கவி விதை - 23 முச்சந்தி நாய் -- விழி மைந்தன் --

.

அந்த முச்சந்தியில் தெரு நாய் ஒன்று நின்றது.

முச்சந்திக்குத் தான் தான் அரசன் என்று நினைப்பு அதற்கு!

போவோர் வருவோரையெல்லாம் பார்த்துக்  குரைக்கும்.  சைக்கிள்களில் போவோரைக் கலைத்துக் கொண்டு போகும்.  சில வேளைகளில், பலவீனமான  முதியவர்கள் அல்லது சிறுவர்களாகப் பார்த்து வாயும் வைத்து விடும்!

அழகான சட்டையணிந்து பெண் பிள்ளையொருத்தி லேடீஸ் பைக்கில் வந்தால் துரத்திக் கொண்டு வீடு வரைக்கும் போகும். இன்னொருத்தி எதிரில் வந்தால் அவளை விட்டு விட்டு இவளைத் துரத்திக் கொண்டு போகும்!

மனிதர்கள் பெரும்பாலும் ஒதுங்கிப் போனார்கள்.

சில பேர் 'அடீக்!' என்று அதட்டி விட்டுப் போனார்கள்.   அவர்கள்  அதட்டினால்  நாய் இன்னும் அதிகமாகக்  குரைத்தது.

சிறுவர்கள் சில வேளைகளில் நாய்க்குக்  கல்லால் எறியப்  பார்த்தார்கள்.  அவர்களின் பெற்றோர் அவர்களைத் தடுத்து அழைத்துக் கொண்டு போனார்கள். 

கொஞ்சம் கோபக்காரனான ஒருவன் ஒருமுறை நாயுடன் சண்டைக்குப் போய்   விட்டான். வேலியில் இருந்து கிளுவந்தடி முறித்து நாய்க்கு நல்ல அடி  போட்டான். நாய்  அவனது சாரத்தை இழுத்துக்  கிழித்தது. ஆடுசதையில் கடித்தது. அவன்  நாயை உதைத்துத் தள்ளினான்.  தள்ளிய வேகத்தில் கால்  சறுக்கி, வீதியோரத்தில் இருந்த சேற்றுக் குட்டையில்  விழுந்தான். நாயும் குட்டையில் இறங்கி  அவனைக்  கடிக்கப் பார்த்தது. இருவரும் குட்டையில் உருண்டு புரண்டார்கள்.  தெருவால்  சென்றவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள். 'நாயோடை  சண்டைக்குப் போன  தம்பிமுத்து' என்று அவனுக்கு ஊரில் பட்டப்பெயரே  ஏற்பட்டு விட்டது அதன் பிறகு. இதன் பின்னால் அவன் அந்தச் சந்திப் பக்கம் வருவதேயில்லை.

இதன் பிறகு அந்தச் சந்தியில் எல்லோரும் கவனமாகத் தான்  போவார்கள். நாய் ஒரு  பக்கம் வருவது கண்டால் மறு  பக்கம் போய்  விடுவார்கள்.

இதனாலெல்லாம் நாய்க்கு வெகு  சந்தோசம்.  தன்னுடைய வீரத்துக்குப் பயந்து எல்லோரும் ஒதுங்கிப் போவதாகவும் முச்சந்தியில் தன்  ஆளுகையை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அது நினைத்து விட்டது. 

இன்னும் இன்னும் உத்வேகத்துடன் போவோர் வருவோரைத் துரத்தவும் கடிக்கவும் தொடங்கியது.

நாளடைவில் அந்த முச்சந்தியால் யாரும் போவதைக் குறைத்து விட்டார்கள்.

நாய்க்கோ அலுப்பாக இருந்தது.  தன்  வீரப்  பிரதாபத்தைக் காட்டுவதற்கு முன்பு போல் அதிகம் பேர் கிடைப்பதில்லை. 

நாய் பார்த்தது.

வேறு  வழி இல்லை.

மடிக்கணனி ஒன்று வாங்கி, இணைய இணைப்புக் கொடுத்து, பேஸ்புக்  கணக்கொன்று திறந்து விட்டது.

இப்போது நாளில் இருபது மணித்தியாலம் பேஸ்புக்கில்  இருக்கிறது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் கலைத்துக் கலைத்துக்  கடிக்கிறது.

பேஸ்புக்கிலும்  பெரும்பாலான மனிதர்கள்  நாயுடன் சண்டைக்கு வருவதில்லை. தெருவில் ஒதுங்கியதை விட அதிகமாகவே ஒதுங்கிப்  போகிறார்கள்.  ஏனென்றால், தெருவில் நாயுடன் சண்டை பிடிப்பதை நாலு பேர் பார்த்தால்  பேஸ்புக்கில் நானூறு பேர்  பார்ப்பார்கள். அவமானம் நூறு மடங்கு அதிகம்.  அதனால் கடி வாங்கிய மனிதர்கள் கூட ஒதுங்கி ஓடி விடுகிறார்கள். 

நாய்க்கோ  ஒரே குஷி!

இப்போது நாய்தான் பேஸ்புக்கின் மன்னன்! 

No comments: