உலகச் செய்திகள்


கொலம்பியாவில் படகு மூழ்கி விபத்து: 9 பேர் பலி, 28 பேர் மாயம்

புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடக்கம்.!

பாரிஸில் பள்ளிவாசலுக்கு வெளியே வாகனத்தால் மோதி தாக்குதல் நடத்த முயன்றவர் கைது - காணொளி இணைப்பு







கொலம்பியாவில் படகு மூழ்கி விபத்து: 9 பேர் பலி, 28 பேர் மாயம்

26/06/2017 கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் 170 பயணிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதோடு 28 பேரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
படகில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றி சென்றமையாலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். படகு கரைக்கு அருகில் வரும் போது  பாரம் தாங்காமல் மூழ்கியுள்ளது. அதில் பயணித்த பாதி பேர் மற்ற படகுகளின் மூலம் மீட்கப்பட்டனர். 
ஆனால்  படகு மிக வேகமாக மூழ்கியதால் மற்றவர்களை காப்பாற்ற முடியவில்லை என மீட்புபணியினர் தெரிவிக்கின்றனர்.   நன்றி வீரகேசரி 













 புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடக்கம்.!

30/06/2017 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக மதுரை ரிங் ரோடு அம்மா திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. விழா நிகழ்ச்சிகள் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பாராளுமன்ற துணைத்தலைவர் தம்பித்துரை சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன் உள்ளிட்ட 28 அமைச்சர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். 75 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.
முன்னதாக எம்.ஜி. ஆரின் புகழ் பரப்பும் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. யோகியார் ராமலிங்கம் தலைமையில் யோகா நிகழ்ச்சியும், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறுகிறது. நாட்டிய கலாலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கிறார்கள். 5 லட்சம் பேர் விழா மைதானத்தில் திரளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நன்றி கூறுகிறார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா மதுரையில் நடை பெறுவதையொட்டி மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.  










பாரிஸில் பள்ளிவாசலுக்கு வெளியே வாகனத்தால் மோதி தாக்குதல் நடத்த முயன்றவர் கைது - காணொளி இணைப்பு

30/06/2017 பிரான்ஸ், பாரிஸ் நகரிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மக்கள் கூட்டத்திற்குள் வாகனத்தை செலுத்தி தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயன்ற சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 இச் சம்பவம் இன்று காலை க்ரீட்டல் புறநகர் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. இதன் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசலுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த தடைகளால் குறித்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எந்த நோக்கத்திற்காக குறித்த நபர் இவ்வாறு முயற்சித்துள்ளார் என இது வரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் குறித்த நபர் ஆர்மேனிய இனத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் பாரிசில் இடம்பெற்ற இஸ்லாமியவாத-தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்திவெளியிட்டுள்ளன.

குறித்த நபரின் கார் பள்ளிவாசலை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் மீது தொடர்ச்சியாக மோதித் தாக்கியதாகவும் அதன் பிறகு அங்கிருந்து அந்தக் கார் வேகமாக சென்றதுடன் மீண்டும் தடுப்புகளில் மோதியது நிலையில் காரிலிருந்து சந்தேக நபர் தப்பியோடும் போது கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி




No comments: