சி.வி.க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ்
வடமாகாண அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது : வடமாகாண ஆளுநர்
கல்வி, விவசாய அமைச்சுக்களை பெறுப்பேற்றார் சி.வி.
கைதானார் ஞானசார தேரர்..!
மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்..!
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : மற்றுமொரு கடற்படை வீரர் சி.ஐ.டி.யால் கைது
இராஜினாமா செய்தார் கல்வி அமைச்சர்
சி.வி.க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ்
19/06/2017 வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் த.தே.கூ. தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 14 ஆம் திகதி புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வடமாகாண அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது : வடமாகாண ஆளுநர்
21/06/2017 வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்தார்.
வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுக்களை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள் ஆளுநர் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
30 வருட போரின் பின்னர் ஏற்பட்ட முதலாவது வடமாகாண சபையில் இவ்வாறான குழப்ப நிலைகள் ஏற்பட்டதுடன் அவை சுமூகமாக நிறைவடைந்துள்ளமை மகிழ்சியை தருகின்றது.
நாடகத்தில் ஒருபாகம் தற்போது நிறைவடைந்துள்ளது. பல விவாதங்கள் கலந்துரையாடல்களுக்கு பிறகு இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
வடமாகாண சபையின் காலம் முடிவடைந்து வரும் நிலையில் இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செய்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கல்வி, விவசாய அமைச்சுக்களை பெறுப்பேற்றார் சி.வி.
வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களை மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று மாலை ஆளுநர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வட மாகாணத்தின் கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக பதவியை ராஜினமா செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில் மேற்படி இரண்டு அமைச்சுக்களையும் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் போது மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே சிவாஜிலிங்கம் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கைதானார் ஞானசார தேரர்..!
21/06/2017 பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் பொலிஸ் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தேரரை அளுத்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி
மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்..!
21/07/2017 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் இன்று இரண்டவாது தடவையாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரு வழக்குகளுக்காக ஞானசார தேரர் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், முன்பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, மேலும் ஒரு முறைப்பாட்டுக்கு அமைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் ஊடாக அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரரை குற்றத்தடுப்புப் பிரிவினர் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதையடுத்து, புதுக்கடை நீதிவான் நீதிமன்றம்; அவரை பிணையில் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : மற்றுமொரு கடற்படை வீரர் சி.ஐ.டி.யால் கைது
21/06/2017 கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளிலிருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு கடற்படை வீரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் 5 கடற் படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது மற்றொரு கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலையில் உள்ள ருஹுனு கடற்படை முகாமில் சேவையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாயவுப் பிரிவின் சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜரான குறித்த கடற்படை வீரரிடம் இரவு 8 மணிக்கும் மேலாக சுமார் 10 மணி நேரத்துக்கும் அதிக நேரம் விசாரணை நடத்தப்பட்டே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க உள்ளதுடன் விளக்கமறியலில் ஏனைய சந்தேக நபர்களான கடற்படை சிறப்பு புலனாயவுப் பிரிவின் கமான்டர் சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ ஆகியோர் இருந்து ுந்து வருகின்றனர்.
இந் நிலையிலேயே புதிதாக மற்றொரு சந்தேக நபராக கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நன்றி வீரகேசரி
இராஜினாமா செய்தார் கல்வி அமைச்சர்
20/06/2017 வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த வடமாகாண கல்வி அமைச்சரை தாமாக முன்வந்து பதவி விலகுமாறு முதலமைச்சர் அண்மையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment