.
நேரில் பார்த்தவர்கள் நெஞ்சமகிழ்ந்து குளிர
---தேரில்ஏறி தெய்வத்தின் மார்பிலும் தலையிலும்
வீற்றிருந்த மலர்கள் தான்நாங்கள் எனினும்
---கற்றறிந்து பூவின் கண்ணீர் துளியதையறிவீர்.!
பூக்களைப் பாடாத புலவருண்டோ புவியில்
---பூக்களின் வாசமதில் வகையாகும் சிந்தனையில்
புவியில் எழுச்சியுறும் கவிகள்பலர் பிறந்தனர்
---பூவுக்கும் உணர்வுண்டு உணர்ச்சியுண்டு கேளீர்.!
பூவைப் பூவையரோடு ஒப்பிடாத கவிஞரிலர்..
---புவியில் தோன்றியதில் போற்றுவதும் பூவினம்தான்
இன்று புதிதாகப் பிறந்தோமென்றான் மஹாகவி
---இதற்குமிகப் பொருத்தம் பூவென்றால் மிகையாகா.!
முதலிரவில் பூக்கள்மேல் காதலர்கள்கண்டு களித்தாலும்
---பகலிரவு போலென பகட்டான ஒருநாள்வாழ்வில்.!
இன்னலுறும் வாழ்வினி வேண்டா வென
---பின்னெழும் உளமதிலே யொருவைர வைராக்கியம்.!
மலர்ந்தால் தானேதுன்பம் மலராமல் இருந்தால்.?
---மனதுக்குள்ளே மலரும் நித்தமொரு போரட்டம்.!
சூடுவதற்கென்றே விழாக்கள் பலகண்ட பூக்களினம்..
---வாடுவதற்கே வாழ்க்கை விதியும் நியதியுமாம்.!
பிறப்பு இறப்பென பேதமெமக்கில்லை யெனினும்..
---பிறந்த நாளென வாழ்த்துண்டா எனக்கென.?
கழுத்தோடு மாலையாக மகிழ்வாக உறவாடி..
---காதோடு பேசுமெம் வேதனையதை யார்தானறிவர்.!
பெருவை பார்த்தசாரதி
Nantri நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு 19-06-17
No comments:
Post a Comment