உயர்திணையின் "ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளி" அறிமுக விழா

.

சென்ற வாரம் நடந்து முடிந்த  "ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளி" என்ற நேர்காணல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பற்றி உயர்திணை அமைப்பின்  ஸ்தாபகர் யசோ பத்மநாதன் அவர்களின் பார்வை .

தமிழை நிஜமாக நேசிக்கும் தமிழ் பற்றாளர்களே,
நேற்றய நிகழ்வை வந்து முழுமையாக்கிச் சிறப்பித்த உங்கள் எல்லோருக்கும் முதற்கண் என் கரம்கூப்பிய அன்பும் நன்றியும். 
ஞானம் ஐயா அவர்களுடய புத்தகத்தை மையமாக வைத்துக் கொண்டு  சிறந்த ஒரு சிந்தனைப்பகிர்வை;சிந்தனைக்கான சூட்சும இடங்களை அவரவர் பாணியில் அவரவர் அழகுகளோடு முன் வைத்த சான்றோர்களாகிய பேச்சாளர்கள் எல்லோருக்கும் முதலில் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள். ஞானம் ஐயா அவர்களுக்கும் அது திருப்தியைத் தந்திருக்கும் என நம்புகிறேன்.

பிரவீனன் - தம்பி இல்லாத நான் என் தம்பி என உரிமைகோர ஆசைப்படும் இளவல். கேட்டவுடன் எனக்காக வரத்தக்க இயல்பு காட்டி என்னை மேலும் மேலும் பெருமை கொள்ள; பெருமிதமடையச் செய்கிற இளம் புத்திஜீவி! நேற்றய தினம் தன் தகுதிப் பாட்டினை மேலும் நிரூபித்து நமக்கும் பெருமை தேடித்தந்தவர். பிரவீனன், ஞானம் ஐயா சொன்னது போல சிட்னி கொண்டாடத் தக்க ஓராழுமை. அவரை நாம் பெற்றுக் கொண்டதில் உயர்திணையும் பெருமைக் கொள்கிறது. நேற்றய தினம் நிகழ்ச்சியை செவ்வனே நடாத்தி ‘வெளி’ என்ற சொல்லுக்கான பாதையைத் திறந்து வைத்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடாத்தி இருந்தார்.பாஸ்கரன் அவர்கள் இத் தொகுப்பு பற்றிப் பேசி நேர்காணல்கள்  இலக்கிய வகைக்குள் அடங்குமா  என்ற கேள்வியை முன் வைத்து அது சார்ந்து எழுந்திருக்கும் இலக்கிய வகைகள் பற்றியும் நோக்கி நல்லதொரு சிந்தனைப் பகிர்வை; கேள்வியை முன் வைத்திருந்தார். அண்மைய காலங்களில் ஏற்பட்டிருக்கிற இலக்கிய வகைகள் குறித்த பிரக்ஞைகள் அவை பற்றிய சொல்லாடல்கள் குறித்த நல்லதொரு தேடலை அது தொடக்கி வைத்துச் சென்றது.

சந்திரலேகா வாமதேவா அவர்கள் தன் பல்கலைக்கழக ஆழுமைகளுடனான - நேர்காணலில் இடம்பெற்றிருக்கிற ஆழுமைகள் குறித்த - தன் சொந்த அனுபவங்களோடும் இன்றய வாசிப்பு அனுபவங்கள் குறித்த இளையோர்களின் மனப்பாங்கில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் குறித்தும் உரை தந்து நம் சமூக விழுமியங்களில் அது ஏற்படுத்தத் தக்க மாற்றம் அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து பேசியும் அதனை ஏனைய மொழிக்குடும்பத்தார் அது குறித்து என்ன என்ன காரியங்களை ஆற்றியிருக்கின்றனர் என்பது குறித்தும் பரந்த வாசிப்பின் பின்னணியில் தன் கரிசனையை முன்வைத்திருந்தார்.

தனபால சிங்கம் ஐயா ‘வெளியும் இயக்கமும்’ குறித்த சொற் பொருளுக்குள் நின்றபடி அவர் கூறிய கருத்துக்கள் புத்திஜீவித பாங்கில் அமைந்தவை. இந்த இருபெரு சொற்களுக்கிடையே அகன்று விரிந்து வியாபித்து நிற்கின்ற இலக்கிய பிரபஞ்சத்தில்  தமிழ் குறித்து அவர் முன் வைத்த கருத்துக்கள் யாவும் ஒரு பெரும் சிந்தனைக்குரித்தான சாட்சியங்கள்.

இவர்கள் எல்லோருடய உரைகளிலும் காணப்பட்ட சிறப்பம்சங்களும் அவரவர் பாணியில் அவரவர் தந்து சென்ற கருத்துக்களும் அறிமுகநூலின் ஆழத்தையும் அகலத்தையும் சிறப்பாக விதந்துரைக்கத் தக்கனவாக இருந்தன. தனபாலசிங்கம் ஐயா சொன்னது போல - ஒரு சிறுகதை முடிந்தபின் சொல்லி நிற்கிற சொல்லாதவிடயங்கள் குறித்த சிந்தனை விரிவினப் போல இந்த நிகழ்வும் புத்த்கத்தைச் சூழ்ந்து நின்றபடி சொல்லாத பல விஷயங்களைச் சொல்லின.

மிகச் சிறந்த ஒரு சிந்தனை விரிப்புக்கான விதைகள் அவை! அவர்கள் விதைத்துச் சென்றவை விருட்சத்துக்கான வீரியங்கள் கொண்ட விதைகள்! என்னைத் தனிப்பட்ட முறையில் பெருமை கொள்ளச் செய்த தருணங்கள் இவை என நான் நிமிர்ந்து நின்று சொல்வேன்.

இது ஒரு சிறு அமைப்பு. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் மிகச் சிறு அமைப்பு. எந்த ஒரு செல்வாக்குப் பின்னணியும் இல்லாத; ஆர்வமும் ஆசையுமே அதன் மூலதனமாகக் கொண்டிருக்கிற அறிவை நேசிக்கும் ஒரு சிறு அமைப்பு. இருந்த போதும் இப் புத்திஜீவித குணாம்சம் கொண்ட எளிமையும் அதே நேரம் ஆழமும் கொண்டிருக்கிற; வாசிப்பினை தம் வாழ்நாளாகக் கொண்டிருக்கிற;அதனை நம்மோடும் பகிர்ந்து கொள்ள சம்மதம் கொண்டிருக்கிற;  நீங்கள் மூவரும் இந் நிகழ்வுக்கு வரச் சம்மதம் தந்து, அது குறித்த உங்கள் ஆழத்தையும் அகலத்தையும் நமக்கு விரித்து வைத்து வாசிப்புப் பசிக்கு பெருவிருந்து படைத்துச் சென்றீர்கள். என்னளவில் சபை சிறிதே எனினும் பேச்சாளப் பெருமக்களின் அறிவுச் செழுமையினால் அது உயர்ந்ததும் சிறந்ததுமே ஆகும். அந்த ஆத்மதிருப்தியை அது நிச்சயமாகத் தந்து சென்றது.

ஞானம் ஐயா!  எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பினை தந்ததும் புத்தகம் பற்றிய அவர் பேச்சுக்களும் வளமை போலவே நிதானமும் அழகும் எளிமையும் ஆழமானவையும். அவருடய இந்தப் புத்தக அறிமுகம் குறித்த அவரது ஏற்புரைக்கும் பிறகு அவர் தந்த சிற்றிலக்கியங்கள் குறித்த சிறப்புரைக்கும் நம் நன்றி என்றும் உரியதாகும்.

கார்த்திகா கணேசர்! பல்வேறு ஆழுமைகளால் நம்மை வியக்க வைக்கும் உயர்திணையின் அத்திவாரம்! சிவனின்றி சக்தி இல்லை என்பார்கள். எனக்கும் அவருக்குமான உறவும் நெருக்கமும் அது போன்றது. நிகழ்வுகள் குறித்த விமர்சனத்துக்கு நான் எப்போதும் அவரையே நாடி நிற்பேன். எல்லாவற்றையும் விமர்சன நோக்கில் பார்த்து பயமின்றி கருத்துச் சொல்லத் தக்க ஆழுமை! விமர்சனங்கள் குறித்து விவாதிப்பதில் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அதன் முடிவில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதில் நமக்கு அக்கறை இருப்பதில்லை. விவாதிப்பின் முடிவில் முன்வைக்கப் பட்ட கருத்துக்கள் நம்மை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்தி இருக்கும். பார்க்காத கண்ணோட்டங்களை இரண்டு பேருக்கும் அது தந்திருக்கும்.அவர் எனக்கான ஒரு பலம்! பெரும் பலம்!!

கீதா - தவறி நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிற ஒரு ஆட்டுக் குட்டி. அவரிடம் இருக்கிற திறமைக்கும் ஆற்றலுக்கும் செயல்திறனுக்கும் அவர் இருக்கவேண்டிய இடம் வேறு.அதனை நான் எப்போதும் ஆதங்கத்தோடு அவருக்கும் குறிப்பிடுவது உண்டு.  பாரதப் பெண்ணாய் கொஞ்சுதமிழின் சொந்தக் காரியாய் நம்மோடு கூடவே வரும் கீதாவுக்கு என் அன்பு என்றும் உரியதாகும். கீதா என் பாதி பலம்.

மணிமாறன் அவர்கள்! எப்போதும் நம் நிகழ்வுக்காக நிழல்படமும் ஒளிப்படமும் எடுத்து உடனடியாக அவற்றை என்னிடம் ஒப்படைக்கும் ஒருவர். இல்லை என்றால் இந் நிகழ்வுக்கான எந்த தடயங்களும் நம்மிடம் இருக்காது. அது காலத்தால் செய்யும் நன்றி. புரிந்து கொண்டு உதவும் மனப்பாங்கு. அவருக்கு மீண்டும் என் நன்றி.


நேற்றய புத்தக வெளியீடு சபை சிறிதே என்ற குறைபாடு இருந்த போதும் ( அன்றய தினம் வேறொரு சிறந்த நிகழ்வும் இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க காரணமாக இருந்தது) என்னளவில் திருப்தியத் தந்தது என்று நான் துணிந்து சொல்வேன்.சிந்தனைக்கான  பல பாதைகளை அது திறந்து விட்டிருந்தது. சாதாரணமாக இலக்கியக் கூட்டங்கள் ஏனைய நிகழ்வுகளைப் போல கவர்ச்சிகரமாக மக்களுக்கு இருப்பதில்லை. கவர்ச்சிகரமாக்கினால் அது தன் சோபையை இழந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதால் அது நமக்கு பிரியமானதாக இருப்பதும் இல்லை.


இதனை நம்மளவில் வெற்றிகரமாக்கியதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த பங்குண்டு. நிகழ்வு முடிந்து மண்டபத்து சபையினரோடு நிகழ்வம்சங்கள் குறித்து அளவளாவிக் கொண்டிருந்த போது டொக்டர்.கெளரிபாலன் அவர்கள் கலாநிதி சந்திரலேகா. வாமதேவா அவர்கள் குறிப்பிட்டிருந்த வாசிப்பு மரதன் பற்றிக் குறிப்பிட்டு தான் அதற்கு 1000 டொலர்கள் நிதிப் பங்களிப்பை நமக்கு நல்குவதாகவும்; எவ்வாறு தமிழ் வாசகரிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த அதனைப் ஒரு பரிசுத் தொகையாக அறிவித்து செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து தனக்குச் சொல்லுமாறும் கூறினார்.

தனபாலசிங்கம் ஐயா அவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளி என்ற நேர்காணல் தொகுப்பு நூலை வைத்து ’வெளியும் இயக்கமும்’ குறித்து பேசினார். வெளியினைக் கொண்டாடிய அந்த நிகழ்வில் இயக்கத்துக்கான விதை ஊன்றப்பட்டதும் மிகத் திருப்தியைத் தந்திருந்த முடிவான ஒரு நிகழ்வு.


நீங்கள் எல்லோரும் அதன் காரணகாரர். உங்கள் எல்லோராலும் நாம் பெருமை கொண்டோம். தொடர்ந்து நம்மோடு இணைந்திருக்குமாறும் நாம் மேலும் வளர; நம்மைத் தீட்ட; தனி நபர் புகழாரங்களில்லாத உங்கள் விமர்சனங்களையும் பங்களிப்புகளையும் தந்துதவுமாறு இந்த சந்தர்ப்பத்தில் அன்போடு கேட்டு மீண்டும் மீண்டும் மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்தும் தமிழால் இணைந்திருப்போம்.1 comment:

யசோதா.ப. said...

இந்தக் குறிப்புகள் நான் தனிப்பட்ட முறையில் இந் நிகழ்வில் பங்கு பற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதமே தவிர நிகழ்வு பற்றிய குறிப்பு அல்ல.
இந் நிகழ்வு பற்றி வேறு எவரேனும் விமர்சித்து எழுதி இருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். ...