இலங்கையில் பாரதி அங்கம் - 22 - முருகபூபதி

.


இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  பாரதி நூற்றாண்டை முன்னிட்டு அமைத்த குழுவினர்  தொடர்ச்சியாக  கொழும்பிலும் இலங்கையின்  இதர பிரதேசங்களிலும்  பாரதி விழாக்களையும்  நூல் கண்காட்சிகளையும்  ஈழத்து தமிழ் - முஸ்லிம்  எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சிகளையும்  நடத்தினர்.
  நூற்றாண்டு  விழாக்களுக்காக தமிழகத்திலிருந்து  பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ.மு.சி. ரகுநாதன், பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்,  எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்  ஆகியோரையும் அழைத்திருந்த சங்கம்,  கொழும்பிலும்  யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, அட்டாளைச்சேனை, நீர்கொழும்பு,  கண்டி உட்பட பல பிரதேசங்களிலும்    நிகழ்ச்சிகளை  ஒழுங்குசெய்திருந்தது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கையில்  இவ்வாறு பாரதியின் கருத்தியல்கள்  குறித்த விழாக்களுக்கும் ஆய்வரங்குகளுக்கும்  அதன்மூலம் புதிய தேடல்களுக்கும்  வழிவகுத்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களிலும் வாழ்ந்த  தமிழ் எழுத்தாளர்ளையும்  கலைஞர்களையும்  ஊடகவியலாளர்களையும் கல்வித்துறை சார்ந்தவர்களையும் ஒன்றுகூடச்செய்து கருத்துப்பரிமாறல்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் அகில இலங்கை ரீதியில் கவிதை, சிறுகதைப்போட்டிகளையும் நடத்தியது.
தொ.மு. சி ரகுநாதன் (1923 - 2001)




சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், நாடகம், இதழியல், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு முதலான துறைகளில்   பல நூல்களை எழுதியிருக்கும் ரகுநாதன் சாந்தி என்ற இலக்கிய இதழும் நடத்தியிருப்பவர்.
கங்கையும்  காவிரியும், பாரதியும் ஷெல்லியும், பாஞ்சாலி சபதம் உறைபொருளும்  மறைபொருளும், பாரதி: காலமும் கருத்தும், பாரதியும் புரட்சி இயக்கமும்  முதலான பாரதி இயல் ஆய்வு நூல்களையும்  எழுதியிருப்பவர்.  பாரதி நூற்றாண்டு காலத்தில் இவர் எழுதிய பாரதி: காலமும் கருத்தும் நூலுக்கு இந்திய சாகித்திய அகடமி விருதும் கிடைத்துள்ளது. சோவியத் இலக்கிய மேதை மாக்சிம்கோர்க்கியின் தாய் நாவலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர்.


இலக்கிய அரசியல் பொதுவெளியில் சமரசங்களுக்குட்படாத பேராளுமையான ரகுநாதன் பற்றி தமிழ்நாட்டின் முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
" ருஷ்ய வகை மார்க்சியத்தைத் தொடக்கத்தில்  ஏற்றுக் கொண்டிருந்த அவர், பிற்காலத்தில் கிராம்ஷியின் மார்க்சியத்தை  ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, இந்தியாவின் சாதி ஆய்வுக்கும்  அதை விரிவு படுத்திப்பார்த்தார். என்ன தெரிகிறது..? அவருடைய இடைவிடாத தேடல்  தெரிகிறது. ஆம், தேடல்  நிறைந்தவர் அவர். உண்மையைத் தேடுவதில்  இடை விடாத  நாட்டம் கொண்டிருந்தவர் அவர். புதுக்கவிதையினுள்  அவர்  தொடர்ந்து தேடியிருந்தால், அது பற்றிய தன் பார்வையைக்  கூட  அவர்  மாற்றிக் கொண்டிருப்பார் எனத் தோன்றுகிறது.  எங்கும் எதிலும் தேங்கிப் போகாத அருவி உள்ளம் அவர் உள்ளம். தீவிர புத்தகப் பிரியர் ரகுநாதன். தன் தந்தையாரின் நூலகத்தைத் திருட்டுச் சாவி போட்டுத் திறந்து, உள்ளே இருந்த அரிய நூல்களையெல்லாம்  விரும்பிச்சுவைத்தார். பழந்தமிழ் இலக்கியங்கள் நவீனத் தமிழ் இலக்கியங்கள், மலையாளம், கன்னடம், வங்கம், இந்தி என இந்திய மொழிகளில் வந்த சிறந்தனவற்றைப் படித்தார்.
ஐரோப்பிய, ருஷ்ய இலக்கியங்களின் உச்சங்களில் திளைத்து மகிழ்ந்தார். வாசித்தவர் மட்டுமல்ல புத்தகங்களை நேசித்தவர் அவர். தந்தையாரின் நூலகத்தைப் போல் தனக்கும் ஒரு நூலகத்தை உருவாக்கிக் கொண் டார். அந்த நூல்களிடையே காலம் முழுவதும் வாழ்ந்தார், உழைத்தார். சொந்த வீடற்ற அவர், வாழ வீடு தேடிய போதெல்லாம், தன் நூல்கள் வாழ இடமிருக்கிறதா என்பதை முதலில் தேடினார். இரவலுக்கோ, இலவசத்துக்கோ, எவருக்கும் அவர் புத்தகம் கொடுத்ததில்லை. தன் இறுதிக் காலத்தில் இந்த நூல்கiளுக்குப் பல லட்சம் ரூபாய் தருவதாகப் பலர் கெஞ்சியும் மசியாமல், பாரதி மீதுள்ள பற்றால், எட்டையபுரம் பாரதி நூலகத்துக்கு அத்தனை நூல்களையும் ஆசையோடு  வழங்கினார்.
முதுமையைப் பொருட்படுத்தாமல் எட்டையபுரம் போய் பலநாள் தங்கி, நூல்கள் அனைத்தையும் அடுக்கி ஒழுங்குபடுத்தினார். தன் எச்சங்களாகத் தன் படைப்புகளுக்கு அடுத்தபடி, இந்த நூலகத்தைத் தன் நினைவிடமாக  உருவாக்கிக் கொண்டார்  ரகுநாதன். அவரது  உரையாடல்கள் சங்க இலக்கியங்களிலிருந்து  புதுமைப்பித்தன்  இலக்கியம் வரை, ஆங்கில இலக்கியத்திலிருந்து  லத்தீன் அமெரிக்க இலக்கியம் வரை   பருந்து போல அலையும்.


ஷேக்ஸ்பியர் பற்றி அவர் பேசத்துவங்கினால், அவரைப் பற்றி நேற்றுவரை வந்த விமர்சனங்கள் இவர் பேச்சில் மின்னும். ரகுநாதனின்  உரையாடல்கள் ஒவ்வொன்றுமே இலக்கியத்தை மறுவா சிப்புச் செய்யும் போக்கில் அமைந்திருக்கும்.  அவருடைய  உரை யாடல்களுக்குள்ளே நுழைந்து பார்க்கும் போதுதான், பொய்யாமைச் சமூகத்தை அவர் வெறுப்பதற்கும், ஒதுக்குவதற்குமான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும். அளவுக்கதிகமான நேர்மை, கறார்த்தன்மை, மதிப்பிடும்  தன்மை இவைகளே  அவரைத் தனிமனிதராக்கின. "
பேராசிரியர் எஸ். இராம கிருஷ்ணன்
பாரதநாட்டின் சுதந்திரப்போராட்டத்தில் தனது இளம் வயதிலேயே ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்திருக்கும்  இராம கிருஷ்ணன், பாரதி இயல் ஆய்வாளராக இலக்கிய விமர்சகராக நன்கு அறியப்பட்டவர். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் மாணவர் இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவர்.
இந்தியப்பண்பாடும் தமிழரும், திருக்குறள் ஒரு சமுதாயப்பார்வை, இளங்கோவின் பாத்திரப்படைப்பு, கம்பனும் மில்டனும் ஒரு புதிய பார்வை,  சமயவாழ்வில் வடக்கும் தெற்கும் ஆகிய நூல்களை வரவாக்கியிருக்கும்  இவர், கம்பரின் பாத்திரப்படைப்புகளை ஆய்வுக்குட்படுத்தி, சிறியன சிந்தியாதன, கற்பின் கனலி முதலான நூல்களையும் எழுதியிருப்பவர்.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில்  ஹிட்லரின்  ஜெர்மன் நாஜிப்படைகள் சோவியத்தின் தலைநகரம் மாஸ்கோவை அண்மித்த சமயம்,  சாதுரியமாக அதனை  முறியடிப்பதற்கு ஆலோசனைகள் வழங்கியவரும்,   சோவியத்தின் அதிபருமான ஜோசப் ஸ்டாலினின் வாழ்க்கை  வரலாற்றையும் தமிழில் எழுதியிருக்கும் ராமகிருஷ்ணன், இலக்கியத்திறனாய்வுடன்  தமது ஆய்வுகளை நிறுத்திக்கொள்ளாமல், மார்க்சீய  தத்துவம், பொருளாதாரம் முதலான துறைகளிலும் ஆய்வுகளை  மேற்கொண்டவர். மார்க்சீய பொருளாதாரப்பார்வை அவற்றில்  குறிப்பிடத்தகுந்தது. உலக சமாதானக்கவுன்சில், இந்திய - சோவியத் நட்புறவுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவர். பாரதியைப்பற்றியும் இவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் நூலில் பாரதியின் பல கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பைக்காணலாம்.  சோவியத்  ருஷ்யா, பின்லாந்து, டென்மார்க்  ஆகிய நாடுகளிலும்   பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சிகள் நடந்தசமயம்  அங்கு சென்று உரையாற்றியவர்.
1983 இல் இலங்கையில் இனக்கலவரம் வந்து, தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு சென்றவேளையில் அங்கிருக்கும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்களை ஒன்றிணைத்து இயக்கம் அமைத்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கு முன்வந்தார். எனினும் அங்கிருந்த அரசியல் தலைவர்கள் ஈழப்பிரச்சினையை கையில் எடுத்தமையால் அந்த இயக்கம் வலுவிழந்துபோனது.
பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஆங்கில் உரைகளைக்கேட்ட பல சிங்கள எழுத்தாளர்களும் அலவி மௌலானா போன்ற முஸ்லிம் தலைவர்களும் அவரைப் பெரிதும் மதித்தனர். பாரதியின் சில கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கும் ரத்ன நாணயக்கார ,  தமக்கு பாரதியை அறிமுகப்படுத்தியதே பேராசிரியர் ராமகிருஷ்ணன்தான் என்று சொல்லியிருக்கிறார்.
ராஜம் கிருஷ்ணன் (1925 - 2014)
1952 ஆம் ஆண்டு அனைத்துலக ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் ஊசியும் உணர்வும் என்ற சிறுகதையை எழுதி பரிசுபெற்றிருக்கும் ராஜம் கிருஷ்ணன், கதைகளும், நாவல்களும் ஏராளமான கட்டுரைகளும்  வாழ்க்கைச்சரிதை நூல்களும் எழுதியிருப்பவர். அவரது பரிசுபெற்ற  அச்சிறுகதை இந்துஸ்தான் டைம்ஸ் வெளியீடாக வந்துள்ள உலகச்சிறுகதைத்தொகுப்பிலும்  இடம்பெற்றுள்ளது.
வேருக்கு நீர் என்ற இவர் எழுதிய நாவலுக்கு இந்திய சாகித்திய அக்கடமி விருது கிடைத்துள்ளது. கோவா விடுதலைப்போராட்டத்தை சித்திரிக்கும் வளைக்கரம் என்ற நாவலையும், முள்ளும் மலர்ந்தது, அலைவாய்க்கரையில், கரிப்பு மணிகள், அன்னையர் பூமி, மாணிக்க கங்கை உட்பட  குறிப்பிடத்தகுந்த நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
மாணிக்க கங்கை இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற அகதிகளின் மண்டபம் முகாம் வாழ்க்கையை சித்திரிக்கிறது. ஒவ்வொரு நாவலும் எழுதுவதற்கு முன்னர், அதன் பின்புலம் பற்றிய நுட்பமான அறிவைப்பெறுவதற்காக  ஆயிரக்கணக்கான மைல்கள் பிராயாணம் செய்திருக்கும் கள ஆய்வாளருமாவார்.
உப்பளத்தொழிலாளர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் வாழ்வை மட்டுமன்றி சம்பல் பள்ளத்தாக்கில்  கொலைகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபட்டிருந்த சமூகவிரோதிகளையும் கடும்பிரயத்தனத்தில்  சந்தித்து உரையாடி முள்ளும் மலர்ந்தது என்ற நாவல் எழுதியவர். சர்வோதய இயக்க முன்னோடி ஜெயப்பிரகாஷ் நாராயணனை சந்தித்து அதற்கு முன்னுரை பெற்றுக்கொள்ள முயன்றார். ஆனால், அவரைச்சுற்றியிருந்தவர்கள் ராஜம் கிருஷ்ணனை நெருங்கவிடவில்லை.
 இவ்வாறு  அடிநிலையிலிருந்த மக்களையெல்லாம் சந்தித்து இலக்கியப்படைப்புகள் எழுதிய  ராஜம் கிருஷ்ணன்,  பாரதியின் சிந்தனைகளின் தாக்கத்தினால்,  காலம்தோறும் பெண், காலம்தோறும் பெண்மை, யாதுமாகி நின்றாய், இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை  முதலான நூல்களையும் வரவாக்கியவர்.  பாரதியின் வாழ்க்கையில் இடம்பெற்ற பல முக்கியமான சம்பவங்களின் அடிப்படையிலும் ஒரு நூலை எழுதியிருப்பவர். அதன் பெயர் பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி.
பாரதியின் மறைவையடுத்து,  பாரதியின்  உறவினர்கள்  மனைவி செல்லம்மாவுக்கு  மொட்டை  அடித்த தகவலை வெளிப்படுத்தியவரும் இவரே. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பாரதியின் சிந்தனையை அடியொற்றி கருத்துப்போராட்டம்  நடத்தியிருக்கும் ராஜம் கிருஷ்ணன் அந்திம காலத்தில் பல சிரமங்களை தனிப்பட்ட  வாழ்வில் எதிர்நோக்கியவர்.
இவருடைய  கதைகள் தொலைக்காட்சி நாடகங்களாகவும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. இவருடைய துயர் மிகுந்த அந்திமகாலத்தில்  தமிழக அரசும் உதவியிருக்கிறது.  அவர் சென்னை பொரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் பல  மாதங்கள் தங்கியிருந்து  சிகிச்சை பெற்றார். அவரது விருப்பத்தின் பிரகாரம் அவர் மறைவையடுத்து -  அவரது உடல்  மருத்துவக்கல்லூரிக்கே ஒப்படைக்கப்பட்டது.
அவரும் பாரதியைப்போன்று பிராமண சமூகத்தில் பிறந்தவர்.   சமயம் சார்ந்த இறுதிச்சடங்குகள் எதுவும் இன்றி, மிக மிகக் குறைந்த எண்ணிக்கையினர் ( மருத்துவர்கள் - தாதிகள்) இவருடைய  பூத உடலை மருத்துவக்கல்லூரியில் ஒப்படைத்தனர்.
பாரதியின் அந்திமகாலத்துடன் ராஜம் கிருஷ்ணனின் இறுதிக்காலத்தை ஒப்பிடலாம். இறுதியில் பாரதியைச்சுற்றி விரல்விட்டு எண்ணத்தக்கவர்கள் இருந்தமைபோன்று  ராஜம்கிருஷ்ணனின் இறுதிவேளையிலும் சிலரே நின்றனர்.
இலங்கையில்  பாரதி நூற்றாண்டு நடந்த சமயம் தமிழகத்திலிருந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரால் அழைக்கப்பட்ட  இம்மூவரும்  தமது எழுத்துப்பணிக்காக சோவியத் நாட்டின் நேரு நினைவு விருதுபெற்றவர்களே.
இவர்கள் மூவரும்  கொழும்பிலும் இலங்கையில் இதரபிரதேசங்களிலும் நடந்த பாரதி நூற்றாண்டு நிகழ்வுகளில் உரையாற்றினர்.  குறிப்பிட்ட காலகட்டத்தில் இலங்கையில, பாரதி தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள, முஸ்லிம் இனத்தவரிடத்திலும் தீவிர கவனிப்புக்குள்ளானார்.
19-03-1983 ஆம் திகதி காலை முதல் இரவு வரையில் கொழும்பில்  பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. பாரதி நூல்களின் கண்காட்சியுடன் ஈழத்து தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சியும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வு நடந்தகாலப்பகுதியில் பேராசிரியர் கைலாசபதி நம்மத்தியில்  இல்லை. அவரது சேகரிப்பில் இருந்த ஏராளமான பாரதி சம்பந்தப்பட்ட   ஆய்வு நூல்களை திருமதி சர்வமங்களம் கைலாசபதி கண்காட்சிக்காக  வழங்கி  உதவினார்.
அன்றைய சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மாக்கார் கண்காட்சியை திறந்துவைத்து உரையாற்றினார். முற்பகல் ஆரம்பமான ஆய்வரங்கில்  நீதியரசர் ஏ. அப்துல்காதர் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
கவிஞர் இ. முருகையன்  தலைமையில் நடந்த இந்நிகழ்வில், பாரதியின் தாக்கம் ஈழத்து கவிதை இலக்கியத்தில் எவ்வாறு இருந்தது என்பதைப்பற்றி சில்லையூர் செல்வராசனும், தமிழக கவிதை இலக்கியத்தில் பாரதியின் தாக்கம் பற்றி சிதம்பர ரகுநாதனும் உரையாற்றினர்.
மதிய இடைவேளையின் பின்னர்,  சுபைர் இளங்கீரன் தலைமையில் நடந்த ஆய்வரங்கில், பேராசிரியர் சி. தில்லைநாதன் ஈழத்து புனைகதை இலக்கியத்திலும், ராஜம் கிருஷ்ணன் தமிழக புனைகதை இலக்கியத்திலும், பேராசிரியர் சபா. ஜெயராசா ஈழத்து இலக்கியப்போக்குகளிலும், பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியப்போக்குகளிலும், கே. சண்முகலிங்கம் பாரதி ஆய்விலும் முதலான தலைப்புகளில் பாரதி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி கனதியான ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.
அன்றைய  ஆய்வரங்கு நிகழ்வு பத்மா சோமகாந்தனின் நன்றியுரையுடன்  நிறைவடைந்ததையடுத்து, சுபைர் இளங்கீரன் எழுதிய மகாகவி பாரதி நாடகம் மேடையேறியது. இதனை இயக்கியவர் நாடகக்கலைஞரும் எழுத்தாளருமான அந்தனிஜீவா.
இந்நாடகத்தின் முடிவில்,  இதில்  நடித்தவர்களையும் இதனை எழுதியவரையும் இயக்கியவரையும் சிதம்பர ரகுநாதன் பாராட்டிப்பேசினார்.
மறுநாள் முற்பகல் மீண்டும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கண்காட்சிகள்  தொடர்ந்தன. அத்துடன் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பாரதி இயல் ஆய்வாளர்களுடனான இலங்கை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் சந்திப்பு  கலந்துரையாடல் காரசாரமான விவாதங்களுடன் நடைபெற்றது.
தமிழகத்து எழுத்தாளர்களுடனான கருத்துமோதல்களாக இராமல் இலங்கை எழுத்தாளர்கள் - பத்திரிகையாளர்களுடனான மோதலாகவே அது காட்சியளித்தது. எனினும் அந்தச்சூட்டை பாரதியின் கருத்துக்களினாலேயே தமிழகப்பேச்சாளர்கள் தணித்தனர்.
அன்றைய தினம்  மாலையில் அக்காலப்பகுதியில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் சரஸ்வதி மண்டபத்திற்கு வருகை தந்து கண்காட்சியை கண்டு வியந்து பாராட்டினார். அதில் இடம்பெறத்தவறிய சில எழுத்தாளர்களின் பெயர்களையும் அவர் சுட்டிக்காண்பித்ததுடன், இலங்கையின் இதர பிரதேசங்களிலும் தமிழ் - முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டுக்குழு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அன்றைய தினம் மாலை  பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் பாரதி நூற்றாண்டு பொதுக்கூட்டம் மண்டபம் நிறைந்த மக்களுடன் சிறப்பாக  நடைபெற்றது.
(தொடரும்)

No comments: