பயணியின் பார்வையில் அங்கம் -- 04 - முருகபூபதி

.
கலை, இலக்கிய ஊடகத்துறை  சார்ந்தவர்களுடன் சந்திப்பு
"ஆணவம்  மிஞ்சினால்  கோவணம்தான் மிஞ்சும்"
           
                                                         
இலங்கையில் அதிகாலையிலேயே துயில் எழுந்துவிடும் பழக்கம் வழக்கமாகியதனால் தங்கை வீட்டருகிலிருக்கும் கடற்கரையோரமாக நடந்துவிட்டு, சற்றுத் தொலைவில் எங்கள் ஊர் பீச் என அழைக்கப்படும் கடலோரம் சென்று, பின்னர் கடைத்தெருப்பக்கம் வந்து தமிழ்த் தினசரிப்பத்திரிகையொன்றை வாங்கிக்கொண்டு திரும்பினேன்.
வீதியோரத்தில் கையில் ஒரு தமிழ்ப்பத்திரிகையுடன் நின்ற ஒரு முதியவர்," ஆணவம் மிஞ்சினால் கோவணம்தான் மிஞ்சும்" எனச்சொன்னது கேட்டது.
அவரது எதுகை மோனையுடனான வசனம் என்னைத்தொடர்ந்து நடக்கவிடாமல் தடுத்து நிறுத்தியது. வாழ்வின் தரிசனங்கள்தானே நாம் எழுதும் படைப்புகள்.
அன்றைய காலைத்தரிசனத்திலும் எனக்கு ஒரு கதை கிடைக்கலாம் என்பதனால் அந்த முதியவர் அருகில் வந்தேன்.
அவர் ஆழ்ந்த பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு அருகில் வந்த என்னை உற்றுநோக்கினார். தமது மூக்குக்கண்ணாடியை கீழே தளர்த்திக்கொண்டு, என்னைப்பார்த்துச் சிரித்தார்.
நானும் எமது அவுஸ்திரேலியா பாணியில், " காலை வணக்கம் அய்யா...? எப்படி இருக்கிறீர்கள்...? " என்றேன்.
அவரைப்பொறுத்தவரையில் நான் எமது சொந்த ஊருக்குப்புதுமுகம்.
" நான் நல்ல சுகம் தம்பி. ஆனால்,  எங்கட தமிழ்த்தலைவர்மாருக்குத்தான் நல்ல சுகம் இல்லை." என்றார் அவர்.
" ஏனய்யா...?"




" பாரும் தம்பி... கிடைச்சதையும் சரியாச்செய்யாமல் அடிபடுறான்கள்."
அந்த அய்யாவின் பேசுபொருள் இலங்கையின் வடமாகாண சபையில் நடக்கும் அமளிதுமிளிதான் என்பது புரிந்தது.
எனக்கு இலங்கை அரசியல் பேசுவதற்கு உகந்த தருணமாக அந்தக்காலைப்பொழுது அமையக்கூடாது என்பதனால், பேச்சை மேலே தொடராமல், " ஆணவம் -- கோவணம்..." என்று ஏதோ சொன்னீர்களே அய்யா..? அது என்ன...? எனக்கேட்டேன்.
அவர் வாய்விட்டுச்சிரித்தார். " ஓம் தம்பி... முன்பு எங்கட தமிழ்த்தலைவர்மார் அகிம்சை அரசியல் பேசினார்கள். அது பிடிக்காத தம்பிமார் ஆயுத அரசியல் பேசினார்கள்.  எங்கட சனமும் இயக்கங்களும் அழிஞ்சாப்பிறகு, " இனிமேல் இராஜதந்திர அரசியல்" என்றார்கள். இப்ப என்னடாவென்று பார்த்தால் ஆணவ அரசியல் பேசுறான்கள். ஆணவம்  மிஞ்சினால் கோவணம்தானே மிஞ்சும்" என்று சொல்லிவிட்டு உரத்துச்சிரித்தார்.
நான் பார்த்த  அவரது காவிப்பற்களிலும் எனக்கு  எமது  தமிழ் அரசியல் காவியம்தான் தெரிந்தது.
" அய்யா... எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல, தன்னால்  முடிந்ததைச்செய்யாமல் இருப்பவனும் சோம்பேறிதான். அதுதான் இப்ப இங்க நடக்கிறது" என்றேன்.
அதற்கு மேல் அவருடன் பேச்சைத்தொடராமல் அங்கிருந்து நகன்றேன்.
 "எங்கோ இருக்கும் ஹிலறி கிளின்டன், ஜனாதிபதித்  தேர்தலில் வெல்லவேண்டும் என்பதற்காக  நல்லூர்க்கந்தனுக்கு ஆயிரத்தெட்டுத்தேங்காய் உடைத்தவர்களைத்தானே எங்கள் மக்கள் வடமாகாண  சபைக்குத்தெரிவுசெய்திருக்கிறார்கள்.  எங்கள் தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சிங்கள பேரினவாதத்தினால் வெறுப்புற்றுச்சொன்னார்  தந்தை  செல்வநாயகம்.
இனிவரும்காலத்திலும் எமது தமிழ் மக்களை தமிழ்த்தலைவர்களின் ஆணவத்திடமிருந்து கடவுளே காப்பாற்றட்டும்." என்று எனக்குள் சொல்லிக்கொண்டு நடந்து சென்றேன்.


விசா பெற்றுவரும் ஒரு இரவல் தாய்நாட்டில் எம்மால் என்னதான் செய்யமுடியுமோ அதனையாவது நாம் சரியாகச்செய்வோம்.
வடக்கு - கிழக்கு  - தென்னிலங்கை  சந்திப்புகள்
வடக்கு, கிழக்கு உட்பட கம்பஹா மாவட்டத்தில் தந்தையை - தாயை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை போரினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும் பறிகொடுத்த ஏழைத்தமிழ்ச்சிறார்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை அவுஸ்திரேலியாவில் 1988 இல்  சில அன்பர்களின் ஆதரவோடு நான் உருவாக்கிய காலத்திலும் சிலர் விமர்சித்தார்கள்.
போருக்கு பலவந்தமாக இழுக்கப்பட்ட மாணவர்கள் பலர் போர் முடிவுற்றதும், முன்னாள் போராளிகளாக வவுனியா தடுப்பு முகாமிலிருந்தபோது, அவர்களை மீண்டும் கல்வி கற்க அனுப்பி விடுவித்து, பெற்றவர்களிடம் ஒப்படைக்க நிதியம் நடவடிக்கை எடுத்தபோதும் விமர்சித்தார்கள்.
கல்வி நிதியத்தின் செயற்பாட்டு அனுபவத்திலும், கலை இலக்கிய அமைப்புகளில் நீண்ட காலம் ஈடுபட்ட அனுபவத்திலும் 2011 இல் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்காக திரட்டப்படும் நிதியிலிருந்து கணிசமான தொகையில் நலிவுற்ற கலைஞர்கள், எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் நிதியம் ஒன்றை உருவாக்க முனைந்தபோதும்  அவதூறு விமர்சனம் செய்தார்கள்.
இவ்வாறு தாமும் செய்யாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல் தடுக்கும் கும்பல்கள் உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்.
" ஓடுவது எப்படி என்று சொல்லும் முடவர்கள்தானே"  விமர்சகர்கள் என்பதனால் எமது பணியில் ஆக்கபூர்வமாக இணைந்திருக்கும் நல்லெண்ணம் படைத்த இரக்கமுள்ள நெஞ்சங்களின் தொடர்ச்சியான ஆதரவுடன் நாம் இயங்குகின்றோம்.
சமீபத்திய பயணத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களையும், தன்னார்வத்தொண்டர்களையும், அதேசமயம் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ( சிங்கள எழுத்தாளர்கள் உட்பட), ஊடகவியலாளர்களையும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்புகள் பெருகியிருந்தன.
கம்பஹா, மினுவாங்கொடை, ராஜகிரிய, ஶ்ரீஜயவர்தனபுர, கொழும்பு, நீர்கொழும்பு உட்பட பல தென்னிலங்கை பிரதேசங்களுக்கும், வடக்கில் யாழ்ப்பாணம், மாதகல், கோண்டாவில், நல்லூர், வடலியடைப்பு, வடமராட்சியில் சில ஊர்கள், வன்னியில், வவுனியா, செட்டிகுளம், நெழுக்குளம், வீரபுரம், முல்லைத்தீவு, விசுவமடு, கிளிநொச்சி மாவட்டம், கிழக்கில் திருக்கோணமலை, மூதூர், சம்பூர், மட்டக்களப்பு மாவட்டம், அம்பாறை மாவட்டம் எங்கும் பயணித்து, கண்டி, மாத்தளைக்கும் சென்று,  பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்கள், மற்றும் பேராசிரியர்களையும் சந்தித்து, சமூகப்பணியாளர்கள், மற்றும் இலக்கிய ஊடகத்துறையினருடனான சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, இலங்கை வானொலியிலும் ஒரு காலைப்பொழுதில் நேரடி ஒலிபரப்பு நேர்காணலிலும் பங்குபற்றி தொடர்ச்சியான இந்தப் பயணத்தை நிறைவுசெய்யும் வேளையில் எனக்கு ஓர் உண்மை இங்கு தெளிவானது.
இன்றைய நவீன தொடர்பூடக சாதனங்கள் பெருகியிருக்கும் யுகத்தில் எம்மவர் மத்தியில் நேரடி தொடர்பாடல்  மந்த கதியிலிருக்கிறது. சிலரது மறைவு சிலருக்குத்தெரியவில்லை. பல மூத்த எழுத்தாளர்களுக்கு கணினி இன்னமும் வரப்பிரசாதமாகவில்லை. உலகில் இலக்கியத்திற்காக எத்தனை இணையத்தளங்கள் இயங்குகின்றன என்பது தெரியவில்லை. பலரிடம் மின்னஞ்சல் இல்லை. இருந்தாலும் அவற்றை ஒழுங்காகப்பார்ப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் எழுத்தாளர்களிடமும் குறைந்துவருகிறது.
பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்களிடம் வாசிப்பு பயிற்சி அருகிவருகிறது. பலரும் முகநூல்களுக்கு மாத்திரம் அடிமைகளாகியிருக்கின்றனர். தாம் சம்பந்தப்பட்ட படங்களை பதிவேற்றுவதில் மாத்திரம் ஆர்வமாக இருக்கின்றனர்.
சமூகம், ஊடகம், மற்றும் கலை, இலக்கிய சந்திப்புகளில்  பாதகமான (Negative) கருத்துக்களும் சிந்தனைகளும்தான் மேலோங்கியிருக்கின்றன. சாதகமான  ( Positive) கருத்துக்களும் சிந்தனைகளும் மந்த கதியில் உதிர்க்கப்படுகின்றன. பொதுவில் நம்பிக்கையீனம்தான் தொனிக்கிறது. அனைத்துக்கும் அரசியல்தான் அடிப்படை.
எனினும், போரில் பாதிக்கப்பட்ட ஏழ்மைநிலையிலும் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கும் மக்களையும் சந்தித்தேன். ஆனால், அவர்கள் கலைஞர்களோ, எழுத்தாளர்களோ, புத்திஜீவிகளோ, ஊடகவியலாளர்களோ, அரசியல்வாதிகளோ  அல்ல. சாதாரண பொதுமக்கள். அவர்களின் வாழ்வு வளம்பெறட்டும்.
இந்தப்பின்னணியில்தான் இலங்கையில் தொடர்பூடக சாதனங்களின் தீவிர பாய்ச்சலை அவதானித்தேன்.
தற்காலம் கணினியுகத்திலும் தொடர்பூடக சாதனங்களின் நவீனபாய்ச்சலிலும் கடந்துகொண்டிருந்தாலும்,  அச்சில் வெளியாகும் பத்திரிகைகள் இதழ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் ஈழகேசரியும் அதன்பின்னர்  ஈழநாடு மாத்திரமும்  வெளியானது. 1980 இற்குப்பின்னர் ஈழமுரசு, முரசொலி, திசை என்பன வெளியாகி நின்றுவிட்டன. ஆனால், இன்று வடக்கிலிருந்து உதயன், வலம்புரி, யாழ். தினக்குரல், காலைக்கதிர், தீபம், தினசரி என்பன வெளிவருகின்றன.
டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியால் வெளியிடப்பட்ட தினமுரசு கடந்த பாராளுமன்றத்தேர்தலுடன் மறைந்துவிட்டது. வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் ஊடகக்கல்லூரிகள் தோன்றியிருக்கின்றன.
இளம்தலைமுறையினர் ஆர்வமுடன் இந்தத்துறையில் ஈடுபாடு காண்பிக்கின்றனர்.
கொழும்பில்  தமிழ், சிங்கள, ஆங்கில நாளிதழ்களும் வார இதழ்களும் பெருகியிருக்கின்றன. தமிழில் வீரகேசரி, மித்திரன், மெட்ரோ, வானவில், ஜீனியஸ், தினக்குரல், தினகரன், தமிழ்மிரர், நவமணி, விடிவெள்ளி, சுடரொளி என்பன வருகின்றன.


சுட்டி, அன்னை முதலான சிறுவர் பத்திரிகைகளும் வெளிவருகின்றன.
சுருக்கமாகச்சொன்னால் தற்பொழுது இலங்கையில் மும்மொழிகளிலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பத்திரிகைகள், இதழ்கள் வெளியாகின்றன.
கொழும்பில் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம்  நீண்டநெடுங்காலமாக  வெளியிடும்  வீரகேசரியுடன் மேலும் சில பத்திரிகைகளும் வந்துகொண்டிருக்கின்றன.
அத்துடன்   வெளிநாட்டு வாசகர்களுக்காகவும் வெளிநாடுகளில் இயங்கும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெறும்வகையிலும் அங்கு வந்து தங்கிச்செல்லும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளினது தேவைகருதியும்  Daily Express, Weekend Express முதலான பத்திரிகைகள் அங்கிருந்து  வெளிவருகின்றன.
எமது நீண்டகால வீரகேசரி இலக்கியச்சகோதரி திருமதி அன்னலட்சுமி இராஜதுரையின் கணவர் மறைந்து சுமார் ஒருமாதகாலத்தின் பின்னர் நடந்த அந்தியேட்டி விருந்தில் கலந்துகொண்டேன்.
இராஜதுரையும் எனது நீண்டகால நண்பர். அதனால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்திருந்த அன்னலட்சுமி அவர்கள், தமது கணவர் குறித்து இரங்கலுரையாற்றுமாறும் கேட்டிருந்தார்.
நிகழ்ச்சி நடக்கும் இடத்தைத் தேடிவிசாரித்துக்கொண்டு, நண்பர் பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஶ்ரீதரசிங்குடன் சென்றிருந்தேன். எதிர்பாராதவிதமாக அடைமழைபொழிந்தது.
கொழும்பு மாநகரசபையின்  முன்னாள் உறுப்பினர் கங்கைவேணியன் பிரார்த்தனையை தொடக்கிவைத்து, வரவேற்புரை நிகழ்த்தினார். இராஜதுரை அவர்களின் சிறப்பியல்புகள் பற்றிப்பேசினேன். ஒவ்வொரு ஆணினதும் வெற்றிக்குப்பின்னால் இருந்த பெண்கள் பற்றித்தான் எமது சமூகம் தொடர்ந்து பேசிவருகிறது.
ஆனால், பல பெண்களின் வெற்றிகரமான வாழ்விற்கும்  சாதனைகளுக்கும் பின்னாலும் பல ஆண்கள் ( கணவர் - தந்தை) இருந்திருக்கிறார்கள் என்பது பற்றி எவரும் பேசுவதில்லை.
அமரர் இராஜதுரை அவர்கள், அன்னலட்சுமி அவர்களுடன் இணைந்த காலம் முதல் அவரது அனைத்து இலக்கிய - ஊடகப்பணிகளுக்கும் பக்கபலமாக இருந்தவர். மனைவி தொழில் நிமித்தமும் இலக்கியப்பணிகள் தொடர்பாகவும் இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்ற வேளைகளில் உடன் சென்று அமைதியாக நிகழ்ச்சிகளை அவதானித்தவர்.
அதிர்ந்துபேசத்தெரியாத அமைதியே அவரது ஆளுமையாக எனக்குத்தென்பட்டிருக்கிறது.  அவரைப்பற்றிச்  சில நிமிடங்கள் அந்த நிகழ்வில் உரையாற்றினேன்.
இலங்கையில் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் தேர்தல்கள் தொடர்ந்தும் நல்லிணக்க அரசினால் தாமதிக்கப்படுவதில் பொதிந்திருக்கும் அரசியல் குறித்து நாம் பேசவேண்டாம். வேலைணை வேணியன், பாஸ்கரா ஆகியோர் மனோ கணேசனின்  ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபையில் அங்கம் வகித்தவர்கள்.
பாஸ்கராவை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சந்தித்தேன். இரண்டு இடங்களிலும் அவரை  வழக்கம்போல்  அவரது சைக்கிள் சவாரியில்தான்  சந்தித்தேன். அவரைப்பார்க்கும்தோறும் எனக்கு எங்கள் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பட்தான் நினைவுக்கு வருகிறார்.
கொழும்பில்  ஒருநாள் மாலை கடும் மழை பொழிந்தது. தெஹிவளையில் காலிவீதியில் போக்குவரத்து நெரிசல். அந்த நெருக்கடியிலும் அவர் தமது துவிச்சக்கர வண்டியை செலுத்தியவாறு காற்றில் தடுமாறும் ஒரு பழைய குடையை கடும்பிரயத்தனத்துடன் பிடித்துக்கொண்டு, நான் பயணித்த பஸ்ஸை பின்தொடர்ந்து வந்து ஓரிடத்தில் சந்தித்து உரையாடினார்.
இருவரும் தொப்பலாக நனைந்தவாறு போருக்குப்பிந்திய சமூகம் பற்றி பேசினோம். பாஸ்கரா, இலங்கைப்போருக்குப்பிந்திய சமூகம் தொடர்பாக ஒரு ஆவணத்தை தொகுத்துக்கொண்டிருக்கிறார்.
கல்வி, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், ஆன்மீகம், தொழில், வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம், முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை, விதவைகள் மறுவாழ்வு, உடல் ஊனமுற்றவர்களின் எதிர்காலம், உட்பட பல துறைகள் சார்ந்தும் விரிவான தொகுப்பு நூல் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் பாஸ்கரா ஈடுபடுகிறார்.
கொழும்பு மாநகர சபை தற்பொழுது இயங்காதிருப்பதனால், அந்த இடைவேளையில் இந்தப்பணிக்காக வடக்கு, தெற்கு, கிழக்கு எங்கும் அடிக்கடி பயணித்துக்கொண்டிருக்கிறார்.
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நடந்த அமரர் இராஜதுரையின் அந்தியேட்டி நிகழ்வில் வீரகேசரி ஆசிரியபீடத்தைச்சேர்ந்த, ஆர், பிரபாகரன், கஜன், நெவில் அந்தனி (விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்) ரேணுகா பிரபாகரன், ஒளிப்படக்கலைஞர் சுரேந்திரன், மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம், முன்னாள் பத்திரிகையாளர் கே. நித்தியானந்தனின் மகள், மருமகன், அரசியல் பத்தி எழுத்தாளர் சட்டத்தரணி இ. தம்பையாவின் மனைவி உதயா ஆகியோரையும், ஞானம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்தில்  நடந்த எழுத்தாளர்கள் - வாசகர் சந்திப்பில், தி. ஞானசேகரன், திருமதி ஞானம் ஞானசேகரன், ஞானம் பாலச்சந்திரன், பேராசிரியர்கள் சோ. சந்திரசேகரம், வ. மகேஸ்வரன், எழுத்தாளர்கள் மேமன்கவி, வசந்தி தயாபரன், பத்மா சோமகாந்தன், சிவனு மனோகரன், பிரமீளா பிரதீபன், வேல் அமுதன், குலமணி, க. சண்முகலிங்கம், ச. முருகானந்தன், செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன், அந்தனிஜீவா,  எம். எம். மன்சூர், உடுவை தில்லை நடராஜா, கே.எஸ். சிவகுமாரன், ந.ரவீந்திரன், தம்புசிவா, தினக்குரல் வார இதழ் ஆசிரியர் ஆர் .பாரதி உட்பட பலரையும் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது.
இவ்வாறு பலரையும் ஓரிடத்தில் சந்திப்பது பயணங்களில் சௌகரியமானது. எனினும் நோய் உபாதைகளினால் வீட்டில் முடங்கியிருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் சிலரையும் வடக்கு கிழக்கிற்கும் மினுவாங்கொடைக்கும் பயணித்து நேரில் சந்தித்தேன்.
அதேசமயம் இலக்கிய உலகில்,  சில முகநூல்காரர்களினாலும் சமூக விமர்சகர்களினாலும் சர்ச்சைக்குரியவராக உருவாக்கப்பட்ட  பெண்ணியவாதி  ஸர்மிலா செய்யத்தையும்  சந்தித்தேன். அவர் தாம் பணியாற்றும் மந்த்ரா லைஃப் சென்டருக்கு அழைத்து இலக்கியம்பேசி உபசரித்தார்.
இவருடைய உம்மத் என்ற காலச்சுவடு வெளியிட்ட  நாவலைப்பற்றி எனது வாசிப்பு அனுபவத்தை சில வருடங்களுக்கு முன்னர்   தேனீயில் எழுதியிருந்தேன். அதுவே அந்த நாவல் பற்றிய முதலாவது விமர்சனம்.
அதனை மிகுந்த நன்றியுணர்வுடன் ஸர்மிலா செய்யத் நினைவுகூர்ந்தார்.
(பயணங்கள் தொடரும்)

No comments: