நெஞ்சமே ஏங்கிறது ! - எம் .ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.
   
     நிலம்பெயர்ந்து போனாலும் 
       நினைவுமட்டும் மாறவில்லை
    மனமுழுக்க ஊர்நினைப்பே
        மெளனமாய் உறங்கிறது 
    தலைநிறைய எண்ணெய்வைத்து
         தண்ணீரில் மூழ்கிநின்று 
    குளங்கலக்கி நின்றதெல்லாம்
           மனம்முழுக்க வருகிறது !

     பக்கத்து வீட்டினிலே
          பந்தல்போட்டுக் கல்யாணம்
     படுஜேராய் நடக்கையிலே
          பாய்ந்துசென்று அமர்ந்திருந்து
     சுட்டுவைத்த பலகாரம்
         அத்தனையும் சுவைபார்த்து
      சுருட்டிக்கொண்டு ஓடிவரும்
            சுகமங்கே கிடைத்ததுவே  !

      பழுத்தகுலை வாழைமரம்
          இருமருங்கும் சிரித்துநிற்கும்
      பழம்மீது எங்கவனம்
           விழுந்தபடி அங்கிருக்கும்
      வரவேற்கும் சாட்டினிலே
          வாழைக்குலை அருகணைந்து
      பழம்பறித்துப் பையில்போட்டு
            பாய்ந்திடுவோம் மறைவினுக்கு !      அப்பம்சுடும் ஆச்சிவீட்டில்
           அதிகாலை நாமிருப்போம்
       துப்பரவு செய்வதற்கு 
              துணிவுடனே முன்வருவோம்
        பிய்கின்ற அப்பமெலாம்
              ஆச்சிதரத் சம்மதிப்பார்
        பேசாமல் வாங்கியுண்டு
               பேரின்பம் பெற்றிடுவோம் ! 

        வாத்தியார் அடித்துவிட்டால்
              வசைபாட மாட்டோம்நாம்
         வாத்தியார் சைக்கிளுக்கு
                வைத்திடுவோம் நல்லஆப்பு 
          வீட்டுக்குத் தெரிந்துவிட்டால்
                வெளுத்தெடுத்து விடுவார்கள்
           அடிகொடுத்த அப்பாவே 
               அணைத்ததையும் நினைக்கின்றோம் !


          திருவிழா வந்துவிட்டால்
                பெருமகிழ்ச்சி வந்துவிடும்
          சின்னமேளம் பெரியமேளம்
                திருவிழாவைச் சிறப்பிக்கும்
           இரவெல்லாம் கோவிலிலே
                   எத்தனையே கலைநிகழ்ச்சி
            எங்களுக்கு சொர்க்கமாய்
                   இருந்ததைநாம் நினைக்கின்றோம் !


          மல்கோவா மாங்காயை
             மரமேறிப் பிடிங்கிநின்று
          மரத்தடியில் சுவைப்பதிலே
               மட்டற்ற சுவையெமக்கு
          மரமேறிப் பறிக்கையிலே
              மரக்காரன் வந்துவிட்டால்
          மாட்டிவிட்டு முழிப்பதனை
               மனமிப்போ நினைக்கிறது !

       கவலைபற்றிக் கவலையில்லை
          காசுபற்றிக் கவலையில்லை
       கல்விபற்றிக் கவலையில்லை
            கஞ்சத்தனம் எமக்குமில்லை 
       கிடைக்கின்ற அத்தனையும்
             பெருமகிழ்ச்சி எனநினைத்தோம் 
       நினைக்கின்ற போதுவிப்போ
                நெஞ்சமே ஏங்கிறது !
            

No comments: