை யாழ்ப்பாணத்தில்
நின்றபொழுது பார்த்தேன்.
கோடைகாலத்திற்கு மிகவும் உகந்த நுங்கு சாப்பிட்டாலும் அது உடலுக்கு குளிர்மைதான். பிரதமரை சுமந்திரன்
குளிர்மைப்படுத்துவதற்கு வேறு ஏதும் கொடுக்கவில்லைத்தானே...? அவ்வாறு கொடுத்திருந்தாலும்
அதுவும் குற்றம் இல்லையே. ஈழத்தமிழர்கள் உபசரிப்பதில் முன்னுதாரணமானவர்கள்.
அவர்கள் எங்கிருந்தாலும் அந்த இயல்பிலிருந்து மாறாதவர்கள்.
அன்று நெடுநாளைக்குப்பின்னர் தம்பலகாமம் முள்ளியடி
நுங்கை விரும்பிச்சாப்பிட்டேன். அன்று மதியம் மூதூருக்குச் சமீபமாக கிண்ணியாவிலிருக்கும்
பளிங்கு கடற்கரைக்கும் ( Marble Beach) நாகராணியும் அவர் தம்பி ரஞ்சனும்,
நாகராணியின் வருங்காலக்கணவர் சிந்துஜனும் அழைத்துச்சென்றனர்.
அனைத்திலங்கை மக்களுக்கு
மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்து செல்பவர்களுக்கும் இந்தக்கடற்கரைக்குளிப்பு பரவசம்தான்.
மூதூர் பிரதேசம் இலங்கை அரசியலிலும் முக்கியத்துவம் பெற்றது.
ஐ.நா. சபை வரையில் இன்றும் பேசப்படும் இந்தப்பிரதேசத்தில்
இனநெருக்கடியும் உக்கிரமடைந்திருந்தது. இன்று அங்கு தென்னிலங்கை சிங்கள மக்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது. நாம் பளிங்கு கடற்கரையில் நீராடச்சென்றபோது அங்கிருந்த
பாதுகாப்புத்துறையின் விழிப்பையும் அவதானிக்க முடிந்தது.
திருகோணமலையில் மூன்று நாட்கள் நின்றவேளையில் எனது நலன்களில்
மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார் நாகராணியின் தம்பி ரஞ்சன். ஒரு தந்தைக்கு காட்டும்
பரிவினை அவர் என்னிடம் காண்பித்தார்.
அன்று மாலை நான் பார்க்கவிரும்பியிருந்த தெலுங்கு தேசமக்களின்
கிராமத்திற்கும் அழைத்துச்சென்றார்கள். நூறாண்டுகளுக்கு
முன்னர் அந்தப்பிரதேசத்திற்கு வந்திருக்கும் அம்மக்கள் தமக்குள் தமது மொழியைத்தான் இன்றும் பேசிக்கொள்கிறார்கள்.
முன்னர் கைரேகை பார்த்து குறிசொன்னவர்களை ஒரு கிறிஸ்தவ சமயப்பிரிவினர் வந்து மதமாற்றம்
செய்திருக்கின்றனர்.
மதமாற்றமும் ஒருவகை அரசியல்தான் என்று சில நாட்களுக்கு முன்னர்
நண்பர் கருணாகரன் தேனீயில் எழுதியிருந்த பத்தியை படித்திருப்பீர்கள். இந்த மாற்றம்
இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர்ந்து நாம் வாழும் நாடுகளிலும் கச்சிதமாக நடக்கிறது.
இதுபற்றி விரிவாக எழுதலாம்.
தம்பலகாமத்திலிருந்த குறிசொல்லும் பரம்பரையினர் படிப்படியாக
அந்தத்தொழிலை விட்டு அகன்றுகொண்டிருக்கின்றனர்.
அவர்கள் தற்பொழுது வேறு வேலைகளுக்குச்செல்கின்றனர். வெளிநாடுகளுக்கும்
புறப்பட்டுள்ளனர். குடிசைகள் கல் வீடுகளாகியிருக்கின்றன.
இவர்கள் பற்றி ஆய்வுசெய்யவிருப்பதாக நாகராணி சொன்னார். அந்தக்கிராமத்திற்குள்
நாம் சென்றபோது எம்மை அவர்கள் வியப்புடன் வரவேற்றாலும் மனம்விட்டுப்பேசுவதற்கு தயங்கினர்.
நான் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகவும் குறிபார்க்க விரும்புவதாகவும்
சிந்துஜன், கெளரி என்ற ஒரு பெண்ணிடம் என்னை
அறிமுகப்படுத்தினார். தாம் தற்போது குறி பார்ப்பதில்லை என்றும், தம்மை மதம் மாற்றியவர்கள் கண்டால் ஏசுவார்கள் என்றும்
அந்தப்பெண் தயக்கத்துடன் சொன்னார்.
அதனால் படம் எடுத்துக்கொள்வதற்கும் அவர் விரும்பவில்லை. அவர்களின்
வாழ்க்கையை படிப்பதற்குத்தான் அங்கு சென்றேன். எனக்கும் இந்த கைரேகை , சோதிடத்தில் நம்பிக்கை இல்லை.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தனது வீட்டிற்குள் என்னை
மாத்திரம் அழைத்துச்சென்று கைரேகை பார்த்தார். உள்ளே சென்று ஏடுகள் எடுத்துவந்தார்.
எனது கையில் ஒரு நூலைக்கொடுத்து அதனை பிரித்திருந்த ஏடுகளுக்குள் விடச்சொன்னார். அவர்
சொன்னவாறு விட்டேன்.
எதுவுமே எழுதப்படாத இரண்டு ஏடுகளுக்குள் அந்த நூல் விழுந்தது.
அதனை விரித்துக்காண்பித்து, " அய்யாவின் மனசுல எதுவும் இல்லை. வெளிப்படையானவர்."
என்று சொல்லிவிட்டு, கடந்த காலம் இனிவரும் காலம் யாவும் சொல்லி எனது ஆயுள் காலம் பற்றியும்
சொன்னார். அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
புறப்படும்போது, " உங்களை இந்தத்தொழிலிருந்து விடுபடச்சொல்கிறார்களே...
அப்படியிருந்தும் ஏடுகள் வைத்திருக்கிறீர்களே...?" எனக்கேட்டேன். இந்தத்தொழில்
எமது குல வழக்கம். அதனை எப்படி அய்யா மறப்பது வீட்டுக்குள்ளே பாதுகாக்கின்றோம்"
என்றார்.
எங்கள் ஊரிலும் எமது வீட்டுக்குச்சமீபமாக ஒரு காலத்தில் கடற்கரையோரத்தில்
இந்த சமூகத்தினர் குடிசைகள் அமைத்து வாழ்ந்தார்கள்.
காலப்போக்கில் அவர்கள் இலங்கை சமூகத்துள் கரைந்து காணாமல் போனார்கள்.
அவ்வாறு " தம்பலாகாமத்தில் வசிக்கும் குறிசொல்வோரும்
காலப்போக்கில் மறைந்துவிடுவதற்கான சாத்தியம் இருக்கிறது. அதனால் உமது ஆய்வை விரைவில்
தொடங்கி பூர்த்தி செய்யப்பாரும்" என்று நாகராணிக்குச்சொன்னேன்.
மறுநாள் எமது கல்வி நிதியத்தின் மற்றும் ஒரு பிரதிநிதி நண்பர்
இராஜரட்ணம் சிவநாதனுடன் சம்பூர் பயணமானேன்.
சம்பூர் மகாவித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை
நிவர்த்தி செய்வதற்காக அவுஸ்திரேலியா கன்பரா தமிழ்ச்சங்கம் எமது கல்வி நிதியம் ஊடாக
உதவுவதற்கு முன்வந்திருந்தது.
இதுதொடர்பாகவும் எமது பயணம் திருகோணமலை நோக்கியிருந்தது.
சம்பூர் பிரதேசமும் திருகோணமலைத்தேர்தல் தொகுதிக்குள்தான் வருகிறது. அதனால் இந்தப்பயணத்திற்கு
முன்னர் திருகோணமலை பிரதேச எம்.பி.யும் எதிர்க்கட்சித்தலைவருமான திரு. சம்பந்தன் அய்யாவுடன்
தொடர்புகொள்வதற்கு பலமுறை முயன்றும் அவருடன் பேச முடியாது போய்விட்டது.
வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை
நிலவுகிறது. அத்துடன் ஆயிரக்கணக்கில் பட்டதாரிகள் இதுவரையில் வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
ஊடகங்களில் அறிக்கை விடும் தலைவர்கள் விரைவில் இந்தப்பிரச்சினைகளுக்கு
தீர்வு காணப்பட்டுவிடும் என்றுதான் சொல்கின்றனர். இதுவிடயத்தில் இலங்கை மக்களும் அவர்களுக்காக
உதவமுன்வரும் புலம்பெயர்ந்த மக்களும் கடக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான்.
(பயணங்கள் தொடரும்)
No comments:
Post a Comment