முக்கால் பங்கும் முட்டாள் மந்தையும் - -- விழி மைந்தன் --

.
முக்கால் பங்கும் முட்டாள்  மந்தையும் 
(இன்னுமொரு தலைப்பு:  நரியின் தேற்றமும் எரியும் தேசமும்)


அது மனிதன் தோன்றாத காலம்.

அந்த அழகான ஆரண்யத்தில் குரங்குகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தது.

ஆயிரம் ஆயிரம் குரங்குகள், அந்த  ஆரண்யம் தந்த பழங்களைப்  புசித்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.

அந்தக் குரங்குகளின் தலைவன் பெயர் தேவன்.

வயசாலும், அனுபவத்தாலும், பெருந்தன்மையாலும்,  இரக்கத்தாலும், அது தலைமைப்  பதவிக்குத் தகுதி உள்ளதாய்  இருந்தது.

தேவனை எல்லாக் குரங்குகளும்  மதித்து  நடந்தன. அருமையாகக்  கிடைக்கும் கனி  வர்க்கங்களைக்  காணிக்கையாகக்  கொண்டு போய்க்   கொடுத்தன. தேவன் வந்தால் நகர்ந்து வழி விட்டன.  தேவன் கேட்காமலே பணிவிடைகள்  செய்தன. தேவனின் தலைமை தமக்கு நன்மையானது என்று உணர்ந்திருந்தன.

குத்தியன் என்ற ஒரு குரங்கைத் தவிர.

குத்தியன் பலமும் தந்திரமும் முற்கோபமும் வாய்ந்த நடுத்தர வயதுக்  குரங்கு.  கருணையும்  நீதியும்  அதிகம் உடையதல்ல. அது தலைமைப்  பதவிக்கு ஆசைப்பட்டது.

குரங்கு மகாசபையைக்   கூட்டுமாறு கத்தியது.

குரங்குத் தலைவர்களைத்  தேர்ந்தெடுப்பது குரங்கு மகாசபை.


குரங்கு மகாசபையில் எல்லாக் குரங்குகளும் தேவனையே  ஆதரித்தன. பலமும் ஆதிக்கத் தன்மையும் வாய்ந்த தான் தான்  தலைவனாக வேண்டும் என்று குத்தியன் கத்தியதை அவை செவி மடுக்கவில்லை.  அறிவும் அனுபவமும் நீதியும் நேர்மையும்  கண்ணியமும் கருணையுமே  ஒரு தலைவனுக்கு முக்கியம் என்று சொல்லி விட்டன.

குத்தியன் படுதோல்வியும் பெரும் அவமானமும்  அடைந்தது.

தனது வீரை  மரத்தில் சிறிது நாள் ஒளிந்து கொண்டிருந்தது.

காட்டின் எல்லையில், அரசியல் தந்திரங்களில் கை  தேர்ந்த குள்ளநரி ஒன்று இருப்பதாகக்  கேள்வியுற்று, நரியைப்  பார்க்கச்  சென்றது.

"ஓ நரியாரே! நான் குரங்குகளுக்குத் தலைவனாக விரும்புகிறேன்.  அதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டது.

"ஓ  அப்படியா? அதற்கு நீ மற்றக்  குரங்குகளுக்கு நிறைய உதவி செய்ய வேண்டும்.  காடு பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய குழுக்களுக்குத் தலைமை தாங்கி அனுபவம் பெற வேண்டும்!" என்று நரி மேலும் சொல்வதற்குள் குத்தியன் இடைமறித்தது.

"இப்படியெல்லாம் செய்ய எனக்குப் பொறுமையில்லை. திறமையுமில்லை. இந்த வழியில் தேவனை நான் மிஞ்சவும் முடியாது. மிக விரைவாகவும், மிக இலகுவாகவும் நான் தலைவன் ஆவதற்குக்  குறுக்கு வழி ஒன்று சொல்லும்" என்று கூறி, தான் கொண்டு வந்த முயல் இறைச்சியையும் நரியின் முன் படையல் செய்தது.

முயல் துண்டு ஒன்றை  எடுத்து வாயில் போட்டுக் கொண்ட நரி கொஞ்சம் யோசித்தது.

"ஒரு வழி இருக்கிறது. ரொம்ப யோசித்து  என் ஆராய்ச்சியால்  அதை  நான் கண்டுபிடித்தேன். 'நரியின் தேற்றம்' என்று அதற்குப் பெயர்  இட்டிருக்கிறேன்.  மிருகநாயகத்தில்   -  அதாவது மிருகங்கள்  வாக்கு மூலம் தலைவனைத் தேர்ந்தெடுக்கும்  முறையில்  - அது இலகுவாக வெற்றியைத்  தரும். அதில் அடிப்படையாக மூன்று விதிகள் உண்டு. கவனமாகக் கேள்:

1) வாக்களிக்கும்  மிருகங்கள் மத்தியில் ஒரு பிளவை ஏற்படுத்தி விடு. 

2) பிளவை ஏற்படுத்தும் விஷயத்தைத் தேர்ந்தெடுக்கும்  போது, மிருகங்கள் சரி பாதியாகப் பிரியும்படியான விஷயத்தைத் தேர்ந்தெடுக்காதே. ஒரு பக்கத்தில் அதிக மிருகங்களும் இன்னொரு பக்கத்தில் குறைவான மிருங்கங்களும் இருக்கும் படி தேர்ந்தெடு. முக்கால் பங்கு ஒரு பக்கத்திலும் கால் பங்கு இன்னொரு பக்கத்திலும் இருப்பது உத்தமம்.

3) நீ,  முக்கால் பங்கினரின் பக்கத்தில் இருக்கும் படியான விஷயத்தைத் தேர்ந்தெடு. மற்றும்படி, பிளவு எந்தச்   சின்ன  விஷயம் பற்றியும் இருக்கலாம். 

இந்தப் பிளவைப் பற்றியே எந்த நேரமும் பேசு. கூச்சலிடு.  காற்பங்கினர்  முக்காற் பங்கினருக்குச்  சேர வேண்டியதைத்  தட்டிப் பறிக்கிறார்கள் என்று சொல். காற்  பங்கினருக்கு எதிராக மிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய ஒரே தலைவன் நீ தான் என்று சொல்.

காற்பங்கினர் முற்று முழுதாக உனக்கு  எதிரிகள் ஆவார்கள். அதைப்   பொருட்படுத்தாதே. முக்காற் பங்கிலே  புத்திசாலிகளான  ஒரு காற்பங்கினர் உன்னை நம்ப  மாட்டார்கள்.  அதையும் பொருட்படுத்தாதே. முக்காற் பங்கிலே முக்காற்பங்கு, அதாவது பதினாறில் ஒன்பது, கண்மூடித்தனமாக உன்னை ஆதரிக்கும். பதினாறில் ஒன்பது அரைவாசிக்குக்  கூடவா குறைவா?" என்று கேட்டது நரி.

"கூட"

"அது போதும் உனக்கு.  வேறு எதுவும் நீ செய்யத் தேவையில்லை. பதவிக்கு வரு  முன்பும் செய்யத் தேவையில்லை. வந்த பிறகும் செய்யத் தேவையில்லை. முக்காற்பங்குக்கு  நீ நன்மை எதுவும் செய்யத் தேவையில்லை.  பிளவைப் பற்றியும், காற்பங்கை அடிப்பது பற்றியும் எப்போதும் பேசிக் கொண்டிரு போதும். எந்தக் கொம்பனும் உன்னை அசைக்க   முடியாது. இதுதான் மிருக நாயகத்தின் அடிப்படை!" என்று சிரித்தது நரி.

"நரியாரே! இது மிகவும் எளிமையாக இருக்கிறதே! இது வேலை செய்யுமா? குரங்குகள்  இதற்கு எடுபடுமா?  இப்படி எளிமையான தந்திரத்துக்கு ஏமாறுமா?  மற்ற மிருகங்கள் போல்  மக்குகளில்லைக்  குரங்குகள்! நீதி, நியாயம், நேர்மை, கடமை, கண்ணியம், கல்வி, ஆற்றல், அறிவு, ஆளுமை என்று ஆயிரம் விஷயங்களை யோசிக்கும்,  மிகவும் புத்திசாலிகளான  குரங்குகள் எமது காட்டுக் குரங்குகள்! " என்று தன்  சந்தேகத்தை  வெளியிட்டது குத்தியன்.

"ஹா ஹா ஹா! அதெல்லாம் பிளவு ஏற்படும்  வரை. முயன்று பார்!! இந்த நரியின் மேதைமையை உணர்வாய்!" என்று திடமாகச் சொன்னது  நரி.

"இன்னுமொரு விஷயம். நரியின் தேற்றம்  அதை அமுல் படுத்தும் தலைவனின் நன்மைக்கானது. அவன் கீழுள்ள மிருகங்களின்  நன்மைக்கானதல்ல. அவைக்கு அது தீமையையே கொடுக்கும். மனச்சாட்சி மயிர் மட்டை என்று  நீ இடையில் யோசித்தாயோ நரியின் தேற்றம் வேலை செய்யாது!" என்று  எச்சரித்து அனுப்பியது நரி.

எப்படியும் தலைமையைப்   பிடிக்க வேண்டுமென்று பேராசைப்  பட்ட குத்தியன், நரியின் தேற்றத்தை முயற்சித்துப் பார்க்க முடிவெடுத்தது.

தனது வீரையில் அமர்ந்த படி யோசித்தது.

குரங்குகளிடையே பிளவை ஏற்படுத்தக் கூடிய  விஷயம் என்ன?
குத்தியனுக்குத்  தெரிந்த முக்கியமான வித்தியாசம், மலைக் குரங்குகளும் சமவெளிக்குரங்குகளும். மலைக்  குரங்குகள் பலமானவை. ஓடியாடி வேலை செய்யக் கூடியவை. சமவெளிக்குரங்குகள் சற்றுச்  சிறியவை. புத்திக்கூர்மை  உள்ளவை.  மூளை தேவைப்படும் வேலைகளைச்  செய்பவை.

குத்தியன் மலைக்  குரங்கு.

"மலைக்  குரங்குகளின் உடல் உழைப்பில்  சமவெளிக்குரங்குகள் குளிர் காய்கின்றன" என்று கத்திப் பார்க்கலாம். அது கொஞ்சம் எடுபடலாம். ஆனால்....

மலைக் குரங்குகளும் சமவெளிக் குரங்குகளும் கிட்டத்தட்டச்  சம எண்ணிக்கையில் இருந்தன.

பாதிக்குரங்குகளை விரோதித்துக்கொள்வது மிருகநாயகத்தில் புத்தியில்லை.  முக்கால்  -  கால் என்று பிரிக்கும்படி நரியின் தேற்றம் சொல்கிறது.

வேறென்ன வித்தியாசம்?

ஆண்  -  பெண்!

குரங்குச் சமுதாயத்தில் கிட்டத்தட்ட  முக்கால்வாசி பெண்கள்.  ஆண்கள் கால்வாசியே. ஆனால் ஆதிக்கம் செலுத்துபவை.

"பெரும்பான்மைப் பெண்களைச்  சிறுபான்மை ஆண்கள் ஆளுவதா? " என்று கத்தலாம். அது எடுபடவும்   கூடும். ஆனால்.....

குத்தியன் ஆண்  குரங்கு! அதை நம்பிப் பெண் குரங்குகள் வாக்களிக்குமா?

நரியின் தேற்றத்தின்  மூன்றாம் விதிக்கு முரணானதல்லவா?

வேறென்ன வித்தியாசம்? குத்தியனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. தனது சிறிய  மூளையைக் கசக்கியது.

வாலின் நீளத்தை வைத்து ஏதேனும்   செய்யலாமா?

பெரும்பாலான குரங்குகள் அழகான நீள  வால்  படைத்திருந்தன. குத்தியனும்  அப்படித்தான்.  காற்பங்கு குரங்குகளுக்குக்  கொஞ்சம் கட்டை  வால்.

அதனால் என்ன? வாலின் நீளத்தில் ஏதேனும் முக்கியத்துவம் உண்டென்று குத்தியனுக்கே தோன்றவில்லை!


இருந்தாலும் என்ன? "முரண் எவ்வளவு  சிறிதென்பது  முக்கியமில்லை!" என்பது  நரியின் மூன்றாம் விதியன்றோ?  முயன்று பார்க்க வேண்டியது தான்!

அடுத்த நாள், குத்தியன்  முதற்கட்டமாகப்  பலவிதக் கொடிகளாலும் பூக்களாலும் தனது நீண்ட வாலை   அலங்கரித்துக் கொண்டது. 

'வால்  விழிப்புணர்வு வாரம்' தொடங்கியது.

'குரங்குகளுக்கு மிகவும் முக்கியமானது வால்' என்று கூறி, வாலின் பெருமைகளைப்  பற்றி மரத்துக்கு  மரம் பிரசங்கம் செய்தது.

நீள்  வால்க் குரங்குகள் மட்டுமல்ல, குட்டை வால்க்  குரங்குகளும் கூட அமர்ந்திருந்து கேட்டு , கை  தட்டின.

பிறகு குத்தியன்  மெதுவாகத் தனது நச்சுப்  பிரசாரத்தை அவிழ்த்து விட்டது.

'குட்டை வால்க் குரங்குகளுக்கு நீள்வால்க்  குரங்குகள் மேல் பொறாமை' என்று சொல்லிப் பார்த்தது.

'சில சில மரங்களில் இருந்து குட்டைவாலன்கள்  நீள்வாலன்களைத்  தள்ளி விழுத்தியதாகக் கேள்வி' என்றது.

யாரும் நம்பவில்லை.

பதவிகளுக்காகத்  தன்  பின்னே அலைந்த சில நீள்  வாலன்களை  வைத்து, சில குட்டை  வாலன்களைக்  காரணம் இன்றித் தாக்கியது. தகராறு செய்ய வைத்தது.

ஓர்  மரத்தில்,  தகராறு செய்த ஒரு நீள்வாலனுக்குக் குரங்குகள்  எல்லாம்  சேர்ந்து நல்ல அடி  போட்டன.

தாக்கப்பட்ட நீள்வாலனுக்கு வேண்டுமென்றே பெரிய கட்டுகள் போட்டு மரத்துக்கு மரம் குத்தியன் அழைத்துச் சென்றது. 'நீதி கேட்ட நீள்வாலனைக் குட்டைவாலன்கள் நையப்  புடைத்து விட்டன' என்றது. தாக்கிய குரங்குகளில்  நீள்வாலன்களும்  இருந்ததை மறைத்தது.

முன்கோபமுள்ள அல்லது அதிகம் சந்தோஷமில்லாமல் வாழ்ந்த நீள்  வாலன்கள்  சில, குத்தியனை நம்பலாயின.  

இதைத் தவிர, எந்த வித முக்கியத்துவமும் திறமையும் இன்றி குரங்குச் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்த நீள்  வாலன் குரங்குகள்  பல, குத்தியனின் பிரசாரம் தமக்கு நன்மை பயக்கும் என்பதைக் கண்டு கொண்டன. தாங்கள்  நீள்  வாலன்கள்  என்று சொல்வதன் மூலம், சமூகத்தின் ஒரு பகுதியான குட்டைவாலன்களை  விடத் தாம் பெரியவர்கள் என்று காட்டிக் கொள்ளலாம் என்பது, வேறு எந்த வகையிலும் சுயகணிப்பைப்  பெற முடியாத அடிமட்டக் குரங்குகளுக்கு ஒரு சுய கணிப்பைக்  கொடுத்தது. சொந்தமாகத்  திறமைகள் அற்ற குரங்குகள் திறமையுள்ள தேவன் போன்ற குரங்குகளை வெறுத்தன. திறமையின் அடிப்படையிலான சமூகத்தையும் வெறுத்தன.  வாலின் நீளத்தைக்  கொண்டு உயர்வு தாழ்வு கற்பிப்பது வரப்பிரசாதமாக இருந்தது அவற்றுக்கு.  குத்தியனின் பின்னால் அணி திரண்டன.


கண்ட கண்ட இடங்களில் குட்டைவாலன்களை  தாக்கின.

தலைவனான தேவன், தாக்கிய நீள்வாலன்களைப்  பிடித்துத் தண்டித்தது.

தேவன் துரோகி என்றும், தானே நீள்வாலன்களுக்குத்   தகுந்த தலைவன் என்றும் குத்தியன் கத்தியது.

முன்கோபமுள்ள சில குட்டைவாலன்கள், நீள்வாலன்களைத் திருப்பி அடிக்க வேண்டும் என்று பேசலாயின. ஒரு முதிரை மரத்தில் வைத்து ஒரு  பாவமும் அறியாத சில நீள்வாலன்களுக்கு  அடித்து விட்டன.

இப்போது  குத்தியன் சொன்னது மெய்யாகி விட்டது!

நீள்வாலன்களுக்கும்  குட்டைவாலன்களுக்கும் பிளவு வந்து விட்டது!

குத்தியன் நீள்வாலன்களைப்  'பெரும்பான்மையினர்' என்று குறிப்பிடத்  தொடங்கியது. 'பெரும்பான்மையினர் உரிமைகள்' பற்றிப்  பேசியது.

பதிலுக்கு, குட்டைவாலன்கள் 'சிறுபான்மையினர் உரிமைகள்' பற்றிப்  பேசலாயின.  தம்மில் பல, மலைக்குரங்குகள்  என்ற வகையிலும் பெண்கள்  என்ற வகையிலும் பெரும்பான்மை என்பதை மறந்தன!

சீக்கிரத்தில், குரங்குகளுக்கிடையில் உள்ள முக்கியமான வேற்றுமை வாலின் நீளத்தைப் பொறுத்ததே என்று எல்லாக் குரங்குகளுமே எண்ண  ஆரம்பித்து விட்டன!

குத்தியனுக்கு முதல் வெற்றி!

குரங்கு மகாசபையைக் கூட்டும் படி குத்தியன் கத்தியது.

மகாசபையில், எல்லாக் குட்டைவாலன்களும்  தேவன் பக்கம் நின்றன. குத்தியன் மற்ற  நீள்வாலன்களுக்கு அதைச் சுட்டிக்காட்டி, 'தேவன் யார் பக்கம்  தெரிகிறதா?' என்று கேட்டது.

நீள்வாலன்களில்  கால்வாசியே தேவன் பக்கம் நின்றன. அவை பெரும்பாலும் புத்திசாலிகளான  சமவெளிக்குரங்குகள்.

முக்கால் வாசி  நீள்வாலன்கள்  குத்தியனோடு நின்றன!

முக்காலில் முக்கால் பெரும்பான்மை பெறப்  போதும்.

நரியின் தேற்றம் வென்றது!

குத்தியன் தலைவன்  ஆனதும், குட்டைவாலன்கள்  நீள்வாலன்கள் மீது நம்பிக்கை இழந்தன.

காடெங்கும்  இரு கட்சிக்கும் சண்டை!  ஆண்களும் பெண்களும், மலைக்  குரங்குகளும் சமவெளிக்குரங்குகளும் வால்   நீளத்தின்  அடிப்படையில் பிரிந்து நின்று சண்டையிட்டன!

குட்டைவாலன்கள் தமக்குத் தனியான ஓர் தலைமையைத் தேர்ந்து கொள்ள ஆசைப்  பட்டன.

குட்டைவாலன்கள்  சார்பில்  வீரத்துடனும் விவேகத்துடனும் போரிட்ட குரங்கு வீரன்.  குட்டைவாலன் மகாசபை கூடும் பட்சத்தில் அதற்கு வெற்றி வாய்ப்புகள்  அதிகமாயிருந்தன.

சொத்தியன் என்ற குரங்கு, குட்டைவாலர்  உரிமைகளை வென்றெடுத்த பெருமை தனக்கே கிடைக்க  வேண்டும் என்று ஆசைப்பட்டது.

காட்டெல்லை  நரியைப் பற்றி அதுவும் கேள்விப்பட்டது.

சுவையான உடும்பு இறைச்சியுடன் நரியைத் தேடிச்  சென்றது.

குறுக்கு வழியில் தலைமை வேண்டியே சொத்தியனும் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பின், நரியின் தேற்றத்தை அதற்கு விவரமாக உபதேசித்தது நரி.

மேலதிகமாய் ஒரு விபரமும் சொன்னது.

'சிறு குழுவில் நரியின் தேற்றைத்தை உபயோகிக்கையில் இன்னுமொரு சின்ன யுக்தி செய். சிறுகால்  பெரு முக்காலுடன் சேர்ந்து நடப்பதாய்ச்  சொல், தெரிந்ததா?' என்றது. 'ஐசிங் ஒன்  த  கேக்!' என்று  சொல்லி அட்டகாசமாய்ச்  சிரித்தது.

மண்டைக்குள் மூளை  மட்டு மட்டு என்றாலும், கடைசியாக நரி சொன்னதன் பொருளையும் கண்டு பிடித்து விட்டது சொத்தியன்.

வணங்கி விடை பெற்றது.

முதிரையில் ஏறி இருந்து மூளையைச் செலவழித்தது.

ஆண்  பெண் பாகுபாடு வேலைக்கு ஆகாது.

சமவெளிக்  குரங்கு  -  மலைக்  குரங்கு சரியாய் வராது.

வாலில் இருக்கும் ரோமத்தைப்  பாவித்தால் என்ன?

பெரும்பாலான குட்டைவாலன்கள்   வாலில் மயிரற்றவை. சொத்தியனும் அப்படித்தான்!

கால்வாசிக்கு வாலில் மயிருண்டு. வீரன் வாலில் மயிருள்ள குரங்கு.

மாட்டினாய் வீரா!

அடுத்த நாளே சொத்தியன் ஆரம்பித்து விட்டது.

'எல்லாப் புகழும் அவர்களுக்கோ?' என்றது.

'எவர்களுக்கோ?' என்று கேட்டன குட்டைவாலன்கள்.

'வாலில் மயிருள்ள குரங்குகள் தான். நம் குட்டைவாலன்களில்  பெரும்பாலோர் அழகான மயிரற்ற வாலுள்ளவர்  அன்றோ? மயிர்வால்க்  குரங்குகள் எம் மாட்சியைக் கெடுக்கின்றன. வீரன் மயிர்வாலர்களை ஆதரிக்கிறது. முக்கியப்  பதவிகள் எல்லாம் மயிர் வாலர்களுக்கே! பார்க்கவில்லையா நீங்கள்?' என்று கேட்டது சொத்தியன்.

ஆமாம் என்று முணுமுணுத்தன  சில குட்டைவாலன்கள்.

'நீள்வாலன்கள் எமக்கு விரோதிகளாய்  இருக்கையில், எமக்குள் தேவையில்லை  இந்தப் பிரிவினை!' என்றே பெரும்பாலான குட்டைவாலன்கள் சொல்லின.

சொத்தியன் தனது கடைசி அஸ்திரத்தைப்  பாவித்தது.

'மயிர்வாலன்கள் நீள்வாலன்களுக்கு  மறைமுகமாக  உதவுகின்றன!' என்றது.

'வீரனின் தலைமையால்தான் வெல்லவில்லை நாங்கள்  இன்னும். கட்டை வாலன்களை  வீரன் காட்டிக் கொடுக்கிறான்' என்று  கத்தியது. 'குட்டைவால்  பெண்களை வீரன் கூட்டிக் கொடுக்கிறான்!' என்று  குழறியது. அடுக்கு மொழியில் அலங்காரமாகப் பேசியது.

கோபம் தலைக்கேறிய மயிர்வாலன்கள் சில,  நீள்வாலன்களுக்கு உதவத்  தொடங்கின. சொன்னதால் உண்மையாயிற்று சொத்தியன் கூற்று!

'குட்டைவாலர்  மகாசபையைக்  கூட்டு!' என்று கர்ச்சித்தது சொத்தியன்!

அரசமர உச்சியில் இரகசியமாகக் குட்டைவால்  குரங்கு   மகாசபை கூடியது.

மயிர்வால்க்  குரங்குகள் அத்தனையும் வீரனை மனப்பூர்வமாக  ஆதரித்தன. வெறும்வால்ப்  பெரும்பான்மை கண்களில் இதுவே விபரீதமாகத் தெரிந்தது. வீரன் பக்கம் நின்றிருக்கக் கூடிய  வெறும்வாலன்கள்  பல,  மயிர்வாலன்கள் வீரனை ஆதரித்ததால்   மனசு மாறின.

இப்போது, முக்கால்வாசி வெறும்வாலன்கள் சொத்தியன் பக்கம்!

கட்டை வாலன்களின் தலைவன் ஆனது சொத்தியன்.

வெறுத்துப்போய் வீரன் விலகிக் கொண்டது.

மயிர்வாலன்கள்  தனியாகச் செயற்படலாயின.  விறுமன் அவற்றின் தலைவன் ஆயிற்று.

முரட்டுத்தனம் கொஞ்சம் இருந்தாலும், மோசமான குரங்கல்ல விறுமன்.

எத்தியன் என்ற குரங்கு மயிர்வாலன்களின் தலைவனாக ஆசைப் பட்டது.

எத்தியன் மிக மோசமான குரங்கு.  வீரமோ, நேர்மையான விவேகமோ, ஆற்றலோ ஆளுமையோ அற்றது.  காமமும் குரோதமும்  மத மாற்சரியங்களும் கொலை வெறியும் ஊழலும் கொண்டது. மயிர்வாலன்கள் எத்தியனைத் தமது தலைவனாகக்  கனவிலும் கற்பனை செய்யமாட்டா. இது தெரிந்திருந்தும், தலைமைப் பதவிக்குப் பேராசைப்  பட்டது எத்தியன்.


காட்டெல்லை  நரியைப் பற்றி அதுவும் அறிந்து கொண்டது.

காட்டுக் கோழிகள் சிலவற்றை உயிருடன் பிடித்துச் சென்று நரிக்குப் படையல் செய்தது.

கோழிகளின் கழுத்தை முறித்து இரத்தத்தைக் குடித்த பின்,  எத்தியன் வந்த  காரியத்தை விசாரித்தது நரி.

"நான் மயிர் வாலன்களின்  தலைவன் ஆக வேண்டும். அதற்குத் தாங்கள்  தான் ஒரு உபாயம் சொல்லி உதவ வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது எத்தியன்.

நேர்வழியில் தலைவன் ஆவது எத்தியனுக்கு  எட்டாதது என்பதை  முகத்தைப் பார்த்தே கண்டு கொண்ட நரி, உடனடியாகவே தன்  தேற்றத்தை ஓதியது.

கேட்டுக் கொண்டது எத்தியன்.

"இன்னுமொரு விஷயம். காலை எப்போதும்  அழித்து விடாதே! கால் இல்லாமல் உன் கதிரை இல்லை. காலை அழிப்பது உன் காலை வெட்டிக்கொள்வது போல. அப்புறம் இன்னொரு காலை நீ தேட  வேண்டியதிருக்கும். இல்லையேல் மறு  நாள் காலை விடியும்போது  நீ கவிழ்ந்து விடுவாய்!" என்று எச்சரித்தது நரி!

"வாலை  வைத்து மனேச்  பண்ண முடியாதா?" என்று கேட்டது குரங்கு.

"அட மூடா! வாலை  நீ காவுகிறாயே ஒழிய வால்  உன்னைக் காவாது! கால் இல்லையோ நீ கவிழ்ந்தாய்! மறவாதே!" என்று உறுமியது நரி.

"சரி குருவே!" என்று வணங்கி விடை பெற்றது எத்தியன்.

தன் பாலை மரத்தில் ஏறிப் படுத்தது.

மயிர் வாலன்களைப் பிளவு  செய்வது எப்படியென்று மல்லாந்து யோசித்தது.

எத்தியனின்  வாலின் ரோமங்கள் கறுப்பு.

விருமனின்  வால்  மயிரோ  வெள்ளை.

முக்கால்வாசி வால்மயிர்க் குரங்குகள் கருவால்மயிர் கொண்டிருந்தன.

போதுமே அது!

அடுத்தநாட்  காலை ஆரம்பித்து விட்டது எத்தியன்.

"வெள்ளைவால்  முடியனே  வெளியேறு!" என்று....

வெள்ளை மயிர் வாலன்கள்  மொட்டை வாலன்களுக்கு வேவு பார்க்கின்றன என்று...

கறுப்பு மயிர் வாலன்கள் வெள்ளை மயிர் வாலன்களின்  கீழ் வேலை செய்வது கெளரவமில்லை என்று....

காடெங்கும் பெரும்பான்மை சிறுபான்மையை ஆளும்போது தாங்கள்  மட்டும் என்ன தரம் குறைந்தவர்களா என்று...

பேதங்களே  வாழ்க்கையாகிப் போன குரங்குகள் எத்தியனின் நஞ்சை  இலகுவாகவே விழுங்கி விட்டன.

வால்மயிர்க் குரங்குகளின்  மகாசபை கூடியது -  எருக்கலம் பற்றைக்கு  நடுவில்  மிக இரகசியமாக!

வெள்ளை மயிர் வாலன்கள் எல்லாம் விறுமன்  பக்கம் நின்றன.

கருப்பு மயிர் வாலன்களில்  முக்கால் பங்கு எத்தியன் பக்கம் இருந்தன.

முக்காலில் முக்கால்  -  அரைவாசியை விட அதிகம்! நரியின் தேற்றம் மீண்டும் வென்றது!


********


காடெங்கும் குட்டைவால் குரங்குகளும் நீள்வாள்க் குரங்குகளும் போரிட்டன. குட்டை வால்க்  குரங்குகளுக்குள், மொட்டை வால்க்  குரங்குகளும் மயிர்வால்க்  குரங்குகளும் மோதிக் கொண்டன. மயிர்வால்  குரங்குகளுக்குள், வெள்ளைமயிர்  வாலன்களும் கருப்பு மயிர் வாலன்களும்  ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன.  மயிர்வால்க்  குரங்குகள் ஏனைய குட்டை வாலன்களையும்,  வெள்ளைமயிர்  வாலன்கள்  ஏனைய  மயிர்வால்க்  குரங்குகளையும் காட்டிக் கொடுத்தன. பிரிவுக்குள் பிரிவும் பேதத்திற்குள் பேதமும் விளைந்தன.

காட்டு மரங்களின் கிளைகள் முறிக்கப் பட்டன.  கனிகள் பறிக்கப்பட்டுத்  தரையில் எறியப்  பட்டன. வானரங்களின் இரத்தம் மரங்களில் இருந்து சொட்டியது. மந்திகள் அழித்த மதுவனம் ஆயிற்று அந்தக் காடு.

குத்தியனும்,  சொத்தியனும்,  எத்தியனும்  நரியின் தேற்றத்தைத்  தத்தமது  குழுக்கள்  மத்தியில்   முழுதாக அமுல்படுத்தின. தத்தமது குழுக்களின்  ஒப்பாரும்  மிக்காரும் இல்லாத தலைவர்கள்  ஆயின.

நாளடைவில்,  தமது எதிரிக் குழுக்களின் தலைவர்களும் தமது அரசியல் சித்தாந்தத்தையே  கைக்கொள்கின்றன என்று தலைமைகளுக்குப்   புரிந்தது. நரியின் இருப்பிடத்தில் சிலவேளை திடுமுட்டாகச் சந்திக்கவும் நேர்ந்தது. சீக்கிரத்தில் ' சீக்கிரட்டான' நண்பர்கள் ஆகி  விட்டன! ஒருவர் மரத்துக்கு இன்னொருவர் இரகசியமாகச் சென்று விருந்துண்டு மகிழ்ந்தன!

குத்தியனுடைய தலைமை அதன் குழுவில் பலவீனமாவது  போலிருந்தாலோ, அல்லது மாற்றுத் தலைமை உருவாவது போலிருந்தாலோ  சொத்தியனுக்கு இரகசியச் செய்தி அனுப்பும். உடனே  சொத்தியன் தன்  குரங்குகளை விட்டுத்  தாக்குதல் ஒன்றைச்  செய்யும்.  பதிலுக்கு குத்தியன் குட்டைவால்க்  குரங்குகளின் மேல் கடும் நடவடிக்கை எடுக்கும்.  நீள்வாள்க் குரங்குகள்  மத்தியில் அது மறுபடியும்  பிரபலம் ஆகிவிடும்! இவ்வாறே வெளிப்படையாகப்  பிணக்கிலிருந்த ஒவ்வொரு தலைமைகளும் ஆளுக்காள் இரகசிய உதவி செய்தன.

அவற்றின் கீழிருந்த குரங்குகளோ, வெறியோடு ஒன்றை ஒன்று வேட்டையாடிக் கொண்டிருந்தன.

இப்படி இருந்த குரங்குகளில்  இருந்து எழுந்தார்கள்  மனிதர்கள் ஒரு நாள்.

குரங்கில் இருந்து வந்தவர்கள் என்பதை அவர்களும் நிரூபித்தார்கள்.  

எங்கெங்கும் நரியின்  தேற்றங்கள்.

எரியும் தேசங்கள்.

1 comment:

Anonymous said...

perfect description of politics and politicians.