இலங்கையில் பாரதி --- அங்கம் 24 -- முருகபூபதி

.


கொழும்பு   புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  இலங்கை கம்யூனிஸ்ட் ( மாஸ்கோ) முன்னாள் வடபிரதேச  செயலாளரும், கருத்து முரண்பாட்டினால் அதிலிருந்து விலகி  செந்தமிழர் இயக்கம் என்ற அமைப்பை சிறிதுகாலம் நடத்திவிட்டு, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஐக்கியமான வி. பொன்னம்பலம்   இலங்கையில்  மிகவும் எளிமையான அரசியல் தலைவர்.
முள்ளியாவளை வித்தியானந்தாக்கல்லூரி, யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியர். யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான  கல்விமான் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்தவர்.
இலங்கையில் 1983 நடுப்பகுதி வன்செயல்களுக்குப்பின்னர் தமிழகம் சென்று,  அங்கிருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்து ஒட்டாவா மாநிலத்தில்  வாழ்ந்தார்.
கனடாவில்  நடந்த ஒரேற்றர் சுப்பிரமணியம் நினைவுக்கூட்டம்தான் அவரது  இறுதிக்கூட்டமாக  அமைந்தது. அந்தக்கூட்டத்தில் அவர் உரையாற்றும்போதே  மாரடைப்பு வந்து காலமானார்.
தோழர் வி.பி என  கம்யூனிஸ்ட் கட்சியிலும் இதர இயக்கங்கள், கட்சிகளிலும் , இலக்கிய அமைப்புகளிலும்  அழைக்கப்பட்டவர்.  அவரின்  சிம்மக்குரல் புலம்பெயர்  மண்ணில் ஓய்ந்தது.




இலங்கைத் தலைநகரில்  அந்தக்குரலை  இறுதியாக பாரதி நூற்றாண்டு  மேடையிலேயே 20-03-1983  ஆம் திகதியன்று கேட்டோம்.
வி.பொன்னம்பலம் அன்று உரையாற்றுகையில், " பாரதிக்கு இன்று நாம் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றோம். நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கனவுகள் நனவாகிவிட்டனவா...? அவர் "தனிமனிதனுக்கு  உணவில்லை எனில்  ஜகத்தினையே அழித்துவிடுவோம் " என்றார்.  அவர் வாழ்ந்த  நாடு உட்பட இதர தேசங்கள்  உணவில் தன்னிறைவு கண்டுவிட்டதா...?  தனிமனித சுதந்திரம்  பெற்றுவிட்டோமா...? அவர் கண்ட  கனவெல்லாம் நனவாகவேண்டும்  என்றே  காலங்காலமாக  பாரதி பற்றிப்பேசும்போதெல்லாம்  சொல்லிவருகின்றோம்.  அவரது கனவுகள்  இன்றும் கேள்விகளாகவே   தொடருகின்றன." என்றார்.
            இக்கூட்டத்தில் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் உரையாற்றுகையில்," தமிழக மண்ணில் பிறந்த பாரதியை உலமெல்லாம் கொண்டாடுகின்றோம். அதற்கு அவரிடமிருந்த சிந்தனைகள்தான் முக்கிய காரணம். அதிலும் பிரதானமானது பெண்ணியம் சார்ந்து அவர் பேசியதும் எழுதியதும்தான். பெண்கள் கல்வியில் முன்னேறவேண்டும், அறியாமையிலிருந்து மீண்டெழவேண்டும்  என்றெல்லாம் அறைகூவல் விடுத்தவர். வீடும் நாடும்  நன்மைபெறுவதற்கு   பெண்கள் மீதான தடைகள் களையப்படவேண்டும்  எனச்சொன்னவர் பாரதி. ஒரு தேசத்தின் முன்னேற்றம் அங்கு வாழும் பெண்களின் நிலையில்தான் பெரிதும் தங்கியிருக்கிறது என்று அன்றே சொன்ன தீர்க்கதரிசி அவர்" என்றார்.
தொ.மு.சி. ரகுநாதன் உரையாற்றுகையில், " இந்தியாவில் இமயம் முதல்  குமரிவரையில் பாரதிக்கு விழா எடுத்திருக்கின்றோம். தமிழகத்தில் அவர் பிறந்த எட்டயபுரத்தில் மணிமண்டபம் நிர்மாணிக்கப்பட்டதன்  பின்னர்தான் அவர் காலத்திற்கு முந்திய கம்பருக்கும்  திருவள்ளுவருக்கும்  இளங்கோவுக்கும்  மணி மண்டபங்கள்  நிர்மாணிக்கப்பட்டன." என்றார்.
பாரதி கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கும் தமிழ் அபிமானி கே.ஜி. அமரதாச பேசுகையில்," சிங்கள மக்கள் மத்தியில் பாரதியை அறிமுகப்படுத்தியதே  எனது வாழ்வில் நான்  பெற்ற  பெரிய பாக்கியமாகும். பாரதி தமிழில் எழுதியிருந்தாலும், அவரது சிந்தனைகள் அனைத்து இனங்களுக்கும் தேசங்களுக்கும் பொதுவானவை.  இனம், மொழி, தேசம், பொருளாதாரம் பற்றியெல்லாம்  கவிதையில் - கட்டுரையில் எழுதியவர்.  அவை யாவும் எமது சிங்கள இனத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்தவர் அனைவருக்கும்   பொதுவானதாகவே  அமைந்திருப்பதனால்தான்  அவர்  உலக மகாகவியாக போற்றப்படுகிறார்." என்றார்.
அந்தப்பொதுக்கூட்டத்தில்  சிங்கள  அறிஞர்களும் சிங்கள மக்களும் அமர்ந்திருந்தமையால்  தாம் சிங்களத்தில்  மொழிபெயர்த்த சில பாரதி கவிதைகளையும்  அமரதாச  பாடினார்.
பேராசிரியர்  இராமகிருஷ்ணன் உரையாற்றுகையில், " தமிழ்க்கவிஞர் பாரதி  தற்பொழுது அனைத்திந்திய மொழிகளிலும்   சிங்களம், ஆங்கிலம்,  ருஷ்ய, செக்  உட்பட  ஐரோப்பிய மொழிகளிலும் அறியப்பட்டிருக்கிறார்.  மொழி,  இனம், தேசம் கடந்து அவர் தமது அற்பாயுளில்  சிந்தித்திருப்பது  பேராச்சரியம். அவரது  தீர்க்கதரிசனம் அனைவருக்கும்  முன்மாதிரியானது.  அவர் உலகெங்கும் தொடர்ந்து பேசப்படுவார்.  இந்த நூற்றாண்டு உலகவரலாற்றில்  ஒரு மகா கவிஞனின்  பாதையில்  ஒரு சந்தி மாத்திரமே. இன்னும் தொடர்ந்து பல நூற்றாண்டுகள்  பாரதி  பேசப்படுவார்." என்றார்.
தலைநகரில்  பாரதி  நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நிறைவுற்றதையடுத்து,  நாட்டின் இதர பாகங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும், அட்டாளைச்சேனை,  மட்டக்களப்பு, கல்முனை, கண்டி, வவுனியா, யாழ்ப்பாணம் முதலான நகரங்களில் நடந்த பாரதி விழாக்களிலும் தமிழகப்பேச்சாளர்கள்  கலந்துகொண்டனர்.
கொழும்பில்  அன்றைய  எதிர்க்கட்சித்தலைவர் அ. அமிர்தலிங்கம், தமிழகப்பேச்சாளர்களை  ஶ்ரீஜயவர்தன புரவில்  அமைந்திருக்கும் புதிய நாடளுமன்றத்திற்கு  அழைத்து  அச்சமயம்  அங்கு நடந்துகொண்டிருந்த வரவு - செலவு (பட்ஜெட்)  விவாதத்தையும் பார்வையிடச்செய்ததுடன்   தமது சார்பில் மதிய விருந்தும் வழங்கினார்.
பிரதேச அபிவிருத்தி  இந்து கலாசார அமைச்சர் செ. இராசதுரையும் தமது அமைச்சின் பணிமனைக்கு அழைத்து உபசரித்தார். கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பீட்டர் கெனமனும் பொரளையில்  அமைந்திருக்கும் கட்சித்தலைமையலுவலகத்திற்கு வரவேற்று தேநீர் விருந்துபசாரம் வழங்கினார்.


கொழும்பில்  சைவமுன்னேற்றச்சங்கம்  மறைந்த  நீதியரசர் ஶ்ரீஸ்கந்தராஜா -  திருமதி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் நினைவு தினம்  நடைபெற்றவேளையில் பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் "கம்பன் கண்ட மானுடம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். ஜிந்துப்பிட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் வி.ரி. தெய்வநாயகம் பிள்ளை அவர்கள் ஒழுங்குசெய்த நிகழ்ச்சியில்  இராமகிருஷ்ணனும்  ரகுநாதனும்  பாரதியின் சமய உணர்வு - ஆன்மீக உணர்வு பற்றி  அறிவியல் பூர்வமாக  உரையாற்றினர். இங்கு அவர்கள் விவேகானந்தரின் சிந்தனைகளை பாரதியின் எண்ணங்களுடன் ஒப்பிட்டு,  பாரதியின்பால் பாசம் கொண்டிருந்த நிவேதிதா தேவி பற்றியும்  உரையாற்றினர். பெண்விடுதலை பற்றிய  கருத்தியலை பாரதியிடம்  புகுத்தியவர்  நிவேதிதாதேவி.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் கலை இலக்கியப்பத்திரிகை நண்பர்கள் அமைப்பு  ஒழுங்குசெய்திருந்த கவிஞர் நீலாவணனின் வேளாண்மை - குறுங்காவியம், கல்வயல் குமாரசாமியின் சிரமம் குறைகிறது - கவிதை ஆகிய  நூல்களின்  வெளியீட்டு   நிகழ்ச்சியில்  இராமகிருஷ்ணன் உரையாற்றினார்.
தமிழகப்பேச்சாளர்கள், கொழும்பில் சில பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு வருகை  தரும் தமிழகப்பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு  இங்கிருக்கும் அன்பர்கள் வழங்கும் வரவேற்பும் உபசரிப்பும்  வந்தவர்களுக்கு  முன்மாதிரியாக விளங்கியது. இலங்கைத்தமிழர்கள்  உபசரிப்பதில் முன்னணியில் திகழ்பவர்கள் என்ற பாரம்பரியம் அவர்களின் அந்நிய புலப்பெயர்விலும் நீட்சிபெற்றுள்ளது.
"பாரதி சிங்களத்தீவிற்கு பாலம் அமைப்போம் என்றார். இலங்கைத்தமிழர்கள் உபசரிப்பால் இந்தியாவுக்கு பாலம்  அமைத்து பெருமைபெற்றவர்கள்"  என்ற தொனி வந்திருந்த தமிழக பாரதியியல் ஆய்வாளர்களிடமிருந்து உதிர்ந்தது.
1983 மார்ச் மாதம்  23 ஆம் 24 ஆம் திகதிகளில்  கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியிலும், அட்டாளைச்சேனை மற்றும் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளிலும் மட்டக்களப்பு  நகர மண்டபத்திலும்,  நூல் நிலையத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொ.மு.சி ரகுநாதன், சுபைர் இளங்கீரன், முருகபூபதி ஆகியோர்  கலந்துகொண்டு உரையாற்றினர்.
மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப்பேரவையும் மாநகரசபையும் இணைந்து  நகர மண்டபத்தில் நடத்திய விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
அலங்கரிக்கப்பட்ட  ஊர்தியில் பாரதியின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த நீண்ட ஊர்வலம் ஆசிரியப்பயிற்சிக்கலாசாலையில்  தொடங்கி  நகரமண்டபத்தில் முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னிருந்து உழைத்தவர்களான  எழுத்தாளர்கள் எதிர்மன்ன சிங்கம், அன்புமணி, மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி  ஆகியோர்  குறிப்பிடத்தகுந்தவர்கள்.   நீதியரசர் பாலகிட்ணர், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனிமுத்து,  கவிஞரும் சட்டத்தரணியுமான அஷ்ரப், மற்றும்  சிவராம்,  பஷீர் ஆகியோரும்  கலந்துகொண்டனர்.
அஷ்ரப் பின்னாளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அமைச்சராகவும் பதவி வகித்தவர். சிவராம், தராக்கி என்ற பெயரில் பிரபல  ஊடகவியலாளரானார். இவர்கள் இருவரும் அரச அதிபர் அந்தோனிமுத்துவும்   வெவ்வேறு  சந்தர்ப்பங்களில்  கொல்லப்பட்டனர்.  பஷீர் இங்கிலாந்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.  நீதியரசர் பாலகிட்ணர், அன்புமணி, மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, சுபைர் இளங்கீரன், ரகுநாதன், இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன்  ஆகியோர் மறைந்துவிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் 25-03-1983 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த விழாவுக்கு மானிப்பாய் எம்.பி. வி. தருமலிங்கம் தலைமைதாங்கினார்.   இவர் இலங்கை - சோவியத் நட்புறவுச்சங்கத்திலும்  இணைந்திருந்தவர்.  இன்று நாடாளுமன்றில் எம். பி.யாக  இருக்கும்  சித்தார்த்தனின்  தந்தையார்.
யாழ். பல்கலைக்கழக  பேராசிரியர்கள்,  விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கலை இலக்கிய வாதிகள் பெருந்திரளில் கலந்துகொண்ட  இவ்விழாவையடுத்து மறுநாள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்  மாணவர்கள்  மத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும்  தமிழகப்பேச்சாளர்கள்  உரையாற்றினர்.
யாழ். பல்கலைக்கழக  துணைவேந்தர்  பேராசிரியர் சு.வித்தியானந்தனின்  தலைமையில்  இந்நிகழ்ச்சி  நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கொட்டடியில் அமைந்த புத்தகக்கடை பூபாலசிங்கம் அவர்களின்  இல்லத்தில் எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் தலைமையில் நடந்த  எழுத்தாளர்களுடனான  சந்திப்பிலும்  தமிழகப்பேச்சாளர்கள் கலந்துகொண்டனர்.


வவுனியாவில்  கல்வி அதிகாரி கவிஞர் இ. சிவானந்தனின் ஏற்பாட்டிலும்,  வடமராட்சியில்  எழுத்தாளர்  தெணியானின் ஏற்பாட்டிலும்    கம்பர் மலை சனசமூக நிலையம், வதிரி  தமிழ் மன்றம் முதலானவற்றிலும்   தென்மராட்சியில்  டிறிபேக் கல்லூரியிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்  தமிழகப்பேச்சாளர்கள் கலந்துகொண்டனர்.
அவர்கள் மூவரும் வருகைதந்து இலங்கையில் நின்ற நாட்களில் தமிழ் ஊடகங்களில் தொடர்ச்சியாக பாரதி நூற்றாண்டு செய்திகளே வெளிவந்தன.
இவ்வாறு  இலங்கைத்தலைநகர்  உட்பட  மலையகம், வடக்கு, கிழக்கு எங்கும் பாரதியின் புகழ் பரவியிருந்த  குறிப்பிட்ட 1983 ஆண்டின் முற்பகுதி  மூவினத்தையும் சேர்ந்த கலை, இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களுக்கு வசந்த காலம்தான்.
இன நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு , மனித உரிமை, மனிதநேயம் பற்றியெல்லாம் பாரதியின் சிந்தனைத்தாக்கத்திலிருந்து நாடெங்கும்  பேசப்பட்ட  காலம்.
அந்தக்  குறிப்பிட்ட   பசுமையான நினைவுகளுடன் வாழ்ந்தவர்களுக்கு பேரிடியாக வந்தது 1983 நடுப்பகுதியில்   நடந்த கோரமான வன்செயல் சம்பவங்கள்.
கறுப்பு ஜூலை என்ற  சொற்பதம் இலங்கை வரலாற்றில் அழுத்தமாக பொறிக்கப்பட்டது.
" பாரதியின் கனவுகள் நனவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தியல்  தீவிரமாக இலங்கைப் பொது அரங்கில் பரவவேண்டும்"   என்று அன்றைய   காலப்பகுதியில்  அறைகூவல் விடுத்து   உரையாற்றிய பலர் காலப்போக்கில்  எதிர்பாராதவிதமாக மறைந்தனர்.  அவர்களில்  சிலர் இயற்கை மரணம் எய்தினர். சிலர் அநியாயமாக  கொல்லப்பட்டனர்.
அவர்களின் மூச்சில் பாரதி வாழ்ந்துகொண்டேயிருந்தார்.
இலங்கையில் பாரதி பற்றிய தொடரில்,  பாரதி நூற்றாண்டுக்கு முன்னரும் பின்னரும் பாரதியின் சிந்தனைகளுக்கு  எழுத்திலும் பேச்சிலும்  உயிரூட்டிய  அந்த  அமரர்களுக்கு  இச்சந்தர்ப்பத்தில்  சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.
(தொடரும்)

No comments: