பயணியின் பார்வையில் ---- அங்கம் 02

.
கொழும்பின்  புறநகரில் ஓய்வெடுக்கும்,  புறா வளர்த்த மல்லிகை ஜீவா
இம்மாதம் அவருக்கு 90 வயது
                  இலங்கையிலிருந்து  முருகபூபதி

இலங்கைக்கு வந்தது முதல் அலைச்சலும் அதிகமாகிவிட்டது. கோடைவெய்யில் ஒருபுறத்தில் வாட்டிக்கொண்டிருந்தாலும் தென்னிலங்கையில் மாலையானதும் அடைமழை பொழிந்து  அந்த வெக்கையை தணிப்பதற்குப்பதிலாக வீதிகளில் வாகனப்போக்குவரத்து நெரிசலுக்குள் மக்களை திக்குமுக்காடச்செய்துவிடுகிறது.
எமது தாயகத்தவர்களுக்கு இது பழக்கப்பட்டதுதான். என்னைப்போன்று வெளியிலிருந்து வருபவர்கள் இந்தப்பழக்கத்திற்கு இசைவாக்கம் பெறுவதற்கு பல நாட்கள் தேவைப்படலாம். நேரவித்தியாசம்  இசைவாக்கத் தாமதத்திற்கு மற்றும் ஒரு காரணி. தாயகத்திற்கு வந்து பல நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் அதிகாலை 3 மணிக்கு துயில் எழும்படலம் ஓயவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தை தொலைத்துவிட்டபோதிலும் பிரிந்திருந்தவர்களை மீண்டும் சந்தித்து உரையாடும்போது அலைச்சலினால் வரும் களைப்பு, திடீரென்று கொட்டும் மழை திடீரென்று காணாமல்போவதுபோன்று மறைந்துவிடுகிறது.



கடந்த 2015 ஆம் ஆண்டு முற்பகுதியில் இலங்கை வந்து திரும்பியபின்னர் எழுதிய பத்திகளில் ஒன்றில், என்னை ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஜீவா பற்றி எழுதும்போது, அதற்கு நான் இட்டிருந்த தலைப்பு: மல்லிகை ஜீவாவும் டொமினிக்ஜீவாவும்.
வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கலைக்கேசரி இதழின் ஆசிரியர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களின் கணவர் இராஜதுரை அவர்கள் மறைந்தவேளையில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன்.
இம்முறை இலங்கைவந்ததும்,  வத்தளையிலிருக்கும் அவர்களின் இல்லத்திற்கு நண்பர்கள் தெளிவத்தைஜோசப், மேமன்கவி ஆகியோருடன் சென்று துக்கம் விசாரித்து துயர் பகிர்ந்துகொண்டதன் பின்னர், நண்பர்கள், எனக்கு விடைகொடுத்தனர்.


தாயகம் வந்துவிட்டால் உறக்கம் தொலைவது ஒருபுறமிருக்க, பசிவரும் நேரமும் வந்து வயிற்றை பிசையும். நீரிழிவுக்காக இன்சுலின் எடுப்பவர்கள் உரியநேரத்தில் உணவு உட்கொள்ளவேண்டும் என்பது எமது மருத்துவர்களின் ஆலோசனை. அதனால்தான் விமானப்பயணத்திலும் அத்தகைய உபாதைகளை சுமப்பவர்களுக்கு முதலிலேயே உணவை தந்துவிடுகிறார்கள்.
இம்முறை பயணத்தில் எனது பயணியின் பார்வை முதலாவது அங்கத்தை தேனீ இணையத்தில் வாசித்த ஒரு அன்பர் எனக்கு    அனுப்பிய மின்னஞ்சலில் வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் கோவிலடியில் ஒரு வைத்தியர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் நீரிழிவு உபாதையை முற்றாகக்குணப்படுத்தலாம் என்றும் ஆலோசனை சொல்லியிருந்தார்.
சமகாலத்தில் எங்குசென்றாலும் இந்த ஆலோசனைக்கும் குறைவில்லாமல்போனதற்கு பெரும்பாலான மக்கள் இனிமையான மனிதர்களாகியமைதான் காரணம்.
தாயகம் வந்தால்,  இனிமையான மனிதர்களைத்தேடிச்செல்வதுதான் எனது இயல்பு.
கொழும்பு ஆமர்வீதியில் இறங்கி, கிராண்ட்பாஸிலிருக்கும் வீரகேசரி அலுவலகத்திலிருக்கும் நண்பர்களை பார்க்கவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் குறிப்பிட்ட சந்தியில் இறங்கினேன்.
ஒரு காலத்தில் பலவருட காலமாக நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டு, அந்த இடத்தில் இறங்கி அலுவலகம் சென்றுவந்த எனக்கு, அங்கு தற்காலத்திலிருக்கும் வாகன நெரிசல் அதிர்ச்சியைத்தந்தது.
இலங்கையில் போருக்குப்பின்னர் வீதிகள் அகலப்படுத்தப்பட்டிருந்தாலும், அதிவேக நெடுஞ்சாலைகள் தோன்றியிருந்தாலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வீதியில் பெருக்கெடுத்துக்கொண்டுதானிருக்கிறது.
நகரப்புறங்களில் மக்கள் துவிச்சக்கரவண்டிகளை தவிர்த்துவிட்டு, மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களில் ஓடித்திரிகிறார்கள். பாதசாரிகள், அவதானமாக வீதிகளை கடக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
ஆமர்வீதியை கடக்கும்போது எனக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. இலங்கை நேரம் முற்பகல் 11 மணிதான். ஆனால், எனக்கோ ( அவுஸ்திரேலியாவில் ) மாலைப்பொழுது.
எனது பேர்ஸில் இலங்கை நாணயம் போதியளவு இருக்கும் என்ற நம்பிக்கையில் ஆமர்வீதியும் மெசஞ்சர் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்த வாணிவிலாஸிற்கு சென்றேன். அவ்விடத்தில்தான் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பல வருடங்களுக்கு முன்னர் ஒரு மேதினத்தன்று  சிதறிப்போனார். அவ்விடத்தில்தான் ஒரு பொலிஸ்நிலையமும் நீண்ட காலமாக அமைந்திருக்கிறது.
மறைந்த அதிபருக்கு அவ்விடத்தில் அமைந்துள்ள நினைவுச்சின்னத்தை தரிசித்தபொழுது, அவர் மறைந்தவேளையில் ஐரோப்பாவிலிருந்து ஈ.கே. ராஜகோபால் நடத்திய பத்திரிகையில் நான் எழுதிய பிரேமதாசவின் கதைதான் நினைவுக்கு வந்தது.


அந்தத்தொடரை நூலுருவாக்கவேண்டும் என்று பலரும் சொன்னபோதிலும் அவ்வாறு நூலுருவில் வெளியிடும் ஆர்வம் எனக்கிருக்கவில்லை.
திட்டமிடல், நேரஒழுங்கு, சாமர்த்தியம், சாணக்கியம், கீழ்மட்டத்தில் வாழும் மக்கள் குறித்த கரிசனை, கிராமோதயம் என்ற வீட்டுத்திட்ட அறிமுகம் முதலானவற்றினால் பிரேமதாச அவர்கள் மற்றவர்களுக்கு முன்னோடியான செயற்பாட்டாளர்.
இலங்கை மக்கள் அத்தகைய ஒரு தலைவரையும் எதிர்பாராதவிதமாக இழந்திருக்கின்றனர்.
பிரேமதாச மகத்மியத்தை நனவிடைதோய்ந்துகொண்டு எனது பேர்ஸைப்பார்க்கின்றேன். மதிய உணவிற்குத் தேவைப்படும் பணம் அதிலில்லை. இருந்தவற்றை  போக்குவரத்திற்கு கொடுத்திருக்கின்றேன்.  நீர்கொழும்பு வீட்டிலிருந்து புறப்படும்பொழுது, தங்கை முன்னெச்சரிக்கையாக சொன்ன ஆலோசனைகளையும் அலட்சியம் செய்தமை எனது அசட்டுத்தனம்தான்.
இனி என்ன செய்வது...?
கையில் அவுஸ்திரேலியா வெள்ளிகள்தான் இருக்கின்றன. அதனை இலங்கை நாணயத்திற்கு மாற்றினால்தான் மதிய உணவுக்கு செலவிடமுடியும். ஆமர்வீதியில் நாணயம் மாற்றும் நிலையங்களை தேடினேன். கண்ணிலே தென்படவில்லை.
வெய்யில் அகோரமாக எரிக்கிறது. சிறு குடல் பெருங்குடலை சாப்பிடும் உணர்வு. ஆமர்வீதியின் இருமருங்கும் மூன்று ஒளிப்பட நிலையங்கள் இருக்கின்றன.  HAPPY DIGITAL   என்ற பிரபல ஒளிப்பட நிலையத்தின் ஸ்தாபகர், உரிமையாளர் திலீபன்  எனது நீண்ட கால நண்பர் மல்லிகை ஜீவாவின் புதல்வர்.
இவரைத்தான் மல்லிகையின் எதிர்கால வாரிசு என்று நாமும் மல்லிகையில் எழுதியவர்களும் வாசகர்களும் பெரிதும் நம்பியிருந்தோம்.  ஆனால், ஜீவாவினால் தொடங்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப்பின்னர அவராலேயே நிறுத்தப்பட்ட  மல்லிகை ஏன் நின்றது...? என்ற இலக்கிய சர்ச்சை இலங்கையிலும் கடல் கடந்தும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
"ஆமர் வீதியில் ஜீவா மகன் திலீபன்  இருக்கப்பயமேன்"  என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு Happy  டிஜீட்டலுக்குள்ளும் ஏறி இறங்கினேன்.
" பொஸ் வெளியே போயிருக்கிறார்" என்ற இரத்தினச்சுருக்கமான பதில்தான் வந்தது.
ஒரு நிலையத்திலிருந்து மாத்திரம் ஒரு அழகான இளம் யுவதி, என்னைப்பார்த்துவிட்டு, " அமருங்கள். அவருடைய கைத்தொலைபேசியில் தொடர்புகொள்கின்றேன்" எனச்சொன்னார். அமர்ந்தேன்.
சிறிது நேரத்தில் திலீபன் வந்து, என்னை ஆரத்தழுவிக்கொண்டார். அங்கிருந்து ஊழியர்கள் எம்மை வியப்புடன் பார்த்தனர்.
அவரை அழைத்த அந்த யுவதியை எனக்கு அறிமுகப்படுத்தி " பூபதி மாமா இவள்தான் எனது மகள்...." என்றார் திலீபன்.
எனது கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. எங்கள் மல்லிகைஜீவாவின் பேத்தி. அவருக்கும் திருமணமாகி - தாயாகி  எங்கள் மல்லிகை ஜீவா பூட்டனாகிவிட்டார்.
காலம் விரையும் விந்தையை என்னவென்பது...?
"தான் சிறுவனாக இருக்கும்போது அப்பா கொழும்புக்கு அழைத்துவந்து இந்த பூபதி மாமாவிடம்தான் ஒப்படைத்துவிட்டு, கட்சிக்காரியாலயம், மல்லிகை நண்பர்கள், சோவியத்தூதுவராலய தகவல் பிரிவு, சந்திப்புகள் என்று அலைந்துகொண்டிருப்பார்.
இந்த மாமாதான் என்னை தெஹிவளை மிருகக்காட்சி சாலை, விகாரமாதேவி பூங்கா, காலிமுகம், பாரளுமன்றம் எங்கும் அழைத்துச்செல்வார்."  என்று நனவிடைதோய்ந்து என்னை தமது மகளுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர்களைக்கண்டதும் பசி பறந்துபோய்விட்டது.
   மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி  90  வயது. ( அவர் பிறந்த நாள்: 27-06-1927) அதனைக்கொண்டாடும் முகமாக நண்பர் மேமன் கவி இரண்டு தொகுப்புகளை வெளியிடுவதற்கு தீவிரமாக உழைத்துவருகிறார்.
எனக்கிருந்த இலங்கை நாணயப்பிரச்சினையை திலீபனிடம் சொன்னேன். அதனை மாற்றுவதற்கு கொழும்பு செட்டியார் தெருவுக்குத்தான் செல்லவேண்டும் என்றார் அவர்.
அதற்கு எனக்கு பொறுமை இல்லை. நீங்களே மாற்றித்தாருங்கள் என்றேன். அச்சமயம் எனக்கு தேவைப்பட்ட சிறிய தொகையை அவரே மாற்றித்தந்தார். அது எனக்கு அவ்வேளையில் பேருதவியாக இருந்தது.
இந்தத்தகவலை வெளியிலிருந்து வரும் எனது நண்பர்களின் கவனத்திற்காகவே இங்கு பதிவுசெய்கின்றேன்.
பயணங்களில் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதேசமயத்தில் தொடர்பாடல் எமது வாழ்வில் எவ்வளவுதூரம் இன்றியமையாததாக இருக்கிறது என்பதற்கு, அன்றையதினம் கொழும்பு ஆமர் வீதியில் எனக்கு கிட்டிய அனுபவம் புத்திக்கொள்முதல்.
மல்லிகை ஜீவாவுடன் சந்திப்பு
நீண்ட காலம் வெளியான மல்லிகை முதலில் யாழ்ப்பாணத்திலிருந்தும் பின்னர் கொழும்பிலிருந்தும் இலக்கிய மணம் பரப்பியது. ஐம்பது ஆண்டுகளை நெருங்கவிருந்த தருணத்தில் ஜீவா அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக வந்த நோய் உபாதைகளினால் அதனை தொடர்ந்து நடத்த முடியவில்லை.
ஜீவாவிடமும் அதனைத்தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை.
எனினும் ஜீவாவும் அவரது கடின உழைப்பில் மலர்ந்த மல்லிகையும் இன்றும் எம்மத்தியில் பேசுபொருள்தான்.
ஒருநாள்  மேமன்கவி,  என்னை ஜீவா வசிக்கும் கொழும்பின் புறநகர் காக்கைதீவுக்கு அழைத்துச்சென்றார். என்னைக்கண்டதும் பிற்பகல் துயில் களைந்து உற்சாகமுடன் எழுந்து என்னை வரவேற்று ஆரத்தழுவிக்கொண்டார்.
1963 இல் நான் சிறுவனாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் படிக்கின்ற காலத்தில்தான் முதல் முதலில் பார்த்தேன். அதன்பிறகு 1971 இல் எங்கள் ஊரில் பார்த்தேன். அன்றுமுதல் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர். என்னை தமது மல்லிகையில் அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் வளர்த்துவிட்டவர்.
இலங்கையிலும் தமிழகத்திலும்  நாமிருவரும் பல பயணங்களை மேற்கொண்டிருக்கின்றோம். அவரைப்பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன். மல்லிகை ஜீவா நினைவுகள் என்ற நூலும் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
என்னைக்கண்டதும் எனது கரம்பற்றியவாறு  உணர்ச்சிமயமாக இருந்தார். மீண்டும் உற்சாகம் வந்துவிட்டவரைப்போன்று அவர் உரையாற்றினாலும், இடைக்கிடை தான் எப்படி இருக்கின்றேன்...? தனது உடலில் தளர்ச்சி தென்படுகிறதா...? என்ற கேள்விகளையும் தொடுத்தார். எழுந்து சென்று தான் தினமும் உட்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துவந்து காண்பித்தார். தமது சிகிச்சை தொடர்பான பதிவுகள் அடங்கிய ஒரு கோவையை காண்பித்தார். அவரது செயல்கள் பாலர் பாடசாலைக்கு சென்றுவரும் குழந்தையின் உணர்வுகளையே பிரதிபலித்தன.
எழுத்தாளரும் மருத்துவருமான ச. முருகானந்தன் அடிக்கடி வந்து தம்மை  பரிசோதிப்பதாகவும் சொன்னார்.
எமக்கு தேநீர் தந்து உபசரித்த அவரது மருமகள், " மாமா தற்பொழுது எதுவும் எழுதுவதில்லை. பத்திரிகை வாசிப்பதிலும் ஆர்வமற்றிருக்கிறார். வெளியே உலாவச்செல்வதும் குறைந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் தம்பாட்டில் வெளிக்கிட்டு வெளியே சென்று  அருகிலிருக்கும் செல்வம் அண்ணரை பார்த்துவிட்டு திரும்பினார். " எனச்சொன்னதுதான் தாமதம், அருகிலிருந்த நண்பர் மேமன்கவி ஜீவாவை கடிந்துகொண்டார்.
ஜீவாவுக்கு செவிப்புலனும் குறைந்து வருவதால் உரத்த குரலில் " எதற்காக தனியே வெளியே சென்றீர்கள்...? கீழே விழுந்துவிட்டால் என்ன நடக்கும்...?  " என்றெல்லாம் எச்சரிக்கை பட்டியல் வாசித்தார்.
ஒரு காலத்தில் ஜீவா உரத்த குரலில் மேமன்கவியை கண்டித்தார். உரிமையோடு  ஒருமையிலும் அழைப்பார். காலம் மாறியிருக்கிறது.
மேமன்கவி உரத்த குரலில் அவரது உடல்நலத்தை கவனத்தில்கொண்டு கண்டிக்கிறார்.
" அவர் உம்மைக் கண்டித்த காலம்சென்று,  தற்பொழுது நீர் அவரைக்கண்டிக்கும் காலம் வந்துவிட்டதா..?" எனச்சொன்னதும் ஜீவாவும் வாய்விட்டுச்சிரித்தார்.
அவுஸ்திரேலியாவிலிருக்கும் ஜீவாவை நன்கு தெரிந்த பலர் பற்றி கேட்டு அறிந்தார். மறைந்த  எஸ்.பொ. , காவலூர் இராஜதுரை குடும்பத்தினர், திருமதி பராசக்தி சுந்தரலிங்கம், நடேசன் பற்றியெல்லாம் கேட்டுத்தெரிந்துகொண்டார்.
உரையாடும்பொழுது சிலரது பெயர்கள் அவரது நினைவிலிருந்து தப்பிவிடுகின்றன. முதுமை அவரது நினைவாற்றலை பெரிதும் பாதித்திருக்கிறது.
அவரைப்பற்றி நிறையவே எழுதியிருக்கின்றேன். இதுவரையில் அவரது வாசகர்கள் பலர் அறியாத ஒரு செய்தியை இங்கு பதிவுசெய்கின்றேன்.
இலக்கியத்திற்கு அப்பால் அவர் ஆழ்ந்து நேசித்த பறவை புறா.
நூற்றுக்கணக்கான வகைகளைக்கொண்ட பறவை இனம் புறா மீது அவருக்கு அளவுகடந்த பிரியம். உலகில் சமாதானத்தின் சின்னமாக கருதப்படும் புறா, முற்காலத்தில் நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றத்திற்கும் உதவியிருக்கிறது.
நாமறிந்த புறா இனங்கள்: மணிப்புறா, மாடப்புறா, விசிறிப்புறா, ஆடம்பரப்புறா.
ஆனால், இதற்கு மேலும் பல புறா இனங்கள் உலகெங்கும் வாழ்கின்றன. அவற்றில் சில படிப்படியாக மறைந்து வருகின்றன.
மல்லிகை ஜீவா யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு அருகில் வசித்தார். இன்றும் அவரது யாழ்ப்பாணம் இல்லம் தினமும் ரயிலின் ஓசையை கேட்டவண்ணமே அங்கு இருக்கிறது. அந்த இல்லத்தின் பின்புறத்தில் ஒரு கூடு அமைத்து பல புறாக்களை வளர்த்தவர் ஜீவா. அன்றாடம் வீட்டில் சமையலுக்கு உணவுப்பொருட்கள் இல்லாத நெருக்கடியான நிலை வந்துற்றபோதிலும் தாம் வளர்த்த புறாக்களுக்கு உணவளிப்பதை தவிர்க்காமல் அவற்றை நேசமுடன் பராமரித்து வளர்த்தவர் ஜீவா என்பது வெளியுலகில் பலருக்கும் தெரிய நியாயம் இல்லை.
புறா இனத்தின் வகைகள், அவற்றின் உயிர்வாழும் காலம், அவை விரும்பி உண்ணும் தானியங்கள், நினைவு தப்பாமல் பறந்து சென்று மீண்டு வரும் அதன் இயல்பான ஆற்றல் பற்றியெல்லாம் துல்லியமான அறிவுகொண்டிருந்தவர் ஜீவா என்றால் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால், அதுதான் உண்மை.
ஒரு சமயம் வழக்கப்போல் ஜீவா புறாக்கூட்டுக்குள் தானியம் வைக்கும்பொழுது அதன் உள்ளேயிருந்து  ஒரு புடையன் பாம்பு சீறியிருக்கிறது. நல்லவேளை ஜீவா கையை எடுத்துவிட்டார். அப்பொழுது புறாக்களும் அக்கூட்டில் இருக்கவில்லை என்பது அவருக்கு கிடைத்த பெரிய நிம்மதி.
ஜீவா தனக்கும் தான் வளர்த்த புறாக்களுக்கும்  இடையே நீடித்த சாசுவதமான உறவைப்பற்றி எங்காவது எழுதியிருக்கிறாரா...? என்பதும் தெரியவில்லை.
(பயணங்கள் தொடரும்)

No comments: