பயணியின் பார்வையில் --- அங்கம் 03 - முருகபூபதி

.
காலங்கள் மாறினாலும் கடல் மாத்திரம் மாறவேயில்லை
நினைவில் கலந்திருக்கும் அழியாதகோலங்கள்
                                                                 

" இன்று எமது நீர்கொழும்பு இந்து இளைஞர் கலாசார மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. வரமுடியுமா...?" என்று எனது தங்கை கேட்டாள்.
"என்ன நிகழ்ச்சி..?"
" இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் அகில இலங்கை ரீதியில்,  தேசிய மட்டத்தில் நடத்தும் தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில் ,  இம்முறை  கம்பஹா மாவட்டத்தில், நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தினால் நடத்தப்படும் அறநெறிப்பாடசாலைக்கு விருதுகள் கிடைத்துள்ளன. குறிப்பிட்ட மாணவர்களை படம் எடுத்து பாராட்டவிருக்கிறார்கள். வந்து பாருங்களேன். " என்றாள் தங்கை.
கிடைக்கும் நேரத்தில் நான் நேசிக்கும் நண்பர்கள், அன்பர்களைப் பார்த்துவிட்டால், பின்னர் வீணாக குறைகேட்கவேண்டியிராது. எனக்கு இலங்கையில்  ஆயிரம்பேரைத்தெரியுமென்றால், அவர்களை சந்தித்து  உரையாடுவதற்கு ஆயிரம் நாட்களும் வேண்டும்.
ஏதும் நிகழ்ச்சிகளுக்குச்சென்றால் எவரையும் பார்த்துப்பேசிவிடலாம். ஒருதடவை கனடாவுக்கு சென்றிருந்தபோது, அன்புத்தொல்லையால் திணறியிருக்கின்றேன்.



 ஒருவர் வீட்டில் காலை விருந்து, மதியம் ஓரிடத்தில், இரவில் மற்றும் ஓரிடத்திலென்று ஒருவாறு சமாளித்துக்கொண்டு திரும்பியிருக்கின்றேன்.  எடையும் கூடியிருக்கிறது.  அந்த நடைமுறையைத்தான் இலங்கை வரும் சந்தர்ப்பங்களிலும் பின்பற்றிவருகின்றேன்.
தேசிய மட்டத்தில் நீர்கொழும்பு அறநெறிப்பாடசாலை மாணவர்கள் செல்வன்கள் எஸ். கிருத்திகேஷ், ஜி. உதர்ஷன், யூ. ராகுல், செல்விகள் எஸ். ரிதுஷனா, ஏ. பிரனீஷா ஆகியோர்  விருதுகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் தேசிய மட்டத்தில் அதிசிறந்த அறநெறிப்பாடசாலைக்கான விருதும்  நீர்கொழும்பு அறநெறிப்பாடசாலைக்கு கிடைத்துள்ளதுடன், சிறந்த அறநெறிப்பாடசாலைக்கான ஆசிரியர் விருதும் கிடைத்துள்ளது.
குறிப்பிட்ட  சிறந்த அறநெறி  ஆசிரியருக்கான விருதை பெற்றிருப்பது  எனது தங்கை திருமதி பரிமளஜெயந்தி நவரட்ணம் என்ற தகவல் மண்டபத்திற்குச்சென்ற பின்னர்தான் எனக்குத்தெரியும்.
எனது இலக்கிய - ஊடகத்துறை வாழ்வில் பலரையும் பற்றி தொடர்ந்து எழுதிவந்திருக்கின்றேன். அத்துடன் அவுஸ்திரேலியாவில் மறைந்த பல அன்பர்களின் குடும்பத்தினர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் உறவுகள் மறைந்தவேளைகளில் கல்வெட்டும் எழுதிக்கொடுத்துள்ளேன்.
கல்வெட்டு மகத்மியம் என்ற தலைப்பிலும் சுவாரஸ்யமான பதிவு எழுதமுடியும்.


ஆனால், எமது குடும்பத்தில் இருக்கும் எவரைப்பற்றியும் அதிகம் எழுதவில்லை. பொதுவெளியில் இயங்குவது நானும் எனது தங்கையும் மாத்திரம்தான்.
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர் மன்றம், அறநெறிப்பாடசாலை, புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கான விசேட பயிற்சி வழங்கும் தொண்டர் ஆசிரியர் பணி, சர்வதேசப்பாடசாலைக்குச்செல்லும் சில பிள்ளைகளுக்கு தமிழ் கற்பித்தல், நாவன்மைப்போட்டிகளுக்குச்செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல்   உட்பட  பல பொதுவேலைகளில் எனது தங்கை ஈடுபடுவதனால், அவளுடைய வீட்டின் தொலைபேசிக்கும் அவளது கைத்தொலைபேசிக்கும் என்றைக்கும் ஓய்வு இல்லை. இது தவிர பலரது  குடும்பங்களுக்கு வரன் தேடும் படலத்திலும் ஈடுபடுவாள்.
இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டிருப்பவள். படிக்கின்ற காலத்தில் அறிஞர் மு. வரதராசனுக்கு கடிதங்கள் எழுதியிருப்பவள். அவரும் பதில்கள் அனுப்பியிருக்கிறார்.  நான் இலங்கையிலிருந்த காலத்தில்  என்னைத்தேடி வரும் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்களையெல்லாம் அன்போடு உபசரிப்பவள். அதனால் அவர்களில் பலருக்கும் எனது தங்கையை நன்கு தெரியும்.
குறிப்பாக பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் ஶ்ரீதரசிங், படைப்பாளி திருமதி பத்மாசோமகாந்தன், கொழும்பு தமிழ்ச்சங்க செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, மல்லிகை ஜீவா, எழுத்தாளர்கள் கருணாகரன், நடேசன்,  ராஜஶ்ரீகாந்தன், மேமன்கவி, மு. பஷீர், வதிரி சி. ரவீந்திரன், ஞானம் ஞானசேகரன், தெணியான், ஊடகவியலாளர்கள் நிலாம், வீரகத்தி தனபாலசிங்கம், ரவிவர்மா, ....இப்படிப்பலரையும் நன்கு தெரிந்தவள். இவர்கள் அனைவரும் எங்கள் குடும்ப நண்பர்கள்.
எங்கள் குடும்பத்தில் உத்தியோகப்பற்றற்ற ஒரு சமாதான நீதிவான். அத்துடன் ஊருக்கும் சம்பளம் பெறாத விதானை.
சுமார் 300 குழந்தைகளுடனும்  பத்து   ஆசிரியர்களுடனும் இயங்கும் இந்த அறநெறிப்பாடசாலைக்கு இவள்தான் அதிபர்.
மாணவர்களையும் ஆசிரியர்கள், மற்றும் அதிபரையும்   பாராட்டும் நிகழ்வு  நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் திரு. பொ. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. நான் ஒரு பார்வையாளனாக  கலந்துகொண்டேன்.


இந்நிகழ்வில், மன்றத்தின் செயலாளர் திரு. சு. நவரத்தின ராசா, ஆட்சி மன்ற உறுப்பினர் திரு. வெங்கடேசன் ஆகியோரும் கலந்துகொண்டு விருதுபெற்றவர்களை வாழ்த்தினர். நானும் வாழ்த்தினேன்.
வந்தோரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்ற பெருமை பெற்றிருக்கும் எங்கள் ஊருக்கு தொழில் நிமித்தம் வருபவர்கள் பின்னர் திரும்பிச்செல்வது அபூர்வம். ஒருகாலத்தில் அவ்வாறு வந்தவர்களினால் உருவாக்கப்பட்ட அமைப்புகள், வர்த்தக நிலையங்கள், கோயில்கள் இங்கு பிரசித்தம்.
இந்து இளைஞர் மன்றமும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியும் ஶ்ரீ சித்திவிநாயகர், சிங்கமாகாளி அம்மன், முத்துமாரியம்மன் முதலான கோயில்கள் எழுந்தருளியிருக்கும் வீதிதான் கடற்கரைத்தெரு. ஒரு காலத்தில் இதற்கு கன்னாரத்தெரு என்றும் பெயர் இருந்தது. அந்த வீதிக்கு வெளியூரிலிருந்து எவரேனும் முதல் தடவையாக வந்தால், தமிழ்ப்பிரதேசத்திற்கு வந்திருக்கும் உணர்வையே பெறுவார்கள். அந்த வீதியில்தான் கேட்தோட்டம் என்ற தொடர் வீட்டுக்குடியிருப்பில்  எனது அக்கா செல்வி 1945 ஆம்  ஆண்டிலும் நான் 1951 ஆம் ஆண்டிலும் பிறந்தோம்.
கடற்கரை வீதியிலிருந்து இந்து மகா சமுத்திரத்தை நோக்கிச்செல்லும் சூரியவீதியில் எங்கள் அப்பாவும், தாத்தாவும் சேர்ந்து வாங்கிய வீட்டில்தான் எனது தங்கையும் தம்பிமாரும் பிறந்தனர். சூரியவீதியில் இலக்கம் 20 இல்லத்திற்கு பல இலக்கியவாதிகள் வந்திருக்கின்றனர்.
தமிழக படைப்பாளிகள் தொ.மு. பாஸ்கரத்தொண்டமான், தொ.மு.சி. ரகுநாதன் மற்றும் ஈழத்து எழுத்தாளர்களும் வருகை தந்திருக்கும் இல்லம். 1971 இல் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழ் அறிமுக விழாவும் இந்த இல்லத்தில்தான் நடந்தது.
எமது வளர்மதி நூலகம், மற்றும் நீர்கொழும்பு இலக்கிய வட்டம் என்பனவற்றின் கூட்டங்கள் இங்கு நடந்திருக்கின்றன. முற்றத்தின் மல்லிகைப்பந்தலை உருவாக்கியவர் எங்கள் பொலிஸ் தாத்தா.
இன்றும் எங்கள் குடும்பத்தின் இல்லமாக அது விளங்கினாலும் தம்பிமார், தங்கை, அக்காவுக்கெல்லாம் தனித்தனிவீடுகள் எங்கள் ஊரில் வந்துவிட்டன. எல்லாம் வெளிநாட்டு உழைப்பில்தான்.
ஆனால், அந்தக்காட்சிகளைப்பார்க்க இன்று தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இல்லை. அவர்களினால் ஏற்பட்ட வெற்றிடத்தை பேரக்குழந்தைகள் இன்று நிரப்பிவிட்டார்கள்.


நாம் வாழ்ந்த அந்த சூரியவீதியில் அமைந்துள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி கதைகள் இருக்கின்றன. கடற்கரை வீதியிலிருந்து பிரியும் அந்த வீதியின் தொடக்கத்தில் அமைந்திருந்த இல்லத்தில்தான் ஒரு காலத்தில் கேரளாவிலிருந்து வந்திருந்த நாராயணன் என்பவருடை ய  நெசவுசாலை இயங்கியது. பல இளம் யுவதிகளுக்கு தொழில் பயிற்சியும் தொழிலும் வழங்கியது. வடலியடைப்பிலிருந்து வந்திருந்த ஒரு ஆசிரியை அங்கு நெசவுப்பயிற்சி வழங்கினார்.
1966 ஆம் ஆண்டில் எங்கள் மாமா அ. மயில்வாகனன்  நடத்திய சாந்தி அச்சகத்திலிருந்து வெளியான அண்ணி என்ற இதழில் நெசவுசாலையை நடத்திய நாராயணன் ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார்.
அந்த இல்லத்திற்கு நேர் எதிரே அமைந்திருந்த பெரிய வீட்டில் ஜே.ஆர். ஜயவர்தனாவுடன் ஒன்றாகப்படித்த ஒரு செல்வந்தரின் குடும்பம் இருந்தது. அவர் குதிரைப்பந்தயப்பிரியர்.
அவரது மகன்மார் கையில் துப்பாக்கி எடுத்து சண்டையிட்டபோது தாய்தான் குறுக்கே நின்று இருவரதும் உயிரைக்காப்பாற்றினார். அந்தக்காட்சிக்கு நான் சாட்சியாக இருக்கும்பொழுது எனக்கு பத்துவயதுதான் இருக்கும்.
அந்த வீட்டின் ராசி துப்பாக்கியுடன் தொடர்புகொண்டிருந்ததுதான் பேராச்சரியம். நான் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற பின்னர் அந்தப் பெரிய வீடு பலரது கைக்கும் மாறியிருக்கிறது.
ஒரு தடவை அந்த இல்லத்திலிருந்து துப்பாக்கிச்சூட்டுடன் இரண்டு இளைஞர்களின் சடலம் மீட்கப்பட்ட தகவல் வெளியானது. அந்தச்சம்பவத்தின் ரிஷிமூலம் இற்றைவரையில் யாருக்கும் தெரியாது.
நாராயணன் இல்லத்தில் இயங்கிய நெசவு சாலை பின்னாளில் மாடி வீடாக மாறியது. தற்பொழுது கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அங்கு குடியிருக்கிறார். அவரது துணைவியார் சுபா ஷாமினி எங்கள் கல்லூரியில் இசை ஆசிரியர்.
அந்த இல்லத்திற்கு அருகில்தான் தற்பொழுது ஜெர்மனியில் வதியும் எழுத்தாளர் சஸிகரன் பசுபதியின் தாத்தா தனுஷ்கோடி அவர்களின் குடும்பம் வசித்தது. தனுஷ்கோடி நீர்கொழும்பு சுருட்டுத்தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். எங்கள் ஊர் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலிருந்து அந்நாளைய கல்வி அமைச்சரையும் காணச்சென்றவர். சமூகப்பணியாளர்.
அவரது அந்த இல்லத்திற்கு அருகில் பெரிய புளியமரம் நின்றது. காலப்போக்கில் அதனையும் வெட்டிவிட்டார்கள். அதற்கு முன்னால் ஒரு வீட்டில்தான் நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த கத்தோலிக்க மக்களின் திருமணம் மற்றும் மரணச்சடங்கிற்கு பாண்ட் வாத்தியம் வாசிக்கும் ஒரு இசைக்குழு இயங்கியது. அந்தக்குழு பரம்பரையாக மேற்கொண்டிருந்த இசைப்பணியும் இறுதியில் முடிவுக்கு வந்துவிட்டது.
அந்த இல்லத்தை பின்னாளில் வாங்கியவர் தில்லைநாதன் என்ற புங்குடுதீவைச்சேர்ந்த ஒரு வர்த்தகப்பிரமுகர். அவர் சமாதான நீதிவானாகவும் சமூகச்சேவையாற்றியவர். புங்குடுதீவு  எழுத்தாளர்கள் மு. தளையசிங்கம், பூரணி மகாலிங்கம், நாவேந்தன். வி.ரி. இளங்கோவன் ஆகியோரின்  நண்பர்.
கடந்த 2015 இல் வந்திருந்தபொழுது அவரை, அவரது படுக்கையில்தான் பார்த்தேன். அவரும் சில மாதங்களுக்கு முன்னர் நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.
அவரது வீட்டுக்கு அருகில் மெழுகுவர்த்தி தயார் செய்து விற்கும் ஒரு குடும்பம் இருந்தது. எங்கள் அப்பாவும் ஒரு கம்பனியில் விநியோகப்பிரதிநிதியாக பணியாற்றிய காலத்தில் அவர்களிடம் மெழுகுவர்த்தி கொள்வனவு செய்திருக்கிறார்.
அந்த வீட்டுக்கு அருகிலிருந்த மாநகரசபையின் பொதுநீர்குழாயில் பல மாதங்கள் அதிகாலையிலேயே குளித்திருக்கின்றேன்.
அந்தத் தண்ணீர்குழாய் அமைந்த இடத்திற்கு அருகில் ஒருதலைப்பட்சமாக ஒரு மயிலையும் ரசித்தேன். கண்கள்தான் பேசியிருக்கின்றன.
ஒருநாள் காணமலேயே போய்விட்டாள். தற்பொழுது அந்தத்தண்ணீர்குழாயும் காணாமல்போய்விட்டது.
அந்த வீட்டுக்கு அருகில்தான் எனது பால்ய கால நண்பன் நிமால் வசித்தான். அவன் தற்கொலைசெய்துகொண்ட காலத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன்.
சூரியவீதியும் அலஸ்வீதியும் சந்திக்கும் இடத்தில்தான் மேரிலின் வசித்தாள். அவளைப்பற்றியும் ஒரு சிறுகதை எழுதியிருக்கின்றேன். நினைவுக்கோலங்கள் தொகுப்பிலிருக்கும் முதிர்கன்னி அவள்தான். எனது அக்காவின் வயது.
கடந்த முறை சந்தித்தேன். தற்பொழுது அவளும் இறந்துவிட்டாள். அவள் தங்கையிடம் " என்ன சோமலமாதாவே... மேரிலினும் மஞ்சக்கசேனைக்கு (மயானத்திற்கு ) போனதா..." என்று கேட்டு, துயர் பகிர்ந்தேன்.
அந்த வீட்டுக்கு அடுத்த வீடு எங்கள் 20 ஆம் இலக்க வீடு. இடிபாடுகளுடன் சற்று சிதிலமடைந்திருக்கும் அந்த வீட்டுக்குரியவள் எங்கள் அக்கா மகள். அவள் லண்டனில். அவளது ஒரு அண்ணன் குடும்பம் அதில். அவன் மனைவி வயிலின் வி.கே. குமாரசாமியின் உறவினள். எங்கள்  கல்லூரியில் ஆசிரியர்.
எங்கள் இல்லத்தைக்கடந்துசென்றால் வரும் வீடுகளுக்குப்பின்னாலும் பல கதைகள் இருக்கின்றன. அவற்றைக்கடந்தால் இந்து சமுத்திரத்தாய் வா வா என்று பேரிரைச்சலுடன் அழைப்பாள்.
சிறுபராயத்தில் எங்கள் விளையாட்டுத்திடல் அந்தக்கடற்கரைதான். என்னையும் எனது தம்பியையும் ஒரு நாள் விழுங்கப்பார்த்த அந்த அலைகள் இன்றும் அந்த சமுத்திரத்தில் அலைந்துகொண்டிருக்கும்.
கண்டம் என்ற பதிவை எனது சொல்ல மறந்த கதைகள் தொகுப்பில் எழுதியிருக்கின்றேன்.
சூரியவீதியிலிருந்த ஒரு வீட்டைப்பற்றி ஜெர்மனியிலிருக்கும் ஒரு எழுத்தாள நண்பர் என்னிடம்  விசாரித்திருக்கிறார். அவருடை நண்பர் ஒருவருக்காக அவர் தொடுத்த வினாக்கொத்தில் நுளம்புகள் பற்றியும் ஒரு கேள்வியிருந்தது.
எங்கள் வீதியில் இன்று யாவும் மாறிவிட்டன. வீடுகளின் அமைப்புகளும் மாறிவிட்டன.
மனிதர்கள் மாறிவிட்டார்கள்.  ஊரும் மாறிவிட்டது.
கடல்மாத்திரம் மாறவில்லை.
(பயணங்கள் தொடரும்)

No comments: