இலங்கையில் பாரதி -- அங்கம் 33 முருகபூபதி
இலங்கையில் பாரதியின் தாக்கம்  கலை, இலக்கியத்திலும் ஊடகத்துறைகளிலும் அதேசமயம் கல்வித்துறையிலும் செல்வாக்குச்செலுத்தியிருக்கிறது.  
பாடசாலைகள் பாரதியின் நாமத்துடன் இயங்கியிருப்பதையும் இயங்கிவருவதையும் காணமுடிகிறது.
கல்வித்தெய்வம் கலைமகளுக்கு மற்றும் ஒரு பெயர் பாரதி. அந்தவகையில் கல்விக்கான கலங்கரைவிளக்கமாகத் திகழும் பாடசாலைகளுக்கும் பாரதியின் நாமம் சூட்டப்பட்டிருக்கிறது.
1908 ஆம் ஆண்டளவில் இன்றைய யாழ்ப்பாணம் பஸ்நிலையத்திற்கு சமீபமாக பாரதி பாஷா வித்தியாசாலை தொடங்கப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் பாரதி தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். பாரதியின் சிந்தனை இலங்கையில் வேரூன்றிய காலம் 1922 என முன்னரே இந்தத்தொடரில் குறிப்பிட்டிருந்தோம்.
அதனால், பாரதி இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னரே யாழ்ப்பாணம் பாரதி பாஷா வித்தியாசாலை தொடங்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.
யாழ்ப்பாணத்தில் அக்காலப்பகுதியில் வாழ்ந்த திருவிளங்க நகரத்தார் எனப்படும் சமூகத்தினரால் சைவமும் தமிழும் இந்தப்பிரதேசத்தில் வளர்க்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட  இப்பாடசாலையை ஸ்தாபித்தவர் சின்னத்தம்பி செட்டியார். 

இதனை அக்காலத்தில் வண்ணார்பண்ணை மேற்கு பெரியகடை பாரதிபாஷா வித்தியாசாலை எனவும் அழைத்தனர். திருவிளங்க நகரத்தார் சமூகத்தினரால் பேணப்பட்ட  (முகாமைத்துவ) இந்தப் பாடசாலை, தொடக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையும், பின்னர் ஐந்தாம் வகுப்புவரையும் இயங்கியது. அரசாங்கம் பாடசாலைகளை சுவீகரித்த காலத்தில் யாழ்ப்பாணம் பாரதி பாஷா வித்தியாசாலையும் அரசுடைமையாகியிருக்கிறது.
இப்பாடசாலைக்கென தர்மசாசனமாக எழுதப்பட்ட கடைத்தொகுதிகளும் இருந்தன. பாரதி நூற்றாண்டு காலத்திலும் இப்பாடசாலை இயங்கியது. அக்காலத்தில் இவ்வாறு கல்விக்கென திருவிளங்க நகரத்தார் தொண்டு செய்தமையால் அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இராமையா செட்டியார் என்பவரின் பெயரில் ஒரு வீதியும் அறிமுகமாகியுள்ளது.
இறுதிக்காலத்தில் இந்தப்பாடசாலையின் தலைமையாசிரியராக இருந்தவர் சைவப்புலவர் க. சிற்றம்பலம். இவர் ஒரு விஷக்கடி வைத்தியருமாவார்.
யாழ்ப்பாணத்தில் இது இவ்விதமிருக்க, மலையகத்தில் குளிர்மையும் பசுமையும் படர்ந்திருக்கும் நுவரேலியா பிரதேசத்தில் தலவாக்கலையில் 1930 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் பாரதி வித்தியாலயம். பின்னாட்களில் தரமுயர்த்தப்பட்டிருக்கும் இந்தக் கல்வி நிறுவனம்,  அண்மையில் தனது 87 வருட அகவையில் தடம் பதித்துள்ளது.
தற்காலத்தில் நுவரேலியா கல்வி வலயத்திற்குள் இயங்கும் இவ்வித்தியாலயம், 1930 இல் சுமார் 20 மாணவர்களுடன்தான் தொடங்கப்பட்டது. ஆரம்பப்பாடசாலையாக இயங்கி, 1992 ஆம் ஆண்டளவில், அதிபர் திரு. ஆர். கிருஷ்ணசாமியின் முயற்சியால் ஆறாம் தரம் வரையில்  உயர்த்தப்பட்டது.
2001 ஆம் ஆண்டில் இங்கு உயர்தரவகுப்பு கலைப்பிரிவும் தொடங்கியது. தற்போதைய அதிபராக திரு. என். விஜயகுமார் பணியாற்றுகிறார்.  அண்மையில்  இவரது தலைமையில் தலவாக்கலை பாரதி வித்தியாலயத்தின் 87 ஆவது ஆண்டு விழா நடைபெற்றபோது இவ்வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உழைத்தவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர். ( ஆதாரம்: தினக்குரல் 26 மே 2017)
இவ்வாறே,  பதுளையிலும்  பாரதி பாடசாலை தொடங்கியிருக்கும் தகவலையும் இங்கு பதிவுசெய்கின்றோம். பதுளை  பசறை வீதியில் 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி பாரதி கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தொடங்கப்பட்டு, சுமார் பத்து ஆண்டுகளில் ( 1967 இல்) பாரதியாரின் பேத்தி விஜயபாரதியும் அவரது கணவர் பேரசிரியர் சுந்தரராஜனும் வந்து நேரில் பார்த்து வியந்திருக்கின்றனர்.
"சேற்றின் மத்தியிலே தாமரை மலர்போன்று,  முட்களின் நடுவே மோகன ரோஜா போன்று ஆழ்கடலிலிலே முத்துப்போன்று திருநெல்வெலி எட்டயபுரத்திலே சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாவுக்கும் பிள்ளையாக பிறந்தார் சுப்பிரமணியன். அவருக்கு எட்டயபுரம் அரண்மனையில் பாரதி பட்டம்  கிடைத்தது. அன்று முதல் அவருக்கு  பாரதி என்ற  பெயரே பிரபல்யமானது. அவர் பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு பாடியிருக்கிறார்."  எனத்தொடங்கும் வரிகளுடன் இந்தப்பாடசாலைகளில் மட்டுமல்ல அக்காலத்தில் தோன்றிய பல பாடசாலைகளிலும் இளம் சிறார்கள் பேச்சுப்போட்டிகளில் மனனம் செய்து பேசியிருக்கிறார்கள்.
 இன்று அவர்கள் பெற்றவர்களாக முதியவர்களாக மாறியிருக்கலாம். அவர்களைத்தொடர்ந்து  அவர்களின் சந்ததியினர் இன்றும் பாரதியின் நாமத்தை மேடைகளில் உச்சரித்துக்கொண்டிருக்கின்றனர்.
வருடம்தோறும் இலங்கையில் தமிழ்ப்பாடசாலைகளில் இடம்பெறும் பேச்சுப்போட்டிகளிலும், கல்வித்திணைக்களத்தினால் நடத்தப்படும் தமிழ்த்தினப்போட்டிகளிலும் பாரதி நிச்சயம் இடம்பெறுகிறார்.
அவ்வாறு நீக்கமற நிறைந்திருக்கும் பெயர்தான் பாரதி.
                                 இலங்கையில்தான் பாரதி இவ்வாறு கல்விநிலையங்களில் தாக்கத்தை செலுத்தினார் என்று நாம் சொல்ல முடியாது. இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பாரதி வாழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுதான் 1994 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் தோன்றிய பாரதி பள்ளி ( Bharathy Academy)
இதனை இங்கு உருவாக்கியவர் கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன். 23 ஆண்டுகளை நிறைவுசெய்துகொண்டு இயங்கிவரும் மெல்பன் பாரதி பள்ளி அண்மையில் நடத்திய நாடகவிழாவில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் இங்கு பயிலும் மாணவர்களில் ஐநூறுக்கும் அதிகமான பிள்ளைகள் கலந்துகொண்டமை சாதனையாக பேசப்படுகிறது.
மெல்பன் பாரதி பள்ளியின் கீதம்
வாழ்க வாழ்க பாரதி பள்ளி
என்றும் வாழ்க வாழ்கவே
எமது மொழி தமிழ் மொழி
இனிமையான தமிழ் மொழி
பழைய மொழி தமிழ் மொழி
பெருமையான தமிழ் மொழி
                               வாழ்க வாழ்க.....
தமிழர் நாங்கள் நாங்களே
தலைநிமிர்ந்து சொல்லுவோம்
தமிழில் நாங்கள் எழுதுவோம்
தமிழை நாங்கள் பேசுவோம்
                          வாழ்க வாழ்க....
என்றும் நாங்கள் தமிழராய்
இந்த நாட்டில் வாழுவோம்
என்றும் நாங்கள் மனிதராய்
நல்ல பண்பு பேணுவோம்
                             வாழ்க வாழ்க...
" தமிழைக்கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை எமது சமூகத்தில் மேலும் ஒரு படி வளர்த்தெடுப்போமானால், நாம் இதில் வெற்றிபெற்றவர்களாவோம். பாரதி பள்ளி, வீச்சுடனும், நேர்த்தியாகவும், சமச்சீராகவும் தொடர்ந்து இயங்கிவரும் ஒரு சமூகப்பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்பதில் அபிப்பிராய வித்தியாசம் இருக்க முடியாது. புலம்பெயர்ந்த சூழலில்  வாழும் தமிழ்ப்பிள்ளைகளுக்காக பாரதி பள்ளி ஆற்றியுள்ள பங்களிப்பு, அவுஸ்திரேலியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. "
இவ்வாறு மெல்பன் பாரதி பள்ளியின் அதிபரும் இயக்குநருமான மாவை நித்தியானந்தன் தெரிவித்துள்ளார். இதிலிருந்து பாரதியின் கனவு எவ்வாறு புலம்பெயர்ந்தோர் வாழும் தேசங்களிலும் கனவாகிறது என்பது புலனாகிறதல்லவா...?
கணினி வழி கற்கை ( e - Learning) நெறியும் மெல்பன் பாரதி பள்ளியில் தொடங்கப்பட்டிருப்பதானது, தற்கால கல்வி முறைக்கு ஏற்ப தொழில் நுட்பம் சார்ந்த நவீன வளர்ச்சிக்குள்ளும் பாரதியும் -  பாரதியின் பக்தர்களும்  நேசித்த தமிழ் சென்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பாரதி இவ்வாறு கல்வியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுபோன்று படைப்பிலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் நூல்களிலும் செல்வாக்குச்செலுத்தியிருப்பதையும் காண முடிகிறது.
பாரதியின் பாடல் வரிகளில் தமிழ்ப்படங்கள் பல வந்துள்ளன.
அதேபோன்று பல நூல்களும் இலங்கையில் பாரதியின் பாடல்வரிகளிலிருந்தே பிறந்திருக்கின்றன.
அக்கினிக்குஞ்சு - தீம் தரிகிட தித்தோம்  -  செங்கை ஆழியான்,  ஒளிசிறந்த நாட்டிலே - ஐ. சாந்தன், ஊருக்கு நல்லது சொல்வேன் - வீரகத்தி தனபாலசிங்கம், தீக்குள் விரலை வைத்தால் - கே. எஸ். ஆனந்தன்,  கனவு மெய்ப்படல் வேண்டும் ( நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை) நல்லதோர் வீணை செய்தே - மனோ ஜெகேந்திரன், பாஞ்சாலி சபதம் - வீ. சீ. கந்தையா, பிணந்தின்னும் சாத்திரங்கள் - சாரல் நாடன், மனதிலுறுதி வேண்டும் -  நினைவு நல்லது வேண்டும் அ. விஷ்ணுவர்த்தினி, உனையே மயல்கொண்டேன் ( நடேசன்)  
இவை தவிர  ஈழத்து பாரதியார் கவிதைகள், சின்னப்பாப்பா பாட்டுக்கள் முதலான நூல்களும் இலங்கையில் வெளியாகியுள்ளன.
பாரதியின் வரிகளில் வெளியான இலக்கிய இதழ்களையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாம்.
அக்கினிக்குஞ்சு என்ற பெயரில் யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலியாவிலும் இலக்கிய இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் அக்கினிக்குஞ்சு தற்பொழுது இணைய இதழாக பதிவாகின்றது. இதன் கௌரவ ஆசிரியராக இருந்தவர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ.) இதன் ஆசிரியர் யாழ். எஸ். பாஸ்கர்.
(தொடரும்)No comments: