காலத்தின் வாசனை: கடைசி மீன்கொத்தி! - தஞ்சாவூர்க் கவிராயர்

.

சென்னையை ஒட்டியுள்ள இந்த புறநகர்ப் பகுதியில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சியளித்த கழனிகள் இப்போது காணாமல் போய்விட்டன. பூசணியும், வெள்ளரியும், கத்தரியும், வெண்டையும் காய்த்துக் குலுங்கிய மண் கட்டாந்தரையாகி விட்டது.
பெரிய ‘புல்டோசர்’கள், ராட்சத மரம் வெட்டி இயந்திரங்கள் உலோகக் கைகளுடன் மரங்களையும் செடிகளையும் வேரோடுப் பிடுங்கி எறிந்தன. பயிர்களின் தாகம் தீர்த்த விவசாயக் கிணறுகளின் திறந்த வாய்களில் மண் கொட்டப்பட்டு மூடப்பட்டது.
ஒரு பிரம்மாண்டமான ஏரி மெல்லப் பின்வாங்கியது.. பின் காணாமலே போனது.. அவ்வளவுதான்! சகல வசதிகளுடன் கூடிய ஒரு குட்டி நகரம் அங்கே உருவாகிவிட்டது. வீட்டுமனை விற்பனை அமோகமாக நடந்தது. அரசாங்கத்தின் மாநகர வளர்ச்சிக் குழும நிறுவனம், வரைபடம் போட்டு வயல்களின் வயிற்றை அறுத்துக் குடியிருப்புகளைப் பிரசவிக்கவைத்தது.
நானும் ஒரு வீட்டுமனை வாங்கிப்போட்டேன். சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய மனையின் மதிப்பு லட்சங்களாக உயர்ந்தது. பூர்வீக கிராமத்தின் விவசாயிகள், காலமெல்லாம் வயலே கதியென்று கிடந்தவர்கள், பத்திரப் பதிவு அலுவலகத்தில் வேட்டியும் சட்டையுமாய் நின்றார்கள்.
“விக்க வேணாம்ப்பா... வேணாம்ப்பா” - பெரியவர்கள் கெஞ்சினார்கள்.
“சும்மா கிட தாத்தா... கொண்டா உன் கட்டை விரலை..” - அவர்களின் கட்டை விரல்களில் மை தடவப்பட்டுப் பத்திரங்களில் உருட்டப்பட்டன. அவர்களின் வாரிசுகள் பயிர் நிலங்களில் பணம் காய்ப்பதைப் பார்த்துப் பிரமித்துப்போனார்கள்.


எங்கள் வீட்டுக்கு அருகில் எழுந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குப்பைத் தொட்டி தேவைப்பட்டது. பக்கத்தில் இருந்த குளத்தின் முகத்தின்மீது குப்பைகள் வீசப்பட்டன. மெல்ல உருவான குப்பை மேட்டின் மீது பறந்துகொண்டிருந்த கடைசி மீன்கொத்தியை நான் பார்த்தேன். குளத்தின் மூச்சுத்திணறலைக் கவனித்தபடி சோகமாக ஒரு மின் கம்பியின்மீது உட்கார்ந்திருந்தது அது.
எங்கள் வீட்டை ஒட்டி நான் வாங்கிய காலி மனைக்கு வேலிபோட்டேன். பெரியவர் ஒருவர் அந்தப் பகுதியில் மாடுகளை மேயவிட்டு, எங்கள் வீட்டுத் திண்ணையில் ஓய்வெடுப்பார். ஒருநாள் மாடுகள் இல்லாமல் அவர் மட்டும் வந்தார்.
“தாத்தா மாடுகள் எங்கே?” - கேட்டேன்.
“அதான் மேய்ச்சலுக்கு இடமே இல்லாமப் பண்ணிப்புட்டாங்களே... எல்லாம் வீட்ல கெடக்குதுங்க. பலபேரு வீட்ல மாட்டுக் கொட்டாயே இல்லை. மாடு நின்ன இடத்துல காரு நிக்குதுய்யா...”
எங்கள் வீட்டுக்குப் பின்னாலிருந்த காலி மனையில் வீட்டுத் தோட்டம் அமைக்க பெரியவர் உதவினார். வாழைக் கன்று நட்டு, அவரைப் பந்தல் போட்டு, செடிகள் வைத்துக் கத்தரிக்காய் பறித்துக் கைநிறைய அள்ளிக் கொடுத்தபோது ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் அவர் கைசெய்த மாயம்! அப்படியே தோட்டத்தில் மண்ணோடு மண்ணாக உட்கார்ந்து கிடப்பார். கொடுத்த கூலியை வாங்கிக்கொண்டு போவார்.
அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம்.. அண்மையில்தான் அதைக் கவனித்தேன்.
தோட்ட வேலை செய்துவிட்டுக் கூலி வாங்கும்வரை நிற்க மாட்டார். அவர் பாட்டுக்குப் போய்விடுவார். நாமாகக் கூப்பிட்டுக் கொடுத்தால்தான் உண்டு.
“பெரியவரே! என்ன கூலி வாங்காமப் போறீங்க.. இந்தா பிடிங்க...”
“இருக்கட்டுங்க” என்று கொடுப்பதை வாங்கிக்கொண்டு போவார்.
எனக்கு எரிச்சலாக வரும். செய்த வேலைக்குக் கூலி வாங்கிக்கொள்ளாமல் அப்படி என்ன அலட்சியம்?
ஒருநாள் கடும் வெயிலில் செடிகளுக்குக் களை எடுத்து, பாத்திகட்டி நீர் பாய்ச்சிவிட்டுப் புறப்பட்டார்.
‘கேட்’ திறக்கும் சத்தம் கேட்டது.. அதற்குள் தெருவில் இறங்கிவிட்டார்.
நான் பணத்துடன் பெரியவரை அழைத்தேன். “பெரியவரே வாங்க இப்படி.’’
தாடைகள் ஆடியபடி வந்து நின்றார்.
“என்ன.. காசு வேணாமா?”
“அது கெடக்குதுங்க... இருந்தா குடுங்க…”
பணத்தை அவர் கையில் திணித்தேன். காய்ப்பு ஏறிய கரடுமுரடான நீளநீளமான விரல்கள். ஏதோ மரத்தின் கிளையைத் தொடுவதுபோல் இருந்தது.
எண்ணிப் பார்க்காமல் இடுப்பில் செருகிக்கொண்டார்.
“அது என்ன கூலி வாங்காமப் போறது? என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?’’
“ஐயா, இப்ப இருக்கீங்களே... வீடு, காலி மனை இதெல்லாம் நாங்க பயிர் வச்ச நெலம்ங்க. பசங்க வித்துட்டாங்க. எங்க பாட்டனும் பூட்டனும் பாடுபட்ட நிலத்துல - எங்க சொந்த நிலத்துல - நான் பாடுபட்டதுக்கு நீங்க என்ன கூலி கொடுக்கிறது?”
“ஐயா! சுளையா எண்பதாயிரம் கொடுத்து வாங்குனது.. அது இப்ப உங்க நிலம் இல்ல... எங்களுக்குச் சொந்தமான நிலம்...” - பெரியவரை வேண்டுமென்றே சீண்டினேன்.
“வாங்கிட்டா..” அடிபட்ட பாம்பின் ரெளத்ரம் கண்களில்.
“இந்த நிலம் இருக்கே.. அது எங்க அக்கா - தங்கச்சி மாதிரி... வித்துற முடியுமா? வித்தாலும் வாங்கறவங்களுக்கு உறவாயிட முடியுமா?’’
நான் அவர் பேசுவதை விக்கித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். “சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்றேங்க.. உங்க புள்ள குட்டிய யாருக்கோ வித்துப்புட்டா அதுங்களுக்கு அவன் சொந்தமுன்னு ஆயிடுமா? என்ன இருந்தாலும் உங்க சொந்தம் இல்லீங்களா. அந்தக் கருத்துல சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. காசு கொடுத்து வாங்கிட்டீங்க... உங்க இடம்தான். இல்லேங்கலே. ஆனா, இதுக்கு சொந்தம்னு யாரு இருக்கா? நாங்கதானேய்யா...’’ அவர் குரல் மெல்ல உடைந்தது.
எழுந்து கெந்தியபடி நடந்தார். வெயில் கொளுத்தியது. தெரு மண் சுட்டது!
- தஞ்சாவூர்க் கவிராயர், 
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
நன்றி http://tamil.thehindu.com

No comments: