இலங்கையில் பாரதி -- அங்கம் 23 - முருகபூபதி

.


இலங்கையில் பாரதி நூற்றாண்டு விழாக்கொண்டாட்டங்களை முன்னிட்டு  முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மேற்கொண்ட சில பயனுள்ள பணிகளில், இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒளிப்படக்காட்சியும்  முக்கியமானது.
எழுத்தாளர்களின் படங்கள், பிறப்பிடம், வாழுமிடம்,  அவர்கள் எழுதிய நூல்களின்  விபரம், இதர துறைகள் பற்றிய குறிப்புகளை உள்ளடக்கியதாக  ஒவ்வொருவருக்கும் தனித்தனி அட்டைகள் தயாரிக்கப்பட்டன.
ஒவ்வொன்றும் A 5 அளவில் பெரிதாக  உருவாக்கப்பட்டன. கணினி வசதி இல்லாத அக்காலப்பகுதியில் சில ஓவியர்களின் உதவியுடன் குறிப்பிட்ட  பதிவுகள்  அட்டைகளில் எழுதப்பட்டன.  இடது பக்கத்தின் மேல் மூலையில் எழுத்தாளரின் படம் ஒட்டப்பட்டது. இன்றுபோல் அன்று தமிழ் விக்கிபீடியா இருக்கவில்லை. Google இல் தேடிப்பெறும் நவீன தொழில்நுட்பமும் இல்லை.  மின்னஞ்சல் வசதியோ, உடன் தொடர்புகொள்ளும் கைத்தொலைபேசி வசதிகளோ அன்று  இருக்கவில்லை. 
பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டும், எழுத்தாளர்களின் முகவரிகளைத்தேடிக் கண்டுபிடித்தும், சங்கத்தின் உறுப்பினர்களின் முகவரிப்பட்டியலின் துணையுடனும் தொடர்பாடல் மேற்கொள்ளப்பட்டது.
அக்காலப்பகுதியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் யாழ். இலக்கிய வட்டம், தேசிய கலை இலக்கியப்பேரவை, கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம், மற்றும் பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வத்தின் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் அமைப்பு, மலையக எழுத்தாளர் மன்றம்  ஆகியனவற்றுடன் கிழக்கிலும்  தென்னிலங்கையிலும்  சில கவிஞர்கள் அமைப்புகள் செயல்பட்டன.முடிந்தவரையில்  தொடர்பாடல்களை மேற்கொண்டாலும், எழுத்தாளர்களுக்கென்றே  ஊறிப்போன இயல்புகள் இருந்தமையால் சிலர் தமது படங்களை தந்துதவ மறுத்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் முரண்பட்டிருந்தவர்களின் சார்பில்  எஸ்.பொன்னுத்துரையால் உருவாக்கப்பட்ட  நற்போக்கு என்ற பெயரளவில்  இயங்கிய  குழுவினரும,  வடக்கில்  சித்தாந்த முரண்பாடுகளினால்  சங்கத்தின்  நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தவர்களும்  தமது  படங்களை  தந்துதவ மறுத்தனர்.
எனினும் மல்லிகை ஆசிரியர்    டொமினிக் ஜீவா தமது மல்லிகை இதழ்களின் முகப்புகளில்  ஏற்கனவே பதிவுசெய்த பலரதும் படங்களைத்  தந்துதவினார்.
குறிப்பிட்ட  கண்காட்சிக்குழுவில் வேல் அமுதன்,  முருகபூபதி ஆகியோர் அங்கம் வகித்தனர். சங்கத்தின் சார்பில் முருகபூபதி யாழ்ப்பாணத்திற்கு  அனுப்பிவைக்கப்பட்டு  அங்கிருக்கும் எழுத்தாளர்களின்  படங்களையும்  குறிப்புகளையும்  சேகரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.
பம்பலப்பிட்டி  சரஸ்வதி மண்டபத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் (1983 மார்ச் 19, 20 சனி ஞாயிறு தினங்களில்) நடைபெற்ற இக்கண்காட்சியை  நாட்டின்  பலபாகங்களிலுமிருந்து  வருகைதந்த இலக்கிய  ஆர்வலர்களும் ஆசிரியர்களும்  மாணவர்களும்  கண்டு களித்து வியந்தனர்.
நூறுக்கும்  மேற்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளுடன் அவர்தம் படங்களும்  இதில் இடம்பெற்றன.
இந்தக்கண்காட்சி பற்றி கொழும்பு பத்திரிகைகளும் பாராட்டி செய்திகளை வெளியிட்டன.
சுபைர் இளங்கீரன்  இக்கண்காட்சி பற்றி தமது " ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்"  என்ற  நூலில் விதந்து பாராட்டியுள்ளார். 
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் அதிபர் திரு. சங்கரலிங்கம் இக்கண்காட்சிக்குத் தேவையான  மேசை தளபாடங்களையும் தந்து உதவியதோடு,  சில மேல் வகுப்பு  மாணவர்களையும் கொழும்பு விழாக்கள் முடியும்வரையில் அவற்றில்  தொண்டர்களாக  பணியாற்றுவதற்கும் அனுமதியளித்தார்.
அன்றைய எதிர்க்கட்சித்தலைவர்  அ. அமிர்தலிங்கம், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து செந்தமிழர் இயக்கம் என்ற புதிய அமைப்பை உருவாக்கியவருமான வி. பொன்னம்பலம், பாராளுமன்ற சபாநாயகர் பாக்கீர் மாக்கார், அவரது செயலாளர் அஸ்வர், மற்றும் நீதியரசர்கள் அப்துல்காதர், எச்.வி. தம்பையா, எஸ். வி. சிவசுப்பிரமணியம் உட்பட பெருந்திரளான மக்கள் இதனைக் கண்டு களித்தனர்.
தமிழகத்திலிருந்து வந்திருந்த ரகுநாதன், ராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோர், தமிழகத்தில் கூட இத்தகைய ஒரு காட்சியை தம்மால் நடத்த முடியாதிருப்பதாக வருத்தம் தெரிவித்ததுடன் சங்கத்தின் முயற்சியால் ஆச்சரியமுற்றனர்.
அவர்களின் அந்த  வருத்தத்தின் பின்னணியில் இருப்பது எழுத்தாளர்களுக்கே  உரித்தான ஆணவம் கலந்த  சுயநலம்தான். முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்  விட்டுக்கொடுக்கும்  மனப்பான்மையும் நெகிழ்ச்சித்தன்மையும்  கொண்டவர்.


தனிப்பட்ட  விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் அனைவரையும் இந்தக்கண்காட்சியில்  அரவணைக்க விரும்பினார். அதனால் பலருடனும்  சிநேக பாவத்துடன் உறவாடக்கூடிய  இருவரை இக்கண்காட்சிக்குப்பொறுப்பாக  நியமித்து  சுதந்திரமாக இயங்கச்செய்தார்.
படைப்பு  இலக்கியம் , விமர்சனம் உட்பட கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டவர்களின் ( தலைமுறை இடைவெளி பாராமல் ) படங்களும் குறிப்புகளும்  இக்கண்காட்சியில்  இடம்பெற்றன.
கொழும்பையடுத்து மட்டக்களப்பு, கல்முனை, யாழ்ப்பாணத்திலும் இக்கண்காட்சி  நடைபெற்றது.
குறிப்பிட்ட  வடிவமைக்கப்பட்ட  அட்டைகள் யாவும் கொழும்பு கிராண்ட்பாஸ்  வீதியில் வசித்த வேல் அமுதன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தன.  சங்கம் எதிர்காலத்தில் நடத்தவிருக்கும் நிகழ்ச்சிகளிலும் அவற்றை  காட்சிப்படுத்தும்  எண்ணமிருந்தது.
அமிர்தலிங்கம்   பார்த்துவிட்டுச்சொன்ன  தவறவிடப்பட்டவர்களின் பெயர்களும்  பட்டியலிடப்பட்டு  மேலும் செம்மைப்படுத்தி அந்தக்கண்காட்சியை  மீண்டும்  நடத்தவேண்டும்  என்ற சங்கத்தின் கனவு  நனவாகாமல்   கனவாகவே போய்விட்டமைக்கு 1983 ஜூலை மாதம்  நடந்த இனக்கலவரம்தான் காரணம்.
தலைநகரில்  தமிழர்களின் வீடுகள் தாக்குதலுக்கும்  எரியூட்டலுக்கும் இலக்காகியபோது  வேல் அமுதன்  வீடும் பெரிதும் பாதிக்கப்பட்டது. எரிபொருள்  எடுத்துவந்து  வீடுகளை கொளுத்திய கயவர்களுக்கு குறிப்பிட்ட  காகித அட்டைகள்  பெரிதும்  உதவியிருக்கவேண்டும். அனைத்து  ஆவணங்களும்  எரிந்து  நாசமாயின. வேல் அமுதன் குடும்பத்தினர்  மயிரிழையில்  உயிர் தப்பினர்.
அதன்பின்னர்  இலங்கையில் அத்தகையதோர் அரிய கண்காட்சி நடைபெறவேயில்லை.  கணினியில்  தரவிறக்கம் செய்து ஈழத்து எழுத்தாளர்கள்,  கலைஞர்கள்  பற்றி அறிந்துகொள்ளக்கூடிய  நவீன யுகத்தில் நாம் தற்பொழுது வாழ்கின்றோம்.
தமிழினம்  அன்று  இலங்கையில் சந்தித்த நெருக்கடிக்குள் அரியசேகரிப்புகள்  ஆவணங்கள், நூல்கள்  அழிந்தன.  ஆயினும், மகாகவி  பாரதி  எம்மவர்க்கு  தனது பின்வரும் கவிதை ஊடாக தன்னம்பிக்கை  தந்திருக்கிறார்
            தேடிச் சோறு  நிதந் தின்று
             பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
              மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போலே

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ...?

பாரதி சொல்லியிருப்பதுபோல் என்றைக்கும்  வீழ்ச்சியற்ற சமூகமாக இயங்கி அவரது கனவை புலம் பெயர்ந்து சென்றும் நனவாக்கிக்கொண்டிருக்கிறது  இலங்கைத்தமிழினம்.
20- 03 -1983 ஆம் திகதி ஞாயிறன்று மாலை கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நீதியரசர் கலாநிதி எச். டபிள்யூ. தம்பையாவின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டம்  செயலாளர் பிரேம்ஜியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.
சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட  பாரதி கவிதைகள் நூலை சிங்கள எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு. லீல் குணசேகர வெளியிட்டுவைத்தார். பேராசிரியர் சுசந்த மகேந்திர நூல் ஆய்வுரையை நிகழ்த்தினார்.


குறிப்பிட்ட  நூலை மொழிபெயர்த்த கே.ஜி. அமரதாச, ரத்ன நாணயக்கார ஆகியோரைப் பாராட்டி  கண்சிகிச்சை நிபுணரும் கலை இலக்கிய ஆர்வலருமான டொக்டர் (திருமதி)  இந்திரா சிவயோகம்  உரையாற்றினார்.
முற்போக்கு  எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை முன்னிட்டு தினகரன் - வீரகேசரி பத்திரிகைகளின் ஆதரவுடன் குறுநாவல் , கவிதைப்போட்டிகளையும்   நடத்தியிருந்தன.
அதற்கான பரிசில் வழங்கல் உரைகளை தினகரன் ஆசிரியர் ஆர். சிவகுருநாதனும், வீரகேசரி ஆசிரியர் க. சிவப்பிரகாசமும் நிகழ்த்தினர். அமிர்தலிங்கம், வி. பொன்னம்பலம்  ஆகியோருடன் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த மூவரும் சிறப்புரையாற்றினர்.
சோமகாந்தன் நன்றி நவின்றார்.
பிரேம்ஜி  தமது  வரவேற்புரையில்  பின்வருமாறு  குறிப்பிட்டார்:
" உலக மகாகவிகளுள் ஒருவராக அறிவுலகம் அங்கீகரித்துள்ள ஒரு மாபெரும்  கவிஞனின் நூற்றாண்டுவிழா, அந்தக்கவிஞனின் நினைவுக்குப் பெருமிதம் அளிக்கக்கூடிய வகையில் பெருவிழாவாக நடைபெறுவது அவசியம்.
அந்த மாபெரும் கவிஞன் தமிழ் மக்களுக்கும் மனித குலத்துக்கும் ஆற்றிய பணிகளையும் இலக்கிய அறிவு வளர்ச்சிக்குச்செய்த மகத்தான பங்களிப்பையும் உரிய மதிப்போடு கௌரவிப்பது அனைவரினதும் தலையாய கடப்பாடாகும்.
அதேவேளையில் இவ்விழா சம்பிரதாயமானதோர் வைபவமாகவும் மாமூல் சடங்காகவும் மட்டுமிராது, மகாகவி பாரதி விட்டுச்சென்ற பாரம்பரியங்களை, இலட்சியங்களை, வாழ்க்கைத்தத்துவங்களை, இலக்கிய நோக்கங்களை மீள் நிறுவுவதற்கும் அந்த மகோன்னதமான இலக்குகளை வாழ்க்கை யதார்த்தமாக்குவதற்குமான  ஓர் இயக்கமாக இந்த விழா அமைதல் வேண்டும்.
தமிழை நேசித்து, தமிழ் மக்களை நேசித்த மகாகவி பாரதி தமிழ்ச்சாதி சகல உரிமைகளுடன் பல துறைகளிலும் ஒப்பு நிகரற்ற வளர்ச்சியை அடையவேண்டுமென்று விரும்பினான். ஏனைய இனங்களுக்கு ஈடாகவும் சரி நிகர் சமதையாகவும் முன்னேறிச்செல்லவேண்டுமெனவும்  விழைந்தான். தமிழ்த்தேசிய இனம்  தன்  தலைவிதியைத் தானே நிர்ணயிக்கின்ற சுயநிர்ணய உரிமையுடன்  ராஜ்யத்துவத்தை  அடைவதன் மூலமே தனக்குரிய மகத்துவத்தை ஈட்டிக்கொள்ள  முடியுமென நம்பினான்.
அதே வேளையில்  தான் பிறந்த நாட்டை அவன் நேசித்தான். அந்த நாட்டின் விடுதலைக்காக, முன்னேற்றத்திற்காக, தர்மாவேசம்கொண்டு  போராடினான். தேசத்தின்  அரசியல்  சுதந்திரம்  வெல்லப்படுவதுடன், பொருளாதார சுதந்திரத்திற்காகவும் தேசியத்தொழில்கள் செழித்தோங்குவதற்காகவும்  குரல்கொடுத்தான்.
பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, சமூக ஏற்றத்தாழ்வு, இன ஒதுக்கல், வர்க்கச்சுரண்டல், ஒடுக்குமுறை போன்ற சமுதாயத்தீமைகளை ஒழித்து புதிய ஒப்பில்லாத சமூதாயத்தை உலகுக்கொரு புதிய சமுதாயத்தை உருவாக்கப்போரிட்டான். இவையே பாரதியின் இலட்சியங்கள். பாரதியின் பாரம்பரியம்.
பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட விழைந்த பாரதி இலக்கியத்திற்கு ஆழமான சமுதாயப்பார்வையையும் இலட்சியப்பற்றையும் அளித்தான். பாரதியின் இந்த இலட்சியங்களை இலக்கியத்திலும் சமுதாயத்திலும் அரசியலிலும் வாழ்விலும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக பாரதி நூற்றாண்டு விழா அமையவேண்டுமென நாம் கருதுகின்றோம்.
இந்த இலட்சிய வேட்கையுடன் பாரதி நூற்றாண்டு விழா நாடெங்கிலும் கொண்டாட  இன்றைய துவக்கவிழா வழி அமைத்துக்கொடுக்குமென எதிர்பார்க்கின்றோம். "
அமிர்தலிங்கம்  உரையாற்றியபோது, " எமது தமிழ்மொழியின் பெருமையைச்சொன்னால், நாம் தமிழரென்று எடுத்தியம்பினால் அதனை வகுப்புவாதம்  எனச்சொல்லிவிடுகிறார்கள். உலகிலே பெரிய இனம் ஆரிய இனம். நாமும் தனி இனம். எம்மை நாம் ஆளநினைப்பது இனவெறியல்ல.  அன்று நடந்த சத்தியாக்கிரகப்போரில் பனாகொடை தடுப்பு முகாமில் நான் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளையில் என்னிடமிருந்த  நூல் பாரதியின் கவிதைகள்தான். பாஞ்சாலி சபதத்தை அங்கு  மீண்டும்  படித்தேன்.  அத்துடன் கரும்புத்தோட்டத்திலே  கவிதையில், " நாட்டை  நினைப்பாரோ ...? எந்த நாளினிப்போயதைக் காண்பதென்றே அன்னை வீட்டை நினைப்பாரோ...? அவர் விம்மியழுங்குரல்  கேட்டிருப்பாய் காற்றே...!  என்ற வரிகளை  படித்தவேளையில் எனது கண்கள் குளமாகின.
அவ்வாறு  மனித உரிமைக்காகவும் மானிட நேசத்திற்காகவும் பாடிய  பாரதி எமக்கெல்லாம் ஒரு தீர்க்கதரிசி. இன்றைய தினம் பாரதியை சகோதர சிங்கள மொழியில் இந்த விழா அறிமுகப்படுத்துகிறது.
நாம் எமது தாய்மொழிக்காகவும் அதன் உரிமைக்காகவும் குரல்கொடுக்கும்  அதேசமயம் , சகோதர சிங்கள மொழிக்கும் பாரதியை  அறிமுகப்படுத்துவதிலிருந்து   தெளிவுபெறலாம். " எனத்தெரிவித்தார்.
பாரதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இலக்கியப்போட்டிகளில்,  காணி நிலம் வேண்டும் ( செ.யோகநாதன்) ஒரு தாயின் குரல் (பிரேஸா ஹுஸைன்) அக்கினிக்குஞ்சு (செங்கை ஆழியான்) முதலான குறுநாவல்களை  எழுதியவர்களும் கவிஞர்கள்  பாண்டியூரான், மு. சோமசுந்தரம்பிள்ளை ஆகியோரும் பரிசுபெற்றனர்.
(தொடரும்)


No comments: