இந்தியாவின் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்
கடும் எச்சரிக்கைகளையும் மீறி வட கொரியா வெற்றிகரமாக புதிய அணுசக்திப் பரிசோதனை
வட கொரியாவின் புதிய ஆறாவது அணுசக்தி பரிசோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்
பிரபல பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷ் படுகொலை..!
வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா ?
இந்தியாவின் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்
04/09/2017 இந்தியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன்
பதவியேற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் முதல் முழுநேர பெண்
பாதுகாப்பு அமைச்சர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் மிகவும் முக்கியமான பதவியான
பாதுகாப்புத்துறையானது நிர்மலா சீதாராமனுக்கு நேற்று
வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகவும் முக்கியமான பொறுப்பானது
இந்திரா காந்திக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஒரு
பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு
வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன்
பெற்றுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம்
செய்யப்பட்டது. இதன்போது 9 பேரை புதியதாக அமைச்சரவைக்கு மத்திய
அரசு இணைத்துக்கொண்டது. பதவி ஏற்றவர்களில் ஏற்கனவே இணை
அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் அமைச்சரவை
அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நிர்மலா
சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை, பியூஸ் கோயலுக்கு ரயில்வே, சுரேஷ்
பிரபுவுக்கு வர்த்தகம், தர்மேந்திர பிரதான் ஏற்கனவே வகித்துவந்த
பெற்றோலியத் துறையோடு திறன் மேம்பாட்டுத்துறையையும் கவனிக்கும்
கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொன். இராதாகிருஷ்ணனுக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த பொறுப்புகளோடு நிதித்துறை (இணை) பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அதே பொறுப்பை
தொடர்வார் என்றும் ராஜ்நாத் சிங் (உள்துறை) மற்றும் சுஷ்மா சுவராஜ்
(வெளியுறவு) ஏற்கனவே அவர்கள் கவனித்து வந்த துறைகளில் நீடிப்பார்கள் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
கடும் எச்சரிக்கைகளையும் மீறி வட கொரியா வெற்றிகரமாக புதிய அணுசக்திப் பரிசோதனை
04/09/2017 வட கொரியா சர்வதேச ரீதியான கடும் அழுத்தத்தையும்
எச்சரிக்கைகளை யும் மீறி தனது ஆறாவது அணுசக்திப் பரிசோதனையை
நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளது.

நீண்ட தூரம் பயணித்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய
வல்லமையைக் கொண்ட ஏவுகணையில் பொருத்தக்கூடிய அணு ஆயுதமொன்றை
வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக வட கொரியா நேற்று
அறிவித்தையடுத்து சர்வதேச ரீதியில் பெரும் பதற்றநிலை
ஏற்பட்டுள்ளது.
தனது நாட்டால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆறாவது அணுசக்திப்
பரிசோதனையை கச்சிதமான ஒரு வெற்றியாக வட கொரியா
குறிப்பிட்டுள்ளது.
இந்த ஐதரசன் குண்டானது அணு குண்டொன்றை விடவும் மிகவும் பலம்
பொருந்தியது என்பதுடன் இதற்கு முன் தன்னால் பரிசோதிக்கப்பட்ட
ஐந்தாவது அணுசக்தி பரிசோதனையுடன் ஒப்பிடுகையில் மேற்படி
அணுசக்திப் பரிசோதனை 5 மடங்கு சக்தி வாய்ந்தது என அந்நாடு
கூறுகிறது.
இதன்போது வெளிப்பட்ட அதிர்வானது இதற்கு முந்திய ஐந்தாவது
அணுசக்திப் பரிசோதனையை விடவும் 9.8 மடங்கு அதிகம் என அந்நாட்டு
அரசாங்க காலநிலை முகவர் நிலையம் தெரிவிக்கிறது.
வட கொரியாவின் இந்த அறிவிப்புக்கு முன்னர் அந்தப்
பிராந்தியத்தில் 6.2 ரிச்டர் பூமியதிர்ச்சியையொத்த விளைவு
அவதானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து வட கொரியா தனது ஆறாவது அணுஆயுதப் பரிசோதனையை
மேற்கொண்டிருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில் அந்நாடு அதனை
தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனை தொடர்பான அறிவிப்பு
அந்நாட்டின் அயல்நாடுகளிலும் உலகளாவிய ரீதியிலும் பெரும்
எச்சரிக்கை நிலையொன்றை தோற்றுவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆறாவது அணு ஆயுதப் பரிசோதனையானது வட கொரியத் தலைவர் கிம்
யொங்- உன்னின் நேரடி உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டதாக
தெரிவித்த வட கொரிய அரசாங்கத் தொலைக்காட்சி, இது அந்நாட்டின் அணு ஆயுத
நிகழ்ச்சித் திட்டத்தில் அர்த்தமுள்ள முன்னடியெடுத்து வைப்பு எனக்
குறிப்பிட்டுள்ளது.
அணு ஆயுத நிறுவகத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள விஞ்ஞானிகளை
நேரில் சந்தித்து கலந்துரையாடிய வட கொரியத் தலைவர், அணு ஆயுதங்கள்
தொடர்பான வழிகாட்டலை வழங்கியுள்ளார்.
தற்போது வட கொரியாவால் பரிசோதிக்கப்பட்டுள்ள ஐதரசன் குண்டானது
ஒரு முழு நகரையே நிர்மூலமாக்கப் போதுமானதாகும் எனத்
தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வடகொரியாவின் இந்த அணு ஆயுதப் பரிசோதனையை
ஜாக்கிரதையுடன் கையாள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அரசியல்
ஆய்வாளர்கள், ஆனால் தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ள அணு
ஆயுதமானது முன்னேற்றகரமானது என்பது தெளிவானதாகும் என்று
கூறுகின்றனர்.
வட கொரியா இதற்கு முன்னர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் மேற்கொண்ட
அணுசக்திப் பரிசோதனையையடுத்து அந்நாட்டுக்கு எதிராக ஐக்கிய
நாடுகள் சபை தடைகளை விதித்ததுடன் அந்நாட்டுக்கு அதனது அணுசக்தி
செயற்பாடுகளை கைவிட வலியுறுத்தி சர்வதேச ரீதியாக கடும்
அழுத்தமும் கொடுக்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில் வட கொரியா அண்மையில் அமெரிக்கா வரை சென்று
தாக்கக் கூடியது என தெரிவிக்கப்படும் ஏவுகணைகளை உருவாக்கிப்
பரிசோதித்திருந்தது.
வட கொரியாவின் புதிய அணு ஆயுதப் பரிசோதனையானது அந்நாட்டின்
புங்ஷி -றி அணுசக்திப் பரிசோதனை தளம் அமைந்துள்ள கில்ஜு பிராந்தியத்தில்
இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டின் அயல்நாடான தென் கொரியாவைச் சேர்ந்த
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த அணு ஆயுதப் பரிசோதனைக்கு முன்னர் நீண்ட தூரம் பயணிக்கக் கூடிய
ஏவுகணையொன்றில் பொருத்தக் கூடிய சிறிய ஐதரசன் குண்டொன்று தன்னிடம் உள்ளதாக
வட கொரியா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வட கொரியாவின் புதிய ஆறாவது அணுசக்தி பரிசோதனைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்
04/09/2017 வட கொரியாவானது அதி சக்தி வாய்ந்த ஐதரசன் குண்டொன்றை நேற்று
ஞாயிற்றுக்கிழமை பரிசோதித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அது
குறித்து உலக நாடுகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன.

அந்நாட்டின் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன் வட கொரியாவின் இந்த
அணு ஆயுதப் பரிசோதனை குறித்து கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வட கொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தடை
விதிப்புகளை உள்ளடக்கி கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் என
அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அனைத்து
இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதுடன் அந்த நாட்டை
முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என தென் கொரிய ஜனாதிபதி
வலியுறுத்தியுள்ளதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்பு சபையில்
இடம்பெற்ற அவசரகாலக் கூட்டமொன்றையடுத்து ஜனாதிபதியின்
பாதுகாப்பு ஆலோசகர் சுங் இயுயி- யொங் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பலமான தந்திரோபாய சொத்துக்களை (செயற்றிறன்
வாய்ந்த அணு ஆயுதங்களை) தென் கொரியாவில் நிலை நிறுத்துவது குறித்து
கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சுங் இயுயி- யொங்
மேலும் கூறினார்.
அதேசமயம் வட கொரியாவின் பிரதான நட்பு நாடான சீனாவும் இந்த அணு ஆயுதப் பரிசோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வட கொரியா தனது அணு சக்திப் பரிசோதனைகள் தொடர்பான சர்வதேச
ரீதியான எச்சரிக்கைகளை அலட்சியம் செய்துள்ளதாக அந்நாடு
தெரிவித்துள்ளது. இந்த அணுசக்திப் பரிசோதனைக்கு சீன அரசாங்கம்
தனது கடும் எதிர்ப்பையும் பலமான கண்டனத்தையும் தெரிவிப்பதாக
அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சால் அதன் இணையத்தளப் பக்கத்தில்
வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியாவுக்கு எதிராக வர்த்தக மற்றும் எண்ணெய் உற்பத்திகள்
தொடர்பான கட்டுப்பாடுகளை உள்ளடக்கி மேலதிக தடைகளை விதிக்க
ஜப்பானிய தலைமை அமைச்சரவை செயலாளர் யொஷிஹைட் சுகா அழைப்பு
விடுத்துள்ளார்.
மேற்படி அணுசக்தி பரிசோதனை மூலம் வட கொரியா ஐக்கிய நாடுகள்
சபையினது தீர்மானங்கள் சம்பந்தமான கோரிக்கைகளையும் சர்வதேச
சட்ட விதிமுறைகளையும் மீறியுள்ளதாகவும் அந்தப் பரிசோதனைக்கு
தாம் பலமான கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் ரஷ்ய வெளிநாட்டு
அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் தலைமைத்துவமானது பிராந்தியத்தில் தீவிரமான
அச்சுறுத்தலொன்றைத் தோற்றுவித்துள்ளது எனவும் இந்த விவகாரம்
தொடர்பில் சம்பந்தப்பட்ட மற்றும் அக்கறையுள்ள அனைத்துத்
தரப்பினரும் உடனடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்
எனவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக அணுஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக வட
கொரியாவால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்புக் குறித்து சர்வதேச சமூகம்
மிகவும் உறுதியான பதிலடியொன்றை வழங்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி
இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேசமயம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜப்பானிய
பிரதமர் ஷின்ஸோ அபேயும் வட கொரியாவுக்கு எதிரான அழுத்தத்தை
அதிகரிப்பது குறித்து தொலைபேசியில் சுமார் 20 நிமிடங்கள்
கலந்துரையாடியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் ஷின்ஸோ அபே அமைதியாக ஆராய்ந்து
வருவதாகவும் வட கொரியாவுக்கு எதிராக எடுக்கக் கூடிய அவசியமான
நடவடிக்கை குறித்து ஏனைய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி
வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவர்
யுகியா அமனோ வட கொரியாவின் பிந்திய அணுசக்திப் பரிசோதனை மிகவும்
வருந்தத்தக்கதாகவும் சர்வதேச சமூகத்தினால் திரும்பத் திரும்ப
விடுக்கப்பட்ட கோரிக்கைகளை மீறுவதாகவும் உள்ளது எனத்
தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
பிரபல பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷ் படுகொலை..!
06/09/2017 பெங்களூரில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர்
இனந்தெரியாதோரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பெங்களூரில் வெளிவரும் லங்கேஷ் எனும் பத்திரிகை ஆசிரியர் கெளரி
லங்கேஷே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

பெங்களூரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து
நேற்று மாலை சுட்டுக் கொல்லப்பபட்டுள்ளார். மாலை 6.30 மணியளவில்
இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது.
மிகவும் துணிச்சலான பத்திரிகையாளராக அறியப்பட்டவர் கெளரி.
அவரை மிகக் கோழைத்தானமாக சுட்டுக் கொன்றுள்ளனர் கொலையாளிகள். வெளியே
போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய கெளரி, காரை விட்டு இறங்கி வீட்டு
கேட்டை திறந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள்
கெளரிக்கு மிக நெருக்கமாக சென்று சுட்டுள்ளனர். 7 முறை அவர் மீது
சுடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக பலியானார்.
கன்னட பத்திரிகையான லங்கேஷ் பத்திரி கையை நடத்தி வந்தவர்
கெளரி. மிகத் தைரியமாக பேசக் கூடியவர், எழுதக் கூடிய வர். யாருக்கும்
அஞ்சாத துணிச்சல்காரர்.
இதனால் அவருக்கு எதிரிகள் அதிகம். குறிப்பாக
மதவெறியர்களிடமிருந்து பெரும் மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன
என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
09/09/2017 வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை
முறியடிக்க இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதை தான்
விரும்பவில்லை எனவும் ஆனால் தான் அவ்வாறான நடவடிக்கையை
முன்னெடுத்தால் அந்த நாள் வட கொரியாவுக்கு மிகவும் துன்பகரமான
நாளாக அமையும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று
முன்தினம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வட கொரியாவின் ஆறாவது மற்றும் அதிசக்தி வாய்ந்த அணு குண்டுப்
பரிசோதனையையடுத்து அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் இராணுவ
பதிலடி தொடர்பில் நிராகரிக்க டொனல்ட் ட்ரம்ப் மீண்டும் மறுப்புத்
தெரிவித்துள்ளார்.
“இராணுவ நடவடிக்கையானது நிச்சயமாக ஒரு தெரிவாக அமையலாம்.
அது தவிர்க்கப்படுமா? எதுவும் தவிர்க்க முடியாதது அல்ல" என
டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
“ நான் இராணுவ வழிமுறையில் செல்லாதிருக்கவே விரும்புகிறேன்"
எனத் தெரிவித்த அவர், “நாம் அதனை (இராணுவ நடவடிக்கையை) வட கொரியா
மீது பயன்படுத்தினால், அது வட கொரியாவுக்கு மிகவும் துன்பகரமான
நாளாக அமையும்" என அவர் தெரிவித்தார்.
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தருணம் இதுவல்ல
என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில், அவரது
அரசாங்கத்தை சேர்ந்த சிேரஷ்ட உறுப்பினர்கள் வட கொரியா தொடர்பான
இராஜதந்திர ரீதியான தீர்வுக்கான கதவு இன்னும் திறந்தேயிருப்பதாக
குறிப்பிட்டுள்ளனர்.
அதேசமயம் சர்வதேச கண்டனங்களையும் மீறி அணுகுண்டுப்
பரிசோதனையை மேற்கொண்டுள்ள வட கொரியா ,ஐக்கிய நாடுகள் சபையின் புதிய
தடைகள் மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு எதிராக கடும்
நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சீனா வட கொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தடைகளை முன்னெடுக்க இணக்கம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா ?
09/09/2017 பெண்ணொருவர் பேஸ்புக் மூலம் தொடர்பையேற்படுத்தி 13 ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் வரதட்சணை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை தந்திரமாக வசூலித்த பின்னர் குறித்த பெண் ஆண்களை மிகவும் தந்திரமாக ஏமாற்றி விடுகிறார்.

32 வயதான ஜரியாபார்ன் புயாயய் என்பர் தாய்லாந்தின் நங் ஹாய் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் இவர் பணம் சம்பாதிக்க புதிய முறையை கையாண்டார்.

பெரும்பாலும் திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் வரதட்சணை வழங்க வேண்டும். ஆனால் தாய்லாந்து பாரம்பரியபடி திருமணம் செய்யும் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை பணம் வழங்க வேண்டும்.
எனவே பணம் சம்பாதிக்க ஜரியாபார்ன் திருமணம் செய்து வரதட்சணை பணத்தை மோசடி செய்ய திட்டம் தீட்டினாள். 13 ஆண்களை தொடர்ந்து திருமணம் செய்தாள். அவர்களிடம் இருந்து வரதட்சணையாக ரூபா.4 இலட்சம் முதல் ரூ 20 இலட்சம்வரை வசூலித்தாள்.
பணம் மட்டுமின்றி கார் மற்றும் லொறி போன்றவற்றையும் வரதட்சணையாகப் பெற்றாள். பின்னர் ஏதாவது ஒரு காரணம் கூறி அவர்களுடன் சேர்ந்து வாழாமல் விவாகரத்துப் பெற்றாள்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் செய்த முறைப்பாடடையடுத்து குறித்த பெண் தாய்லாந்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது சொந்த ஊருக்கு வந்த அவள் தனது பெற்றோருடன் சேர்ந்து பழ வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தாள். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 ஆண்களை திருமணம் செய்திருந்தாள். அழகிய தோற்றம் கொண்ட அவள் ‘பேஸ்புக்‘ சமூக வலைதளத்தில் தனது போட்டோவை பிரசுரித்து அவர்களை வசியம் செய்து திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment