.
கடந்த வாரம் தமிழ் முரசுவில் எழுதியிருந்த இலங்கையில் பாரதி அங்கம் 17 இல், இந்திய மறுமலர்ச்சியின் பிதா ராஜாராம் மோஹனராயர், மற்றும் மகாகவி பாரதி, பேராசிரியர் கைலாசபதி, மு. தளையசிங்கம் ஆகியோரின் மறைவுக்குப்பின்னர் இறுதி நிகழ்வில் நடந்த விடயங்கள் விமர்சனத்திற்குரியவை என்ற தொனிப்பொருளில் எழுதியிருந்தோம்.
இதுபற்றி, இந்தத்தொடரைத் தொடர்ந்து வாசித்துவரும் ஒரு வாசகி, " பாரதியைப்பின்பற்றியவர்களின் கருத்து அவர்களின் பின்னும் வாழ்கிறது. அவர்களுடைய சடலத்திற்கு நடந்தமை அவர்கள் பெருமையைப்பாதிக்க முடியாது." என்று எமக்கு எழுதியிருந்தார்.
அவரது கருத்து முற்றிலும் சரியானது. அதுவே உண்மையானது. ஒருவர் மறைந்துவிட்டால் அதன்பின்னர் அவர்களுக்காக மற்றவர்கள் நடத்தும் சமயச் சடங்குகளுக்கும் மதம் சார்ந்த பாரம்பரிய நம்பிக்கை நடைமுறைகளுக்கும் மறைந்தவர் பொறுப்பேற்க முடியாது.
மறைந்தவர் மீண்டும் எழுந்து வரமாட்டார் என்ற திடமான நம்பிக்கையுடன் மறைந்தவர் பற்றிய நடவடிக்கைகள் தொடருகின்றன.
பாரதியின் மனைவி செல்லம்மாவுக்கு மொட்டை அடித்த காட்சியை சடலமாகிப்போன பாரதியால் எழுந்து வந்து பார்க்க முடியுமா....? உயிருடன் இருப்பவர்கள்தான் அதுபற்றி ஏதும் எழுதவும் பேசவும் முடியும்!!!
அவ்வாறே பாரதி குறித்து தொடரும் சர்ச்சைகளுக்கும் அவருடைய பல்துறை சிந்தனைகளுக்கும் தரப்படும் வியாக்கியானங்களுக்கும், பாரதி பற்றிய திறனாய்வில் சொல்லப்படும் மறு வாசிப்பு அனுபவங்களுக்கும் பாரதி மீண்டும் வந்து பதில் சொல்ல முடியாது.
"பாரதி மொழியுணர்வுக் கவிஞனா...? தேசிய உணர்வுக் கவிஞனா...?" என்ற தலைப்பில் பட்டிமன்றங்கள் இலங்கையில் பலபாகங்களிலும் நடந்திருக்கின்றன.
பாரதி, பாரத நாட்டையும் அதன் தென்பகுதி தமிழ்நாட்டையும் தமிழ்மொழியின் கீர்த்தியையும் ஏனைய மொழிகள் குறித்தும் பாடியிருப்பவர். சுதந்திரம், சமத்துவம், விடுதலை, பெண்ணியம், தேசிய இயக்கம் முதலான சிந்தனைகளையும் உருவாக்கியவர். அவர் பிறநாடுகளையும் பாடினார். தேசியத்தலைவர்களையும் விதந்து போற்றிப்பாடினார். தோத்திரப்பாடல்களும், ஞானப்பாடல்களும்- நீதி, சமூகம், சான்றோர் பற்றிய பல்வகைப்பாடல்களும், கண்ணனையும் கண்ணம்மாவையும் வைத்து முப்பெரும் பாடல்களையும் பாடியிருப்பவர். இவை தவிர பாஞ்சாலி சபதமும் குயில்பாட்டும் எழுதியவர்.
அரசியல், சுதந்திரம், மொழி, அனைத்துலகம் தொடர்பாக பல கட்டுரைகளும் எழுதியிருப்பவர்.
மிகவும் குறைந்த வயதில் அவரது கரத்திலிருந்த பேனா தொட்டிருக்கும் விடயங்கள் ஆழமும் அகலமும் கொண்டவை. அவரது கூர்மையான கருத்துக்களில் அழுத்தமும் தீர்க்கதரிசனமும் இழையோடியிருக்கின்றன.
ஆயினும், அவரைத் தீவிரமாகப்பயின்று ஆராய்ந்திருப்பவர்கள், அவரது புலமையைப்போற்றியும் அவரது புரட்சிகரமான சிந்தனைகளைப்புகழ்ந்தும் எழுதியிருக்கும் அதேவேளையில், அவர் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களையும் பதிவுசெய்திருப்பதாக சொல்கிறார்கள்.
பாரதி தனது காலத்தில் தனது பேனாவால் தொட்டிருக்கும் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து தனித்தனியாக ஆய்வுசெய்யும் பலரும், பாரதி எங்கெங்கே தனக்குள்ளேயே முரண்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். ஆயினும், அவற்றுக்கு எதிர்வினையாற்ற பாரதிக்கு சந்தர்ப்பமே கிட்டவில்லை.
பாரதிக்காக பாரதியின் பக்தர்களே காலத்துக்குக்காலம் எதிர்வினையாற்றிவருகிறார்கள். பாரதியின் தாய்மொழிப்பற்று, மொழியியல் சிந்தனைகள் பற்றி ஆய்வுசெய்திருப்பவர் இலங்கைப்பேராசிரியர் எம்.ஏ.நுஃமான். கிழக்கிலங்கையின் கல்முனைக்குடியில் பிறந்திருக்கும் இவர், யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 இல் எரிக்கப்பட்டதை கண்டித்து எழுதிய புத்தரின் படுகொலை என்ற கவிதை பிரபல்யம் பெற்றது. பல இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டு பிரசித்தமானது. இதனை மடுளுகிரியே விஜேரத்ன சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
அழியா நிழல்கள், தாத்தாமாரும் பேரர்களும், மழைநாட்கள் வரும், முதலான கவிதை நூல்களை வரவாக்கியிருக்கும் நுஃமான், இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம் என்னும் நூலின் இணையாசிரியர். அத்துடன் திறனாய்வு நூல்களும் ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல், அடிப்படைத்தமிழ் இலக்கணம் முதலான நூல்களும் எழுதியிருப்பவர்.
ஆங்கிலத்தில் Srilankan Muslims - Ethinic Identity within Cultural Diversity - Understanding Srilankan Muslims Identity ஆகிய நூல்களையும் எழுதியிருக்கிறார். இவ்வாறு இனத்திற்கும் மொழிக்கும் இலக்கியத்திற்கும் வளம்சேர்த்து, எமது தமிழ் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள நூல்களையும் தந்திருக்கும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் "பாரதியின் மொழிச்சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு" என்னும் நூலை யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் 1984 இல் வெளியிட்டுள்ளது.
" இந்நூல் பாரதி ஆய்வாளர்களால் இதுவரை பார்க்கப்படாத பாரதியின் ஓர் அம்சத்தை ஓரளவு விரிவாக ஆராய்கின்றது. பாரதியின் மொழி உணர்வு, பாரதியும் தமிழ் இலக்கணமும், மொழி மாற்றமும் பாரதியும், மொழி வளர்ச்சியும் பாரதியும் இந்தியாவுக்குப்பொதுப்பாஷை ஆகிய ஐந்து தலைப்புகளில் பாரதியின் மொழிச்சிந்தனைகளின் பலத்தையும் பலவீனத்தையும் மொழியியல் விஞ்ஞான நோக்கு நிலை நின்று இந்நூல் பரிசீலனை செய்கின்றது. அவ்வகையில் 'பாரதி இயலு'க்கு இது ஒரு புதிய பங்களிப்பாகும்." - என்று நுஃமான் அவர்களின் குறிப்பிட்ட நூலின் உள்ளடக்கம் பற்றி சொல்லப்படுகிறது.
நுஃமான் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் சிங்கப்பூர், மலேசியாவில் மட்டுமன்றி எம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இலக்கியவாதிகளிடத்திலும் அறிவுஜீவிகளிடத்திலும் கவனிப்புப் பெற்ற விமர்சகர்.
சில வருடங்களுக்கு முன்னர் மலேசியாவில் வெளியாகும் வல்லினம் இதழுக்கு (அதன் ஆசிரியர் ம.நவீன் பெற்ற நேர்காணலில்) நுஃமான் வழங்கியிருக்கும் பதிலிலிருந்து தமிழ் மொழி பற்றிய அவரது பார்வையை நாம் தெரிந்துகொள்ளலாம்.
நுஃமான் இவ்வாறு சொல்கிறார்:-
" தமிழ் சூழலில் மொழி பற்றிப் பேசுவதே சிக்கலானதாக உள்ளது. இங்கு மொழி பற்றிய பார்வை அறிவு சார்ந்ததாக அன்றி, உணர்ச்சி சார்ந்ததாகவே இருக்கின்றது. மொழியைத் தனது இனத்துவ அடையாளமாகக் கொண்ட ஒரு சமூகத்தில் மொழி ஒரு புனிதத்தன்மையையும் பெற்று விடுகின்றது. தாயாகவும் தெய்வமாகவும் வழிபடப் படுகின்றது. மொழியைப்பற்றிய ஏராளமான ஐதீகங்கள் கட்டமைக்கப்படுகின்றன. மொழிக்காக உயிரை கொடுக்கவும் தயாரான ஒரு கூட்டம் உருவாகி விடுகின்றது. இத்தகைய சூழலில் மொழி பற்றி அறிவு பூர்வமாகச் சிந்திப்பதும் பேசுவதும் அத்தனை எளிதல்ல. கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழி பற்றி நடந்த சர்ச்சைகளையும் போராட்டங்களையும் நினைத்துப்பார்த்தால் இது புரியும். என்றாலும், இந்த உணர்வு நிலையைத்தாண்டி மொழி பற்றி அறிவியல் பூர்வமாகச் சிந்திப்பதற்கு மொழியியல் நமக்கு உதவுகிறது.
மொழியியலைப் பொறுத்தவரை மொழி ஒரு கருவிதான். சக்தி வாய்ந்த செய்தி பரிமாற்றக்கருவி. அதற்கு வேறு புனிதத்தன்மைகள் இல்லை. அது ஒரு சமூகத்தின் படைப்பு என்ற வகையில் சமூகத்தின் மாற்றத்துடன், வளர்ச்சியுடன் மொழியும் மாற்றமும் வளர்ச்சியும் அடைகின்றது. அந்த வகையில் மொழி மாற்றம் இயல்பானது. தவிர்க்க முடியாதது. மாற்றம் அடையாத மொழி வளர்ச்சி அடையாது. வளர்ச்சி அடையாத மொழி இறந்துவிடும். சமஸ்கிருதத்திற்கும், லத்தின் மொழிக்கும் இதுதான் நடந்தது. தமிழ் இன்றும் வாழ்கிறது என்றால் அது தொடர்ச்சியாக மாற்றமடைந்து வளர்ந்திருக்கிறது என்று பொருள். பாரதி பாடல்களைப் படிப்பது போல் சங்க இலக்கியத்தை நம்மால் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அன்றையத் தமிழ் வேறு, இன்றையத் தமிழ் வேறு. தொல்காப்பியர் இன்று வந்தால் நாம் பேசுவதையோ எழுதுவதையோ கொஞ்சமும் புரிந்துகொள்ள மாட்டார் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இது கால மாற்றத்தினால் , சமூக மாற்றத்தினால் மொழியில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு.
இந்த மாற்றம் சொற்களில் மட்டுமின்றி , ஒலி அமைப்பு , இலக்கண அமைப்பு எல்லாவற்றிலும் நிகழ்கின்றது. ‘நீ நல்லை அல்லை’ என்றோ ‘யான் நல்லேன் அல்லேன்’ என்றோ நாம் இன்று எழுதுவதோ பேசுவதோ இல்லை. இவை இன்றையத் தமிழில் மொழி பெயர்த்தால் ‘நீ நல்லவன் / நல்லவன் அல்ல’ என்றோ ‘நான் நல்லவள் / நல்லவள் அல்ல' என்றோதான் அமையும். இது மொழி மாற்றத்தின் விளைவு.
தனித்தமிழ், மொழித்தூய்மை பற்றி பேசுபவர்கள் தமிழின் பன்முகத்தன்மையை மறந்து அல்லது மறுத்துவிடுகிறார்கள். தமிழின் வளத்துக்கும், பலத்துக்கும் இந்தப் பன்முகத்தன்மையும் ஒரு முக்கிய காரணியாகும் என்பதை நாம் மறுக்க முடியாது. தமிழ்க்கல்வியைப் பொறுத்தவரை மொழிப்பழமைவாதம்தான் மேலோங்கி இருக்கிறது. இது ஆரோக்கியமான சூழல் அல்ல."
இவ்வாறு எமது தமிழ் மொழியின் உணர்ச்சித்தளத்தையும் அறிவுத்தளத்தையும் ஆராய்ந்து பார்க்கும் நுஃமான், பாரதியின் மொழிச்சிந்தனையை ஒரு மொழியியல் நோக்கிலேயே ஆராய்கிறார்.
அவ்வாறு அவர் பாரதியை மதிப்பீடுசெய்வதற்கான காரணத்தையும் பின்வருமாறு சொல்லியிருக்கிறார்.
" மொழி மாற்றம், மொழி வளர்ச்சி என்பன பற்றிய பாரதியின் கருத்துக்கள் அறிவியல் ரீதியானவையாகவும் புரட்சிகரமானவையாகவும் உள்ளன. அதே வேளை ஆச்சரியப்படத்தக்க வகையில் தமிழின் பிறப்பு, சிறப்பு, தொன்மை, வலிமை, இனிமை என்பன பற்றிப் பாரதி ஆங்காங்கே கூறியுள்ள சில கருத்துக்கள் அறிவியலுக்குப்புறம்பான பொதுஜன ஐதீகங்களைப் (Popular Myths) பிரதிபலிப்பனவாக இருப்பதையும் காண்கின்றோம். வெவ்வேறு காலகட்டங்களில் பாரதி கூறியுள்ள மொழிபற்றிய சில கருத்துக்கள் தம்முள் முரண்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வகையில் நவீன தமிழின் முன்னோடிகளில் முதல்வனான பாரதியின் மொழிச்சிந்தனைகளிலே காணப்படும் பலத்தையும் பலஹீனத்தையும் விளங்கிக்கொள்வதற்கு இத்தகைய ஆய்வுகள் அவசியமாகும். மொழி பற்றிய நமது கண்ணோட்டங்களைப் புனரமைத்துக்கொள்வதற்கும் இவை வழிவகுக்கும்."
தான் எதற்காக பாரதியின் மொழிச்சிந்தனைகளை ஆராய்ந்தார் என்பதற்கு நுஃமான் தந்திருக்கும் விளக்கத்திலிருந்து எமக்கும் பாரதி குறித்த தேடல் அதிகமாகியிருக்கிறது.
அதனால் பாரதியை புதிய பார்வையில் அணுகியிருக்கும் நுஃமானின் இந்த நூல் தமிழ்கூறும் நல்லுலகில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
" தமிழுக்கு உயிர் கொடுப்போம்" என்று உணர்ச்சிநிலை நின்று பேசுபவர்கள், தமிழ் என்றைக்கும் சாகாது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். தமிழில் எழுத முடியாவிட்டாலும் தமிழில் ஓரளவாவது எமது குழந்தைகள் பேசினால் போதும் என்ற நிலைக்கு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை - இந்திய - சிங்கப்பூர் - மலேசியத்தமிழர்கள் வந்துள்ள சூழலில் நாம் பாரதியின் மொழிச்சிந்தனை பற்றியும் இந்தத்தொடரில் பதிவுசெய்யநேர்ந்துள்ளது.
எமது இலங்கையில் இரண்டு பிரதான மொழிகளை தாய்மொழியாகக்கொண்டுள்ள மூன்று இனங்கள் (சிங்களவர் - தமிழர் - முஸ்லிம்கள்) இன்றும் நல்லிணக்கம் பற்றி யோசிக்கின்றன. பிரச்சினைப்படுகின்றன. முரண்பட்டுக்கொள்கின்றன.
இலங்கையில் இன்று சிங்களவர்கள் பாளி மொழி பேசுவதில்லை. முஸ்லிம்கள் அரபுமொழி பேசுவதில்லை. தமிழர்களும் முன்னர் தமது பேச்சு வழக்கிலிருந்த ஏராளமான சமஸ்கிருதச்சொற்களை இன்று தவிர்த்துவிட்டனர்.
ஆனால், அண்டை நாடான இந்தியாவில் எத்தனை மொழிகள்...? இந்தியாவும், பாக்கிஸ்தானும், வங்காளதேசமும் ஒன்றிணைந்திருந்த அகண்ட பாரதத்தில் - ( பாரதி காலத்தில் ) - எத்தனை மொழிகள்....?
நுஃமான் தமது நூலில் இந்தியாவுக்குப்பொதுப்பாஷை என்ற பாரதியின் கருத்தையொட்டி எழுதியிருக்கும் ஐந்தாவது அத்தியாயத்தில், இந்தியாவில் 179 மொழிகளும் 544 கிளைமொழிகளும் தற்போதைய அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 14 தேசிய மொழிகளும் வழக்கிலிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைப்போன்றே பாரத நாடும் பிரித்தானியரின் வருகைக்கு முன்னர் தனிநாடாக இருக்கவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியம் பல இராச்சியங்களாகப்பிரிந்திருந்த இலங்கையையும் அத்துடன் பாரதத்தையும் ஒன்றிணைத்தது.
மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு முன்னர், இந்தியாவின் பொது மொழியாக ஹிந்தியை ஏற்றுக்கொள்ளலாம் என்று பாரதியார் 1906 டிசம்பர் 15 ஆம் திகதிய இந்தியா பத்திரிகையில் "ஹிந்தி பாஷைப்பக்கம்" என்ற தலைப்பில் எழுதியிருக்கும் குறிப்பையும் நுஃமான் சுட்டிக்காண்பிக்கிறார்.
" யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் " என்ற பாரதிதான் பாரத நாட்டின் பொதுத்தொடர்பு மொழி என்று வரும்பொழுது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கிறார் என்பதையும் ஆராய்கிறார்.
ஒரு மொழி கற்கச்சிரமமானது என்பதால் பொதுத்தொடர்புமொழியாகாது போவதோ, கற்க இலகுவான காரணத்தால் பொதுத்தொடர்புமொழியாகுவதோ இல்லை. ஒரு மொழியின் சமூக நிலையும் அதற்கான தேவையுமே அதை நிர்ணயிக்கின்றன என்னும் நிலைப்பாடு பாரதிக்கும் இருந்திருக்கிறது என்பதையும் நுஃமான் இந்த நூலில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
இந்தியப்பொதுவாழ்வில் இருந்து சமஸ்கிருதம் மறைந்திருந்தாலும் அதன் பண்பாட்டு முக்கியத்துவம் என்றும் மறைந்துவிடாது என்றும் பாரதியைப்போன்று நுஃமானும் தீர்க்கதரிசனமாக உரைக்கின்றார்.
பாரதிக்கு தமிழ் இனிமையான மொழிதான். அதற்காக அவர் வேறு மொழிகளை வெறுக்கவில்லை. அவருக்கு ஏழு மொழிகள் தெரியும் என்றும் சொல்கிறார்கள்.
அதனால்தான் " பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் " என்றும் எழுதிவைத்துவிட்டுச் சென்றார்.
(தொடரும்)

No comments:
Post a Comment