நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... எம்.ரிஷான் ஷெரீப்


Love

.
நிசி தோறும் வெளியெங்குமலைகிறது
ஆட்காட்டிக் குருவியினோசை
காலம் வசந்தத்தைப் பரப்பும் பொழுதில்
எல்லாத் திசைகளிலும் கேட்கிறது
செங்குயிலின் இனிய பாடல்
வனாந்தர விருட்சங்களில் உருவான காற்று
சுமந்துவரும் ஒலி அதிர்வுகளோடு
சந்திக்கும் பட்டங்களை பட்சிகளை
நலம் விசாரித்தபடி அலைந்து
சேகரித்து வரும் தகவல்களையெல்லாம்
உரிய இடத்தில் கொண்டுசேர்க்கிறது

மௌனத்தையும் சிறுபுன்னகையையுமே
அதிகமாக வெளிக்கொணரும்
செவ்வதரங்களைக் கொண்டவளே
வாழ்வின் களியிசையை வர்ணித்தபடியும்
தனிமை தந்து துடைக்கும்
கண்ணீரின் துயர் அள்ளியெடுத்தபடியும்
காற்று கொணரும் எனது
குரலின் வழி அனுப்பிவைக்கும்
என்னுயிரின் மொழிபெயர்ப்பு
உன்னையும் நிரப்புகிறதுதானே


எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை

No comments: