பாரிஸ் உடன்படிக்கை - பேராசிரியர் கே. ராஜு

.
பாரிஸ் உடன்படிக்கையை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
     
அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக இருக்கும்போதே டொனால்ட் ட்ரம்ப் பாரிஸ் உடன்படிக்கையை ஒரு `புரளி என்று அவதூறு செய்தார். பருவநிலையை சீராக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரத்தை அதிபர் பொறுப்பு அவருக்கு அளித்தது. பாரிஸ் உடன்படிக்கையை அர்த்தமற்றதாக்கும் நடவடிக்கைகளில் ட்ரம்ப் வெளிப்படையாகவே இறங்கிவிட்டதால் அந்த உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுகிறது என்ற அவரது ஜூன் 2 அறிவிப்பு யாருக்கும் அதிர்ச்சியைத் தரவில்லை. 
     பாரிஸ் உடன்பாடே தன்னுடைய சொந்த நலனுக்காக அமெரிக்காவால் வளைக்கப்பட்ட ஒன்றுதான். "பொதுவான ஆனால் மாறுபட்ட பொறுப்பு" என அதுவரை பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த அடிப்படைக் கோட்பாடு பாரிஸில் கைவிடப்பட்டது. கடந்த காலங்களில் கார்பன் வெளியீடுகள் மூலம் காற்று மண்டலத்தை மாசுபடுத்தியதற்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்க மறுத்ததின் விளைவுதான் இது. 4-1-2016 தியிட்ட அறிவியல் கதிர் கட்டுரையில் பாரிஸ் ஒப்பந்தம் பற்றிய விரிவான பரிசீலனையைச் செய்திருந்தோம். ஒப்பந்தத்தை அன்று பெருமளவு நீர்த்துப்போக வைத்தது அமெரிக்கா. இன்று அதே ஒப்பந்தத்தை அமெரிக்கா நிராகரிப்பது ஒரு கொடுமையான நகைமுரண்தான். ட்ரம்பிற்குப் பதில் ஹில்லாரி கிளிண்டன் அதிபராக வந்திருந்தாலும் பருவநிலை மாற்றம் குறித்த சிக்கலைத் தீர்க்க அமெரிக்கா பெரிய அளவுக்கு உதவியிருக்காது என்பதுதான் அமெரிக்க அரசியல். 1990ஆம் ஆண்டினை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் 2030-க்குள் 23 சதம் அளவுக்கே கார்பன் வெளியீடுகளைக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது எனில் இந்த விஷயத்தில் அதன் ஈடுபாட்டினைப் புரிந்து கொள்ளலாம். ஒப்பீட்டு அளவில் இதே காலகட்டத்தில் ஐரோப்பிய யூனியன் 40 சதம் அளவுக்கு வெளியீடுகளைக் குறைக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. டெமாக்ரடிக் ஆட்சியாக இருந்தாலும் ரிபப்ளிக் ஆட்சியாக இருந்தாலும் உலகத்தைக் காப்பாற்ற தங்களுக்கு இருக்கும் பொறுப்பில் நியாயமான சமத்துவமிக்க பங்கினை (fair and equitable share) ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதுதான் இந்தப் பிரச்சினையின் மையப்புள்ளி.
     பருவநிலை மாற்றம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது என்றாலே தங்களது வாழ்வியல் சௌகரியங்களைக் குறைத்துக் கொள்வது என்ற புரிதல் அமெரிக்காவில் இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால்தான் கியோட்டோ உடன்படிக்கையை நீர்த்துப் போக வைத்த பிறகு பில் கிளிண்டன் ஏற்றுக் கொண்டார். ஜார்ஜ் புஷ் அதையும் ஏற்க மறுத்தார். பாரிஸ் உடன்படிக்கையை பலவீனமாக்கிய பிறகு ஒபாமா ஏற்றுக் கொண்டார். டிரம்ப் அதையும் ஏற்க மறுக்கிறார்.     சரித்திரரீதியாக வளிமண்டலத்தை மாசுபடுத்தியதில் பெரும் பங்கு அமெரிக்காவினுடையதே. இன்றும் அதன் பங்கு கணிசமானது. தனிநபரது பங்கு எனில் உலகிலேயே அதிகமான பொறுப்பை ஏற்க வேண்டிய நபர்களில் அமெரிக்கர்கள் முக்கியமானவர்கள்.
     எனவே பருவநிலை மாற்றம் குறித்து பிரச்சினைக்குரிய நாடாக இருக்கும் அமெரிக்காவைச் சந்திப்பது எப்படி என்பதுதான் இன்று உலக நாடுகள் முன் உள்ள சவால். அமெரிக்காவாக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளாக இருந்தாலும் சரி, நாம் எப்படி வாகனங்களைப் பயன்படுத்துகிறோம்..எப்படி வீடுகளைக் கட்டுகிறோம்..எப்படி பொருட்களை நுகர்கிறோம் என்பதையெல்லாம் மாற்றாமல் பருவநிலை மாற்றம் விடுக்கும் சவாலைச் சந்திக்க முடியாது.              
     ட்ரம்ப்பினுடைய முடிவு ஏற்படுத்திய விளைவுகளில் எதிர்பாராத ஒன்று என்னவெனில், அது பருவநிலை மாற்றம் பற்றிய  பார்வையில் மற்ற நாடுகளை ஒற்றுமைப்படுத்தியதுதான்! இங்கே நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளையெல்லாம் ஒற்றுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் அல்லவா, அதுபோல! பாரிஸ் உடன்பாட்டை வலுப்படுத்த மற்ற நாடுகளுக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு இது. இதைக் கீழ்க்கண்ட விதங்களில் நாம் சந்திக்கலாம்::
1) பாரிஸ் உடன்படிக்கையை மேலும் நீர்த்துப் போகச் செய்வது அதை அறவே பயனற்றதாக்கிவிடும் என்பதால் அமெரிக்கா முன்னர் ஏற்றுக்கொண்ட இலக்கைக் குறைக்கும் நோக்கில்  மீண்டும் முன்மொழியப்படும் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் கொடுக்க மறுப்பது.
2) அமெரிக்கா இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு ஓர் உறுப்பினராக இருந்துகொண்டு ஒப்பந்தத்தை உள்ளிருந்தே அழிக்க முயலும் வாய்ப்பு இருப்பதால், பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவை தனிமைப்படுத்துவது.
3) தற்போதுள்ள பாரிஸ் ஒப்பந்த விதிகளை பலப்படுத்தி மேலும் செழுமைப்படுத்துவது.
4) கார்பன் வெளியீடுகளைக் குறைக்க தாங்கள் ஏற்றுக் கொண்ட இலக்குகளை நிறைவேற்ற மற்ற நாடுகள் உளப்பூர்வாக முயலவேண்டும். நாடுகள் இலக்குகளை நிறைவேற்றாமல் இருப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து அந்த நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்கா மாதிரி எந்த நாடும் உடன்பாட்டிலிருந்து வெளியேறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
5) அமெரிக்காவின் நடவடிக்கை
 உலகத்தை ஆபத்தின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது என்பதைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்த வேண்டும். 


     1992-ல் பருவநிலை மாற்றம் குறித்த பரிந்துரையை ஐ.நா. வகுத்துக்கொடுத்த நாளிலிருந்தே உலகக் கருத்தொற்றுமை யிலிருந்து விலகி முரண்டு பிடிக்கும் நாடாக அமெரிக்கா தொடர்கிறது. மற்ற நாடுகள் பக்கம் கைகளைக் காட்டிவிட்டு, தன்னுடைய செயலின்மையை நியாயப்படுத்துவது அதன் வழக்கம். பலவீனமான நிலை எடுப்பதை மற்ற நாடுகள் உடனே நிறுத்திக் கொள்வதுதான் இன்று உலகம் சந்திக்க இருக்கும் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும்.         
 (உதவிய கட்டுரை: 2017 ஜூன் 9 அன்று ஆங்கில இந்து நாளிதழில் சந்திர பூஷன் எழுதிய கட்டுரை

No comments: