அப்பா - ருத்ரா

.


"எக்ஸாம் ஃபீஸ் கட்டணும்."
குரல் கேட்டு
கனிவோடு
ஒரு கடினபார்வையுடன் நான்.
"பசங்களோடு டூர் போகணும்."
முறைப்போடு கூடிய 
ஆனாலும் 
ஒரு முறையான பார்வையுடன் நான்.
ஆனால்
ப்ராக்ரஸ் ரிபோர்ட் 
கையெழுத்துக்கு மட்டும்
எப்படியோ
அம்மாவிடம் போய்விடுகிறாய்.
மகனே!
சரித்திரப்பாடத்து
ஹிட்லரின் முரட்டு முகத்தை மட்டும் தான்
என்னிடம் படிக்கிறாயா?
எப்படிடா அது?
அன்றைக்கு
இருபது ஆயிரம் வரைக்கும் 
இழுத்துச்செல்லும்
ஸ்மார்ட் ஃபோனுக்கு
அம்மாவின் 
முந்தானையைப்பிடித்துக்கொண்டாய்.
முந்தானையோடு நிற்காது
அது
ஏதாவது ஒரு
சல்வார் கமீஸ் வரைக்கும் போகும்
என்று எனக்கு தெரிந்துவிடும்
என்று தானே 
அப்படி கண்ணாமூச்சி ஆடினாய்.
இருந்தாலும்
மகனே
ரோஜாவை மட்டும்
அம்மாவிடம் பார்த்துவிட்டு
முள்ளையா
என்னிடம் பார்ப்பது?
அன்று
நெஞ்சு வலியால்
சற்று
நாற்காலியில் நான் சாய்ந்தபோது
உனக்கு வலி பொறுக்காமல்
உன் கண்ணீர்ப்பூக்களையல்லவா
என் மீது சொரிந்தாய்.
இது போதும் மகனே!
நான் இனி 
கல்லறைக்கு கூட போகத்தயார்.
போதும் இந்த‌
சில்லறைப்பிரச்னைகள் நமக்குள்.

No comments: